Dancing Coin

கோவை பயணத்தின்போது ஒரு ஹோட்டல், சாப்பிட்டு முடித்து காசு தந்தாகிவிட்டது. சர்வருக்கு டிப்ஸ் தரவேண்டும்.

பாக்கெட்டிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கண்டுபிடித்து மேஜைமேல் வைக்க முயன்றேன், அது நில்லாமல் உருண்டோடியது.

அப்போது என் மகள் மங்கை அந்த மேஜை ஓரமாக நின்றிருந்தாள். ஓடிய காசு அவளை நெருங்குமுன் நான் எட்டிப் பிடித்துவிட்டேன், சர்வருக்கு டிப்ஸ் வைத்தாகிவிட்டது.

வீடு வந்ததும், இந்த நிகழ்ச்சியை மங்கை அவள் தாய்க்குச் சொன்னாள். இப்படி:

’அம்மா, இன்னிக்கு அப்பா ஒரு காயின் எடுத்து டேபிள்மேல வெச்சதும், அது என்கிட்ட ஓடி வந்துடுச்சு, ஏன் தெரியுமா? அதுக்கு டான்ஸ் கத்துக்கணும்ன்னு ஆசையாம்.’

’நான் அதுக்கு டான்ஸ் கத்துத் தரலாம்ன்னு பார்த்தப்போ, அப்பா அந்தக் காசைப் பிடிச்சுட்டா, ‘ஏய் காயின், உனக்கெதுக்கு டேன்ஸ்ல்லாம்?’னு திட்டி அதை ஒரு பாக்ஸ்ல போட்டுட்டா.’

‘பாவம் அந்தக் காயின், ஏமாந்துபோச்சு!’

Advertisements

Bookworm

நங்கை ’ஒரு விடுகதை போடுறேன்ப்பா’ என்றாள், ‘நானே எழுதினது!’

‘சரி, சொல்லு!’

‘There is an animal I like the most,
It doesn’t act like a human or ghost;
Its just a tiny little creature,
It shares the job of a teacher!’

’கிளியா?’ என்றேன்.

‘தப்பு!’ என்றாள், ‘கிளி எங்கேயாவது டீச்சர்மாதிரி பாடம் சொல்லித்தருமாப்பா? நாமதான் அதுக்குச் சொல்லித்தரணும்!’

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘தெரியலையே’ என்றேன்.

அவளே பதில் சொன்னாள், ‘Bookwormப்பா!’

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மங்கைக்குச் சந்தேகம், ‘புக்வார்ம்ன்னா என்னப்பா?’

நான் பதில் சொல்லுமுன் நங்கை முந்திக்கொண்டாள், ‘புத்தகப் புழு!’

’அப்டீன்னா?’

‘புத்தகத்தையெல்லாம் கடிச்சுச் சாப்பிடும், அந்த நாலேட்ஜையெல்லாம் மூளைல ஏத்திக்கும், super intelligent அது!’

மங்கை கொஞ்சம் தயங்கி, ‘Bookwormன்னா அது தலையில நிறைய்ய புக்ஸைத் தூக்கிட்டுப் போய் எல்லாருக்கும் distribute பண்ணும்னு நான் நினைச்சேன்!’ என்றாள்.

Bharathi

இளவயதுக் கவிதைப் பித்து இல்லார் ஆர்? நல்ல உரைநடை எழுதும் பலர், கவிதையிலிருந்து கட்டுரை, சிறுகதை என்று நகர்ந்து வந்திருப்பதைக் கவனிக்கலாம்.

பாரதியாரின் உரைநடை அற்புதமானது. அவரது கவிதையின் சாயல் அதில் கொஞ்சமும் தெரியாது, எளிமையாக, தெளிவாக விஷயத்தைச் சொல்வதில் மகா கில்லாடி அவர்.

ஆகவே, அவரும் கவிதையிலிருந்து கொஞ்சம் விலகி அவ்வப்போது (பத்திரிகைத் தொழில் சார்ந்து) உரைநடை எழுதியவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இன்று ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையை வாசிக்கும்போது இதுபற்றி ஓர் ஆச்சர்யமான விஷயம் தெரிந்துகொண்டேன்: பாரதி எழுதியவற்றை ஆண்டுவாரியாக அடுக்கிப் பார்த்தால், முதலில் பல நூறு பக்கங்கள் உரைநடை, கவிதைகள் வெறும் ஐந்தோ, ஆறோதான்.

அதாவது, இளவயதிலேயே கவிதை எழுத வல்லவராக இருந்த பாரதி, பல காரணங்களால் உரைநடையில்தான் முழு கவனம் செலுத்தியுள்ளார், கவிதை எப்போதாவதுமட்டுமே.

பின்னர் கவிதாதேவியின் அருள் பெற்று புதிய வேகத்துடன் அவர் பாடல்களை எழுதிக் குவித்தது நம் பாக்கியம்!

Hindi

குழந்தைகளுக்கான ஹிந்தி நூல் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துவருகிறேன்.

எனக்கு ஹிந்தி நன்றாகப் பேச, எழுத, வாசிக்கத் தெரியும். ஆனால் சொல்வளம் அதிகமில்லை. டிஷ்னரி தேவைப்படும். அது பெரும் சுமை (literally).

ஆகவே, சில தினங்களாக Google Translateன் தீவிரப் பயனாளி ஆகிவிட்டேன். ஒவ்வொரு சிரமமான சொல்லையும் அங்கே இட்டு, வரும் இயந்திர மொழிபெயர்ப்பைப் பார்ப்பேன், பல நேரங்களில் அது சம்பந்தமே இல்லாத செம காமெடியாக இருக்கும், அதைத் திருத்திவிட்டு என் மொழிபெயர்ப்பைத் தொடர்வேன்.

அதோடு விட்டுவிடாமல், கொஞ்சம் பொறுப்புள்ள netizenஆக, காமெடி மொழிபெயர்ப்புகளுக்குச் சரியான மொழிபெயர்ப்புகளை Googleக்கு Feedbackஆகத் தந்தேன், hope they use it!

நான் சொல்லவந்த விஷயம் அதுவல்ல. இந்த ஹிந்தி நூலில் சுமார் 1500 Unique சொற்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவற்றைத் தமிழில் பெயர்த்தால், இவற்றுள் சுமார் 800 சொற்கள் ஏற்கெனவே தமிழில் உள்ளன. அதுவும் நாம் சாதாரணமாகப் பயன்படுத்திவரும் சொற்கள்.

ஒரு பயிற்சிக்காக இவற்றை தனி excel sheetல் சேமித்துப் பார்த்துக் கணக்கெடுத்தேன், சுமார் 60% சொற்கள் தமிழில் ’வாங்கி’யுள்ளோம் (அல்லது, அவர்கள் தமிழிலிருந்து வாங்கியுள்ளார்கள்). இச்சொற்களை நாம் இன்னும் பயன்படுத்துகிறோம்.

ஆனால், இவற்றில் பல சொற்களை ஹிந்திக்காரர்கள் இப்போது பயன்படுத்துவதில்லைபோல, கூகுள் செய்து பார்த்தால், அந்தச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைதான் Hindi fontல் பயன்படுத்துகிறார்கள். தமிழில் நாம் ‘எக்ஸ்ஸலன்ட்’, ‘மார்வெலஸ்’, ‘க்ரேட்’ என்றெல்லாம் எழுதுவதுபோல.

ஹிந்தி / தமிழ் இரண்டிலும் புழங்கும் சொற்களுக்குச் சில உதாரணங்கள்… அட, உதாரணம் என்பதே ஹிந்தியில் உள்ள சொல்தான் :))

Uppiliyappi

இளைய மகள் உப்பு மூட்டை தூக்கச் சொன்னாள், தூக்கிச் சென்றேன். வீட்டில் ஒவ்வொருவராகச் சென்று, ’உப்பு வேணுமா?’

’ஆமா, வேணும்.’

‘எவ்ளோ?’

‘ரெண்டு கிலோ’

’இந்தா, காசு கொடு!’

… இதுதான் எல்லாருக்கும் தெரிந்த ஸ்க்ரிப்ட்.

அதன்படி நாங்கள் அவள் அம்மாவிடம் கொள்முதல் முடித்துக்கொண்டு அக்காவிடம் சென்றோம், அவள் மும்முரமாக ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள், ’ஏய் நங்கை, உப்பு வேணுமா?’

அவள் நிமிரவில்லை. புத்தகம் படிக்கும்போது பூமியே இடிந்தாலும் அவள் கவனம் சிதறாள்.

மங்கை மறுபடி கேட்டாள், ‘ஏய் நங்கை, உப்பு வேணுமா?’

எரிச்சலாக, ‘வேணாம்’ என்றாள் நங்கை.

‘ஏய், உங்க வீட்ல சமையல்ல உப்பு போடமாட்டீங்களா?’

’ஆமா’ குனிந்தவாக்கில் பதில் வந்தது.

‘ஏன்?’

நங்கை நிமிராமல் சட்டென்று பதில் சொன்னாள் ‘நான் உப்பிலியப்பி’

Dentist VaLLalaar

’உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா’ என்பதில் தொடங்கிப் புளி, மிளகாய் என்று பல் பசைகள் பல் பொருள் அங்காடிகளாக மாறிவருகிற நேரம் இது.

உண்மையில் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? எதைச் செய்தால் வாய் நாற்றம் போகும்? வள்ளலார் பதில் சொல்கிறார், திருவருட்பாவில்:

சிலர் வயதான கரும் காக்கைபோல் வீண் கதை பேசுகிறார்கள், எதையெதையோ பேசிக் கதறுகிறார்கள் அதனால் வாய் நாறுகிறது. கள் உண்பதால் வாய் நாறுகிறது. இவர்களது ஊத்தை வாயால் ஒரு காத தூரம் துர்நாற்றம் அடிக்கிறது. ஆனால், அதைவிட மோசம், பொய் பேசுவது, அதனால் இரு காத தூரம் துர்நாற்றம்.

வரையறை இல்லாமல் பேசித் தர்க்கம் செய்வோர், வாதம் செய்வோர்… இவர்களுடைய வாயிலும் துர்நாற்றம் மிக அதிகம்.

ச்சே, இவ்ளோ அவஸ்தை எதுக்கு? எதையுமே பேசாம மௌனமா இருந்துடலாமா?.

’ம்ஹூம், அதுவும் தப்பு, கடவுளின் பெயர் என்கிற நறுமணம் கமழவேண்டிய வாயை மூடிவைப்பதா? அது சுத்த மூடத்தனம்’ என்கிறார் வள்ளலார்.

’கடவுளே, இந்த துர்நாற்ற வாய்க்காரங்க மத்தியில என்னை வைக்காதே’ என்று வள்ளலார் முருகனைக் கேட்கிறார்.

’அப்போ நீர் யாரோடதான் பழகுவீர்?’

’தரையில் உயர்வான சென்னையில் கந்த கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் முருகா, உன் புகழ் பேசுறவங்க வாய்தான் மணக்கும். அவங்களோட என்னைப் பழக வை!’

இது அந்தப் பாடல், சுருக்கமாக:

’கரையில் வீண் கதையெலாம் முதிர் கரும் காக்கைபோல் கதறுவார்,
கள் உண்ட தீக் கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட
உறு கடும் பொய் இரு காதம் நாற,
வரை இல் வாய் கொடு தர்க்க வாதம் இடுவார்,
சிவ மணம் கமழ் மலர்ப் பொன் வாய்க்கு மவுனம் இடுவார்,
இவரை மூடர் எனவோ…

அவர் தமை உறாது,
உனது புகழ் பேசும் அவரோடு உறவு பெற அருளுவாய்,
தரையில் உயர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் கந்த வேளே!’