தமிழ்த் தாய் வாழ்த்து

நண்பர் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரை கேட்டார்.

முதலில் கிண்டலடிக்கிறாரோ என்று நினைத்தேன், ’அது எளிய பாடல்தானே, படித்தால் தானாக அர்த்தம் புரியுமே!’

’இல்லை, நிஜமாகதான் கேட்கிறேன், எழுதுங்கள், யாருக்காவது பயன்படும்’ என்றார் அவர்.

எழுதிவிட்டேன். உங்களுக்குப் பயன்படுமானால் வாசியுங்கள் 🙂

முதலில் இந்தப் பாடலின் சீர் பிரித்த வடிவம்:

நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு எழில் ஒழுகும் (1)
சீர் ஆரும் வதனம் எனத் திகழ் பரதக் கண்டம் இதில் (2)

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் (3)
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே (4)

அத் திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பம் உற (5)
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே, (6)

உன் சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே! (7)

இதன் சுருக்கமான பொருள்:

நிலம் என்கிற பெண், தண்ணீர் நிறைந்த கடலை ஆடையாக அணிந்திருக்கிறாள். அவளைப் பார்த்தாலே அழகு சொட்டுகிறது.

அப்படிப்பட்ட நிலப் பெண்ணுக்கு முகம் என்ன தெரியுமா? சிறப்பு நிறைந்த பாரத தேசம்தான்.

அந்த முகத்தில் பிறை போன்ற சிறிய நெற்றி, தென்னிந்தியா.

அந்த நெற்றியில் வாசனை நிறைந்த பொட்டு, வளம் நிறைந்த திராவிட நாடு.

அந்தப் பொட்டின் வாசனையைப்போல, தமிழாகிய தெய்வப் பெண்ணே, உன்னுடைய புகழும் எல்லாத் திசைகளிலும் மணக்கிறது, அனைத்து உலகங்களும் அதனால் இன்பம் பெறுகின்றன.

நீ (பல நூற்றாண்டுகளாக இங்கே பேசப்படும் பழைமையான மொழியாக இருந்தாலும்) எப்போதும் இளமையாகவே இருக்கிறாய். இந்தத் திறமையைப் பார்த்து, நாங்கள் செய்வதறியாது நிற்கிறோம், உன்னை வாழ்த்துகிறோம்!

இப்போது சொல் பிரித்த பொருள்:

(1)

நீர் : தண்ணீர்
ஆரும்: நிறைந்த
கடல் : கடலை ஆடையாக
உடுத்த : அணிந்துகொண்ட
நில மடந்தைக்கு: நிலமாகிய பெண்ணுக்கு
எழில் ஒழுகும்: அழகு வழியும்

(2)

சீர் : சிறப்பு
ஆரும்: நிறைந்த
வதனம்: முகம்
எனத்
திகழ் : திகழ்கின்ற
பரதக் கண்டம் இதில் : பாரத நாட்டில்

(3)

தெக்கணமும் : தென்னிந்தியாவும்
அதில் சிறந்த
திராவிட நல் திருநாடும் : நல்ல, சிறப்பு நிறைந்த திராவிட நாடும்

(4)

தக்க : தகுதியுடைய
சிறு
பிறை நுதலும் : பிறை போன்ற நெற்றியும்
தரித்த : இட்டுக்கொண்ட
நறும் திலகமுமே : வாசனை நிறைந்த பொட்டும்

(5)

அத் : அந்தத்
திலக : பொட்டு
வாசனை போல்
அனைத்து உலகும் இன்பம் உற

(6)

எத் : எந்தத்
திசையும்
புகழ் மணக்க
இருந்த பெரும்
தமிழ் அணங்கே : தமிழாகிய தெய்வ மகளே!

(7)

உன்
சீர் இளமைத் திறம் : சிறப்பான இளமைத் திறமையை (இளையவளாகவே எப்போதும் இருக்கும் திறமையை)
வியந்து
செயல் மறந்து: செய்வதறியாது
வாழ்த்துதுமே: உன்னை வாழ்த்துகிறோம்

Advertisements

One thought on “தமிழ்த் தாய் வாழ்த்து

  1. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இப்பாடலுக்கு என் நண்பன் விளக்கம் கேட்டிருந்தான்.. திரு திருன்னு முழித்தேன். எளிமையாக புரியம்படி விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s