Corrections

ஒரு ஹிந்திப் புத்தகத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். நான் அத்தியாயம் அத்தியாயமாக அனுப்ப, ஓர் எடிட்டர் அதைத் திருத்துகிறார்.

அவர் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தபட்சம் ஐந்தாறு திருத்தங்களாவது செய்திருப்பார். எனக்கு ஒரே வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கும்.

அடுத்த அத்தியாயத்தை மிகவும் கவனமாக வரிக்கு வரி டிக்‌ஷ்னரி பார்த்து மொழிபெயர்ப்பேன். அப்போதும் அவர் அதில் பல பிழைகள் பிடிப்பார்.

ஒருநாள் என் Clientடிடம் ‘அந்த எடிட்டர் பேர் என்ன?’ என்று கேட்டேன். ஒரு பழங்கால ஹிந்திப் பெயரைச் சொன்னார்.

உடனே, என் மண்டைமேல் பளிச்சென்று பல்ப் எரிந்தது. அட, இதுதான் காரணமா!

அவரது தாய்மொழி ஹிந்தி. அதனால்தான் அத்துணை நுணுக்கமாகப் பார்க்கிறார்.

இது தெரிந்தபிறகு இன்னும் கவனமாக மொழிபெயர்த்தேன். அவரும் பிழை பிடித்துக்கொண்டுதான் இருந்தார். இதுவரை அவர் கை வைக்காத பக்கம் இல்லை.

ஒருகட்டத்தில் வெறுத்துப்போய், ‘அவர் லெவலுக்கு என்னால முடியலைங்க, இந்த ப்ராஜெக்டை நிறுத்திடுவோம்’ என்று கெஞ்சினேன்.

’No No, Everything alright, you proceed’ என்றான் (தமிழ் தெரியாத) Client.

‘எடிட்டிங்ல இவ்ளோ பிழை வருதே. எனக்கு Guiltyயா இருக்கு.’

‘அதைப்பத்தி கவலைப்படாதே, வேணும்ன்னா அந்த எடிட்டர் ஃபோன் நம்பர் தர்றேன், பேசு.’

ஃபோன் நம்பர் தந்தான். ஆனால் எனக்கு பயம். பேசவில்லை.

இப்படிப் பல அத்தியாயங்கள் ஓடிவிட்டன. நேற்று, ‘அவர் உன்கிட்ட பேசணுமாம், நம்பர் கொடுத்திருக்கேன்’ என்றான் Client.
வெலவெலத்துப்போய்விட்டேன்.

இன்றைக்கு ஃபோன் மணி அடித்தாலே ஹிந்தி பண்டிட் ஒருவர், ‘அரே, ஏன்ய்யா என் மொழியைக் கொலை பண்றே?’ என்று கத்துவதுபோல் பிரமை.

மாலை ஆறு மணியளவில் அவர் ஃபோன் செய்தார். ‘நான்தான் ____, எப்படி இருக்கீங்க?’, சரளமான தமிழ்.

‘ந… நல்லா இருக்கேன் சார், நீங்க?’

’நான் நல்லா இருக்கேன், உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்ன்னு நானே நம்பரைக் கேட்டு வாங்கினேன்.’

போச்சு. திட்டப்போறார்!

’சொ… சொல்லுங்க சார்!’

‘உங்க ட்ரான்ஸ்லேஷன் ரொம்ப நல்லா இருக்கு, புக் பிரமாதமா வந்துகிட்டிருக்கு. வாழ்த்துகள்’ என்றார் அவர்.

நான் ராஜேந்திரகுமாருக்குப் பிரியமான ஙேகாரத்தில் விழித்து, ‘நிறைய மிஸ்டேக்ஸ் வருது சார், ரொம்ப ஸாரி’ என்றேன்.

’அது பரவாயில்லை, அதைக் கண்டுபிடிக்கதானே எனக்குச் சம்பளம்?’ என்றார் அவர். ‘உங்க நடை சரளமா இருக்கு, புக் வாசிக்க ரொம்பச் சுகமா வருது.’

ஆக, அவர் என் மொழிபெயர்ப்பில் நல்லதைமட்டும் பார்க்கிறார், தவறுகளைச் சகஜமாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் நான், அதைப் பூதாகாரமாக்கி, பயந்து…

நன்கு சரளமாகப் பத்து நிமிஷம் பேசிவிட்டுதான் ஃபோனை வைத்தார். இவரிடம் பேசுவதற்கா அஞ்சினேன் என்று என்னை நொந்துகொண்டேன்.

அவருடைய பெயர், அதன் பழைமைத்தன்மை, கணக்கு வாத்தியார்போல பக்கத்துக்குப் பக்கம் சுழிக்கிற கண்டிப்பு எல்லாம் சேர்ந்து ஏற்படுத்திய கலவரம், ஒரு நல்ல நட்பை இழக்கவிருந்தேன், நல்லவேளை!

Advertisements

Boys

பக்கத்து வீட்டுச் சிறுவனுக்குப் பிறந்த நாள். கேக், ஸ்வீட், சமோசா, காராபூந்தி எல்லாம் தட்டில் கொண்டு வந்து தந்தான்.

எங்கள் வீட்டில் எப்போதும் சிறுவர் புத்தகங்கள் பத்தோ பதினைந்தோ வாங்கி, பிரிக்காமல் வைத்திருப்போம். இதுமாதிரி அவசர நேரங்களில் பரிசளிக்க. அதிலிருந்து 5 புத்தகங்களை எடுத்து அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் என் மனைவி. ’புக்ஸா? இவ்வளவும் எனக்கா?’ என்று வியப்பாகப் பார்த்தான்.

’ஆமாண்டா, வீட்ல போய்ப் படி!’

‘எங்க வீட்ல புக்ஸே இல்லை ஆன்ட்டி’ என்றான் குழப்பத்தோடு, ‘அஞ்சும் எனக்குதானா? ப்ராமிஸ்?’

’உனக்குதான்’ என்று பலமுறை வலியுறுத்திச் சொன்னபிறகு, நம்பிக்கையே இல்லாமல் கிளம்பினான்.

கதவைச் சாத்திய 2வது நிமிடம் மீண்டும் மணி ஒலித்தது.

’ஸாரி ஆன்ட்டி, எனக்கு மூணு புக் போதும், இந்த ரெண்டையும் நீங்களே வெச்சுக்கோங்க.’

‘ஏண்டா? நிஜமா அஞ்சு புக்கும் உனக்குதான் கொடுத்தேன்!’

’ஆமா ஆன்ட்டி, ஆனா அந்த ரெண்டு புக்ல அட்டைல கேர்ள்ஸ் படம் போட்டிருக்கு. கேர்ள் ஸ்டோரீஸ்ல்லாம் நான் படிக்கமாட்டேன். பை!’

Thriller

என் அலுவலக நண்பர் ஒருவர், நல்ல திறமைசாலி. எந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாற்போல் செலுத்துகிற ஆசாமி.

அவரிடம் ஒரே ஒரு பிரச்னை, மற்றவர்களைக் குறை சொல்லுதல்.

அலுவலகத்தில் இது சகஜம்தானே. நான்கூட இப்போது அவரைக் குறை சொல்லவில்லையா?

ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமான குறை சொல்லி. சாதாரண விஷயத்தைக்கூட த்ரில்லர் நாவல்போல் ஆக்கிச் சொல்லுவார். உதாரணமாக:

அவர்: அந்தக் கந்தசாமி இருக்கானே, அவன் ஆஃபீஸ் டைம்ல யூட்யூப்ல டிவி சீரியல் பார்க்கறான்.

நான்: ஓஹோ!

அவர்: என்ன ஓஹோ? இது எப்படி எனக்குத் தெரியும்ன்னு கேளு!

நான்: சரி சொல்லு!

அவர்: எப்பவுமே அவன் மானிட்டரைக் கீழே திருப்பிவெச்சுதான் சீரியல் பார்த்துட்டிருப்பான், அது ஃப்ளோர்ல பட்டுப் பிரதிபலிச்சதை நான் பார்த்தேன்!

நான்: ஓஹோ

அவர்: என்ன? நான் சொல்றதை நம்பலையா? இதோ, அந்த Floor Reflectionனை ஃபோட்டோ எடுத்துவெச்சிருக்கேன், பாரு!

பொய்யில்லை, நிஜமாகவே யாருடைய மானிட்டரோ மசங்கலாகத் தரையில் பிரதிபலிப்பதை ஃபோட்டோ பிடித்துவைத்திருக்கிறார். என்னிடம் காட்டுகிறார்.

இவரிடம் ‘So What?’ என்று கேட்டால் துடித்துப்போய்விடுவார். ‘ஹாஹா’ என்று பொய்யாகச் சிரித்து அனுப்பிவைத்தேன்.

இருக்கட்டும், நல்லவர்தான்.

Kaatchi

மதிய உணவுக்காகச் சென்றுகொண்டிருந்தேன். என்னருகே ஒரு பள்ளிப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து இரு சிறுவர்கள் இறங்கினர். இருவரின் முகச் சாயலும் ஒன்றே. அக்கா, தம்பியாக இருக்கவேண்டும் என்பது என் ஊகம்.

அவர்கள் இறங்கியதும், பேருந்து சென்றுவிட்டது. இருவரும் எதிரிலிருந்த சாலையைப் பார்த்தபடி தயங்கி நின்றார்கள்.

அங்கே வழக்கம்போல் ஏராளமான வாகனங்கள், எதிரெதிர் திசைகளில் ஓடும் இரட்டை நதிகளைப்போல. அடுத்த சில நிமிடங்களுக்கு அந்த ஓட்டம் நிற்க வாய்ப்பில்லை.

அச்சிறுவர்கள் சாலையைக் கடக்கவேண்டும் என்று புரிந்தது. எதிரே அவர்கள் தாய் நின்றிருந்தார். அவர்களைப் பார்த்துக் கை அசைத்தார்.

ஆனால், அவராலும் சாலையைக் கடக்க இயலாது. வாகன ஓட்டத்துக்கு நடுவே தெரிந்த இடைவெளிகளில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாகக் கை அசைத்தார்.

நானும் சாலையைக் கடக்கவேண்டும் என்பதால், அச்சிறுவர்கள் அருகே நின்றேன். அவர்கள் தாயுடன் சைகை மொழியில் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், போக்குவரத்து உறைந்து நின்றது. குடுகுடுவென்று நிற்கும் வண்டிகளுக்கிடையே புகுந்து சாலை நடுவே உள்ள திட்டை அடைந்தோம்.

அதற்குள் அவர்களுடைய தாயும் எதிர்ப்பக்கமாக ஓடி வந்து அதே திட்டை அடைந்திருந்தார். இதுவரை சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தோர் இப்போது வாயெல்லாம் புன்னகையுடன் சலசலவென்று ஹிந்தியில் உரையாடத் தொடங்கினார்கள்.

மதிய நேர வெய்யில் அலுப்பைப் போக்கிய நல்லதோர் காட்சி!

Friends

பெங்களூரு பூங்கா பெஞ்ச்களில் மாலை நேரங்களில் ஸ்கூல் புக், நோட் சகிதம் பாடம் படிக்கிற மாணவர்களை நிறைய பார்க்கலாம்.

இவர்களில் மிகச் சிலர் தனியே அமர்ந்திருப்பர். பெரும்பாலும் இருவர் கூட்டணிதான். ஒருவர் மற்றவருக்குப் பென்சிலில் படம் வரைந்து பாகம் குறித்துச் சொல்லித்தருவார்கள். மற்றவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொள்வார்கள்.

நான் மாலை நேர நடையின்போது ஒரே பார்க்கை ஐந்து முதல் எட்டு முறை சுற்றி வருவதால், இவர்களைச் சுமார் 4 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து பார்ப்பேன். பத்திரிகையில் ஒரு தொடர்கதை வாசிக்கிறமாதிரி இருக்கும்.

ஒவ்வொரு ஜோடியிலும், கற்றுக்கொள்கிறவர் முகம் ஒரேமாதிரிதான் இருக்கும். பாதி புரிந்து, பாதி புரியாமல், அந்த பென்சிலையே கூர்ந்து கவனித்தபடி.

கற்றுத்தருகிறவர் முகத்தில் பெரும்பாலும் திமிர் தெரியாது (அந்த வகையினர் சொல்லித்தரமாட்டார்களோ என்னவோ), உலகப் பொறுமையெல்லாம் அங்கிருக்கும்.

குறிப்பாக, பெண்களுக்குக் கற்றுத் தரும் ஆண்கள் அத்துணை பொறுமையான முகபாவத்துடன் இருப்பர். ஆண்களுக்குக் கற்றுத் தரும் பெண்களைப் பார்த்ததில்லை.

சிறிது நேரம் படித்தபிறகு, நோட்டை மூடி உள்ளே வைத்துவிட்டு, சகஜமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்களைப் பார்த்தால் சற்றுமுன் பாடம் கற்பித்தவர் யார், கற்றுக்கொண்டவர் யார் என்கிற வித்தியாசமே தெரியாது. அரட்டை நண்பர்களாகியிருப்பார்கள்.

MaNi

’ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு நமுட்டுச் சிரிப்பு வரும். காரணம், அந்த மெட்டும், அந்த வரியும், பாடப்படும் விதமும், ‘ரெண்டு மணி அடித்தால் கண்ணே இன்னொருத்தி ஞாபகம்’ என்று அடுத்த வரியைக் கிண்டலாக ஊகிக்கவைக்கும்.

வாக்கிய அமைப்பின்படியும், அந்தப் படத்தின் கதைப்படி யோசித்தாலும், ‘எந்த மணி அடித்தாலும் கண்ணே உன் ஞாபகம்’ என்றுதான் அந்த வரி அமையவேண்டும். ஆனால் அது மெட்டுக்குப் பொருந்தாது. ‘மணி எதும் அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ என்பதுபோல் சுற்றி வளைத்திருந்தால் பாட்டு மனத்தில் பதியாது.

ரெண்டாவது வரியில் வருகிற அந்த டெலிஃபோனைத் தூக்கி முதல் வரியில் போட்டு ’டெலி மணி ஒலித்தால் கண்ணே உன் ஞாபகம்’ என்றால் கொஞ்சம் புதுமையாகவும், ஜாலியாகவும் உள்ளது!

ULLi

’உள்ளி’ என்ற சொல்லின் பொருள் வெங்காயம், இப்போது இது தமிழில் பயன்பாட்டில் இல்லை, மலையாளம், கன்னடத்தில் உள்ளது.

நிலத்தின் உள்ளே விளைவது என்ற பொருளில் இதற்கு ‘உள்ளி’ என்று பெயர் சூட்டினார்களாம். இது தமிழ்ச் சொல்தான் என்று சமீபத்தில் தெரிந்துகொண்டேன்.

ஆர்வத்தோடு அதுபற்றித் தேடினால், அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றிவேற்கையில் (’எழுத்தறிவித்தவன் இறைவன்’ புகழ்) வெங்காய வாசனை அடித்தது.

’ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது’

வெங்காயத்துடன் நீங்கள் எதைச் சேர்த்தாலும், வெங்காயத்தின் தனித்துவமான மணம் மாறாது. அதுபோல கெட்டவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்து பழகினாலும், அவர்களுடைய கெட்ட குணம் போகாது (Or vice versa).

உள்ளி / வெங்காயத்தின் குணமறிந்த ஒரு நல்ல உவமை இது. ஏனோ, உள்ளி என்ற சிறு சொல் காணாமல் போய், வெங்காயம் என்ற நீண்ட சொல் பிரபலமாகிவிட்டது.

நேற்றிரவு ஜெயநகரில் நடந்துகொண்டிருக்கும்போது, ‘வெ(பெ)ள்ளுள்ளி’ என்று காதில் விழுந்தது.

வெ(பெ)ள் உள்ளி என்றால் வெள்ளை வெங்காயம், அதாவது பூண்டு.

எங்கள் வீட்டில் சமையலில் பூண்டு சேர்ப்பதில்லை. ஆகவே, அந்த வெள்ளுள்ளி வியாபாரியைக் கடந்து வந்தோம். ஆச்சர்யம், அங்கே துளி பூண்டு மணம் இல்லை.

பூண்டு strong வாசனை கொண்டது. அதைக் குவித்து வைத்துள்ள ஓர் இடத்தில் அந்த வாசனை இல்லை என்றால் எப்படி? சந்தேகத்துடன் பார்த்தேன்.

இரவு 8 மணி அரையிருட்டில் பார்க்கும்போது அது பூண்டுமாதிரிதான் இருந்தது. ஆனால் பூண்டு இல்லை. விசாரித்தால் ‘வெ(பெ)ள்ளுள்ளி அவல்’ என்றார் வியாபாரி.

அதாவது, பூண்டுப் பல் போன்ற வடிவத்தில் செய்யப்பட்ட அவல் அது. அப்படியே சாப்பிடலாம், அல்லது, இனிப்பு, காரம் தோய்த்துச் சாப்பிடலாம். இது கர்நாடகாவில் பிரபலமா, அல்லது எங்கும் உண்டா என்று தெரியவில்லை. பார்க்க மிக அழகாக இருந்தது, முதன்முறையாக எங்கள் வீட்டுக்குப் பூண்டு(போல) வாங்கிவந்தோம்!