Love All

உலக இலக்கியங்களில் மேகம் தொடங்கி மனம்வரை எதையெதையோ தூது விட்டிருக்கிறார்கள், டென்னிஸ்(?) பந்தைக் காதலுக்குத் தூது விட்டது கண்ணதாசன்மட்டும்தான் :>

’பறக்கும், பந்து பறக்கும், அது பறந்தோடு வரும் தூது’ என்று வரும் அந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை:

ஓடும், உனை நாடும், எனை
உன் சொந்தம் என்று கூறும்,
திரும்பும், எனை நெருங்கும், உந்தன்
பதில் கொண்டு வந்து போடும்

நாலே வரியில் தூது இலக்கணம் முழுவதையும் கச்சிதமாகத் தந்துவிட்டார்!

Advertisements

Diet

உறவினர் ஒருவர் நாளைமுதல் டயட் ஆரம்பிக்கிறார், ‘இந்த வருஷம் உடம்பு இளைச்சுடப்போறேன்’ என்றார்.

’இந்த வருஷமா? அதென்ன கணக்கு? ஜனவரி 1லதானே வருஷம் ஆரம்பிக்கும்?’ என்றேன்.

’அது உங்களுக்கு, நான் பேங்க்ல வேலை செய்யறேன், எனக்கு Financial Yearதான் கணக்கு, அதனால ஏப்ரல் 1லேர்ந்து டயட்’ என்றார்.

VaNdi & MaNdi

சாப்பிட உட்கார்ந்தேன். ‘ரசவண்டி இருக்கு, ஊத்தட்டுமா?’ என்றார் மனைவி.

’மாட்டு வண்டி, குதிரை வண்டி தெரியும், அதென்ன ரச வண்டி?’ என்றேன்.

‘அதெல்லாம் தெரியாது, வேணுமா, வேணாமா?’ என்று பதில் வந்தது.

’அது ரச வண்டி இல்லை, ரச மண்டி’ என்றேன்,‘குளத்துல அழுக்கு மண்டியிருக்குன்னு சொல்றோம்ல,அதுமாதிரி ரசத்துக்குக் கீழே பருப்பு மண்டியிருக்கு.’

’அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்ப உனக்கு ரச வண்டி வேணுமா வேணாமா?’ என்றார்.

‘வேணும்’ என்றேன்.

***

Update: பின்னர் தெரிந்துகொண்டது, இங்கே ‘ரச வண்டி’ என்பதுதான் சரி, காரணம், ‘வண்டல்’ என்றால் Residue, ‘மண்டல்’ என்றால் நிறைய விஷயங்கள் ஓர் இடத்தில் சென்று சேர்தல்.

KD

கர்நாடகாவில் தமிழ்ப் படப் போஸ்டர்களைக் கன்னடத்தில் அச்சிடுவர். ஆனால் படம் தமிழில்தான் ஓடும், காரணம் கன்னடர்கள் பலருக்குத் தமிழ் பேச வரும், சினிமா வசனங்கள் புரியும், ஆனால் படப் பெயரைப் படிக்க வராது, அதனால் கன்னடம்.

இப்போது ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்று ஒரு தமிழ்ப் படம் வந்திருக்கிறது, அதன் கன்னட போஸ்டர்களில் ’கேD’க்குப் பதில் ‘கேT’ என உள்ளது.

தமிழில் ‘கேடி’ என்று எழுததான் முடியும் D, T உச்சரிப்பு வித்தியாசம் தெரியாது, கன்னடத்தில் இரண்டுக்கும் தனித்தனி எழுத்துகள் உண்டு.

கேDயை கேT என்று எழுதுவது அத்தனை பெரிய தவறா? ஆமாம் 🙂

பலரும் நினைப்பதுபோல் கேடி தமிழ்ச் சொல் அல்ல, Known Dacoit என்பதன் சுருக்கம் KD, பின்னர் ‘கேடித்தனம்’ என தமிழ்ச்சொல்லாகிவிட்டது. ’பேடித்தனம்’, ‘ரௌடித்தனம்’ போன்றவற்றுக்கு எதுகையாக இருப்பதாலோ என்னவோ, இதைத் தமிழ்ச்சொல்லாகவே நாம் எண்ணி மயங்குகிறோம்!

ஆக, கன்னட போஸ்டர்கள் ‘கேT பில்லா’ என்று இருப்பது தவறு :>)

இதேபோல் கார் ட்ரைவருக்கு ‘பாட்டா தருகிறோம்’ என்று சொல்வதும் தமிழ்ச் சொல் அல்ல, BA, TA = Boarding Allowance, Travel Allowance.

இந்த அலவன்ஸ்களைச் சுருக்கமாக BATA என்று சொல்லிச் சொல்லி, பின் அது ‘பாட்டா’ என்ற சொல்லாகிவிட்டது, ‘கேடி’யும் அதேமாதிரிதான்.

Kannadasan

’மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு’ என முருகனின் காதலி பாடும் காட்சி, சட்டென வைணவத்துக்குத் தாவி ஆண்டாளைத் துணைக்கழைக்கிறார் கண்ணதாசன்.

மத்தளம், மேளம் முரசொலிக்க,
வரிசங்கம் நின்றங்கே ஒலி இசைக்க,
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன், அந்தக்
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்,
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்,
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய், இரு
கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்!

இத்துணை எளிமையாக, கச்சிதமாக, கலாசாரப் பின்னணியோடு எழுத இந்தக் ’கவிஞர்’ எங்கேயும் பயிற்சி எடுக்கவில்லை என்பதுதான் விசேஷம், நம் பாக்கியம்!

Join

’நல்ல தம்பி’ படத்தில் மது விலக்கை வலியுறுத்தும்படி ஒரு பாட்டு, உடுமலை நாராயண கவி எழுதுகிறார், பல்லவி: ‘குடிச்சுப் பழகணும்’

அடுத்த வரி, ’படிச்சுப் படிச்சுச் சொல்றாங்க, பாழும் கள்ளை நீக்கி, பாலை’

அனுபல்லவியின் நிறைவுச் சொல் ‘பாலை’, பல்லவியின் முதல் வரி ‘குடிச்சுப் பழகணும்’ உடன் சேர்த்து ’கள்ளை நீக்கி, பாலைக் குடிச்சுப் பழகணும்’ என்று படிக்கவேண்டும், உடுமலை நாராயண கவியின் கோவை(பக்கத்து)க் குசும்பு இது 🙂

இதற்கு இன்னோர் உதாரணம், ‘அழகிய ரகுவரனே, அனுதினமும் நின்னுக்கோரி வர்ணம்’ (வாலி).

இதன் இலக்கணப் பெயர், ‘பூட்டு வில் பொருள்கோள்’, அதாவது, வில்லைப் பூட்டுவதுமாதிரி பாட்டுக்குப் பொருள் கொள்வது.

வில்லில் நாண் பூட்டும்போது, அதன் நிறைவுப் பகுதியை (அதாவது கீழ் முனையை) தொடக்கத்துடன் (அதாவது மேல் முனையுடன்) பிணைக்கிறோம்.

அதுபோல, ஒரு பாட்டின் நிறைவுச் சொல்லை முதல் சொல்லுடன் சேர்த்துப் பொருள்கொள்வதால் இதன் பெயர் ‘பூட்டு வில் பொருள்கோள்’.

இந்த விளக்கத்துடன் அந்த இரு பாடல்களைக் கேட்டால் (அல்லது வாசித்தால்), இன்னும் சுகமாக இருக்கும்.

Srisailam

காட்டில் ஒரே கலாட்டா, வேடர்கள் வந்திருக்கிறார்களாம், மிருகங்களை வேட்டையாடுவார்களாம், எலி தொடங்கி யானைவரை எல்லாம் பயந்து நடுங்குகின்றன.

பெண் யானைகளைப் பார்த்து ஆண் யானைகள் பேசின, ‘நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, நாங்க போய் என்ன பிரச்னைன்னு பார்த்துட்டு வர்றோம்.’

ஆண் யானைகள் சென்று நெடுநேரமாகியும் திரும்பவில்லை, பெண் யானைகள் பயந்தன, ‘நாமே பார்த்துட்டு வரலாம்’ என்று கிளம்பின.

அப்போது ஆண் யானைகள் திரும்பி வந்தன, தங்கள் ஜோடிகளைக் காணாமல் திகைத்தன.

இப்படியாக, ஆண் யானைகளும் பெண் யானைகளும் அந்த அடர்ந்த காட்டின் வெவ்வேறு பகுதிகளில் தங்களுடைய ஜோடிகளைத் தேடித் திரிந்தன, தவித்தன.

யார் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆகவே, பெண் யானைகள் காதைத் தாழ்த்தி, ‘காதலனின் சத்தம் கேட்கிறதா’ என்று கவனித்தன, ம்ஹூம், இல்லை, சோகமாக அங்கும் இங்கும் பார்த்தன.

அப்போது, அந்த வேடர்கள் அங்கே வந்தார்கள், பெண் யானைகளின் தவிப்பைப் பார்த்து அவர்கள் மனத்திலும் இரக்கம் பிறந்துவிட்டது.

ஆகவே, வேட்டையாட வந்தவர்கள் அதை மறந்துவிட்டார்கள், இலைகளைக் கிழித்துத் தைத்து பெரிய கோப்பைகளைச் செய்தார்கள், அதில் தேனைப் பிழிந்தார்கள்.

அந்தத் தேனை அவர்கள் அந்தப் பெண் யானைகளுக்கு ஊட்டினார்கள், ‘கவலைப்படாதே, உன் ஜோடி திரும்ப வந்துவிடும்’ என்பதுபோல் தடவிக்கொடுத்தார்கள்.

அப்படிப்பட்ட சிறந்த இடம், சீபர்ப்பத மலை (இப்போதைய ஸ்ரீசைலம்).

சுந்தரமூர்த்தி நாயனார் பதிகத்தில் வரும் அழகான காட்சி இது:

ஆனைக்குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில் திரிய,
தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கும் மிக இரங்கி,
மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி,
தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே