Characters

நான் படம் பார்ப்பதில்லை, முன்பு பார்த்த படங்களும் கிட்டத்தட்ட மறந்துவிட்டன. ஆகவே, எனக்குத் திரைப் பாடல் என்பது வெறும் ஒலிதான். வாத்திய இசை, மெட்டு, பாடகர்களின் குரல், உணர்ச்சிகள், பாடல் வரிகள் போன்றவற்றைமட்டுமே எந்த கவனச் சிதறலும் இல்லாமல் ரசிக்க இது வசதி.

இதனால், பாடகர்கள் குரல் ஒவ்வொன்றுக்கும் ஓர் உருவத்தைக் கற்பனை செய்துகொள்வேன். இது அவர்களுடைய நிஜ உருவத்துடன் சம்பந்தப்படவேண்டிய அவசியமில்லை.

இந்தக் குரல் மனிதர்கள் எல்லாம் ஒரே ஊரில் வாழ்வதாக நான் நினைத்துக்கொள்வேன். அவர்கள் அவ்வப்போது சந்தித்துத் தங்களுக்குள் பாடிக்கொள்வதை நான் கேட்பதாக எண்ணுவேன்.

உதாரணமாக, எனக்கு SPBயின் குரல் வகுப்பில் முதல் மார்க் வாங்கி எல்லா ஆசிரியர்களிடமும் பாராட்டுப் பெறும் ஒரு கல்லூரி மாணவன் குரலாகக் கேட்கும். எஸ். ஜானகியின் குரல், ஒரு ஜாலியான மகராணி குரலாகக் கேட்கும். அதாவது, தன் ஆட்சி நடைபெறுகிற ஊரைச் சுற்றிவந்து எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசுகிற ராணி.

யேசுதாஸின் குரல் ஒரு கண்டிப்பான அரசு அதிகாரி. வாணி ஜெயராம் பள்ளி ஆசிரியை.

மலேசியா வாசுதேவன் திறமைசாலி இளைஞர். எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாகச் செய்வார். மறுகணம் அது ஒன்றுமே இல்லை என்பதுபோல் அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகிறவர். மனோ அவரிடம் உதவியாளர்.

சித்ரா சமர்த்தான பத்தாங்கிளாஸ் மாணவி. ஸ்வர்ணலதா பதினொன்றாங்கிளாஸ். ஜெயச்சந்திரன் பள்ளியில் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வருகிற அதிகாரி.

டிஎம்எஸ் ராஜபார்ட். பி. சுசீலா (பெண்) நாட்டாமை.

அப்போ இளையராஜா குரல்?

‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்று பாடும் பக்தர் (இது இளையராஜா இசையமைத்த பாட்டு இல்லை என்று தெரியும், ஆனால் அவர் குரலுக்கு என் மனத்தில் உடனே தோன்றும் உருவம் இந்த பிம்பம்தான், என்ன செய்ய? 🙂

Advertisements

Education

மா. லைலாதேவி எழுதிய நூலொன்றின் முன்னுரையில் சில பகுதிகள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.

இவர் குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பின்னர் தபால்மூலம் எம்ஏ, எம்ஃபில் படித்திருக்கிறார்.

இந்த ஒரு வரி அறிமுகம் நமக்குப் பெரிய ஆச்சர்யம் எதையும் தருவதில்லை. ஆனால் முன்னுரையில் இவரை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலுகிறது:

’(பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியபின்) கல்லூரிப் பேராசிரியரையே கணவராக அடைந்தபோது, கல்லூரி வாழ்க்கை என் கிட்டத்தில் வந்தது. எந்நேரமும் கல்லூரி மாணவர்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டு மாடியில் நாடகம் போடுவார்கள். பாட்டு பாடுவார்கள். உரிமையோடு வீட்டில் சாப்பிடுவார்கள்.”

அவர் சொல்லும் ‘கிட்டத்தில்’க்கு இதுதான் அர்த்தம் என்பது எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் அந்த மாணவர்களும் ஆசிரியரும் (தன் கணவரும்) உரையாடுவதைப் பார்த்து அவர் ஏங்கியுள்ளார், ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், அதே குடும்பச் சூழல்.

மகன் கல்லூரி சென்றபிறகுதான், அவருக்குப் படிக்க நேரம் கிடைக்கிறது. எம்.ஏ. தமிழ் சேர்கிறார். படிக்க ஆரம்பித்ததும், மனம் அதில் லயிக்கிறது. Contact Classகளுக்குச் சென்று படிக்க விரும்புகிறார்.

பாரம்பரியமான ஓர் இல்லத்தரசிக்கு இது பெரிய சவால்தான். வீட்டில் எல்லாருக்கும் சமைத்து வைத்துவிட்டு அதிகாலை பஸ் ஏறி மதுரை சென்று படித்துவிட்டு இரவில் வீடு திரும்புகிறார். சிரமம் தாண்டிப் பாடங்கள் அவருக்குச் சிலிர்ப்பூட்டுகின்றன. எம்.ஏ. தமிழ், பின்னர் எம். ஏ. வரலாறு படித்து எம்.ஃபில் படிக்கிறார், அதுவும் இருமுறை.

இதுவொன்றும் பெரிய படிப்பே இல்லை என்பார்கள் சிலர். ஆனால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய, ஒரு பேராசிரியரின் மனைவியான அவரது பார்வையில் இந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவரது அனுபவம் ஒருபக்கம் வருத்தத்தையும் இன்னொருபக்கம் பரவசத்தையும் தருகிறது.

ஒருவிதத்தில் முந்தின தலைமுறை இந்தியப் பெண்கள் பலருடைய வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம் இப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன். குடும்பம், அதைக் காக்கவேண்டிய பொறுப்பு, அதைச் சுமத்துகிறவர்கள் அல்லது ஏற்கிறவர்கள், இடையில் நழுவிப்போகும் கனவுகள், ஏக்கம்.

இதேபோல், ஆண்களும் வலியச் சென்று ஏற்றுக்கொள்ளும் சுமைகள் உண்டு, அதனால் இழக்கும் கனவுகளும் உண்டு.

இந்தச் சுமைக(அவை சுகமானவையோ இல்லையோ)ளிலிருந்து விடுபடாமலே அந்தக் கனவுகளைத் திரும்பப் பெற அவர்களால் இயலுமா?

லைலாதேவி தன் முன்னுரையை இவ்வாறு நிறைவு செய்கிறார் ‘எல்லாருக்கும் நினைத்துப் பெருமைப்பட ஒரு வாழ்க்கை இருக்கிறது.’

இங்கே ’எல்லாருக்கும்’ என்பது நிஜமா? அல்லது, ஒவ்வொருவரும் ’நினைத்துப் பெருமைப்பட ஒரு வாழ்க்கை’ தனக்கு உண்டா என்று கேட்டுக்கொள்ளவேண்டுமா?