Yeladhi

’ஏலாதி’ என்று ஒரு சங்க இலக்கிய நூல். (பதினெண் கீழ்க்கணக்கு என்று சொன்னால் பயப்படமாட்டீர்களே?).

ஏலக்காய் தெரியும். அதென்ன ‘ஏலாதி’?

ஏலம் + ஆதி, அதாவது, ஏலம் (ஏலக்காய்) முதலான 6 மூலிகைகளை இந்தச் சொல் குறிக்கிறது. அவை:

1. ஏலக்காய்
2. லவங்கம்
3. சிறுநாவல்பூ
4. மிளகு
5. திப்பிலி
6. சுக்கு

இந்த ஆறு மூலிகைகளையும் சேர்த்துச் செய்யப்படும் மருந்து பல நோய்களைத் தீர்த்து நம்மை நீண்ட நாள் வாழவைக்கும். அதுபோல, ‘ஏலாதி’ என்கிற இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றினால் உலகில் நல்லபடி வாழலாம் என்ற பொருளிலேயே இதற்கு ‘ஏலாதி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் கணிமேதாவியார்.

ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள்… Powerpoint ஞாபகம் வருகிறதல்லவா? ஒவ்வொரு Slideலும் 6 Bullet Points இருப்பதுபோல!

உதாரணமாக, ‘ஏலாதி’யிலிருந்து ஒரு வெண்பா:

வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய்
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து

ஒரு நல்ல மன்னன் பழி இல்லாமல், நூல்களெல்லாம் (எல்லாரும்) போற்றும்படி வாழவேண்டுமென்றால் அவன் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

1. பணிவோடு இருக்கவேண்டும்
2. நல்ல வழியில் நடக்கவேண்டும்
3. தகுதி உள்ளவர்களின் பேச்சைக் கேட்கவேண்டும்
4. நல்ல நூல்களை ஆராய்ந்து அறியவேண்டும்
5. அவை சொல்லும் கருத்துகளில் மனத்தைச் செலுத்தவேண்டும்
6. அவற்றில் பொருத்தமானவற்றைப் புரிந்துகொண்டு அவற்றின்படி வாழவேண்டும் (ஆட்சி செய்யவேண்டும்)

Advertisements