Visai

கணினியில் ‘Undo’ என்றொரு பயனுள்ள கட்டளை உண்டு. எப்பிழை செயினும் Ctrl + Z என இரு விசைகளை அழுத்தி அதிலிருந்து மீளலாம்.

இன்று கந்தபுராணப் பாடலொன்றில் அதைப் பார்த்தேன் 🙂

(பால) முருகன் விளையாட்டாக உலகத்தையெல்லாம் புரட்டிப்போட்டுவிடுகிறான். உயிர்கள் வாடுகின்றன. அவற்றைப் பழையபடி மாற்றி அருளவேண்டும் என்று தேவர்கள் வேண்ட, முருகன் இப்படிச் சொல்கிறான்:

‘இன்னதோர் அண்டம்தன்னில் எம்மில் வேறு உற்ற எல்லாம்
தொல் நெறி ஆக’

இப்படி முருகன் சொன்னதும், சட்டென்று எல்லாம் பழையபடி மாறிவிடுகிறதாம்!

கொஞ்சம் சமத்காரமாகச் சொல்வதென்றால், ஆத்திகர்களைப் பொறுத்தவரை நிஜவாழ்க்கையிலும் ‘Undo’ உண்டு, இப்போதுமட்டுமல்ல, எப்பிறவியிலும் செய்த பிழைகளை மாற்ற Ctrl + Z என இரு விசைகள்கூட வேண்டாம், ஒரே ஒரு விசை போதும், அது எந்த விசை என்பதுதான் மதத்துக்கு மதம் மாறும் :>

Magar

’காதலிக்க நேரமில்லை’ படத்தில் ’இவர் உங்க மகனா?’ என்பதுபோல் ஒரு பணக்காரரைக் கேட்பார் பாலையா. சட்டென்று ‘மகன்’ என்ற சொல் மரியாதைக்குறைவானது என்று உணர்ந்ததுபோல் குழைந்து, ‘இவர் உங்க மகருங்களா?’ என்று திருத்துவார்.

அவன் என்பதை அவர் என்பதுபோல, மகன் என்பதை மகர் என்பார்.

அது வெறும் வேடிக்கைச் சொல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இதற்குமுன்பே பயன்பாட்டில் உள்ள சொல்தான்போல.

மகர் என்றால் மகன் என்பதன் மரியாதைப் பன்மை. உதா: ”வசுதேவர்க்கு மகர்” என்று பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கண்ணனைக் குறிப்பிடும் திருவேங்கடமாலைப் பாடல்.

இதையே ‘மகன்கள்’, ‘மகள்கள்’, ‘மக்கள்’ என்று பலரைக் குறிப்பிடவும் பயன்படுத்தலாமாம். ‘அண்ணன்மாரே’, ‘தம்பிமாரே’, ‘அக்காமாரே’, ‘தங்கச்சிமாரே’ என்று சொல்வார்களே, அவையெல்லாம் இதன் திரிபுதான். மகர் என்பது மார் என்று ஆகிவிட்டது.

சினிமா வசனத்திலும் நற்சொற்களுண்டு 🙂

Pangu

ஏழை பங்காளன்

இப்படி ஒரு சொல் திருவெம்பாவையில் வருகிறது.

இதை ஓர் அரசியல்வாதி சொன்னால், ஏழைகளின் பங்காளன் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். ஆன்மிகவாதி சொன்னால்?

அதுமட்டுமில்லை, ஏழைகளின் பங்காளன் என்று சொல்ல, அங்கே ஓர் ‘ப்’ வரவேண்டும். ஏழைப் பங்காளன் என்று இருக்கவேண்டும். யானைப் பாகன் என்பதுபோல. ஐந்தாம் வேற்றுமைத் தொகை என்று சொன்னால் கோபிக்கமாட்டீர்களே?

சிவனை ஏழை மக்களின் பங்காளன் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், இங்கே ப் வரவில்லை, வெறும் ஏழை பங்காளன் என்றுதான் எழுதியிருக்கிறார் மாணிக்கவாசகர். அதற்கு என்ன பொருள்?

ஏழையைப் பங்காகக் கொண்டவன் சிவபெருமான்.

அது யார் ஏழை?

தமிழில் ஏழை என்றால் Poor என்றுமட்டும் பொருள் இல்லை. இந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.

உதாரணமாக, ‘ஏழை வேடன்’ என்று குகனைக் குறிப்பிடுவான் கம்பன்.

குகன் தன் பகுதிக்கு ராஜா. அவன் எப்படி Poor ஆவான்?

இங்கே ‘ஏழை’ என்றால் எளியவன் என்று பொருள். பழகுவதற்கு எளியவன்.

அதே கம்பனில் ’ஏழை சோபனம்’ என்று சீதையை வாழ்த்துவார் ஆஞ்சனேயர். அங்கே ஏழை என்றால் பெண்.

ஆக, ‘ஏழை பங்காளன்’ என்றால் பெண்ணைப் பங்காக, தன் உடலின் ஒரு பகுதியாக உடையவன் என்று பொருள். சிவனில் பாதி பார்வதி அல்லவா? அவள்தான் இங்கே ‘ஏழை’, அந்தச் சொல்லின் பொருள் ‘பெண்’ என்பதுதான்.

இதையே ‘வேயுறு தோளி பங்கன்’ என்று பாடுவார் திருஞானசம்பந்தர். மூங்கில்போன்ற தோள்களை உடையவள் ‘வேயுறு தோளி’, பார்வதி, அவளைத் தன்னில் பாதியாகக் கொண்டவன் சிவபெருமான்.

அது சரி, வள்ளலார் முருகனைப் பாடும்போது, ‘குருகு ஆரும் புனம் காக்கும் வள்ளி பங்கன்’ என்பார். அதற்கு என்ன அர்த்தம்? முருகன் தன் உடலில் பாதியை வள்ளிக்குக் கொடுத்தானா என்ன?

அங்கே ‘பங்கன்’ என்பதன் பொருள், பக்கத்தில் கொண்டவன் என்பது. வள்ளி அருகிலிருக்க பக்தர்களுக்குக் காட்சி தருபவன் வள்ளி பங்கன், முருகன்!

Kaadhalan

காதல் என்பது அன்பு. காதலைக் கொண்டவன்/ள் காதலன்/ காதலி. அந்தச் சொல்லுக்கு 3 வகைப் பொருள் உண்டு என்கிறார் ஞா. தேவநேயப் பாவாணர்:

1. கணவன்/ மனைவி/ கணவனாகப்போகிறவன்/ மனைவியாகப்போகிறவள் (அல்லது)
2. மகன்/ மகள்/ வேறு உறவினர் (அல்லது)
3. தோழன்/ தோழி

உங்களுக்கு எத்தனை காதலர்கள்?

ThangaL

’தங்களது பொற்கரங்களால் விருது வழங்க வருகை தரும் முதலமைச்சர் வாழ்க’

இப்படி ஒரு வாசகம் படித்தேன்.

ஒருவரை மரியாதையாகக் குறிப்பிடும்போது, தாங்கள், தங்கள் என்ற பதம் ஒருமையிலும் வரும். இவை நீங்கள், உங்கள் என்பதற்கு நிகரானவை.

உதா: தாங்கள் சாப்பிட்டீர்களா? தங்கள் வருகைக்கு நன்றி!

ஆனால், இவை எல்லாம் முன்னிலையில்தான் வரவேண்டும். புரியும்படி சொல்வதென்றால், 2nd Person. எதிரே நிற்பவரிடம் மரியாதையாகப் பேசுவது.

இப்போது, மேற்சொன்ன வாசகத்தைப் படியுங்கள். அது முன்னிலை அல்ல, படர்க்கை, 3rd Person. ஒரு மூன்றாம் நபரைப்பற்றிப் பேசுவது.

ஆகவே, ’தங்களது’ என்ற இங்கே சொல் பொருந்தாது. அப்படி எழுதினால், இந்தப் போஸ்டரைப் படிக்கும் உங்களுடைய கையை எடுத்து முதலமைச்சர் விருது வழங்குகிறார் என்று பொருள்.

இதை எப்படிச் சரியாக எழுதவேண்டும்?

‘தமது பொற்கரங்களால் விருது வழங்க வருகை தரும் முதலமைச்சர்’ என்பதுதான் சரி.

ஒருவேளை ’தங்கள்’ என்ற சொல்லை இங்கே பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் ‘தங்களது பொற்கரங்களால் விருது வழங்க வருகை தரும் முதலமைச்சரே, வாழ்க’ என்று எழுதலாம். அப்போது அது படர்க்கை அல்ல, முன்னிலை ஆகிவிடும். ஆகவே, ‘தங்கள்’ என்ற சொல் பொருந்தும்.

KuRaL Tshirt

தமிழில் ‘திருக்குறள் டிஷர்ட்கள்’ அறிமுகப்படுத்தலாமே என்று நண்பர் ஷங்கர் கணேஷ்​ எழுதியிருந்தார்.

அப்படியொன்று ஏற்கெனவே இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை இல்லாவிட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். இன்னும் ஒரு படிமேலே சென்று, விரும்பும் குறள் எண்ணைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தால் அதனை அழகாக அச்சிட்டு டெலிவர் செய்யலாம்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் மேலாளரைச் சந்திக்கும்போது ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ டிஷர்ட் அணியலாம். காதலியைச் சந்திக்கும்போது, ‘யான் நோக்குங்கால் நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்’ டிஷர்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதுபோல் மற்ற ’கற்பனை’களை அடுக்கி மகிழ்க.