Cricket

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.

அங்கே 2வது மாடியில் பெரிய ஜன்னல்கள்வழியே ரேஸ் கோர்ஸ் நன்கு தெளிவாகத் தெரிந்தது. இன்று ஏதோ பந்தயம், சூதாடாமல் வேடிக்கை பார்க்கலாமே என நினைத்தேன்.

குதிரைகளை ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கும்போது எதேச்சையாக அதே மைதானத்தின் இன்னொரு மூலை கண்ணில் பட்டது.

இந்த ‘இன்னொரு மூலை’ பிரதான (ரேஸ் நடைபெறும்) பகுதியிலிருந்து வீடுகள் போன்ற ஓர் அமைப்பால் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் குதிரை ஓட்டுநர்களோ, பார்வையாளர்களோ இந்த மூலையைப் பார்க்கமுடியாது, (என்னைப்போல) வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குதான் தெரியும்.

அந்த மூலையில் பத்து சிறுவர்கள் ஸ்டம்ப் நட்டு செம ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தச் சிறுவர்கள் (அல்லது, வாலிபர்கள்) அங்கே வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும், ரேஸ் தொடங்கியபின் அவர்களுக்கு வேலை இல்லையோ என்னவோ.

ஆகவே, பின்னால் நடக்கும் பந்தயம், அதில் லட்சக்கணக்கில்(?) புழங்கும் பணம் எதைப்பற்றியும் கவலைப்படாமல், எட்டிப்பார்க்காமல் உற்சாகமாக வேறேதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கென்னவோ அவர்களுடைய அந்த ரேஸோர கிரிக்கெட்தான் ட்விட்டரில் அடிக்கடி பேசுபொருளாகும் ‘ஜென்’ என்று தோன்றியது 🙂

Advertisements

Beautiful Shot

யானை கஜேந்திரனை முதலைப் பிடியிலிருந்து காப்பாற்ற வந்த திருமாலை வர்ணிக்கும் திருமங்கை ஆழ்வார் ‘திருப்புள் ஊர்ந்து சென்று நின்று ஆழி தொட்டான்’ என்கிறார்.

ஆழி = சக்கரம், அப்போ ‘ஆழி விட்டான்’ (அல்லது, ‘ஆழியைச் செலுத்தினான்’) என்றல்லவா வரணும்? ஏன் வெறுமனே ‘ஆழி தொட்டான்’ என்று எழுதுகிறார்?

இதற்கு ரெண்டு விளக்கங்களைச் சொல்கிறார்கள்:

#1 அவர் சும்மா தொட்டார், அவருடைய கருத்து அறிந்து சக்ராயுதம் முதலையைக் கொன்றுவிட்டது

அதைவிட பெஸ்ட், 2ம் விளக்கம், சச்சினின் சில பவுண்டரிகளைப் பார்த்தால், சும்மா பேட்டை நேரே வைத்தாற்போலிருக்கும், அடித்த வேகமே தெரியாது.

அதுபோல, அவர் சக்ராயுதத்தை சும்மா தொட்டதுதான் ஆழ்வாருக்குத் தெரிந்தது, திருமாலின் லாகவ Shot, அது சரியாகப் பாய்ந்து சென்று அந்த முதலையைக் கொன்றுவிட்டது.

Sweet

அலுவலகத் தோழி ஒருவர் Maternity விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார், மொபைலில் தன் மகனின் புகைப்படங்களைக் காட்டினார்.

நான் ஃபோட்டோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று, ‘சார், உங்களுக்கு ஸ்வீட் வந்ததா?’ என்றார்.

’ஸ்வீட்டா? என்ன ஸ்வீட்?’ என்றேன் குழப்பமாக.

’என் பையன் பிறந்தபோது ஆஃபீஸ்ல எல்லாருக்கும் ஸ்வீட் தரச் சொல்லி வாங்கி அனுப்பியிருந்தேனே, உங்களுக்கு வரலையா?’ என்றார் கவலையுடன்.

அவருடைய மகன் பிறந்தது நான்கு மாதம் முன்பாக, அப்போது அவர் சார்பாக எல்லாருக்கும் ஸ்வீட் வந்தது உண்மைதான், ஆனால் அதை இப்போதா விசாரிப்பது?

திகைப்புடன், ‘என்ன திடீர்ன்னு அந்த ஸ்வீட்டைப்பத்தி இப்போ விசாரிக்கறீங்க?’ என்றேன்.

‘ஒருவேளை நீங்க அன்னிக்கு ஆஃபீஸ்ல இல்லாட்டி?’ என்றார், ‘அப்படி ஸ்வீட் மிஸ் பண்ணவங்களுக்கெல்லாம் இன்னிக்கு ஒரு பாக்கெட் வாங்கிவந்திருக்கேன்.’

தாய்மார்களின் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லைபோல. அவர் மகன் 100 வயது வாழட்டும்!

பின்குறிப்பு: நான் எக்ஸ்ட்ரா ஸ்வீட் எடுத்துக்கொள்ளவில்லை 😉

Sachin

சச்சின் நாற்பதாண்டு விழாவை முன்னிட்டு அவுட்லுக் பத்திரிகை வெளியிட்டிருக்கும் சிறப்பிதழ் அட்டகாஷ். If you are a fan, GO FOR IT.

எப்போதும்போல் ராம்காந்த் அச்ரேகர் (சச்சினின் குரு) பேட்டியைதான் முதலில் தேடிப் படித்தேன். அதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர்.

பொடியன் சச்சின் மும்பை லோக்கல் மேட்ச்களில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நேரம், ஆனால் அவர் பெயர் செய்தித்தாள்களில் வரவில்லை.

காரணம், லோக்கல் மேட்ச்களில் ஒருவர் 30+ ரன் எடுத்தால்தான் செய்தித்தாளில் பெயர் போடுவார்களாம், சச்சின் அவ்வளவு ரன் எடுக்கவில்லைபோல.

ஆனால், ஒரு ஸ்கோரருக்கு சச்சின்மீது ஏதோ பிரியம், எப்படியாவது தில்லுமுல்லு செய்து அவர் பெயரை அச்சு வாகனத்தில் ஏற்றத் தீர்மானித்தார்.

ஒரு குறிப்பிட்ட மேட்சில் சச்சின் எடுத்த ரன்கள்: 24 நாட் அவுட், எக்ஸ்ட்ராஸ்: 6 ரன்கள்.

சும்மா போகும் எக்ஸ்ட்ரா இந்தப் பையனுக்குப் போகட்டுமே என்று அந்த ஸ்கோரர் 6 ரன்களை உருவி சச்சினின் ஸ்கோருடன் சேர்த்து, 30 ஆக்கிவிட்டார்.

இதனால், மறுநாள் செய்தித்தாளில் சச்சின் பெயர். அதை கோச் அச்ரேகரிடம் காட்டினார் சச்சின், ‘அதெப்படி? நீ 24தானே எடுத்தே?’ என்றார் அவர்.

விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு மிகவும் வருத்தம், ‘Never allow such a thing to happen again’ என்று சச்சினுக்கு அறிவுரை சொன்னார். ‘I was confident Sachin’s name would appear in print many hundred times in future, without resorting to anything unethical.’

New Song

ஒரு ‘பிரமாண்ட’ படம், ரீரெக்கார்டிங் நேரம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்குமே என்கிறார் இசையமைப்பாளர்.

உடனே அவர் தன் மேனேஜரை அழைத்துச் சொல்ல, ஒரு பெரிய பாடகரைக் கூப்பிட்டு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

ஆனால், பட நிறுவனம் இதை எதிர்பார்க்கவில்லை, ‘ஏற்கெனவே செலவு அதிகமாகிவிட்டது, இன்னொரு பாட்டு பதிவு செய்வது சிரமம்’ என்கிறார்கள்.

என்ன செய்ய? அந்தப் பாடகரை அழைத்து மன்னிப்புக் கேட்கிறார்கள், ’நிதிப் பிரச்னையால் ரெக்கார்டிங் கேன்சல்’ என்கிறார்கள்.

அதற்கு அவர், ‘எனக்கு ஒரு பைசா பணம் வேண்டாம், நான் உங்கள் இசையமைப்பாளரைப் பார்க்கவேண்டும், என் மகள் அவரிடம் ஆசி பெறவேண்டும்’ என்கிறார்.

அவரே மகளுடன் தன் செலவில்(Not sure) சென்னை வந்து பாடலைப் பாடிவிட்டுச் செல்கிறார், பணம் பெற்றுக்கொள்ளவில்லை.

அந்தப் பாடல், ‘ஹே ராம்’ படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா’, பாடகர் அஜய் சக்ரபர்த்தி, இசையமைப்பாளர் இளையராஜா.

‘சொல்வனம்’ இதழில் வெளியான இந்த அருமையான பேட்டிக் கட்டுரையில் இந்த விவரத்தைப் படித்தேன் : http://solvanam.com/?p=13585

Valee

ஃபேஸ்புக்கில் ரமேஷ் வைத்யா சொன்னபிறகுதான் கவனிக்கிறேன், வாலி எழுதிய ‘ஜனனி ஜனனி ஜகம்நீ அகம்நீ’ is a straight மரபுக் கவிதை, நாற்சீர் விருத்தம்!

மரபுக் கவிதையிலும் எழிலாகச் சொல், பொருளை இத்துணை நுட்பமாக அலங்கரிப்பது சாத்தியம் என்பதற்கான நவசாட்சி, வாழ்க நீர் வாலி!

Rose

ஒரு பழைய பவுண்ட் வால்யூமைப் புரட்டிக்கொண்டிருந்தேன், 1994ம் வருடக் குமுதம் இதழ்களின் தொகுப்பு அது, அப்போதைய ஆசிரியர் சுஜாதா.

குத்துமதிப்பாக, நான் +2 படித்துக் கல்லூரியில் சேர்ந்த / சேரவிருந்த நேரம் அது, இந்த இதழ்களின் மாதக் கணக்கு தெரியவில்லை.

அப்போது ஒரு வாரம், ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ரோஜாப்பூக்களின் படத்தை அச்சடித்து, அதில் நிஜமான ரோஜா ’வாசனை’யைப் பூசியிருந்தார்கள்.

அந்தப் படத்தை விரல்களால் தேய்த்து முகர்ந்தால் ரோஜாப்பூவின் வாசனை வரும், வந்தது, அந்த வயதில் அதைப் பார்த்து / நுகர்ந்து அசந்துபோனோம்.

அதே பக்கத்தில் சுஜாதா அந்தத் தொழில்நுட்பத்தை விளக்கியிருந்தார்: வாசனை என்சாப்சுலேஷன், 6 மைக்ரான் பொட்டலங்கள், தேய்த்தால் உடைந்து மணம்.

அப்போது இந்தியாவிலேயே முதல் முயற்சி அது. நிச்சயம் big hit, talk of the town ரேஞ்ச்க்கு வெற்றி.

இன்றைக்கு அந்த பவுண்ட் வால்யூமில் அதே பக்கத்தைப் பார்த்தேன், சும்மா தேய்த்து முகர்ந்தேன், கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் அதே வாசனை!

சும்மா ஜிம்மிக்ஸ் என்று அப்போது நினைத்தேன், 19 வருடம் தாங்குமளவு தில்லாலங்கடி தொழில்நுட்பமா அது? பலே பலே!