MenaaL

ஓர் அழைப்பிதழில் ‘மேனாள் மத்திய அமைச்சர்’ என்று எழுதியிருந்தார்கள். ‘முன்னாள்’க்குப் பதில் இப்படித் தவறாக அச்சிட்டுவிட்டார்களா என்று நண்பர் கார்த்திகேயன் கேட்டிருந்தார்.

நானும் அப்படிதான் எண்ணியிருந்தேன். சமீபத்தில்தான் ‘மேனாள்’ என்பதும் ‘முன்னாள்’ என்பதும் ஒரே பொருள் என்று தெரிந்துகொண்டேன்.

மேனாள் = மேல் + நாள், அதாவது earlier days. இதற்குமுன் நடந்த விஷயத்தைச் சொல்லும்போது, மேனாள் நிகழ்ச்சி என்று சொல்லலாம். முன்னாளுக்கு இணையான சொல்தான் இது.

உதாரணமாக, நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வார் வெண்பா.

பார்த்த கடுவன் சுனைநீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்த்து, கார்த்த
களங்கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு

திருவேங்கடமலையில் ஓர் ஆண் குரங்கு இருந்தது, அது அங்கிருந்த சுனையில் தண்ணீர் குடிக்க எட்டிப் பார்த்தது. அங்கே அதன் பிம்பம் தெரிந்தது. அதைப் பார்த்து, அங்கே இன்னோர் ஆண் குரங்கு இருப்பதாக நினைத்துவிட்டது அந்தக் குரங்கு.

ஆகவே, ‘வம்பு எதற்கு?’ என்று வேறோர் இடத்துக்குச் சென்றது. அங்கே மேகம் போல் கருத்த களாப்பழத்தைக் கை நீட்டி எடுத்து உண்டது.

அந்தத் திருவேங்கடமலை யாருடையது தெரியுமா? மேனாளில் (அதாவது, முன்னாளில்) கன்றை வீசி எறிந்து விளாங்கனியை விழவைத்த கண்ணன்/ திருமாலின் மலை.

Advertisements

Aattam

யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படமான அரவிந்தனில் ’பூவாட்டம் காயாட்டம் கன்னித் தோட்டம், மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே’ என்கிற அற்புதமான பாடல் உண்டு. டி. எல். மகராஜனும் ஸ்வர்ணலதாவும் (என்னவொரு கூட்டணி!) அதனை இன்னும் சிறப்பாகப் பாடி அழகுபடுத்தியிருப்பார்கள். அந்த வரிகளை நான் பலமுறை சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். என்ன நேர்த்தி, என்ன அழகு!

இங்கே ‘ஆட்டம்’ என்ற சொல், ‘பூப்போல, காய்போல, மான்போல, மீன்போல’ என்ற பொருளில் வந்திருக்கிறது. பண்டிதர்கள் இதை ‘உவம உருபு’ என்பார்கள். மொத்தம் 36 உவம உருபுகள் உண்டு, போல, நிகர்த்த, அன்ன, புரைய என்று நீளமான பட்டியல்.

ஆனால் அவற்றில் ‘ஆட்டம்’ இல்லை என்று நினைக்கிறேன். இது பேச்சுவழக்கில் வந்திருக்கவேண்டும். ஆனால் சொல்வதற்கு எத்துணை இனிமை! தேனாட்டம் இனிக்கிறது!

Chocolate

நான் தொடங்கியுள்ள எழுத்துக் கம்பேனி (Content Creation Company) சார்பாக, பலவிதமான எழுத்துவேலைகள், மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்வதுண்டு. அவ்வகையில் நேற்று ஒரு சாக்லெட் கடையின் விளம்பரத் துண்டுப் பிரசுரம் மொழிபெயர்ப்புக்கு வந்தது.

அக்கடையின் விசேஷ சாக்லெட் அம்சங்களை (கேக், பிஸ்கட்/ குக்கீஸ், ஐஸ் க்ரீம்) மிகவும் கவித்துவமான ஆங்கிலத்தில் அற்புதமாக எழுதியிருந்தார்கள். அவற்றை அப்படியே தமிழில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க இயலாது. அதே உணர்வைத் தமிழிலும் கொண்டுவந்தால்தான் மக்கள் சாக்லெட் வாங்குவார்கள்.

சாக்லெட்டுக்காக உருகுவது எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் நான் இப்போது டயட்டில் இருக்கிறேன். அலுவலகத்தில் யாராவது பர்த்டே சாக்லெட் தந்தால்கூட, வீட்டுக்குக் கொண்டுசென்றுவிடுகிறேன்.

ஆனால், நேற்றிரவு அந்தத் துண்டுப் பிரசுரத்தை வாசிக்க வாசிக்க, உடனே சாக்லெட் சாப்பிடவேண்டும்போலிருந்தது. இத்தனைக்கும் நான் சாக்லெட் பிரியன்கூட அல்லன். எனக்கே ஆசையுண்டாக்கும்படி அப்படியோர் எழுத்து!

என்ன செய்ய? மிகுந்த பெருமூச்சுடன் அந்தத் துண்டுப் பிரசுரத்தைக் கவித்துவமான மொழியில் உருகி உருகி மொழிபெயர்த்தேன்.

ஒரே நேரத்தில் உடம்புக்கும் தொழிலுக்கும் நியாயம் செய்வது சிரமம்தான், ரசிக்கக்கூடிய சிரமம்!

Thada

‘நூறு தடா நிறைய அக்கார அடிசில்’ என்பாள் ஆண்டாள்.

’தடா’ என்றால் பெரிய பானை. நூறு பானை நிறைய சர்க்கரைப் பொங்கல்!

கவனியுங்கள், ‘தடாக்கள்’, ‘பானைகள்’ இல்லை, ‘தடா’, ‘பானை’தான். ஆயிரம் தடா, லட்சம் தடாவாக இருந்தாலும் அதே.

’நூறு தடாக்கள்’ என்று எழுதுவது தவறில்லை. அது அவசியமும் இல்லை.

’பத்து ரூபாய் சம்பளம்’ Vs ’பத்து ரூபாய்கள் சம்பளம்’… படித்துப் பாருங்கள், எது உறுத்துகிறது?

தமிழில் அலகுகளைக் குறிப்பிடும்போது பன்மை அவசியப்படாது. அது இல்லாமலே பொருள் புரியும். நேசமிகு தாய்மார்கள்கூட ’பத்து மாசம் சுமந்து பெத்தேன்’ என்றுதான் சொல்கிறார்கள்.

ஆம், ‘கள்’ளை எப்போதும் அளவாகப் பயன்படுத்தவேண்டும்.

Iruvan

ஒரு புதுப்படத்துக்கு ’இருவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அது இலக்கணப்படி சரியா என்று கேட்டார் நண்பர் கிரி.

இரு என்றால் பெரிய/ நீண்ட என்று பொருள் உண்டு (உதா: இருங்கூந்தல் = நீண்ட கூந்தல்)

ஆகவே, இருவன் என்றால், பெரியவன், வலுவானவன் என்று பொருள் :>

இது வேடிக்கை பதில். சீரியஸ் பதில் வேண்டுமென்றால், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள், அவர்கள் இருவர் ஆனாலும் ஒருவரே என்பதுபோல் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்று ஊகிக்கிறேன்.

இருவன், இருத்தி என்று எழுதுவது இலக்கணப்படி சரியல்ல. ஆனால் இருவரும் ஒருவரே என்பதைக் குறிக்கும் புதிய சொல்லாக்கமாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கணிப்பு.

Azhagu

பேச்சுவாக்கில் ‘அழகான குரல்’ என்று குறிப்பிட்டேன். அதற்கு நண்பர் சங்கர் ’அழகு என்பது பேச்சுக்குப் பொருந்துமா? காட்சிக்குமட்டும்தானே வரக்கூடும்? “இனிய” குரல் என்றால் சரி, ”அழகு”க் குரல் என்று ஏதாவது உண்டா?’ என்று கேட்டார்.

அழகு என்பது “பார்க்கும் பொருள்”களுக்குதான் என்றில்லை. எதற்கும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக,

1. அழகுத் தமிழ் என்கிறோமே, அதென்ன தமிழ் எழுத்துகளின் வரி வடிவத்துக்கான பாராட்டா? எழுதியவரின் கையெழுத்துக்கான பாராட்டா? மொழியின் தன்மையைப் பாராட்டுகிறோம், இல்லையா? அதைக் கண்ணால் காணவேண்டிய அவசியம் இல்லை.

2. ஒருவரை அழகான பெண் என்றால் அது முக அழகா? அவரது நல்மனத்தைப் பாராட்டுவதாகவும் இருக்கலாம்.

3. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, அகத்தைப் பார்க்க ஏலாதே, அதற்கு எப்படி அழகு வந்தது?

4. நாலடியாரில் “கல்வி அழகே அழகு” என்று ஒரு வரி. இங்கே அழகு என்பது பள்ளிக்கூடத்தின் தோற்றமா? கல்வி என்கிற (கண்ணுக்குத் தெரியாத பொருளின்) அழகுதானே?

ஆக, அழகு என்பது பார்வையுடன்மட்டும் தொடர்புடையது அல்ல. அழகுக் குரல் நிச்சயம் உண்டு. ஐம்புலன்களுக்கும் உணர்வுக்கும்கூட அதைப் பயன்படுத்தலாம்.

சுவையான தோசை என்பதும் அழகான தோசை என்பதும் உட்பொருளில் ஒன்றேதான்!

Adayar

அடையார் ஆனந்த பவன் என்றால் என்ன பொருள்?

அடை ஆர் ஆனந்த பவன் ==> அடைகள் சத்தமிட்டு (ஆர்க்கின்ற) மகிழும் பவன்

அல்லது

அடையார் ஆனந்த பவன் ==> (எதையோ) அடையாதவர்கள் ஆனந்தம் காணும் பவன்

அல்லது

ஆனந்தம் அடையார் பவன் ==> ஆனந்தம் அடையாதவர்களின் பவன்

இக்காரணங்களால், அந்தக் கடையின் பெயரை (அல்லது, அந்த ஊரின் பெயரை) “அடையாறு” ஆனந்த பவன் என்று எழுதுவதே எழுதுவதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது 🙂

அதேபோல், திருச்சிராப்பள்ளியைத் திருச்சி என்பது சரியா?

திரு + சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

திருச்சி = திரு + சி? அர்த்தமே இல்லையே.

ஒரு காரணப்பெயரை வலிய இடுகுறிப்பெயராக மாற்றினால் நமக்குதான் இழப்பு.