Top 10 Books

எனக்குப் பிடித்த Top 10 Books என்றொரு Trend சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவருகிறது. அவ்வகையில் இது என் பட்டியல் (Chronological):

1. குறுந்தொகை
2. சிலப்பதிகாரம்
3. பெரியாழ்வார் பாசுரங்கள்
4. கம்ப ராமாயணம்
5. பாரதியார் கவிதைகள்
6. சிவகாமியின் சபதம்
7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
8. நிலா நிழல்
9. அலகிலா விளையாட்டு
10. Harry Potter Series

14 Seer VeNpaa

இன்று ‘சவலை வெண்பா’ என்ற பாவகைபற்றித் தெரிந்துகொண்டேன். சந்தக்கவி திரு. ராமசாமி அவர்கள் சொல்லித்தந்தார்.

சவலை என்றால் நோஞ்சான் என்று அர்த்தம். அதுபோல, இந்த நாலடி வெண்பாவில் 2வது அடியில் ஒரு சீர் குறைந்திருக்கும்.மற்றபடி வெண்பா இலக்கணம் மாறாது.

அதாவது, முதல் அடியில் 4 சீர், இரண்டாம் அடியில் 3 சீர், மூன்றாம் அடியில் 4 சீர், நான்காம் அடியில் 3 சீர், மொத்தம் 14 சீர் சவலை வெண்பா.

வெண்பா எழுதத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னை அல்ல.
சொல்லப்போனால் வேலை மிச்சம் 🙂 இதைக் கற்று நான் எழுதிப்பார்த்த சவலை வெண்பா:

சத்தம் இலாதொரு சர்க்கரையில் தோய்த்தெடுத்த
முத்தம் கொடுத்திடடி முல்லையே
எத்தனை முத்தமென்று எண்ணித் திருப்பிடுவேன்
அத்தனையும் உன்னை அணைத்து!

Mirror

புது அலுவலகம் வந்து பதினைந்து நாளாகிறது. இன்று லிஃப்டுக்குள் நுழைந்தால், சக ஊழியர் ஒருவர் அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி தலை வாரிக்கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு, ‘ஸாரி சார்’ என்றார்.

கூந்தல் உள்ளவர் அள்ளி முடிகிறார், இதற்கெதற்கு ஸாரி என்று நினைத்துக்கொண்டேன்.

பின் அவராக விளக்கம் சொன்னார், ‘பாத்ரூம்லயெல்லாம் இன்னும் கண்ணாடி பதிக்கலை, கேட்டா லோ ப்ரையாரிட்டிங்கறாங்க, கேர்ள்ஸ்க்கு அது ஹை ப்ரையாரிட்டி இல்லையோ?’

’நியாயம்தான்’ என்று சொல்லிவிட்டு ஒரு மாடி முன்பாக இறங்கிக்கொண்டேன். அவர் நிதானமாகத் தலை வாரட்டும்!

Stories

கோகுலத்தில் சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். நங்கையிடம் அதைக் காண்பித்து ‘நீ இந்தப் போட்டிக்கு அஞ்சு கதை எழுது’ என்று ஊக்குவித்தேன்.

’பார்க்கலாம்’ என்றாள் குத்துமதிப்பாக.

அவளுக்குக் கொஞ்சம் தெம்பு ஊட்டலாமே என்று ‘நீ வர்ற பதினஞ்சாம் தேதிக்குள்ள நல்லதா அஞ்சு கதை எழுதினா உனக்கு ஒரு ப்ரைஸ் தருவேன்’ என்றேன்.

’அஞ்சு கதைக்கு அஞ்சு ப்ரைஸ் தருவியா?’ என்றாள்.

‘அஸ்கு புஸ்கு, இது நல்ல கதையா இருக்கே!’ என்றேன்.

‘குட், ஒரு கதை ஆச்சு, நாலு பாக்கி’ என்கிறாள்!

#ஙே