Neelam

ஒரு காதல் ஜோடி கை கோத்து நடக்கிறது. காதலன் பக்கத்திலிருந்த ஒரு நீல மலரைப் பார்க்கிறான், பிறகு தன் காதலியின் கண்களைப் பார்க்கிறான், மறுபடி நீல மலர், மறுபடி கண்கள், மறுபடி நீல மலர், மறுபடி கண்கள்…

பிறகு, அந்த மலரைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறான், ‘எக்ஸ்க்யூஸ் மீ, நீ என்னதான் தண்ணிக்கு நடுவுல ஒத்தைக்கால்ல நின்னு தவம் செஞ்சாலும் சரி, உன்னால என் காதலி கண் அழகை மிஞ்சமுடியாது!’

’பூவே, அதான் அழகிப் போட்டியில என் காதலி கண்ணுகிட்ட தோத்துட்டேல்ல? அப்புறம் என்ன உனக்குச் சிரிப்பு வேண்டிக்கிடக்கு? தண்ணியடிச்சிருக்கியோ?’

சீவக சிந்தாமணியில் வரும் பாட்டு இது. ஹீரோவான சீவகன், தன் மனைவியரில் ஒருத்தியான இலக்கணையைப் புகழ்ந்து தள்ளும் காட்சி:

நிறை ஓதம் நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
அறையோ அரிவை வரி நெடுங்கண் ஒக்கிலையால், வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
வண்ணம் இதுவோ? மது உண்பார் சேரியையோ? வாழி நீலம்!

Advertisements

Avai

’அவைகள்’ என்ற சொல் ஏன் தவறு என்று பல நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு சிறு விளக்கம்:

’அவை’ என்ற சொல் தமிழில் இரண்டு பொருள்களில் வரலாம்:

A. Hall / Group / Gathering
B. They

அவை என்பது சபை என்ற பொருளில் வந்தால், அது singular, அப்போது pluralக்கு ‘அவைகள்’ என்று எழுதவேண்டும்.

அவை என்பது அஃறிணைப் பன்மை பொருளில் வந்தால், அது ஏற்கெனவே Plural, அப்போது ‘கள்’ சேர்க்கவேண்டியதில்லை. ‘அவை’ என்றாலே பன்மைதான்.

இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம்:

எனக்கு ஊரில் நான்கு அவைகளில் நிறைய பாராட்டுகளும் பதக்கங்களும் கிடைத்தன. அந்தப் பதக்கங்களின் அழகை என்னவென்று சொல்வது! அவை விலை மதிக்கமுடியாதவை!

இதேபோல், ‘போன்றவைகள்’, ‘ஆகியவைகள்’ எல்லாம் தவறு, ‘போன்றவை’, ‘ஆகியவை’ என்று எழுதுவதுதான் சரி.

பலருக்கு இதில் குழப்பம் வர ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

’ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபுடன் ‘அவை’ என்ற பன்மை சேரும்போதுதான் பலர் பிழை செய்கிறார்கள். உதாரணமாக:

’மேஜைமேல் புத்தகங்கள் உள்ளன. அவைகளை எடுத்து வா’…

இங்கே ’அவை’ என்பதே பன்மைதான், ‘கள்’ வராது என்றால், ‘அவையை எடுத்து வா’ என்றா எழுதுவது? இடிக்கிறதே!

இந்தக் குழப்பத்தால், ஆகவே அவையை, அவையில் போன்றவற்றுக்குப் பதில் ‘அவைகளை’, ‘அவைகளில்’ என்று எழுதிவிடுகிறார்கள். இது தவறு.

சரியான பயன்பாடு:

மேஜைமேல் புத்தகங்கள் உள்ளன. அவற்றை எடுத்து வா!

மேஜைமேல் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைமட்டும் எடுத்து வா!

Logic

’வீடு முழுக்க பொம்மை, ஆனா ஒண்ணுகூட ஒழுங்கில்லை, பாதி உடைஞ்சிருக்கு, மீதி கெட்டுப்போச்சு!’

’பக்கத்து வீட்டு அபயைப் பாரு, நேத்து மூணு கார் கொண்டுவந்தான், மூணும் புதுசுமாதிரி பர்ஃபெக்டா ஓடுது, ஆனா நீமட்டும் எப்படிடீ எல்லா பொம்மையையும் கெடுத்துவெக்கறே?’

’அம்மா, ஒனக்கு வெவரமே பத்தாதும்மா, அபய்கிட்ட இருக்கிற பொம்மைல எது ஓடுமோ அதைமட்டும்தான் வெளிய கொண்டுவருவான்.’

’அவன் வீட்டுக்குள்ள போய்ப் பாரு, எல்லா பொம்மையும் உடைஞ்சுதான் இருக்கும், இருக்கறதுல உருப்படியான பொம்மையைமட்டும் வெளிய காட்டி நல்லபேர் வாங்கறான் அவன்!’

Pizhai

ஒருவருடைய எழுத்தில் (அல்லது நடத்தையில்) ஏதோ பிழை, சொன்னால் அவர் கோபித்துக்கொள்வார் என்று நினைக்கிறீர்கள். சொல்லி நட்பைக் கெடுப்பதா, அல்லது சொல்லாமல் விடுவதா?

பிழை செய்தவர் பெரிய எழுத்தாளர் என்றால் விட்டுவிடலாம், இனி திருந்த வாய்ப்பில்லை. வளரும் எழுத்தாளர் என்றால் பிழை திருத்தாமல் விடுவது துரோகம்தான் என்பது என் கருத்து.

என் எழுத்தில் ஒருவர் பிழை காட்டினால் நான் திருந்த எழுத உதவுகிறவர் என்று நான் அவரை மதிப்பேன். அந்த எண்ணத்துடன்தான் நண்பர்கள் எழுத்தில் குறை இருந்தால் சொல்வதும்.

இதில் நிச்சயம் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை; நேர விஷயத்தில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட், ஒருவரை இழிவுபடுத்தி என் ஈகோவுக்குத் தீனி போடுவதற்காக என் நேரத்தை வீணடிக்கமாட்டேன். நிஜமாகவே அவர் அடுத்தமுறை சிறப்பாக எழுதவேண்டும் என்ற எண்ணம்தான். இப்படி எனக்குச் சிலர் சளைக்காமல் திருத்தியதால்தான் நான் இன்று சுமாராகவேனும் எழுதுகிறேன். Just paying it forward.

ஒருவேளை, ஒருவர் செய்யும் பிழையைச் சுட்டிக்காட்டியதற்காக அவர் என் நட்பையே முறித்துக்கொள்வார் என்றால், உண்மையில் அந்த நட்பு not worth having! இருப்பினும், அந்த அளவு பிடிவாதமாக இல்லாமல் ***முதல்முறை சொல்லிக் கோபத்தைச் சந்தித்தபிறகு*** அவர் மனோநிலையைப் புரிந்துகொண்டு அவர் எழுத்தில் பிழை காண்பதைத் தவிர்க்கலாம். (இந்தக் காரணத்தாலேயே ட்விட்டரில் நான் மிகக் கவனமாகப் பிழை திருத்தாத நண்பர்கள் பலர் உண்டு, இழப்பு எனக்கில்லை!)

(கிட்டத்தட்ட) இந்தத் தலைப்பில் திருவள்ளுவர் வாக்குகள் இவை:

1. குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்பச் சொலல்

சொல்ற விஷயத்தைச் சட்ன்னு சொல்லிப்புடாதீங்க, சரியான நேரம், சூழ்நிலை பார்த்து, அவங்க விரும்பறமாதிரி, அவங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்த்து நைஸா சொல்லுங்க, எதுவானாலும் நிச்சயம் கேட்டுக்குவாங்க

2. நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு

நட்புன்னா எப்பப்பார் காஃபி டேல காபி குடிச்சுகிட்டு சிரிச்சுகிட்டே இருக்கறதில்லை, தப்புச் செஞ்சா சொல்லோணும்

3. அழிவின் அவைநீக்கி ஆறு உய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

நண்பன் கெட்ட வழியில போகாதபடி தடுக்கோணும், ஒருவேளை ஏற்கெனவே அங்கே போய்ட்டான்னா, அதைப் புரிஞ்சுகிட்டு அவன் கூடவே இருந்து, கஷ்டத்தையும் அனுபவிச்சு, அவனுக்கு வேண்டிய ஹெல்ப்பு பண்ணோணும்

Sowkyam

எங்கள் அலுவலகம்முன் போக்குவரத்து உறைந்த சாலை, ’ஐ, ஜாலி’ என்று விறுவிறுவென்று கடந்து பாதி தூரம் வந்துவிட்டேன்,

திடீரென்று வாகனங்கள் நகரத் தொடங்கிவிட்டன, மீதமுள்ள பகுதியை ஓடிக் கடக்க நினைத்தால் முன்னாலிருந்து ஒரு கம்பீரமான குரல் ‘சார், வணக்கம், சௌக்யமா’ என்றது (தமிழில்).

ம்ஹூம், திரும்பிப் பார்க்க நேரமில்லை. ஓட்டமாக சாலையின் மறுமுனைக்கு வந்தேன், அதற்குள் அவர் வண்டியும் சென்றுவிட்டது.

அவர் யாரோ எவரோ, சௌக்யம்தான் ஐயா!

Abirami Ammaip Pathigam

”அபிராமி அந்தாதி”யின் அதிகப் பிரபலமாகாத கஸின் சிஸ்டர் ”அபிராமி அம்மைப் பதிகம்” மிக அழகாக, அற்புதமாக இருக்கிறது.

இதுவும் அபிராமி பட்டர் எழுதியதுதான். ஆனால் வர்ணனைகளைவிட, அம்மையிடம் நேரடியாகப் பேசும் உரிமை கலந்த அன்பு தொனி கொள்ளை அழகு!

இன்னொரு சிறப்பு, இந்நூலை நேரடியாக வாசித்தாலே புரியும். ஓரிரு சொற்களைத்தவிர மற்றவற்றுக்கு உரையெல்லாம் பெரும்பாலும் அவசியப்படாது.

உதாரணமாக சில வரிகள்:

’கல் இடைப்பட்ட தேரைக்கும்,
அன்று உற்பவித்திடு கருப்பை உரு சீவனுக்கும்
(வேண்டியவை) நல்கும்.’

‘சராசரங்களை ஈன்ற தாய் ஆகில் எனக்குத் தாய் அல்லவோ?
யான் உன் மைந்தன் அன்றோ?
எனது சஞ்சலம் தீர்த்து நின்றன் முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி, என் முகத்தை உன் முன் தானையால் துடைத்து, மொழிகின்ற மழலைக்கு உகந்துகொண்டு… வா என்று அழைத்து … கந்தனுக்கு இளையன் என்று எனைக் கூறினால்…’

அம்மாவிடம் பிள்ளை கேட்பதுபோன்ற இதே உரிமைத் தொனிதான் நூல் முழுவதும், மிக எளிமையான இருபத்திரண்டே பாடல்கள், தேடிப் படித்துவிடுங்கள்!

Prize

நங்கையை இன்று ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன். அங்கே ஓவியத்துக்கு வண்ணம் தீட்டும் போட்டியில் அவள் கலந்துகொண்டாள்.

போட்டி முடிந்து சில மணி நேரம் கழித்து ரிஸல்ட் சொன்னார்கள். மூன்றாம் பரிசு, 2ம் பரிசு, முதல் பரிசு… நங்கை பெயர் இல்லை.

’சரி, கிளம்பலாம் வா’ என்றேன்.

‘இல்லைப்பா, சூப்பரா கலர் செஞ்சிருக்கேன். எனக்கு நிச்சயமா ப்ரைஸ் உண்டு’ என்றாள்.

’நங்கை, உன்னைவிட பெட்டரா கலர் செஞ்சவங்களுக்கு அல்ரெடி ப்ரைஸ் கொடுத்தாச்சு, வா கிளம்பலாம்!’

மறுபடி, ‘இல்லைப்பா, எனக்கு ப்ரைஸ் உண்டு.’

பரிசுகளெல்லாம் கொடுத்தாகிவிட்டது, சிறப்பு விருந்தினர் மேடையிலிருந்து இறங்கிவிட்டார். அதன்பிறகும் பிடிவாதம் பிடித்தால் என்ன அர்த்தம்?

நங்கை அந்த வாதத்தை ஏற்கவில்லை, ‘எனக்கு ப்ரைஸ் உண்டுப்பா’ என்றாள் மறுபடி.

‘எப்படிச் சொல்றே?’

‘நான் fairy கலர் பண்ணேன், இப்ப ப்ரைஸ் வாங்கினவங்க எல்லாம் சோட்டா பீம் கலர் பண்ணாங்க, அதுக்காகத் தனி ப்ரைஸ் தருவாங்கப்பா.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ‘கண்ணு, எல்லாருக்கும் கலர் செய்ய வெவ்வேற பிக்சர் தருவாங்க, ஆனா ப்ரைஸ் ஒண்ணுதான்’ என்றேன்.

ம்ஹூம், அவள் உறுதியில் சிறிதும் மாற்றம் இல்லை. காலியான மேடையைப் பார்த்தபடி ‘எனக்கு ப்ரைஸ் உண்டுப்பா’ என்றாள் மறுபடி.

பொதுவாக எந்தப் போட்டியிலும் தனக்குப் பரிசு இல்லை என்றால் அழ ஆரம்பித்துவிடுகிறவள் அவள். ஆகவே, கொஞ்சம் பேச்சுக்கொடுத்து வெளியே அழைத்துவந்தேன்.

அப்போதும் திரும்பிப் பார்த்தபடி மனமே இல்லாமல்தான் வந்தாள். முகம் அப்படித் துவண்டிருந்தது. பார்க்கக் கஷ்டமாக இருந்தது.

’சரி போ, நிகழ்ச்சி முடிஞ்சப்புறம் கிளம்பலாம்’ என்று அனுமதித்தேன். திரும்பி ஓடினாள்.

சரியாக அவள் மேடையை நெருங்க, ‘First Prize: Nangai’ என்று அறிவிக்கிறார்கள். இவளும் எதிர்பார்த்ததுபோல் ஏறிப் பரிசு பெறுகிறாள்.

எனக்கு ஃபோனை எடுத்துக் கேமெராவை இயக்கக்கூட நேரம் இல்லை, அவள் பரிசு வாங்கிக்கொண்டு கீழே இறங்கிவிட்டாள்.

என்ன மேட்டர் என்று விசாரித்தால், ஒன்பது வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தனிப் போட்டி, தனிப் பரிசாம். நங்கை சொன்ன Fairy / சோட்டா பீம் வித்தியாசம் உண்மைதான்.

’என் குழந்தைமேல் எனக்கே நம்பிக்கை இல்லையே’ என்று வெட்கி அமர்ந்திருந்தேன். இப்போதும் அதே எண்ணம்தான். (கொஞ்சம் பொறுங்க, இது விக்ரமன் பதிவு அல்ல!).

வீடு திரும்பும்போது நங்கையைக் கேட்டேன், ‘ப்ரைஸ் உண்டுன்னு உறுதியா திரும்பத் திரும்பச் சொன்னியே, எப்படி அவ்ளோ நம்பிக்கை?’

’முன்னாடி அவங்க ப்ரைஸ் சர்ட்டிஃபிகேட் எழுதிகிட்டிருந்தப்போ எட்டிப் பார்த்தேன்ப்பா’ என்றாள் அசால்ட்டாக.