Pavalar

’பாவலர் வரதராஜன் பாடல்கள்’ படிக்க எடுத்துள்ளேன். முன்னுரைகளைத் தாண்டுவதற்குள் எத்துணை சுவாரஸ்யமான விஷயங்கள்!

ஜெயகாந்தனின் தோழர், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த கவிஞர், கண்ணதாசன் அடிக்கடி ராஜா, கங்கை அமரனைப் பாவலர் பாடல்கள் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பாராம்.

இத்தனைக்கும் பாவலரின் பல பாடல்கள் கண்ணதாசன் எழுதிய சினிமா மெட்டுகளுக்கு மாற்றுச் சொற்களோடு எழுதப்பட்டவை. அதைக் கண்ணதாசனே கேட்டு ரசிப்பது, பாராட்டுவது எத்தனை பெரிய விஷயம்!

இளையராஜா தன் முன்னுரையில் 1957-58ல் நடைபெற்ற தேவிகுளம் பீர்மேடு இடைத்தேர்தல்பற்றிச் சொல்கிறார்.

அந்தத் தேர்தலில் பாவலர் வரதராஜன் தனி ஆளாக ஜீப்பில் தொகுதிமுழுக்கச் சென்று மைக் வைத்துப் பாடிப் பாடிப் பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

வெற்றி விழாவில் 50,000+ மக்கள். கேரள முதல்வர் நம்பூதிரிபாட் வருகிறார், அவருக்கு ரோஜா மாலை வருகிறது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், ‘இவடெ பாவலர் வரதராஜன் யாராணு?’ என்று கேட்க, கூட்டத்தில் இருந்த பாவலர் மேடை ஏறுகிறார்.

மைக்கைப் பிடித்த நம்பூதிரிபாட், ‘ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்டெ வெற்றியாணு’ என்று சொல்லி ரோஜா மாலையை அவருக்கு அணிவிக்கிறார்.

இந்த மலையாள வாசகங்கள் சரியா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு கலைஞனுக்கு இப்படியொரு மரியாதையை மாநில முதல்வர் தரும் சூழல் இருந்திருக்கிறது!

(பாவலர் வரதராஜன் பாடல்கள் : கவிதா பதிப்பகம் : ரூ 125)

Advertisements

மாணிக்கச் சொல்லன்

இன்று திருவாசகம் (அதாவது, அதன் ஒரு சிறிய பகுதியை) வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்தப் பக்கம் பெரியாழ்வார், அந்தப் பக்கம் மாணிக்கவாசகரின் மொழி மனத்துக்கு மிக அணுக்கமாக இருக்கிறது, அது ஏன் என்று தெரியவில்லை!

மாணிக்கவாசகரின் பல சொல் தேர்வுகள் நுட்பமான அழகு கொண்டவை. உதாரணமாக, (பெண்)பால் ஈர்ப்பை ’நயனக் கொள்ளை’ என்கிறார் மிகச் சுருக்கமாக!

இன்றைய வாசிப்பில் உள்ளம் கவர்ந்த பகுதிகளில் சில இங்கே. ஒவ்வொன்றையும் மனத்தில் வைத்துச் சிந்தித்தால் அவை ஓர் அழகிய படிமமாவதை ரசிக்கலாம். ‘வெறும் பக்திப் பாட்டு, புலம்பல்’ என்று இவற்றைக் கடந்து செல்கிறவர்கள் இழப்பது நிறைய!

  • யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு…
  • பொய்யனானேன் நான், உண்டு உடுத்தி இங்கு இருப்பதானேன் போர் ஏறே!
  • ஊன் ஆர் புழுக்கூடு… (உடம்பைதான் சொல்கிறார்!)
  • என்னை ஆளுடை ஒருவ, போற்றி
  • புறமே போந்தோம் பொய்யும் யானும்!
  • யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்! ஆனால், வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே!
  • கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்!
  • உருகி நான் உனைப் பருகவைத்தவா!
  • தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார், நானும் அங்ஙனே, உடைய நாதனே!
  • வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட, மறுத்தனனே!

தமிழரிடையே மிகைப் புகழ்ச்சி அதிகம்தான். ஆனால் ‘திருவாசகத்துக்கு உருகார், ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பது நிச்சயம் குறைப் புகழ்ச்சி!

Double Meaning

சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் மார்பகங்களைப்பற்றிய மறைமுகக் குறிப்பு ஒன்று இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் மிகவும் கிளுகிளுப்பாக(?) விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

சங்க இலக்கியப் புலவர்களோ அதற்குப் பிறகு வந்த புலவர்களோ தங்கள் பாடல்களில் மார்பகத்தைப் பற்றி நேரடியாகவே பேசத் தயங்கியவர்கள் இல்லை. பெண் பேசுவதாக வரும் பாடல்கள், பெண்களே எழுதிய பாடல்களில்கூட இந்தச் சொற்கள் சர்வ சாதாரணமாக, மிகவும் சகஜமாக, எந்த வக்கிர எண்ணமும் இல்லாமல் வரும். இப்போதுதான் நாம் அதன்மீது ஆயிரம் மூடிகளைப் போட்டு (No pun intended) பேசக்கூடாத பொருள்களாக ஆக்கிவிட்டோம்.

அட, மற்றதை விடுங்கள். இந்த இடுப்பு என்ன தவறு செய்தது? அதைக்கூடப் பேசக்கூடாத பொருளாக்கிவிட்டோம். கம்ப ராமாயணத்தின் சீதையை அன்னையாகக் கருதும் அனுமன் அவளைப் பார்த்துச், ‘சுருங்கு இடை!’ என்று அழைக்கிறான். ‘சின்னஞ்சிறு இடையைக் கொண்டவளே’ என்று அர்த்தம். அதில் அன்றைக்கு எந்த வக்கிரமும் இல்லை. இன்றைக்கு வாசிக்கிற நம் மனத்தில்தான் உள்ளது. தவறு யார்மீது?

Window

எங்கள் புதிய அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் ஒரு ஜன்னல். அதைத் திறந்தால் பிரமாதமாக (ஆறாம் மாடிக்) காற்று, கூடவே ஏகப்பட்ட டிராஃபிக் சத்தம். ஆகவே, அந்த ஜன்னலைத் திறக்காமலே இருந்தேன்.

சில தினங்களுக்குப்பிறகு, ஒரு வாடிக்கையாளருடன் ஃபோனில்
பேசிக்கொண்டிருக்கும்போது படாரென்று பேரொலி. பதறிப்போய்த் திரும்ப, பெருங்காற்றில் ஜன்னல் திறந்துகொண்டிருந்தது, ஒரே சத்தம். ஓடிச் சென்று மூடிவிட்டு வாடிக்கையாளரிடம் தடங்கலுக்கு வருந்தினேன்.

சில விநாடிகளுக்குப்பிறகு, மறுபடி அதே படார், அதே சத்தம், அதே ஓடல், அதே மூடல், அதே தடங்கலுக்கு வருந்தல்.

அந்தத் தொலைபேசி அழைப்பு நிறைவடைந்தபின் ஜன்னலைச் சென்று பார்த்தேன், அதன் தாழ்ப்பாளில் ஏதோ பிரச்னை, மூட இயலவில்லை, இத்தனை நாள் திறந்துதான் இருந்திருக்கிறது!

உடனே எங்கள் நிர்வாகத் துறைக்கு ஒரு மின்னஞ்சல் தட்டினேன், பிரச்னையை விரிவாகச் சொல்லிச் சரி செய்யக் கேட்டுக்கொண்டேன். அதோடு அதை
மறந்துவிட்டேன்.

ஆனால், அவர்கள் எதுவும் செய்யவில்லை. தினமும் அதே பிரச்னை. நான் சற்றும் எதிர்பாராத கணத்தில் ஜன்னல் திறந்துகொண்டு சத்தமிடும். எரிச்சலாக வரும்.

ஒருநாள் அலுவலகம் வந்து பார்த்தால் என் மேஜைமேலிருந்த காகிதங்களெல்லாம் அறைமுழுக்க இறைந்து கிடந்தன, காரணம், தானே திறந்துகொண்ட அந்த ஜன்னல்தான்! அவற்றையெல்லாம் எடுத்து ஒழுங்காக அடுக்கிவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!

உடனே, அந்தப் பிரச்னையை அடுத்த நிலை மேலாளருக்குக் கொண்டுசென்றேன். பயன் இல்லை. கடுப்பாக அந்தத் துறையின் இயக்குநருக்கு மெயில் எழுதினேன். பயன் இல்லை. நிறைவாக, எங்கள் Bossக்கே இதுபற்றி எழுதிவிட்டேன். அவரும் கடுப்பாகி, ‘இதையெல்லாமா என் கவனத்துக்குக் கொண்டுவருவீர்கள்?’ என்று கத்த…

அப்போதும் பிரச்னை சரியாகவில்லை. ஒவ்வொருவராக வந்து பார்ப்பார்கள், ஜன்னலைப் பரிசோதிப்பார்கள், ஏதோ பேசுவார்கள், திரும்பிச்
சென்றுவிடுவார்கள். எப்போது கேட்டாலும் ‘நாளைக்குச் சரி செஞ்சுடறோம் சார்’ என்று ஒரே பதில். ஒரு அற்ப ஜன்னலில் என்ன பெரிய பிரச்னை
இருக்கமுடியும்?

அதன்பிறகு, திடீர் ஜன்னல் திறப்புகளால் நாளுக்கு நாள் என் எரிச்சல் அதிகரித்தது. நானே ஒரு பழுது பார்ப்பவரை அழைத்துவந்து சரி செய்துவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அதைக் கட்டட நிர்வாகம் ஏற்கவில்லை. ‘No one can touch our structure’ என்றார்கள். இவர்களும் சரி செய்யமாட்டார்கள், பிறரும் தொடக்கூடாது!

இன்று காலை மீண்டும் ஜன்னல் திறப்பு, புலம்ப ஆளில்லை. அறையைத் தூய்மை செய்ய வந்த பணியாளரிடம் சொன்னேன். ’அப்படியா’ என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் யாரையோ கூட்டி வந்து சரி செய்துவிட்டார். இப்போது கதவு கச்சிதமாகத் திறந்து மூடுகிறது, திடீர்த் தாக்குதல்கள் இல்லை!

ஆக, எதாவது பிரச்னைன்னா மேல் நிலையில் உள்ளவர்களுக்கு Escalate செய்து பிரயோஜனமில்லை, சரியான Network உள்ளவர்களிடம் சொன்னால் உடனடி பலன். அம்புடுதேன்!