Game

இன்று குழந்தைகளோடு ஒரு பூங்காவுக்குச் சென்றிருந்தோம். அங்கே ஒரு செயற்கைச் செங்குத்து மலையோர அமைப்பை வைத்திருந்தார்கள்.

அந்த அமைப்பில் பாறைகளைப்போலக் கரடுமுரடான மேல்போர்வை. ஆங்காங்கே கை, கால் வைக்க வசதியான இடங்கள் உண்டு.

அந்த இடங்களைப் பற்றியபடி, தவளைபோல் கை கால்களை மாற்றி மாற்றி வைத்து மேலே ஏறுவது விளையாட்டு.

Naturally, என் மகள் நங்கை அதில் ஏற விரும்பினாள், ஆனால் அவள் athletic child அலள், பாறையோ பெரிது, ஆகவே சும்மா ஒரு முறை முயற்சி செய்துவிட்டு வந்துவிடுவாள் என நினைத்தேன்.

நான் எண்ணியதுபோலவே, அவளால் 30%க்குமேல் செல்லமுடியவில்லை, ‘கை வலிக்குதுப்பா, கால் வலிக்குதுப்பா, அங்கே சரியான பிடிமானம் இல்லைப்பா.’

’பரவாயில்லைம்மா, இதெல்லாம் பெரிய பிள்ளைங்க விளையாட்டு, அப்புறமாப் பார்த்துக்கலாம், வா’ என்றேன்.

அது அவளை உறுத்தியிருக்கவேண்டும். ’இன்னொருவாட்டி ட்ரை பண்றேன்’ என்று திரும்ப ஏறத் தொடங்கினாள்.

இந்தமுறை சரசரவென்று பாதிக்குமேல் ஏறிவிட்டாள், அங்கே ஒரு சின்னப் பிரச்னை, அடுத்த பிடிமானம் அவள் உயரத்துக்கு எட்டவில்லை.

இறங்கினாள், மறுபடி ஏறினாள், மறுபடி மறுபடி… ஒவ்வொருமுறையும் அந்த இடத்திலேயே தடுமாறி நின்றாள், மேலே செல்லமுடியவில்லை.

ஒரு கட்டத்தில், ’என் கையெல்லாம் அழுக்குப்பா, தண்ணி ஊத்து, க்ளீனா இன்னொருவாட்டி முயற்சி பண்றேன்’ என்றாள்.

’நல்ல சாக்கு’ என்று நினைத்தபடி நமுட்டுச் சிரிப்போடு தண்ணீர் ஊற்றினேன், கழுவிக்கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினாள்.

இந்தமுறையும் அதே 60%ல் அதே தடை, அவள் கை, கால் ஒரு மட்டத்துக்குமேல் உயரவில்லை, வழுக்குகிறது, விழுந்துவிடுவாளோ என்று எங்களுக்கு பயம்.

ஆனால் அவள் விடவில்லை, திரும்பத் திரும்பக் காலைத் தூக்குகிறாள், இறக்குகிறாள், சேர்க்கிறாள், மறுபடி ஏறுகிறாள், விளிம்பில் நிற்க முயற்சி செய்கிறாள், தோற்கிறாள்…

இதற்குள் ஒரு சிறு கூட்டமே சேர்ந்துவிட்டது, ‘சின்னப் பிள்ளைங்களையெல்லாம் இதுல ஏற விடக்கூடாது சார், விழுந்துடப்போறா, பிடிச்சுக்குங்க.’

இதெல்லாம் அவள் காதில் விழுந்ததோ இல்லையோ தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தாள், இடதுபக்கம், வலதுபக்கம் என்று பல options முயன்றாள்.

எப்படியோ, அந்தப் பிடிமானம் சிக்கிவிட்டது, அடுத்த 40%ஐச் சில நொடிகளில் கடந்து மேலேறிவிட்டாள்.

கூட்டம் மொத்தமும் கை தட்டி ஃபோட்டோ எடுக்கிறது, அவள் கீழே வந்ததும் பெயர் கேட்கிறார்கள், கை குலுக்குகிறார்கள், ஆட்டோகிராஃப்தான் குறை.

முகம் முழுக்க சிரிப்புடன் என்னிடம் வந்தவள் முதல் வாக்கியமாக, ‘நாளைக்கு என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லப்போறேன்’ என்றாள்.

அவள் காசு கொடுத்து ரங்க ராட்டினம் சுற்றியதையெல்லாம் வீடியோ எடுத்தோம், இதை எடுக்கவில்லை, காரணம், ஏறிவிடுவாள் என்று எங்களுக்கே நம்பிக்கை இல்லை.

இப்பவும், நங்கை கொஞ்சம் நோஞ்சான்தான், (என்னைப்போலவே) ஓர் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிற ஜாதிதான், ஆனாலும் ஈகோ ஏதோ செய்துவிடுகிறதுபோல.

Advertisements

Doubles

நங்கையும் மங்கையும் இறகுபந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள், எட்டிப்பார்த்தேன், ‘சிங்கிள்ஸ் போதும், அடுத்து டபுள்ஸ் ஆடலாம்’ என்றாள் நங்கை.

நான் பேசாமல் சும்மா இருந்திருக்கவேண்டும், ‘நீங்க ரெண்டு பேர்மட்டும்தானே இருக்கீங்க, எப்படி டபுள்ஸ் ஆடுவீங்க? அதுக்கு நாலு பேர் வேணுமே’ என்றேன்.

‘நீயும் அம்மாவும் வந்தா 4 பேரும் சேர்ந்து டபுள்ஸ் மேட்ச் ஆடலாம்’ என்று பதில் வரும் என எதிர்பார்த்தேன்.

அவள் சற்றும் அசராமல் சொன்ன பதில், ‘நாங்க ரெண்டு பேரும் கைக்கு ஒண்ணா ஆளுக்கு ரெண்டு பேட் வெச்சுகிட்டு டபுள்ஸ் ஆடுவோம்.’

Kengal

இன்று கெங்கல் ஆஞ்சநேயர் கோயில் சென்றிருந்தோம். அங்கிருந்த அர்ச்சகரிடம் ’அதென்ன கெங்கல்ன்னு பேர்?’ என்று விசாரித்தோம், அழகாக இலக்கணப் பாடம் எடுத்தார்.

’இந்த ஊர்ல இயற்கையாவே சிவப்பு நிறக் கற்கள் ஜாஸ்தி, சிவப்புக்குக் கன்னடத்துல கெம்பு, So கெம்பு + கல் = கெங்கல்’

பெயருக்கேற்ப, ஆஞ்சநேயரும் செந்நிறத்தவராகவே இருக்கிறார், மீசையெல்லாம் வைத்துக்கொண்டு ஜம்மென்று!

இந்தக் கோயிலில் என்னைக் கவர்ந்த விஷயம், ஜன்னல் கம்பிகளில் அழகோவியங்கள், அனுமன் தியானம் செய்கிறார், சீதை தரும் கணையாழியை வாங்குகிறார், மருந்து மலையைத் தூக்குகிறார், ராமரை அன்புறத் தழுவுகிறார், பீமனிடம் குறும்பு செய்கிறார், ஒவ்வொன்றும் அதி அழகான சித்திரிப்புகள்.

இத்தனைக்கும் நடுவே ஒரு ஜன்னலில் மகாத்மா காந்தியின் கம்பி ஓவியம் இருந்தது, அதுதான் ஏன் என்று புரியவில்லை!

Paadhan

ஒரு பாடலில் இயைபுக்காக ’நாதன்’க்கு இணையாகப் ‘பாதன்’ என்று இயல்பாக எழுதிவிட்டேன், பாதத்தைக் கொண்டவன் என்ற பொருளில்.

எழுதியபிறகுதான் சந்தேகம், ’இப்படி ஒரு வார்த்தை நிஜமாகவே உள்ளதா, கேள்விப்பட்டதில்லையே!’

நம்பிக்கையே இல்லாமல்தான் கூகுள் செய்தேன், இருக்கிறது 🙂 இதைப் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

உதாரணமாக, பாபநாசம் சிவன் எழுதிய ஒன்று, நான் பயன்படுத்திய அதே இயைபுதான் இங்கேயும்:

‘ஆனந்த நடமிடும் பாதன், பொன்
அம்பலவாணன், சிதம்பர நாதன்’