Vai. Mu. Kothai Nayagi

உரைநடைத் தமிழின் முதல் ‘சூப்பர் ஹிட்’ எழுத்தாளர்களில் ஒருவர், வை. மு. கோதைநாயகி.

அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய திருப்பூர் கிருஷ்ணன் வை. மு. கோதைநாயகி நாவல்களை அலசி ஆராய்ந்து, ஒரு சுவாரஸ்யமான ‘சென்டிமென்ட்’டைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இது எதேச்சையாக அமைந்ததா, அல்லது வை. மு. கோதைநாயகி விரும்பிச் செய்ததா என்று தெரியவில்லை.

வை. மு. கோதைநாயகி எழுதியவை மொத்தம் 115 நாவல்கள். இவற்றுள் மிகச் சிலவற்றைத்தவிர மற்ற எல்லாம், ‘உ’ என்ற எழுத்தில் தொடங்கி, ’து’ என்ற எழுத்தில் முடிகின்றன. ’அவை மங்கல எழுத்துகள் என்று அவர் கருதியிருக்கவேண்டும்’ என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.

இந்த மரபைப் பின்பற்றி, திருப்பூர் கிருஷ்ணனும் தான் எழுதிய ’கோதை நாயகியின் இலக்கியப் பாதை’ என்ற வாழ்க்கை வரலாறு நூலின் முன்னுரை தொடங்கி எல்லா அத்தியாயங்களையும் ‘உ’ என்ற எழுத்தில் தொடங்கி, ‘து’ என்ற எழுத்தில் முடிக்கிறார்.

நானும் இந்தக் குறுங்கட்டுரையை அப்படி அமைப்பதுதான் நல்லது.

Advertisements

Basheer

வைக்கம் முகம்மது பஷீர் சாதாரணமாக வாழ்ந்தவர்தான். ஆனால் வாசகர்களோ ரசிகர்களோ பத்திரிகை, பதிப்பக அதிபர்களோ, அரசோ தனக்குப் பண உதவி செய்ய முன்வந்தபோதெல்லாம் மறுத்துவிடுவாராம், ‘எனக்குச் சிரமம் எதுவும் இல்லை. பணம் ஏதும் அனுப்பவேண்டாம், உங்களுக்கு நன்மை விளையட்டும்.’

Gambling @ Kamba RamayaNam

’கம்ப ராமாயணத்தில் பெண்கள் சூதாடியதாக இருக்கிறதாமே, உண்மையா?’ என்று Jaya Prakash கேட்டார். எனக்குத் தெரிந்த பதில் இது:

பால காண்டத்தில் அயோத்தி நகரத்தின் சிறப்பைச் சொல்லிவரும் கம்பர், அந்த ஊரில் யார் யார் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் எனப் பல காட்சிகளைக் காண்பிக்கிறார்.

அதில் ஒரு பாடல், அயோத்தி நகரப் பெண்களின் பொழுதுபோக்குகளை விவரிக்கிறது. இப்படி:

நந்தனவனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந்துவர் அழிதரத் தேறல் மாந்தி. சூது
உந்தலின் பொழுது போம்…

அதாவது, அயோத்தி நகரத்திலிருந்த பெண்களுக்கு எப்படிப் பொழுதுபோனது தெரியுமா?

1. நந்தவனத்து மலர்களைப் பறித்தார்கள்
2. மான்போல ஓடினார்கள், அப்படி ஓடி
3. தங்கள் வாயில் பூசப்பட்டிருந்த செந்நிறம் (Lipstick) போகும்வரையில் தேன் குடித்தார்கள்
4. சூதாடினார்கள் (அதாவது, தாயம் விளையாடினார்கள்)

இந்தப் பாடலில் பெண்கள் என்ற வார்த்தை இல்லை, ஆனால் நந்தவனம் மலர் பறித்தல், மான்போல் நடை, செவ்வாய் இதெல்லாம் பெண்களுக்குதான் பொருந்தும். ஆகவே, சூதாடியதும் பெண்களாகதான் இருக்கவேண்டும் :> காசு வைத்து ஆடினார்களா, அல்லது சும்மா ஜாலிக்கா என்பதுபற்றிக் குறிப்புகள் இல்லை 🙂

இதை இன்றைய பெண்கள் யாருடனேனும் ஒப்பிட்டு உண்மையறிக :))

Uvamai

’நிலாச்சோறு’ பாடல்களினிடையே வாலி எழுதியுள்ள ஒரு வரி, ‘தேரு வந்து நின்னாக்கூட, நீ அழகு’.

’இதற்கு என்ன அர்த்தம்? சும்மா மீட்டருக்குக் கட்டியதா?’ என ஒரு நண்பர் ட்வீட்டியிருந்தார்.

அந்தப் பாட்டு (வாலி) பெருமளவு மீட்டருக்குப் பிடித்த கொழுக்கட்டைதான், ஆனால் இந்த வரி அப்படியல்ல.

’கண்ணுக்கு மை அழகு’ என்று தொடங்கும் பாடலில் ‘ஊர்வலத்தில் தேர் அழகு’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து.

இன்னொரு பாடலில் (வாலியே எழுதியது என்று நினைவு) இப்படி வரும்: ’அம்மன் கோயில் தேரழகு, ஆயிரத்தில் ஓரழகு, நாணமுள்ள கண்ணழகு, நான் விரும்பும் பெண்ணழகு’.

பொதுவாகவே, கம்பீரமும் கலை நுணுக்கமும் செறிந்து தெரு நடுவே ஊர்ந்து வரும் தேர் அழகானதுதான். அதைவிடக் குழந்தையின் நடையும் ஓட்டமும் அழகு என இந்த வரிக்கு அர்த்தம்.

தேரிலும் குறிப்பாக, திருவாரூர் தேர் மிக அழகு என்பார்கள். ‘திருவாரூர் தேரழகா, மகராசன் நடையழகா’ என்று ஒரு சினிமாப் பாட்டும் உண்டு.

அது சரி, தேர்த் திருவிழாக்களெல்லாம் இன்னும் நடக்கின்றனவா? இந்த உவமை இப்போ யாருக்குப் புரியும்?!

Seevagan

சீவக சிந்தாமணியில் சுபத்திரன் என்று ஒரு வணிகன், அவனுக்கு ஒரு மகள் பிறக்கிறாள், கேமசரி என்று பெயர் சூட்டுகிறான்.

அப்போதெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் உடனே ஜோதிடர்களைக் கூப்பிட்டு ‘இவளுக்கேற்ற மாப்பிள்ளை யார்?’ என்று விசாரிப்பார்களாம், என்ன அவசரமோ!

அப்படி சுபத்திரன் விசாரிக்க, ஜோதிடர்கள் சொல்கிறார்கள், ‘உன்னுடைய மகள் யாரைப் பார்த்து வெட்கப்படுகிறாளோ அவன்தான் அவளுக்கு மாலை சூட்டுவான்.’

அதன்பிறகு, சுபத்திரன் தன் கடைக்கு வருகிற இளைஞர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவான். இவர்களில் யாரைப் பார்த்தாவது தன் மகள் வெட்கப்படுகிறாளா என்று கூர்ந்து கவனிப்பான்.

ம்ஹூம், அவள் பாட்டுக்கு சுற்றி வந்துகொண்டிருந்தாள். நோ நாணித் தலைகுனிதல், ஆகவே, நோ கல்யாணம்!

சுபத்திரனுக்குக் கவலை, ‘இந்தப் பெண்ணுக்குத் திருமண வயது வந்துவிட்டதே, இவள் என்னவென்றால் இப்படித் துளி வெட்கமில்லாமல் திரிகிறாளே!’

நிறைவாக, (As expected) சீவகன் வருகிறான், அவனைப் பார்த்து கேமசரி நாணப்படுகிறாள், திருமணம் நடக்கிறது.

அது சரி, கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு சினிமாக் காட்சி வரலை?

Bus

பஸ்ஸில் ஜன்னலோர இருக்கை ஒன்றுமட்டும் காலியாக இருந்தது. அதன் அருகே அமர்ந்திருந்த பெண் முன் சீட்டில் தலையைச் சாய்த்து நன்றாகத் தூங்கிவிட்டார்.

அடுத்த ஸ்டாப்பில் கை நிறைய ஷாப்பிங் பைகளுடன் ஒரு மூதாட்டி பஸ் ஏறினார், உட்கார இடம் தேடினார், அந்த சீட்டை நெருங்கினார்.

ஆனால், தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து வழிவிட்டால்தான் இந்த மூதாட்டி அங்கே உட்காரமுடியும்.

அவர் அந்தப் பெண்ணை எழுப்புவதற்காகக் கையை முன்னே நீட்டிவிட்டார், சட்டென சுதாரித்துக்கொண்டு நிறுத்திவிட்டார்.

மற்றவர்கள் அவருக்கு உதவ முன்வந்தபோது, அவர் பிடிவாதமாக, மறுத்துவிட்டார், ‘பரவாயில்லை, தூங்கட்டும், என்ன அலுப்போ, நான் கொஞ்ச நேரம் நிக்கறேன்!’

மறுவிநாடி, அவருக்கு உட்கார இடம் கொடுப்பதற்காக ஒட்டுமொத்த பஸ்ஸும் (almost) எழுந்து நின்றது.

நீங்கள் நினைப்பது உண்மைதான். இதை யாராவது கதையாக எழுதியிருந்தால் நான்கூட நம்பியிருக்கமாட்டேன்.

Thodai

இன்று காலங்காத்தால, தொடைகளைப்பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். I mean, தமிழ் இலக்கணத் தொடைகள் 🙂

தமிழில் எட்டுவிதமான தொடைகள் உண்டு: எதுகை, மோனை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டைத் தொடை, செந்தொடை.

முதல் 3 எல்லாருக்கும் தெரியும், இரண்டாம் எழுத்து ஒத்துவந்தால் எதுகை, முதல் எழுத்து ஒத்துவந்தால் மோனை, நிறைவு எழுத்து ஒத்துவந்தால் இயைபு.

உதா: ”தம்பி, தங்கக் கம்பி” இதில் தம்பி, தங்கம் மோனை, தம்பி, கம்பி எதுகை, தம்பி, கம்பி இயைபும்கூட.

முரண் தொடை என்பது, ஒவ்வொரு வரியிலும் முதல் சொல் முரண்பட்டிருப்பது, உதாரணம்: சின்ன தொழில், பெரிய லாபம்.

அந்தாதித் தொடை என்பது, ஒரு வரியின் நிறைவுச் சொல்லை, அடுத்த வரியின் முதல் சொல்லாக வைப்பது. உதா: வட்ட நிலா, நிலா அழகு.

அளபெடைத் தொடை என்பது, நெடில் நீண்டு ஒலிப்பது. உதா : கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இந்த ‘இரட்டைத் தொடை’தான் மிகச் சுவாரஸ்யமானது, ஒரே சொல் அடிமுழுவதும் வருவது (அதே அர்த்தத்தில், அல்லது வேறு அர்த்தத்தில்). உதா: பல்சான்றீரே, பல்சான்றீரே.

நிறைவாக, செந்தொடை, இதில் மோனை உள்பட எந்தத் தொடையும் இருக்காது, அதற்கு ‘நல்ல பாம்பு’மாதிரி இந்தப் பெயர்போல! உதா: நான் திருச்சியில் படித்தேன், கோவையில் வேலை அமைந்தது… இப்படி.

அது சரி, ‘தொடை’ என்ற கிளுகிளுப்பான பெயர் ஏன்?

வார்த்தைகளை விதவிதமாகத் தொடுப்பதால் அது ‘தொடை’, வேறொன்றும் இல்லை :>)