ANNadurai

அண்ணாதுரை பேச்சைக் கேட்ட பிராமணர்கள் தங்களுக்குள் எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்று கண்ணதாசன் விருத்தத்தில் விவரிக்கிறார்:

’சாஸ்திரிவாள் தெரியுமோ, சூத்திரன்தான்,
தமிழினிலே அழகாவே பேசுகிறான் ஓய்
நாஸ்திகம்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்
நன்னாவே பேசுகிறான்; என்னங்காணும்
ஆஸ்திகத்தை அவன் தாக்கும் முறையைப் பார்த்தால்
ஆபத்துத் தான் காணும் எதிர்காலத்தில்
வாஸ்தவத்தில் அவன் நல்ல மூளைக்காரன்,
மகதேவன் அவதாரம்’ என்பார் ஐயர்!

Advertisements

Say It In Many Words

தமிழின் சொல்வளத்துக்குப் பாவாணர் காட்டும் உதாரணம், இச்சொற்கள் அனைத்துக்கும் (கிட்டத்தட்ட) ஒரே பொருள்:

அறை
இயம்பு
இசை
உரை
என்
ஓது
கிள
கிளத்து
கூறு
சாற்று
செப்பு
சொல்
நவில்
நுதல்
நுவல்
நொடி
பகர்
பறை
பன்னு
பனுவு
புகல்
புலம்பு
பேசு
மாறு
மிழற்று
மொழி
விளத்து
விளம்பு

இதேபோல் யானைக்குத் தமிழில் 38 பெயர்கள் உண்டாம். பட்டியல் வேண்டுவோர் சுயவிலாசமிட்ட அஞ்சலட்டை அனுப்புக.

Taking Bath

பள்ளி இல்லாத நாள்களில் மகள்களைக் குளிக்க அனுப்புவது பெருஞ்சிரமம். மனைவியார் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பரிதாபம் கொண்டு அவர்களை motivate செய்யும்விதமாக ஒரு பாட்டுக் கட்டினேன். இது எந்த விருத்த வகையிலும் வராது என்ற முன்னெச்சரிக்கையுடன் வாசிக்கவும் :>)

குளிக்கப் போகிறேன், நான்
குளிக்கப் போகிறேன்!
குளிர்ந்த நீரில் குளித்துக் குளித்து
களிக்கப் போகிறேன்!

புழுதி படிந்த மேனி தன்னைப்
பளிங்கு போலவே,
பழுதில்லாது மாற்றி நானும்
ஜொலிக்கப் போகிறேன்!

குளிக்கப் போகிறேன், நான்
குளிக்கப் போகிறேன்!

இசைத்திறன் கொண்டோர் இதற்கு மெட்டமைத்துப் பரப்புமாறு வேண்டி அமர்கிறேன் :>)

Shop

இன்று ஒரு கடைக்குள் 8:53 மணிக்கு நுழைந்தோம். ‘மூடிட்டோம் சார்’ என்றார்கள் விரட்டுவதுபோல.

போர்டில் ‘9 மணிவரை’ என்று எழுதியிருந்தது. ‘இன்னும் ஏழு நிமிஷம் இருக்கே’ என்றோம்.

வெளியே சுட்டிக்காட்டி, ‘மழை சார், அதான் கடையை முன்னாடியே மூடிட்டோம்’ என்றார்கள்.

’நான் உள்ளே வந்துட்டேன், என் பிஸினஸ் வேணாமா உங்களுக்கு?’ என்றேன், ‘உங்க மேனேஜரைக் கூப்பிடுங்க.’

மேனேஜர் வந்தார். ‘மழை பெய்யுது சார், கடை மூடியாச்சு, நாளைக்கு வாங்க’ என்றார். ‘நல்லது’ என்று சொல்லி வெளியே வந்தோம்.

கடை ஊழியர்கள் சீக்கிரம் வீடு செல்வது குறித்து சந்தோஷம்தான். அவர்கள் நிலையறிந்த மேனேஜர் அமைந்திருப்பது இன்னும் சந்தோஷம்தான். ஆனால், இன்னும் நேரம் உள்ளபோது உள்ளே வந்துவிட்ட கஸ்டமரை விரட்டியிருக்கவேண்டாம், அதுவும் பெங்களூரில் வருடம் 360 நாள் பெய்யும் மழையைக் காரணம்காட்டி!

Ek Anek

இயக்குநர் KV ஆனந்த் தன் படங்களுக்கு வித்தியாசமாகத் தலைப்பு வைத்தே ZMOT (Google it!) உருவாக்கிவிடுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

உதாரணமாக, கோ, அயன் போன்ற தலைப்புகளுக்கு அர்த்தம் கேட்டு / சொல்லி குறைந்தபட்சம் ஒரு லட்சம் ட்வீட்களாவது வந்திருக்கும்.

’மாற்றான்’கூட வித்தியாசத் தலைப்புதான். கேள்விப்பட்ட வார்த்தை என்றாலும், அப்படத்தின் தன்மைக்கு ஒருமாதிரி தத்துவார்த்தமாகப் பொருந்தியது.

அவரது புதுப்படத்துக்கு ‘அனேகன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். Yet another அரிய தமிழ்ச் சொல் என்று பாராட்டுகள், பொருள் தேடல்கள்.

’அனேகன்’ அரிய சொல்தான், ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்ச் சொல் அல்ல, ஏக் : ஏகன் : ஒருவன், அனேகன் : பலராக / பலதாக இருப்பவன்.

இது மாணிக்கவாசகர் பயன்படுத்திய/ பிரபலப்படுத்திய சொல் என்று அறிந்தேன் (ஏகன், அனேகன் இறைவன் அடி வாழ்க). அதுபற்றித் தேடியபோது வள்ளலாரும் கிடைத்தார், ’ஏகா, அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான தேகா’ என்றெல்லாம் சிவனை அழைக்கிறார் ஒரு திருவருட்பா பாடலில்.

அதாவது, (தனித்துவமான) ஒருவனாக உள்ளவனே, அதேசமயம் பலதாகவும் (எல்லா உயிர்களாகவும்) உள்ளவனே, அழகிய அம்பலத்தில் வாழும் ஞான வடிவானவனே!

’ஏகன்’ என்று ஏற்கெனவே ஒரு படம் வந்துள்ளது, இப்போது ‘அனேகன்’, ரெண்டையும் பாட்டுக்குள் சேர்த்துவைத்த மாணிக்கவாசகருக்கும் வள்ளலாருக்கும் “ஓ” போடுவோம்!