Sweet

மகளை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே இருந்த ஒரு லாலிபாப் குச்சியைக் காண்பித்து ‘அது வேணும்’ என்றாள்.

நான் ஏற்கெனவே அவளுக்காக அதே கடையில் வேறு சில தின்பண்டங்கள் வாங்கியிருந்ததால், ‘அது வேற எக்ஸ்ட்ராவா எதுக்குடா?’ என்றேன்.

’இல்லை, அதுதான் எனக்கு வேணும்’ என்றாள் அவள், ‘உன்கிட்ட காசு இல்லைன்னா நீ வாங்கினதையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டு அதை வாங்கித் தா.’

எனக்கு சுவாரஸ்யம் பிறந்தது. ஐம்பது ரூபாய் தின்பண்டங்களைத் திரும்பத் தந்துவிட்டு அந்த இரண்டு ரூபாய்க் குச்சியை வாங்குமளவு என்ன ஆசை? இத்தனைக்கும் அது பிரபலமான மிட்டாய்கூட இல்லை. ஏதோ லோக்கல் பிராண்ட். அதன்மீது இவளுக்கு ஏன் இத்துணை ஆர்வம்? அவளிடமே கேட்டேன்.

’எங்க ஸ்கூல் கேன்டீன்ல இந்த லாலி பாப் இருக்குப்பா, மத்த ஃப்ரெண்ட்ஸ்லாம் வாங்கிச் சாப்பிடுவாங்க, சூப்பரா இருக்கும்னு சொல்வாங்க’ என்றாள், ’எனக்கும் சாப்பிடணும்ன்னு ஆசைதான், ஆனா நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை, இன்னிக்குதான் இதை வெளியே கடைல பார்க்கறேன், அதனாலதான் கேட்டேன்.’

அவளுக்கு நாங்கள் இன்னும் பாக்கெட் மணி தரத் தொடங்கவில்லை. ஆகவே, கேன்டீனில் அதை தினமும் பார்த்தாலும் அவளால் வாங்கமுடியாது, சரியான காரணம்தான். ஆகவே, அந்தக் குச்சிகளில் இரண்டை அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். உலகையே வென்ற மகிழ்ச்சியுடன் தின்னத் தொடங்கினாள், ‘சூப்பரா இருக்குப்பா!’

வீடு திரும்பும் வழியில் கேட்டேன், ‘நங்கை, உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் டெய்லி அதைச் சாப்பிடுவாங்கன்னு சொல்றியே, உனக்குத் தரமாட்டாங்களா?’

’ம்ஹூம்!’

’நீயும் கேட்கமாட்டியா?’

‘சேச்சே, அப்படியெல்லாம் யார்கிட்டயும் எதையும் கேட்கக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்கப்பா.’

’இத்தனை நாள்ல அந்த மிட்டாயை ஒரு ஃப்ரெண்டுகிட்ட காக்காய் கடி கேட்டுக்கூட வாங்கினதில்லையா?’

‘காக்காய் கடியா? அப்டீன்னா?’

Of Course, காக்காய் கடி என்றால் என்ன என்று விளக்கினால், அதன் Hygienic குறைபாடுகளைச் சொல்லி அவள் ஒரு வியாசம் நிகழ்த்தக்கூடும். ஆகவே, சும்மா இருந்துவிட்டேன்.

நட்புப் பரிமாற்றங்களிலும், மூக்குநுனிவரை வட்டத்திலும்கூட தலைமுறைக்குத் தலைமுறை வித்தியாசம் உள்ளதுபோல!

Advertisements

Kannam

’சிப்பியிருக்குது முத்துமிருக்குது’ பாட்டில் ‘தங்கத் தட்டு எனக்குமட்டும்’ என்ற வரிக்கு என்ன அர்த்தம் என்று பலமுறை குழம்பியிருக்கிறேன்.

பதில் இன்னொரு கண்ணதாசன் பாடலில் இருக்கிறது, ’என்ன பார்வை உந்தன் பார்வை’ சரணத்தில், ‘கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு’!

’தட்டு’ என்றால் தட்டுப்பாடு என்றும் ஓர் அர்த்தம் உண்டு, ‘தங்கத் தட்டு’ என்றால் நெடுநேரம் தங்குவதற்குத் தட்டுப்பாடு, கன்னம் வழுக்குமல்லவா? 😉

தவிர, கன்னத்தில்(மட்டும்) நெடுநேரம் தங்கியிருப்பது காதலர்க்குப் பிடிக்காது 😉

Naangu Nilam

’’வல்லமை தாராயோ, இந்த நானிலம் பயனுற’ என்று பாரதியார் எழுதுகிறாரே, அதென்ன நானிலம்? தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவா?’ என நண்பர் சுதாகர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார்.

உண்மையில் அது ‘நானிலம்’ அல்ல, ‘மாநிலம்’. ஆனாலும் நண்பருடைய கேள்வி Validதான்.

நானிலம் = நான்கு மாநிலங்கள் என்ற அவருடைய சுவாரஸ்யமான கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் நானிலத்துக்கு அர்த்தம் அதுவல்ல.

கம்ப ராமாயணத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்கிற செய்தியைச் சொல்லும் வசிஷ்டர், ‘நானிலம் நாளை நினக்கு’ என்று அறிவிக்கிறார்.

அயோத்தி பக்கத்தில் திராவிட நாடு கோரிக்கையெல்லாம் கிடையாது என்பதால், கம்பர் ’நானிலம்’ என்று வேறு எதையோதான் சொல்லியிருக்கவேண்டும்.

நானிலம் என்பது குறிஞ்சி (மலை++), முல்லை (காடு++), மருதம் (வயல்++) & நெய்தல் (கடல்++) என்ற நான்கு நிலங்களைக் குறிக்கிறது.

ஆனால், மொத்தம் ஐந்து நிலம் என்று சொல்வார்களே, மற்றதை சொல்லிவிட்டுப் பாலையை விட்டுவிடுவது நியாயமா?

பாலை என்று தனியே ஒரு நிலம் கிடையாது. முல்லையும் குறிஞ்சியும் (காடும், மலையும்) திரிந்து பாலை ஆகும்.

அதனால்தான் தொல்காப்பியம் நான்கு வகை நிலங்களைதான் குறிப்பிடுகிறது, பாலை இந்நான்கின் பகுதி, தனியே சொல்லவேண்டியதில்லை. நானிலம், ஐநிலமல்ல!

Love!

அலுவலகத் தோழி ஒருவரை வீட்டுக்குக் கொலு பார்க்க அழைத்துவந்தேன். அவருக்குத் தமிழ் தெரியாது. என் மனைவியுடன் கன்னடத்தில் பேசினார்.

சிறிது நேரத்தில் இன்னும் இரண்டு பேர் ஒரு சின்னப் பையனோடு கொலு பார்க்க வந்தார்கள். அவர்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நிறுத்தாமல் லொடலொடவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் மனைவி வேறு வழியில்லாமல் அவர்களுக்குப் பதில் சொல்லி ஏதோ பேச, எங்கள் வீட்டுக் கூடத்தில் செம்மொழி மாநாடு நடப்பதுமாதிரி ஒரே தமிழ்மயம், இந்தப் பெண் எதுவுமே புரியாமல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 20 நிமிடம், நான் ஸ்டாப் தமிழ்ப் பேச்சுதான், இடையிடையே பொம்மைகளைத் தொட முயற்சி செய்யும் அந்தப் பையனை ‘டேய் மகேஷ், சும்மா இரு!’ என்று அதட்டல்.

நிலைமையை சமாளிக்க நான் அவரோடு ஆங்கிலத்தில் ஏதாவது பேசலாம் என்றால் பெண்கள் கூட்டத்துநடுவே செல்ல தயக்கம், அவர் பாடு என்று ஒதுங்கிவிட்டேன்.

ஒருவழியாக அவர்கள் கிளம்பி, இவருக்கு தாம்பூலம் கொடுத்து வழியனுப்பும்போது, ‘தமிழ்ப் பேச்சு புரியாம ரொம்ப சிரமப்பட்டுட்டீங்கல்ல?’ என்றேன்.

’சேச்சே’ என்றார் அவர், ‘I actually enjoyed their discussion!’

’எப்படி? உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’

’இல்லை, ஆனா, என் ஹஸ்பண்ட் பேரு மகேஷ், அவங்க அந்தப் பேரை அடிக்கடி சொன்னாங்களா, அதைக் கேட்டுகிட்டிருந்தேன்’ என்றார் சட்டென்று.

’மகேஷ்’ என்ற பெயர்மட்டும் கற்பனை. மற்றபடி இது முழுக்க அப்படியே நடந்த விஷயம். பொய்யில்லை, அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்துவைத்தவர்!

VeLi Virutham

இன்று வெளிவிருத்தம் எழுதக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் எளிதான, கொஞ்சம் சவாலான ஒரு பாவகை இது.

இதற்கான நெறிமுறைகள்:

* மொத்தம் நான்கு வரிகள் (அடிகள்)
* ஒவ்வொரு வரியிலும் ஐந்து சீர்கள் (அல்லது, சொற்கள்)
* முதல் நான்கு சொற்கள் ஈரசைச்சீர், ஐந்தாவது சொல் மூவசைச்சீர்
* நான்கு வரிகளிலும் முதல் சொற்கள் எதுகையாக இருக்கவேண்டும் (உதா: மொட்டு, விட்ட, பட்டு, கட்டு)
* நான்கு வரிகளிலும் 1, 3வது சொற்களிடையே மோனை இருக்கவேண்டும் (உதா: நானே நாதம், அவன்தான் அழகன்)
* நான்கு வரியிலும் ஐந்தாவது சொல் ஒன்றாகவே இருக்கவேண்டும், திரும்பத் திரும்ப வரவேண்டும் (சின்னச் சின்ன “ஆசை”, சிறகடிக்க ”ஆசை”, முத்து முத்து “ஆசை”, முடித்துவைத்த “ஆசை” போல)

இந்த நெறிமுறைகளைப் படித்தவுடன் சும்மா ஜாலிக்குத் தட்டியது:

கண்ணே, கனியே, கட்டிக் கரும்பே வாராயோ!
உண்ணப் பழங்கள் ஊட்டி விடுவேன் வாராயோ!
தண்ணீர் தருவேன், தமிழைத் தருவேன் வாராயோ!
பண்கள் நூறு பாடிக் களிக்க வாராயோ!

அடுத்து, ஒரு முருகன் பாட்டு:

ஆறு முகங்கள் அருள்பொழி கரங்கள் முருகனுக்கு,
ஏறு மயில்தான் எழில்நிறை வாகனம் முருகனுக்கு,
ஊறு இல்லா(து) உலகைக் காக்கும் முருகனுக்கு,
நூறு பாக்கள் நூற்றே தருவேன் முருகனுக்கு!

ரொம்பச் சுலபமாக இருக்கிறது. குழந்தைப் பாடல்களுக்கு நன்கு பொருந்தும் என்று நினைக்கிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்!

Poovai Senguttuvan

’கந்தன் கருணை’ படத்திற்கு இசை கே. வி. மகாதேவன். ஆனால் அதில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற ஒரு பாடலுக்குமட்டும் இசை குன்னக்குடி வைத்தியநாதன் என இன்று தெரிந்துகொண்டேன்.

’தேரழுந்தூர் சகோதரிகள் கச்சேரிகளில் பாடுவதற்காக ஒரு பாட்டு எழுதுங்கள்’ என்று பூவை செங்குட்டுவனை குன்னக்குடி கேட்க, அவருக்கோ ஆர்வமில்லை. அப்போதும் விடாமல் வற்புறுத்தி எழுதி வாங்கியிருக்கிறார். ‘நான் பக்தியே இல்லாமல் எழுதிய பக்திப் பாடல்’ என்கிறார் பூவை செங்குட்டுவன்.

பின்னர் அந்தப் பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடி இசைத்தட்டாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

ஒரு விழாவில் இந்தப் பாடலைக் கேட்ட ஏ. பி. நாகராஜன் தனது ‘கந்தன் கருணை’ படத்தில் அதனை அப்படியே பயன்படுத்திக்கொண்டார்.

அந்தப் படத்தின் மற்ற பாடல்களுக்கு இசை அமைத்த / எழுதிய கே. வி. மகாதேவனும் கண்ணதாசனும் ஒரு புதுக் கவிஞரை ஆதரிக்கும்விதமாக இதனை ஏற்றுக்கொண்டது பெருந்தன்மை!

இதனை வாமனன் எழுதிய ‘திரைக் கவிஞர்கள் 2000வரை’ என்ற நூலில் வாசித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியீடு. விலை ரூ 140