(Possible) Help

ரயில் நிலையத்தில் எதிரே சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர் தடாலென்று தலைகுப்புற விழுந்தார், ’நங்’கென்று தலையில் அடி பட்ட சத்தம் கேட்டது.

இதய அதிர்ச்சியோ, ரத்த அழுத்தமோ வேறு பிரச்னையோ என்று பதறிப்போய் நான்கைந்து பேர் அவருக்கு உதவ ஓடினோம். நெருங்கமுடியவில்லை, மது நாற்றம், மூக்கைப் பிடித்துக்கொண்டு எல்லாரும் விலகிவிட்டோம்.

சுத்தமாக மனிதாபிமானம் அற்ற செயல்தான். ஆனால் Possible உதவியை அவரே தடுத்துக்கொண்டார், வேறு யாரேனும் உதவியிருப்பர் என நம்புகிறேன்.

Advertisements

Thiruvasagam

//இளையராஜாவின் திருவாசகம் தொகுப்புபற்றி//

இந்த ‘வேறு யாராவது பாடியிருக்கலாம்’ விமர்சனத்தை திருவாசக விஷயத்தில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எனக்கு இசை அடிப்படைகள் தெரியாது. அந்தவிதத்தில் திருவாசகத்தை ராஜாவைவிடச் சிறப்பாகப் பாடக்கூடிய / பாடியுள்ள பல மேதைகள் இருப்பர் என்பதை ஏற்கிறேன். இது அந்தவிதமான ஆல்பம் அல்ல என்பது என் துணிபு.

ராஜா முழுக்க முழுக்க உணர்வு அடிப்படையிலேயே திருவாசகத்தை அணுகியிருக்கிறார், அதற்கான ஓர் அலங்கரிப்பாக / மரியாதையாகவே இசையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

நான் ராஜா பாட்டைக் கேட்டபிறகுதான் மாணிக்கவாசகரைத் தேடிச் சென்று (கிட்டத்தட்ட) முழுமையாக வாசித்தேன், மிக அற்புதமான அனுபவம் அது. இந்த மனிதருக்கு ‘மாணிக்க’ வாசகர் என்று பெயர் வைத்தவரைத் தேடிச் சென்று முத்தம் கொடுக்கத் தோன்றியது.

என் கருத்தில், திருவாசகத்தில் மாணிக்கவாசகர் முன்வைக்கும் இறைஞ்சல் தொனியை மிகக் கச்சிதமாகப் பற்றியிருக்கிறார் ராஜா (குரலிலும்). அதன்பிறகு, திருவாசகத்தில் (வேறு) எந்தப் பாடலைப் படித்தாலும், எனக்கு அது ராஜா குரலில்தான் கேட்கிறது. என்னளவில், மாணிக்கவாசகரின் குரலே அதுவாகிவிட்டது.

இதில் ரசிகன், வெறியன், பக்தன் புடலங்காயெல்லாம் இல்லை. ஒரு மனிதர் இந்நூலை எப்படி நுட்பமாகப் படித்து, உணர்ந்து புரிந்துகொண்டிருந்தால் இந்த Sync சாத்தியம் என வியக்கிறேன்.

கம்பனுக்கும் இப்படி ஒரு யோகம் வாய்த்தால் சந்தோஷப்படுவேன், இது கம்பனை அவமானப்படுத்துவதல்ல, இதை நாம்(ன்) வேறு யாரைக் கேட்கமுடியும்?

Love Grows

’ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டுவெச்சேன்’ என்று ராஜா இசையில் கங்கை அமரன் எழுத பி. சுசீலா பாடிய பாட்டு.

இந்த ‘ஆசையிலே பாத்தி கட்டி அன்பை நடுதல்’ என்ற கற்பனையை, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடமிருந்து எடுத்தாண்டிருக்கிறார் கங்கை அமரன்.

’காதலிலே தோல்வியுற்றான்’ என்ற சோகப்பாட்டில் பட்டுக்கோட்டையார் எழுதிய வரி இது: ‘ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள்’.

பட்டுக்கோட்டையாருக்கு யார் முன்னோடி என்று கொஞ்சம் தேடினால், திருஞான சம்பந்தர் வந்து நிற்கிறார். அவருடைய தேவாரத் திருப்பதிகம் ஒன்று, ‘பத்திப் பேர் வித்திட்டு’ என்று தொடங்குகிறது.

இங்கே ‘பத்தி’ என்பது பக்தி / அன்பு, ’அன்பை விதையாக மனத்தில் ஊன்றி’ என அர்த்தம், பாத்தியைதான் காணவில்லை, தென்பட்டால் சொல்லுங்கள்.

Jewels

சிலப்பதிகாரத்தில் மாதவிமீது கோவலனுக்கு ஊடல். அதைத் தணிப்பதற்காக, அவள் விதவிதமான நகைகளை அணிந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதாகக் காட்சி.

அந்த நகைப் பட்டியலின் நடுவே ஒரு வரி:

‘குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து…’

தமிழில் குரங்கு என்றால் Monkey, குறங்கு என்றால் தொடை, ‘குறங்குச் செறி’ என்பது மாதவி தன் (திரண்ட) தொடையில் அணிந்த ஒரு வகை நகையாம்.

தலையில் ராக்குடி, சுட்டி தொடங்கி காலுக்குக் கொலுசு, மெட்டிவரை எங்கும் நகைகள் இருக்க, தொடையைக்கூட அன்றையபெண்கள் விட்டுவைக்கவில்லைபோல :>

Thevaaram

சோலையில் ஒரு கொன்றை மரம்,அதன் கீழே சில மயில்கள் நின்றிருக்கின்றன. அப்போது, மேகம் கருக்குது, மழை வரப் பார்க்குது, வீசி அடிக்குது காத்து.

மேலே மேகங்களுக்கு மத்தியிலிருந்து இடி முழக்கம் எழ, அதையே தாளமாகக் கொண்டு வண்டுகள் பாட்டுப் பாடுகின்றன, மயில்கள் ஆடத் தொடங்குகின்றன.

இந்த அற்புதக் கச்சேரியைப் பார்த்து ரசிக்கிறது கொன்றை மரம். இதை நிகழ்த்திய கலைஞர்களுக்கு ஏதாவது பரிசு தர நினைக்கிறது.

மரத்திடம் ஏது பணம், காசு? அது தன் தலையை ஆட்டிச் சிரக்கம்பம் செய்ய, அதன் பொன்னிறப் பூக்கள் தங்கக் காசுபோல் உதிர்கின்றன.

அப்படி விழும் பொன்னிற மலர்களை, கீழேஉள்ள காந்தள் மலர்கள் கை நீட்டி வாங்கிக்கொள்கின்றன, ஆடிய மயில்கள், பாடிய வண்டுகளின் Representativesபோல.

இந்த அழகான காட்சி, தேவாரத்தில் வருகிறது, திருஞான சம்பந்தர் எழுதியது:

’வரை சேரும் முகில் முழவம், மயில்கள் பல நடமாட, வண்டு பாட விரை சேர் பொன் இதழ் தர, மென்காந்தள் கை ஏற்கும்’

’மயில்கள் நடமாடின’ என்றால் அஜித் செய்வது அல்ல, ’நடம் + ஆடின’, டான்ஸ்தான் :>) ‘நட’ராஜப் பெருமான் 🙂

Kudam

வருங்காலத்தில் குடம் என்ற வார்த்தை / பொருளே வழக்கொழிந்துவிடுமோ என்று பயப்படுகிறார் மனைவியார். யோசிக்கவேண்டிய சங்கதிதான்.

சட்டென்று தேடி ’தண்ணீர்க் குடம் கொண்டு தனியாகப் போனேன்’ பாட்டுக் கேட்கிறேன்.

Manam

//இந்தப் பாட்டு கேட்கையில் எனக்கு ஒரே ஒரு பிரச்னை, ‘மனதை’ அல்ல ‘மனத்தை’ என்று திருத்தத் தோன்றுவதுதான்!//

மனது என்று சொல் தமிழில் இல்லை, அது ‘மனம்’ என்ற சொல்லின் கொச்சை வடிவம்.

ஆகவே, மனத்தில், மனத்தை, மனத்துடன், மனமாக என்றே எழுதவேண்டும். மனதில், மனதை, மனதுடன், மனதாக போன்றவை தவறான பயன்பாடுகள்.

Of Course, கவிதைக்கு இந்த விதிமுறைகள் பொருந்தா. பாரதியாரே, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடியுள்ளார் 🙂

ஆனால் வள்ளுவரும் ஆண்டாளும் ‘மனத்துக்கண் மாசு இலன் ஆதல்’ என்றும், ‘மனத்துக்கு இனியானை’ என்றும் கவிதையில்கூட இதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர் :))