Sabri’s Colors

இன்று மகளுக்குக் கதை சொல்ல Sabri’s Colours என்ற புத்தகத்தைப் படித்தேன். Rinchin எழுதியது, படங்கள் Shailaja Jain, வெளியீடு Tulika Books.

வழக்கமாகக் குழந்தைக் கதைகள் எல்லாம் உற்சாகமாக, கொண்டாட்டமாகதான் இருக்கும், ஆனால் இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமாக, உருக்கமான theme கொண்டது.

சப்ரி என்று ஒரு பெண், கிராமத்தில் வசிக்கிற ஏழைச் சிறுமி, ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம், தரையில் சாக்பீஸ் கொண்டு விதவிதமாக வரைவாள். எப்போதாவது அவளுக்கு ஒரு காகிதம், பென்சில் கிடைக்கும். அதில் எதையாவது வரைந்து பொக்கிஷம்போல் பத்திரப்படுத்திவைப்பாள்.

ஒருநாள் அவளது பள்ளியில் ஏதோ விழா. அதற்காகக் கலர் பென்சில், வாட்டர் கலர் எல்லாம் வாங்கி ஆசிரியர்கள் படம் வரைந்து தொங்கவிடுகிறார்கள்.

இதைப் பார்த்த சப்ரிக்கு அதிர்ச்சி, அவளது படங்கள் எல்லாம் வெறும் கோடுகள்தான், அவற்றில் வண்ணங்களே கிடையாது. ஆனால், அவளைச் சுற்றியுள்ள உலகம் வண்ணமயமாக இருப்பதை அவள் இப்போதுதான் கவனிக்கிறாள். அவற்றை நுணுக்கமாகப் படங்களில் காட்ட எண்ணுகிறாள்.

பென்சில், காகிதத்துக்கே வழியில்லாத ஏழைச் சிறுமி, கலர் பென்சிலுக்கு எங்கே போவாள்?

அவளது ஓவியத் திறமையை அறிந்த ஆசிரியர்கள்கூட அவளுக்குக் கலர் பென்சில் தர மறுக்கிறார்கள். அவற்றை ஒரு கப் போர்டில் வைத்துப் பூட்டிவிடுகிறார்கள்.

சப்ரி ஏங்குகிறாள், இயற்கையில் பார்க்கும் வண்ணங்களெல்லாம் அவளைச் சீண்டுகின்றன, ‘உன் படமெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை’ என கேலி செய்கின்றன.

இப்போது சப்ரிக்கு இன்னொரு பயம், ‘ஒருவேளை வண்ணம் பூசப்படாமலே என் ஓவியங்களெல்லாம் தொலைந்துவிடுமோ, கிழிந்து / அழிந்துவிடுமோ!’

தன் படங்களில் மிகச் சிறந்த மூன்றை எடுத்துக்கொண்டு ஆசிரியரைச் சந்திக்கச் செல்கிறாள். வழியில் சிறுவர்கள் சிலர் அவளைக் கேலி செய்கிறார்கள். இவள் அவர்கள்மீது கோபப்பட்டுக் கத்த, பழி வாங்குவதற்காக அவளுடைய பொக்கிஷம் போன்ற ஓவியங்களைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள்.

சப்ரி ஆதங்கத்தோடு கத்தியபடி அவர்கள் பின்னே ஓடுகிறாள். அந்தக் காட்சியோடு கதை முடிகிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்த நானும், கேட்ட என் மகளும் பெரும் திகைப்படைந்தோம். வண்ணங்களுக்காக ஏங்கும் சிறுமியை நாங்கள் கற்பனைகூட செய்ததில்லை.

எங்கள் வீட்டில் பெரிய டப்பா நிறைய கலர் பென்சில்கள் உடைந்து, தேய்ந்து கிடக்கின்றன. இன்னும் திறக்கப்படாமல்கூட ஒன்றிரண்டு பாக்கெட்கள் உள்ளன. அவற்றை ஒரு பெரிய விஷயமாக ஒருபோதும் நினைத்ததில்லை. அவை கிடைக்காமல் ஒரு பெண் ஏங்கக்கூடும் என்பது ஒருபக்கமிருக்க, நாம் சும்மா பொழுதுபோக்கு விஷயம் என்று அலட்சியமாக நினைப்பது, ஒருவருக்கு ஆத்மார்த்தமான தேவையாக இருக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டேன்!

Advertisements

Fish

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சுத்த சைவம். அவருடைய மகளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அன்று காலை அவர் இருபது மீன்கள் வாங்கிவந்தார். ஏன்?

அவர்கள் வீட்டில் ஒரு பெரிய மீன் தொட்டி உண்டு. ஆனால் அங்கே இரண்டே இரண்டு மீன்கள்மட்டும் உண்டு.

’ரெண்டே ரெண்டு மீனா?’ன்னு மாப்பிள்ளை வீட்டில் தவறாக நினைத்துவிடுவார்களாம். 20 மீன் வாங்கிவந்து நீந்தவிட்டாராம் :))

CD

திருச்சியிலிருந்து மனைவியின் சித்தப்பா வருகை. ’_______ பாடின ______ பாட்டு கேட்கணுமே’ என்றார்.

என் மனைவி அதை யூட்யூபில் தேடிப் பிடித்துவிட்டார். அதை ஜம்மென்று மடியில் தாளம் போட்டுக் கேட்டு ரசித்தார் சித்தப்பா. பிறகு ’இதை எனக்கு டவுன்லோட் செஞ்சு ஒரு சிடில போட்டுக் கொடுத்துடுங்களேன்’ என்றார் என்னிடம்.

’இந்தப் பாட்டு CDல வந்திருக்கு,ஈவினிங் வாங்கித் தர்றேன்’ என்றேன்.

‘காசுக்கா?’ என்றார் அதிர்ச்சியுடன்.

‘பின்னே?’

‘அப்போ வேணாம் விடுங்க!’

நான் ஆஃபீஸ் கிளம்பிச் சென்றபிறகு மனைவியிடம், ‘இப்படி இருந்தா ஏய்ச்சுப்புடுவாங்க, நீதான் கொஞ்சம் பார்த்து புத்தி சொல்லணும்’ என்றாராம்.

Calculator

இன்று எங்கள் மகள் ஒரு பழைய கால்குலேட்டரை எடுத்துவந்தாள், ‘அப்பா, இந்த கால்குலேட்டர்ல பல பட்டன்ஸ் என்னன்னே புரியலையே’ என்றாள்.

’அது எஞ்சினியரிங் கால்குலேட்டர் மங்கை, கொஞ்சம் அட்வான்ஸ்ட் கணக்குகள், உனக்கு அதெல்லாம் அப்புறமா ஸ்கூல், காலேஜ்ல சொல்லித் தருவாங்க’ என்றேன்.

அப்போது மனைவி குறுக்கிட்டு, ‘ஏய், நானும் காலேஜ்ல இதே கால்குலேட்டர்தான் யூஸ் பண்ணேன்’ என்றார். ‘அது ஒரு காமெடியான கதை!’

’காலேஜ் செகண்ட் இயர்ல எங்கப்பாகிட்ட கால்குலேட்டர் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டேனா, அவருக்கு செம கோவம், மெஷின் வெச்சு கணக்குப் போடறதுக்குதான் உன்னை காலேஜ்ல சேர்த்தேனான்னு கத்தினார்.’

’அப்பா, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான கணக்குப்பான்னு சொன்னேன். என்ன பெரிய கஷ்டம்? நான்லாம் எத்தனை நம்பர் தந்தாலும் நொடியில கூட்டிடுவேன்னார்.’

’அவர் ஒரு அக்கவுன்டன்ட். அவரைப் பொறுத்தவரைக்கும் நம்பரைக் கூட்டறது, கழிக்கறதுதான் கணக்கு. அவருக்கு Log, Sin, Cos, Tanல்லாம் பேப்பர்லயோ, புத்தியிலயோ போடமுடியாது, கால்குலேட்டர்லதான் போடணும்ன்னு சொன்னா புரியலை. ஒழுங்காப் படின்னு அதட்டினார்.’

’ரொம்ப வற்புறுத்தினப்புறம், வேணும்ன்னா எல்லா சைன், காஸ் டேபிளையும் மனப்பாடம் செஞ்சுகிட்டுப் போ, கால்குலேட்டர்லாம் கெட்ட பழக்கம்ன்னுட்டார்.’

’அப்புறமாதான் மாமா(என் அப்பா)கிட்ட கேட்டேன், நீ யூஸ் பண்ண பழைய கால்குலேட்டரைக் கொடுத்து என் உசுரைக் காப்பாத்தினார்.’

Dark Yellow

இன்று என் மனைவி ரிலையன்ஸ் ஃப்ரெஷ் சென்றிருந்தாராம். அங்கே க்யூவில் ஒரு பெண், ஷாப்பிங் கார்ட் நிறைய பிளாஸ்டிக் சாமான்களுடன்.

அத்தனை பிளாஸ்டிக் டப்பாக்களை ஒருவர் வாங்குவது பெரிதல்ல. அவை அனைத்தும் அடிக்க வருகிற அடர்மஞ்சள் நிறம் என்பதுதான் விசேஷம்.

நானாக இருந்தால் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ஒரு ட்வீட் போட்டுவிட்டுச் சும்மா இருந்திருப்பேன். என் மனைவி விசாரித்திருக்கிறார், க்யூவில் பொழுது போகவேண்டாமா?

’ஏன் எல்லா டப்பாவும் ஒரே கலர், அதுவும் டார்க் யெல்லோ? உங்களுக்குப் பிடிச்ச கலரா அது?’

’அய்யய்யே, இந்தக் கலரை எவ வாங்குவா? எனக்குச் சுத்தமாப் பிடிக்காது.’

‘அப்புறம் ஏன் எல்லா டப்பாவும் இதே கலர்ல வாங்கறீங்க?’

’அது ஒரு பெரிய கதை’ (பெருமூச்சு) ‘எங்க வீடு கூட்டுக் குடும்பம், மொத்தம் 35 பேரு.’

‘அடடே, நல்ல விஷயம்தானே!’

‘நல்லதுதான், ஆனா அந்த முப்பத்தஞ்சு பேர்ல 34 பேர் நான்வெஜிடேரியன், நான்மட்டும் வெஜிடேரியன்!’

’அதுக்கும் மஞ்ச டப்பாவுக்கும் என்னங்க சம்பந்தம்?’

’எங்க வீட்ல இருக்கறவங்கல்லாம் மசாலால தூள் கிளப்புவாங்க, அந்த வாசனைதான் எல்லா டப்பாலயும். எனக்கு அது ஆகாது, வாந்தி வரும்.’

’எனக்காகத் தனி டப்பா வாங்கிவெச்சேன், அதையெல்லாம் அவங்க தெரியாம எடுத்து யூஸ் பண்ணிடுவாங்க, அப்புறம் அந்த வாசனை அப்படியே இருக்கும். எத்தனை தேச்சுக் கழுவினாலும் போகாது!’

’அதனாலதான், இப்ப எல்லா டப்பாவும் மஞ்சாக்கலர்ல வாங்கறேன், இனிமே ஒருத்தரும் சீண்டமாட்டாங்கல்ல?!’