Driver

இன்று ஜெயநகரிலிருந்து வீடு திரும்பப் பேருந்துக்குக் காத்திருந்தேன். ஒரு தனியார் வேன் வந்து நின்றது, ‘BTM Layout, BTM Layout’ என்றார் டிரைவர்.

’ஹையா, அரசாங்கப் பேருந்து நெரிசலில் இருந்து பிழைத்தேன்’ என்று உற்சாகமாக வேனில் ஏறி உட்கார்ந்தேன்.

அப்புறம்தான் கவனித்தேன், வேனில் யாரும் இல்லை. டிரைவர் தவிர நான் ஒருவன்தான்.

பெங்களூரில் இது சகஜம். பெர்ரிய பஸ்கள்கூட 1 (அ) 2 பேருடன் செல்லும்.

வண்டி சிறிது தூரம் சென்றபின் டிரைவர் என் பக்கம் திரும்பி, ‘சார் BTM Layout எப்படிப் போறது?’ என்றார். திகைத்துப்போனேன்.

’என்ன சார்? BTMன்னு அவ்ளோ சத்தமாக் கூவினீங்க, உங்களுக்கு வழி தெரியாதா?’

’நான் இந்த ரூட்டுக்குப் புதுசு’ என்றார் அவர், ’உங்களுக்குத் தெரிஞ்சா வழி சொல்லுங்க.’

ஆஹா, சாரதிக்கு வழி காட்டும் ரிவர்ஸ் கீதை வாய்ப்பு. விடுவேனா? ‘ரைட்ல திரும்பி நேராப் போங்க’ என்றேன்.

போனார்.

சிறிது நேரத்தில், ‘இப்போ லெஃப்ட்ல திரும்புங்க’ என்றேன்.

‘சார், வண்டி ஓட்றேன்ல? ஏன் தொணதொணன்னு ஏதேதோ பேசித் தொந்தரவு செய்யறீங்க?’ என்றார்.

அச்சச்சோ, தெரியாம யாரோ கிறுக்கன் (அ) குடிகாரன் வண்டில ஏறிட்டோம் போலிருக்கே, ரத்த சேதமின்றிப் பிழைப்பது எப்படி?

நூறு மீட்டர் தள்ளி ஒரு சிக்னல். எலக்ட்ரானிக் டைமரில் 55 விநாடிகள், 54, 53… அவசரமில்லாமல் 10 ரூ எடுத்துத் தந்துவிட்டு இறங்கினேன்.

நான் பிழைத்துவிட்டேன். அதன்பிறகு அவர் வண்டியில் யார் ஏறினார்களோ, அவர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!

Advertisements

India Independence

‘அப்பா, இந்தியாவுக்கு எந்த வருஷம் சுதந்தரம் கிடைச்சது?’ என்றாள் நங்கை.

’ஏன்? அது உங்க புக்ல இல்லையா?’ என்றேன் சந்தேகமாக.

‘இது Maths புக்குப்பா’ என்றாள்.

‘அடியே, Maths புக்ல இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்ச வருஷமெல்லாமா கேப்பாங்க? என்னைப் பார்த்தா கேனையன்மாதிரி இருக்குதா?’

’நீயே பாரு’ என்று புத்தகத்தைக் கொண்டுவந்தாள். அதில் இருந்த கேள்வி: ‘How many years are completed since India got her independence?’

எனக்கு அந்தக் கேள்வியின் நோக்கம் புரிந்தாலும், இன்னும் வரலாறு பாடம் (தனியே) அறிமுகமாகாத நான்காம் வகுப்பில் இப்படி ஒரு கேள்வி சரியா?

இந்தக் கேள்வி எழுதியவர், அவ்வகுப்பில் (அ) அதற்குமுன் இந்தியா சுதந்தரம் பெற்ற வருடம்பற்றிய பாடம் உண்டா என்று கவனித்திருக்கவேண்டும் அல்லவா?

Anyway, இப்போது இவளுக்கு வருடத்தைச் சொல்லவேண்டும். அதை உரித்த வாழைப்பழம்போல் நேரடியாகச் சொல்ல எனக்கு மனம் இல்லை

ஏதாவது புத்தகம் கொடுத்து அதில் தேடச் சொல்லலாமா என்று ஷெல்ஃபை மேய்ந்தேன். பின்னாலிருந்து கிண்டலாக அவள் குரல், ‘என்னப்பா? மறந்துபோச்சா?’