தமிழ்த் தாய் வாழ்த்து

நண்பர் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரை கேட்டார்.

முதலில் கிண்டலடிக்கிறாரோ என்று நினைத்தேன், ’அது எளிய பாடல்தானே, படித்தால் தானாக அர்த்தம் புரியுமே!’

’இல்லை, நிஜமாகதான் கேட்கிறேன், எழுதுங்கள், யாருக்காவது பயன்படும்’ என்றார் அவர்.

எழுதிவிட்டேன். உங்களுக்குப் பயன்படுமானால் வாசியுங்கள் 🙂

முதலில் இந்தப் பாடலின் சீர் பிரித்த வடிவம்:

நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு எழில் ஒழுகும் (1)
சீர் ஆரும் வதனம் எனத் திகழ் பரதக் கண்டம் இதில் (2)

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் (3)
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே (4)

அத் திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பம் உற (5)
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே, (6)

உன் சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே! (7)

இதன் சுருக்கமான பொருள்:

நிலம் என்கிற பெண், தண்ணீர் நிறைந்த கடலை ஆடையாக அணிந்திருக்கிறாள். அவளைப் பார்த்தாலே அழகு சொட்டுகிறது.

அப்படிப்பட்ட நிலப் பெண்ணுக்கு முகம் என்ன தெரியுமா? சிறப்பு நிறைந்த பாரத தேசம்தான்.

அந்த முகத்தில் பிறை போன்ற சிறிய நெற்றி, தென்னிந்தியா.

அந்த நெற்றியில் வாசனை நிறைந்த பொட்டு, வளம் நிறைந்த திராவிட நாடு.

அந்தப் பொட்டின் வாசனையைப்போல, தமிழாகிய தெய்வப் பெண்ணே, உன்னுடைய புகழும் எல்லாத் திசைகளிலும் மணக்கிறது, அனைத்து உலகங்களும் அதனால் இன்பம் பெறுகின்றன.

நீ (பல நூற்றாண்டுகளாக இங்கே பேசப்படும் பழைமையான மொழியாக இருந்தாலும்) எப்போதும் இளமையாகவே இருக்கிறாய். இந்தத் திறமையைப் பார்த்து, நாங்கள் செய்வதறியாது நிற்கிறோம், உன்னை வாழ்த்துகிறோம்!

இப்போது சொல் பிரித்த பொருள்:

(1)

நீர் : தண்ணீர்
ஆரும்: நிறைந்த
கடல் : கடலை ஆடையாக
உடுத்த : அணிந்துகொண்ட
நில மடந்தைக்கு: நிலமாகிய பெண்ணுக்கு
எழில் ஒழுகும்: அழகு வழியும்

(2)

சீர் : சிறப்பு
ஆரும்: நிறைந்த
வதனம்: முகம்
எனத்
திகழ் : திகழ்கின்ற
பரதக் கண்டம் இதில் : பாரத நாட்டில்

(3)

தெக்கணமும் : தென்னிந்தியாவும்
அதில் சிறந்த
திராவிட நல் திருநாடும் : நல்ல, சிறப்பு நிறைந்த திராவிட நாடும்

(4)

தக்க : தகுதியுடைய
சிறு
பிறை நுதலும் : பிறை போன்ற நெற்றியும்
தரித்த : இட்டுக்கொண்ட
நறும் திலகமுமே : வாசனை நிறைந்த பொட்டும்

(5)

அத் : அந்தத்
திலக : பொட்டு
வாசனை போல்
அனைத்து உலகும் இன்பம் உற

(6)

எத் : எந்தத்
திசையும்
புகழ் மணக்க
இருந்த பெரும்
தமிழ் அணங்கே : தமிழாகிய தெய்வ மகளே!

(7)

உன்
சீர் இளமைத் திறம் : சிறப்பான இளமைத் திறமையை (இளையவளாகவே எப்போதும் இருக்கும் திறமையை)
வியந்து
செயல் மறந்து: செய்வதறியாது
வாழ்த்துதுமே: உன்னை வாழ்த்துகிறோம்

Advertisements

Panna

இன்று காலை ரேடியோவில் ஒரு பாட்டு கேட்டேன். இதுதான் பல்லவி:

‘வானெங்கும் நீ மின்ன மின்ன,
நானென்ன நானென்ன பண்ண?’

எனக்கென்னவோ அந்தப் பாடகர் (பெயர் தெரியவில்லை, குரலில் கொஞ்சம் ஹிந்தி வாடை அடித்தது) ‘நானென்ன பன்ன’ என்று தவறாகப் பாடுவதாகத் தோன்றியது.

இணையத்தில் அந்தப் பாடலைத் தேடிக் கேட்டேன். பலமுறை கேட்டும், அவர் ‘பண்ண’ என்று பாடுகிறாரா ‘பன்ன’ என்று பாடுகிறாரா என்பது தெரியவில்லை.

அப்புறம் யோசித்தேன், ஒருவேளை அவர் ‘பன்ன’ என்று பாடியிருந்தால், அதுவும் ஒருவிதத்தில் சரிதான், பிழையில்லை.

தமிழில் ’பண்ணுதல்’ என்றால் செய்தல் என்று அர்த்தம், இது எல்லாருக்கும் தெரியும். ‘பன்னுதல்’ என்றால் சொல்லுதல் / பேசுதல் என்று ஓர் அர்த்தம். ’இனைய பன்ன’ (இப்படிச் சொல்ல) என்ற அர்த்தத்தில் கம்ப ராமாயணத்தில்கூட இந்தச் சொல் வருகிறது.

ஆக, அந்தப் பாடகர் ‘வானெங்கும் நீ மின்ன, நான் என்ன பன்ன?’ என்று பாடியிருந்தால், ‘நான் என்ன சொல்ல?’ என்றே அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம் :>

English & Tamil

கல்லூரியில் என் அறைத் தோழன் பெயர் ராஜா, அவனுக்குத் தமிழ் சுமாராகதான் பேச வரும். கான்வெண்ட்டில் படித்தவன் என்பதாலும், பெற்றோருடனும் ஆங்கிலம்தான் பேசுவான்.

நான் ஒரு சிறிய ஊரில் இருந்து வந்தவன், +2வரை தமிழ் மீடியத்தில் படித்தவன். ஆங்கிலத்தில் கோவையாக ஒரு வரி பேச வராது. ஆகவே, அவன் பேசும் ஸ்டைலான ஆங்கிலத்தை வாய் பிளந்து பார்ப்பேன்.

அதுவரை வேறு யாரும் இத்துணை நேர்த்தியாக ஆங்கிலம் பேசி நான் பார்த்ததில்லை. அவன் பேசுவதைப் பார்த்துப் பார்த்து எனக்குத் தாழ்வு உணர்ச்சியே வரும், அவனைவிட நான் தமிழ் நன்றாகப் பேசுவது குறித்து உயர்வுணர்ச்சி துளியும் வராது.

ராஜாவிடம் அதுபற்றி எந்தக் கர்வமும் இல்லை. ரொம்ப நல்லவன், என் வகுப்புதான், தமிழ் மீடியத்திலிருந்து அங்கே சென்று ஆங்கிலத்தில் படிக்கத் தடுமாறிய எனக்கும் மற்ற சில நண்பர்களுக்கும் நன்கு உதவுவான். புத்திக்காரன்.

இப்படியான நட்பில் ரெண்டு வருஷம் கழித்து ஒருநாள் எதேச்சையாக எங்கள் ப்ளஸ் டூ சர்ட்டிஃபிகேட்களைப் பார்த்தால் ஓர் ஆச்சர்யம்:

ப்ளஸ் டூ பரீட்சையில் தமிழில் அவன் என்னைவிட 10 மார்க் அதிகம், ஆங்கிலத்தில் நான் அவனைவிட 10 மார்க் அதிகம்.

இதைவிட ஒரு மோசமான நகைமுரண் இருக்கமுடியாது 🙂

Ice Cream

இன்றைய மாலை வாக்கிங்கில் ஒரு போர்ட் பார்த்தேன், ஒரு பிரபலமான ஐஸ் க்ரீம் கடை பெயர் எழுதி ‘1 கிலோமீட்டர்’ என்று எழுதியிருந்தது.

எனக்கு அந்தக் கடை தெரியும். தினமும் அதே தெருவில் நடப்பதால் அது அந்த போர்டிலிருந்து 1 கிமீ தொலைவில் இல்லை என்பதும் நிச்சயமாகத் தெரியும்.

ஆகவே, அந்த போர்டுக்கும், 3 கிமீ தொலைவில் உள்ள அந்தக் கடைக்கும் நடுவே, இன்னொரு பிராஞ்ச் திறந்துவிட்டார்களோ என்று நினைத்தேன்.

தொடர்ந்து நடந்தேன். சுமார் அரை கிலோமீட்டர் கடந்தபின் அதே கடை பெயர் போட்டு ’0.8 கிலோமீட்டர்’ என்று ஒரு போர்டு.

அது 1 கிலோமீட்டர் என்பது உண்மையானால், இங்கே 0.5 கிலோமீட்டர் என்றல்லவா போர்ட் இருக்கணும்?

குழம்பியபடி நடக்க நடக்க, 400 மீட்டர், 300 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் என்று போர்ட்களும் நீளம் குறுகின.

நிறைவாக, முதல் போர்டிலிருந்து சரியாக 3 கிலோமீட்டர் தொலைவில் (நான் அறிந்த அதே பழைய) ஐஸ் க்ரீம் கடை வந்துவிட்டது.

ஆக, கார்க்காரர்களை ஏமாற்றுவதற்காக, 3 கிலோமீட்டரை 1 கிலோமீட்டர் என்று பொய் சொல்லியிருக்கிறார்கள்.

சாதாரணப் பொய்தான். ஆனால் அந்த நிறுவனம் (அருண் / Ibaco)மீது இருந்த மதிப்பு சற்றே குறைந்துவிட்டது, அது Franchiseகாரர் செய்த பிழையாயினும்!

Lyrics

எங்கள் ஏரியா குடியரசு தின விழாவுக்கு அமைச்சர் வருகிறார் (எங்கள் MLAதான் அமைச்சர் என்பதால் இச்சலுகை)

அவ்விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாட நங்கையையும் அவளது தோழி ஒருத்தியையும் கேட்டுள்ளார்கள். பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.

ஒரு சொல்லை அவள் தடுமாறிப் பாட, என் மனைவி, ‘லிரிக்ஸ் சரியாத் தெரியுமா?’ என்று கேட்டார்.

அவள் திணறி, ‘தெ.. தெரியும்’ என்றாள்.

’ஏய், மினிஸ்டர் முன்னாடி போய் லிரிக்ஸ் தப்பாப் பாடிடாதே’ என்றார் மனைவி, ‘அவர் கோவப்படுவார்.’

’மினிஸ்டருக்கெல்லாம் வந்தே மாதரம் லிரிக்ஸ் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு’ என்று சொல்ல நினைத்தேன். நா(வீ)ட்டு நலன் கருதி இங்கே சொல்கிறேன் :>

Maths

மகளின் Montessori பள்ளியில் அவ்வப்போது Observationக்காக அழைப்பார்கள். நாற்காலியில் அமர்ந்து அவள் செய்கிறவற்றைப் பார்க்கவேண்டும்.

இன்று அப்படி அழைத்திருந்தார்கள். சென்றேன். அமர்ந்தேன். பார்த்தேன். இன்று நான்கு இலக்க எண்கள் ஐந்தைக் கூட்டி விடை எழுதும் பாடம் (UKGக்கு இது டூ மச் இல்லையோ?)

ஆசிரியை நோட்டில் எழுதிய ஐந்து எண்களை மங்கை வரிசையாகத் தன் நோட்டில் ஒன்றன்கீழ் ஒன்றாகப் பிரதி எடுத்தாள். பக்கத்தில் இருந்த Worksheetல் கூட்ட ஆரம்பித்தாள்.

அவள் எழுதும்போது கவனித்தேன், ஓர் இடத்தில் ஆசிரியை ‘2’ என்று எழுதியிருந்த எண்ணைத் தவறாக ‘4’ என்று எழுதியிருந்தாள். ஆகவே, விடை தவறாக வரும்.

இது மங்கைக்குத் தெரியவில்லை.அவள் விரல் விட்டு கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள்.நான் சொல்வதா கூடாதா என்று புரியாமல் பேந்தப்பேந்த விழித்தேன்.

அவள் ஒவ்வொரு ஸ்டெப்பாகத் தாண்டத் தாண்ட என் பதற்றம் அதிகரித்தது. ‘அடியே, மிஸ் கொடுத்த கணக்கைப் பாரு’ என (மனத்துக்குள்) சத்தமாகக் கத்தினேன்.

அவள் கணக்கைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டாள், விடை எழுதும் நேரம். தப்புக் கணக்கு, தப்பு விடை, போச்சு போச்சு!

அப்போது, அவளுக்கு ஏதோ மறந்துவிட்டது. விரல் விட்டு எண்ணியதில் பிழையோ என்னவோ, ’ச்சே’ என்றாள் வெட்கமாகச் சிரித்து.

படாரென்று நோட்டை அடுத்த பக்கம் திருப்பி கணக்கை மீண்டும் (இம்முறை சரியாகப்) பிரதி எடுத்தாள். மேலும் 2 நிமிடம் செலவழித்துச் சரியாக விடை எழுதினாள்.

நியாயப்படி பார்த்தால் எனக்குச் சந்தோஷம்தான் வந்திருக்கவேண்டும். ஆனால் ஏமாற்றமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை.

ஒருவேளை, அந்த டீச்சரிடம் அவள் திட்டு வாங்கவேண்டும் என்று நான் விரும்பினேனோ?

அல்லது, அந்த டீச்சர் அதைக் கவனிக்காமல் விட, நான் அவரைவிட புத்திசாலி(?) என்று நிரூபணமாகிவிட்டதாக எண்ணிக்கொள்ள விரும்பினேனோ?

Boys Book, Girls Book

Landmark Saleல் ‘365 Stories for boys’ என்ற புத்தகம் மிக மலிவாகக் கிடைத்தது, வாங்கிவந்தேன்.

of course, எங்கள் வீட்டில் நான்மட்டும்தான் boy. இருந்தாலும், கதையில் என்ன ஆண், பெண் பேதம் என்று வாங்கிவந்தேன். நங்கையிடம் தந்தேன்.

அதைக் கரப்பான்பூச்சிபோல் பார்த்து, ‘என்னப்பா இது? Stories for boysன்னு போட்டிருக்கு?’ என்றாள் அருவருப்புடன்.

’அதனால என்ன? உனக்கு 365 ஸ்டோரீஸ் கிடைக்குது, அது போதாதா? இதை எல்லாரும் படிக்கலாம், கேர்ள்ஸும் படிச்சா ஒண்ணும் ஆவாது’ என்றேன்.

’சான்ஸே இல்லை’ என்று ஒதுக்கிவிட்டு வேறு புத்தகம் படிக்கத் தொடங்கிவிட்டாள். இத்தனைக்கும் இவள் புதுப் புத்தகம் என்றால் ஆசையோடு அள்ளுகிற ஜாதி.

ஆக, Branding என்பது அத்துணை வலுவான விஷயமாக இருக்கிறது. அதுவும், இந்த வயதிலேயே!

அது நிற்க. அந்தப் புத்தகத்தை ஒருவேளை நான் அட்டை கிழித்துவிட்டுத் தந்திருந்தால் நங்கை ஏமாந்திருப்பாளா? #யோசிச்சிங்