Dance

இன்று பார்த்த ஒரு செய்தித்தாள் தலைப்பு:

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி

நடிகர், நடிகைகளும் நடனம் ஆடுகிறார்கள்

செய்திகளுக்கும் ஓர் எடிட்டர் ஏன் தேவை என்பதற்குச் சிறந்த உதாரணம் இது.

இந்த வாசகத்தைப் படிக்கும்போது இளையராஜாவும் யுவனும் நடனம் ஆடுகிறார்கள், கூடவே பல நடிகர், நடிகையரும் ஆடுகிறார்கள் என்ற அர்த்தம் வருகிறதல்லவா?

வரவில்லை என்று சொல்லாதீர்கள், காரணம், நீங்கள் ஏற்கெனவே மனத்தளவில் அவர்கள் இருவரும் நடனம் ஆடப்போவதில்லை என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மாற்றிப் படித்துக்கொள்கிறீர்கள் 🙂 இந்த இருவரை அறியாத ஒருவர் இதை எப்படி வாசிப்பார்? எப்படிப் புரிந்துகொள்வார்? நிச்சயம் கருத்துப் பிழை ஏற்படும். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவேண்டியது எழுதியவர் அல்லது எடிட்டரின் வேலை.

அப்படியானால், இதை அவர் எப்படிக் குழப்பமில்லாமல் எழுதியிருக்கவேண்டும்?

பல விதங்களில் மாற்றலாம். என் தேர்வு இது:

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி

நடிகர், நடிகையரின் நடனங்களும் இடம் பெறும்

Advertisements

Vinobha

வினோபா முதன்முறையாக காந்தியைச் சந்தித்த நிகழ்வுபற்றி எழுதுகிறார்.

அதற்குமுன் அவர்கள் அகிம்சைபற்றிக் கடிதத்தில் உரையாடியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் காந்தி பொறுமையிழந்து, ‘இதெல்லாம் கடிதத்தில் பேசுகிற விஷயம் இல்லை, நேரில் புறப்பட்டு வாருங்கள், எங்கள் ஆசிரமத்தில் சில நாள் தங்குங்கள், விரிவாகப் பேசுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

வினோபாவும் புறப்பட்டு வர, அவரைச் சந்தித்தபோது காந்தி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தாராம். இவரைப் பார்த்ததும் வரவேற்று, ‘இந்தா, இந்தக் காய்கறியை இனிமேல் நீயே வெட்டு’ என்று சொன்னாராம்.

பிறகு, சிறிது நேரம் அவர் வெட்டுவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘உனக்கு உடம்பு வலுவா இல்லையே, சேவை செய்ய நினைச்சாப் போதாது, உடம்பையும் நல்லா கவனிச்சுக்கணும், நோய் வந்தமாதிரி இருக்கக்கூடாது’ என்றாராம்.

இவற்றைக் காந்தி தனக்குச் சொல்லித்தந்த முதல் இரு பாடங்கள் என்கிறார் வினோபா.

பின்குறிப்பு: காந்தி சொன்னதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல, அவர் பேசியதாக வினோபா சொன்னதன் எளிய சுருக்கம்

Poem

மரபுக்கவிதை ஆர்வம் உண்டு, ஆனா ரூல்ஸ் தெரியாதே என்பவர்களுக்கு ஓர் எளிய குறுக்குவழி இருக்கிறது.

4 அல்லது 5 அல்லது 6 சொல் கொண்ட, உங்களுக்குப் பிடித்த ஒரு வரியை எடுத்துக்கொள்ளுங்கள். அதே நீளத்தில், அதாவது, அதே எண்ணிக்கையிலான சொற்களைக் கொண்டு, முடிந்தவரை அதேமாதிரி இருக்கிற நாலே நாலு வரிகள் எழுதிப் பாருங்கள்.

குறிப்பாக, முதல் சொல்மட்டும் ஒரேமாதிரி தொடங்கும்படி (கல்-சொல்-பல் இப்படி) பார்த்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக:

நீங்க சிவாஜிசாரை மாதிரியே இருக்கீங்க
வாங்க ஜிலேபிகளைச் சாப்பிட்டு ருசிச்சிடலாம்
தேங்கா விலையென்ன ஏழெட்டு ரூபாதான்
மாங்கா மலிவாக வந்தாநாம் தின்றிடலாம்

இது சத்தியமாக மரபுக்கவிதை இல்லை 🙂 சும்மா வேடிக்கைக்கு எழுதினேன்.

ஆனால், இது ஒரு நல்ல ஆரம்பம். இந்த ‘ஒரேமாதிரி ஒலி’யை அடையாளம் காண்பதுதான் மரபுக் கவிதை எழுதப் பழகுவதன் அடிப்படை.

’ஒரேமாதிரி ஒலி’ என்றால் என்ன அர்த்தம்?

’வருமானம்’ என்ற சொல்லுக்கும் ’நடக்கின்ற’ என்ற சொல்லுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சொல்லிப்பார்த்தால் இரண்டும் ‘ஒரேமாதிரி’ தோன்றுகிறதல்லவா? (தோன்றாவிட்டால் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாருங்கள், நிச்சயம் தோன்றும்!)

அதுபோல முதல் வரியில் உள்ள ஒவ்வொரு சொல்லைப்போலவும் அடுத்த வரி இருக்கவேண்டும். அதாவது, முதல் வரியின் முதல் சொல், இரண்டாவது வரியின் முதல் சொல், மூன்றாவது வரியின் முதல் சொல், நான்காவது வரியின் முதல் சொல் நான்கும் ஒரேமாதிரி ஒலிக்கவேண்டும். அதேபோல் இரண்டாவது சொற்கள் ஒரு செட், மூன்றாவது சொற்கள் ஒரு செட்… இப்படி செட் செட்டாக எழுதவேண்டும்.

இவ்ளோ ரூல்ஸா? என்று திகைக்கவேண்டாம். சுடோகு விளையாடியிருக்கிறீர்களா? முதன்முறை கற்றுக்கொள்ள எவ்வளவு நேரமானது? ஆனால் பழகியபின் பூந்து விளையாடுகிறீர்கள், இல்லையா? அதுமாதிரிதான் இதுவும். சும்மா எழுதுங்கள், கஷ்டமே இல்லை.

இன்னோர் உதாரணம்:

இன்னிக்கு வீட்ல தோசை
அன்னிக்குக் காட்ல பூசை
தென்னைக்கு மேலே வானம்
மன்னிக்க வேணாம் போடா

இப்படிப் பத்து கவிதை எழுதினால் உங்களுக்கே செம போரடிக்கும். ’ஒண்ணும் சரியா இல்லையே, அந்த ரூல்ஸை எங்கே கத்துக்கறது? அதைக் கத்துகிட்டா சரியா எழுதுவோமோ!’ என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள். அதன்பிறகு, விடமாட்டீர்கள்.

அவசியமான பின்குறிப்பு: இப்பதிவின் நோக்கம் மரபுக்கவிதைகளைக் கிண்டலடிப்பதல்ல. ’மரபுக் கவிதைகள் அரபுக் குதிரைகள், மற்ற கவிதைகள் மட்டக் குதிரைகள்’ என்கிற வாலி கட்சி நான் 🙂

Grammar

ஒரு நண்பர் சிபாரிசில் வாங்கிய நூல்களைக் கொண்டு ஆங்கில இலக்கணத்தைக் கொஞ்சம் விரிவாக (இப்போதுதான்) வாசித்துவருகிறேன்.

ஒரு வரி விமர்சனம்: இது பெரும் திகைப்பாக இருக்கிறது.

இத்தனை நெறிமுறைகள்/ வழிகாட்டுதல்களையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுவது பெரும் சிரமமாயிற்றே என்ற அதிர்ச்சி ஒருபுறம், இதையெல்லாம் வாசிக்காமலேயே இதுவரை (ஓரளவு) சரியாகதான் எழுதிவருகிறோம்போலிருக்கிறதே என்ற ஆச்சர்யம் இன்னொருபுறம்.

நான் பள்ளியில் ஆங்கில இலக்கணத்தை ஊன்றிப் படித்தவன் அல்லன். ஈஸ், வாஸ், சப்ஜெக்ட் வெர்ப் ஆப்ஜெக்ட், லீவ் லெட்டர் அளவுக்குதான் ஆங்கில இலக்கணம் அப்போது தெரியும். கல்லூரியிலும் அந்தப் பாடத்தை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. வேலைக்குச் சேர்ந்தபின் பேசிக் கற்றதுதான், அப்புறம் படித்த நூல்களின்வழியாக நிறைய வாக்கிய அமைப்புகள் மனத்தில் பதிந்தன.

இதில் ”ஓரளவு” கற்றுக்கொண்ட ஆங்கில இலக்கணத்தை இந்தப் பாடப் புத்தகங்கள் கலைத்துவிடுமோ என்று திகைக்கிறேன்.

இந்தக் கோணத்தில் பார்த்தால், என்னதான் மெனக்கெட்டாலும் ஒரு மொழியின் இலக்கணத்தைச் ”சொல்லித்தர” இயலுமா என்கிற சந்தேகம்கூட வருகிறது. அது கேட்பதால், பேசுவதால், வாசிப்பதால் “தானாக”மட்டுமே வரவேண்டுமோ?

தமிழ் இலக்கணம் கற்றுக்கொடுக்கிறேன் என்று நான் படுத்தியதால் இப்படி எத்தனை பேர் வருந்தினார்களோ என்று சங்கடப்படுகிறேன்.