Thiruvaiyaaru

திருவையாறில் தியாகராஜ ஆராதனை…

ஆறிலா? ஆற்றிலா?

ஆத்துல போட்டாலும் அளந்துபோடு என்ற பழமொழியைக் கேட்டிருப்போம், ஆகவே, ஆற்றில்தான் சரியாக இருக்குமோ.

பழமொழியையெல்லாம் சாட்சியாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று சொல்லவேண்டாம், தமிழில் மக்கள்மொழியில் பெரும்பாலும் இலக்கணப்பிழைகளே இல்லை, எழுதும்போதுதான் தப்பு அதிகம், இது மிகப் பெரிய விநோதம்.

சரி, மறுபடி அதே கேள்வி, திருவையாறில், திருவையாற்றில் எது சரி?

ஆறு என்ற சொல் நதியைக் குறித்தால், ஆறு + இல் = ஆற்றில் (உதா: ஆற்றிலே வெள்ளம் வந்தது)

ஆறு என்ற சொல் 5க்குப்பின் வரும் ஓர் எண்ணைக் குறித்தால், ஆறு + இல் = ஆறில் (உதா: கூடையில் ஆறு பழங்கள் உள்ளன. அந்த ஆறில் ஒன்று இன்னும் பழுக்கவில்லை)

ஆக, திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை என்று எழுதுவதே சரி. இங்கே ‘திருவையாறு’ என்பதுடன் ‘இல்’ சேரும்போது, ‘று’க்கு முன்னால் ‘ற்’ இன்னொருமுறை வந்து ‘திருவையாற்றில்’ என மாறியுள்ளது. இதனை ‘இரட்டித்தல்’ என்பார்கள், அதாவது, ஓர் எழுத்து இரண்டுமுறை வருதல்.

இன்னும் சில உதாரணங்கள்:

சேறு + இல் = சேற்றில்
ஆடு + க்கு = ஆட்டுக்கு
நாடு + ஐ = நாட்டை
மாடு + இன் = மாட்டின்

இங்கெல்லாம் டு, று, என்ற எழுத்துகள் முதல் சொல்லின் நிறைவில் வந்திருப்பதையும், அதற்குமுன்னால் ஒரு நெடில் இருப்பதையும் கவனியுங்கள். அவற்றோடு ஐ, இல், இன், க்கு போன்ற வேற்றுமை உருபுகள் சேரும்போது, அந்த வல்லினம் (ட், ற்) இரட்டித்து ‘ட்டு’, ‘ற்று’ என மாறிப் புணரும்.

ஒருவேளை டு, றுவுக்கு முன்னால் நெடில் இல்லாவிட்டால், அவை புணரும்போது இரட்டிக்காது. உதாரணமாக, கற்கண்டு + ஐ = கற்கண்டை என்றுதான் எழுதவேண்டும், கற்கண்ட்டை என்று எழுதக்கூடாது.

Advertisements

Aran

கொஞ்சம் கண்டிப்பாகப் பார்த்தால், ‘அரண்மனை’ என்பது தனிச்சொல் அல்ல, அரண் மனை, பாதுகாப்பு நிறைந்த வீடு/ மாளிகை என்ற பொருளில் வரும் சொற்றொடர்தான் அது.

அரண் எப்படி இருக்கவேண்டும்?

‘உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின்
அமைவு அரணாம் என்று உரைக்கும் நூல்.’

என்கிறது திருக்குறள். எதிரி எகிறிக் குதிக்காதபடி உயரம் வேண்டும், அகலம் (சுவரின் தடிமன்) வேண்டும், கண்ட செங்கல்லைப்போட்டுக் கட்டக்கூடாது, வலிமையாக இருக்கவேண்டும், எவராலும் உடைத்துக்கொண்டு உள்ளே வர இயலாதபடி அரியதாக இருக்கவேண்டும், அதுதான் அரண்.

இப்போதெல்லாம் ‘அரண்’ என்ற அழகிய சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. அபூர்வமாக ஏதாவது ஒரு செய்தி அறிக்கையில் ‘பாதுகாப்பு அரணை மீறித் தாக்கினார்கள்’ என்று எழுதுகிறார்கள். அரண் என்றாலே பாதுகாப்புதானே!

தமிழில் ர, ற, ன, ண குழப்பம் பலருக்கு உண்டு. ‘அரண்மனை’யை வைத்து இப்படி நன்கு சொல்விளையாட்டு நடத்தலாம்:

அரண்மனை: பாதுகாப்பான வீடு
அரன்மனை: சிவபெருமான் ஆலயம்
அறன்மனை: அறம் சொல்லும் இல்லம்/ நீதிமன்றம்?
அரன்மணை: சிவபெருமான் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிற பீடம்
அறன்மணை… சரி போதும் :))

மற்றதெல்லாம் சரி, ‘அறன்’ எப்படி அறம் ஆனது?

இதைக் கடைப்போலி என்பார்கள். கடையில் வாங்கிய டூப்ளிகேட் சமாசாரம் அல்ல, கடைசியில் வரும் எழுத்து மாறி வருவது: ன்க்குப்பதில் ம் வரும், அல்லது ம்க்குப் பதில் ன். அர்த்தம் மாறாது.

ஆகவே, அறன், அறம் இரண்டும் ஒன்றுதான். அதேபோல்தான் நலம், நலன், வளம், வளன், உரம் (வலிமை), உரன்… ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு!

Kudiyarasu

குடியரசு தினம் என்று எழுதுகிறோமே, குடி சரி, அரசு சரி, நடுவில் ‘ய’ எப்படி வந்தது?

இதனை ‘விகார’ப் புணர்ச்சி என்பார்கள். இரு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது முதல் சொல்லின் நிறைவுப்பகுதியோ, அடுத்த சொல்லின் தொடக்கப்பகுதியோ விகாரமாகும், அதாவது, மாறிப்போகும்.

குடி + ‘அ’ரசு = குடி’ய’ரசு. இங்கே இரண்டாவது சொல்லின் தொடக்கத்திலிருந்த ‘அ’கரம், ‘ய’கரமாகியிருக்கிறது. வேறு சில உதாரணங்கள்:

வலி + அதிகம் = வலியதிகம்
பசி + அழுகை = பசியழுகை
மணி + அழகு = மணியழகு

இவை எல்லாமே (குடி, வலி, பசி, மணி) இகரத்தில் முடிந்துள்ள சொற்கள் என்பதைக் கவனியுங்கள். அவற்றின் பின்னே வரும் அகரம், புணர்ச்சி விதியின்படி யகரமாக மாறுகிறது.

இகரத்துக்குப் பின்னால் இகரம், உகரம், ஊகாரம் வந்தாலும் இதே விதிமுறைதான். உதாரணமாக:

குந்தி + இரு = குந்தியிரு
தள்ளி + இரு = தள்ளியிரு
கொடி + இடை = கொடியிடை
குடி + இயல் = குடியியல்
தனி + உரிமை = தனியுரிமை
வெளி + ஊர் = வெளியூர்

முதல் சொல் ஐ என முடிந்து, அடுத்த சொல் அகரத்தில் தொடங்கினாலும், இதே யகரம் வரும். உதாரணமாக, வாழை + அடி = வாழையடி, தேவை + அதிகம் = தேவையதிகம்.

ஆனால் ஒன்று, இச்சொற்களையெல்லாம் சேர்த்துதான் எழுதவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ‘குடியரசு தினம்’ என்றும் எழுதலாம், ‘குடி அரசு தினம்’ என்றும் எழுதலாம், தூயதமிழ் ஆர்வலர்கள் ‘குடி அரசு நாள்’ என்றும் எழுதலாம். எல்லாம் சரியே!

ஒருவேளை கவிஞர் ரவி வர்மா ‘ஆசையதிகம் வைத்து மனத்தையடக்கிவைக்கலாமா, என் மாமனே’ என்று இலக்கணசுத்தமாக எழுதியிருந்தால், ஜானகியால் மெட்டுக்குப் பாட இயன்றிருக்காதே!

Avathooru

//அவதூறு வழக்கு விசாரணை தொடங்கியது//

அதென்ன அவதூறு?

அவம் என்றால் கெடுதல், தவறான விஷயங்கள். வள்ளலார் ’அவமே புரியும் அறிவிலியேனுக்கு அருளுமுண்டோ!’ என்று பாடுவார்.

மானம் என்றால், பெருமை, அவமானம் என்றால், தவறான பெருமை/ இழிவு.

‘தூறுதல்’/ ‘தூற்றுதல்’ என்றால், சிந்துதல், எதை வேண்டுமானாலும் சிந்தலாம். ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்று வருமே, அங்கே வயலில் விளைந்ததைத் தூற்றுகிறோம், ‘தூறல் நின்னுபோச்சு’ என்கிறோமே, அங்கே மழைத்துளிகள் தூறுகின்றன.

இதனை ஒரு பிரபலமான வாசகத்திலும் கேட்டிருப்பீர்கள், ‘போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்.’

அந்தப் புழுதிவாரித் தூற்றுதல்தான் அவதூறு!

’தூறு’ என்றால், தூற்றப்படுகிற பொருள், அவம் + தூறு என்றால் தூற்றப்படுகிற அவம், ஒருவரைப்பற்றி உருவாக்கப்படும் தவறான செய்திகள், அவர்களுக்குக் கெடுதல் உண்டாக்கக்கூடிய ஒரு பிம்பம், அது ஊர்முழுக்கப் பரப்பப்படுதல், அதனால் உண்டாகிற பழி, அவமானம் போன்றவை.

பாரதியாரின் பாடலொன்று:

‘ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள், எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசம் சாற்றுவன் என்றே,
சொல்லி வருவையடி, தங்கமே தங்கம்!’

இங்கே கண்ணன்மீது காதல்வயப்பட்ட ஒரு பெண், ’அவன் வருவானா’ என்று ஏங்குகிறாள், தன் தோழியை அவனிடம் அனுப்பிவைக்கிறாள். அப்போது சற்றே அன்பான மிரட்டல்தொனியில், ‘சீக்கிரம் வராட்டி அவன் செஞ்சதையெல்லாம் ஊர்முழுக்க முரசுகொட்டித் தூற்றிப்புடுவேன்’ என்கிறாள்.

ஆனால், இது செல்ல மிரட்டல்தான், அவள் செய்யப்போவது ‘அவதூறு’ இல்லை, வெறும் ’தூறு’தான். காதல் சமாசாரமாச்சே!

VetpaaLar

வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?

வேட்டல் என்றால், ஒன்றை விரும்புதல்/ வேண்டுதல் என்று பொருள். இது ‘வேள்’ என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள், ‘விருப்பம்’.

தாகமாக இருப்பதை ‘நீர்வேட்கை’ என்பார்களே, அந்தச் சொல் இதிலிருந்து வந்ததுதான். அப்புறம் வேள்வி (ஒன்றை விரும்பிச் செய்வது), வேடன் (ஒன்றை விரும்பிச் சென்று பிடிக்கிறவன்) போன்ற சொற்களும் இக்குடும்பம்தான்.

தேர்தலில் நிற்கும் ஒருவர், ஒரு பதவிமீது வேட்கை கொள்கிறார், அதனை விரும்புகிறார், அதற்காகவே தேர்தலில் நிற்கிறார், அதனால் அவர் வேட்பாளர். அதற்காக அவர் தாக்கல் செய்யும் மனு, வேட்பு மனு.

Kathakali

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கதகளி’ திரைப்படத்தின் பெயரை ஒரு நண்பர் ‘கதக்களி’ என்று எழுதியிருந்தார். அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது, ஆனால் தமிழ் இலக்கணப்படி யோசித்தால் அது சரிதானே?

‘கத’ என்பது கதை, ‘களி’ என்பது களிப்பு/ மகிழ்ச்சி, மலையாளத்தில் அதற்குப்பொருள் ‘ஆட்டம்’ என்று அறிகிறேன், அதுவும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்.

ஆகவே, ‘கதகளி’ என்பது, கதையை ஆட்டத்தின்மூலம் வெளிப்படுத்துதல்/ நாட்டிய நாடகம் என்பதுபோல் பொருள் எடுத்துக்கொள்ளலாமா? மலையாளம் தெரிந்த நண்பர்கள் இதை விளக்கலாம்.

ஆனால், முற்றிலும் தமிழ்ச்சொற்களை வைத்து யோசித்தால், கதையைச் சொல்லும் களிப்பு. ஆகவே, கதை + களி = புணர்ச்சி விதிப்படி கதைக்களி என்று ஆகும். கதைப் பாடல் என்று சொல்கிறோமல்லவா? அதுபோல.

ஒரு வேடிக்கையான விஷயம், உளுந்து + களி = உளுந்துக்களி, இங்கே ‘களி’க்கு வேறு அர்த்தம், ஆனால் அதே இலக்கண விதி!

இதற்காகக் ‘கதகளி’ தவறு என்று அர்த்தமில்லை, ‘கதக்களி’ என்று நாமெல்லாரும் எழுதவேண்டியதில்லை. ஆனால், ஒரு பிறமொழிச்சொல் தமிழுக்கு வரும்போது இயல்பாக நமது இலக்கண விதிமுறை அங்கே கலந்து தமிழ்வடிவமாவதை (ரோடு + ஓரம் = ரோட்டோரம், ஓர் ஆட்டோ என்பதுபோல்) ரசிக்கலாம்.

Maadu

மாடும் பொங்கலும் சேர்ந்தால் மாடுப்பொங்கல்தானே வரவேண்டும், எப்படி மாட்டுப் பொங்கல் ஆனது?

குற்றியலுகரம் ஞாபகமிருக்கிறதா? ‘உ’ குடும்ப எழுத்துகள் வல்லினத்தோடு இணைந்து, ஒரு சொல்லின் நிறைவில் வரும்போது, தங்களுடைய இயல்பான ஒலியிலிருந்து சற்றே குறைந்து ஒலிக்கும். உதாரணமாக, ஆடு, மாடு, வீடு, சோறு. இவற்றை ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ என்பார்கள். அதாவது, நெடிலைத் தொடர்ந்து வருகிற குற்றியலுகரம்.

இந்தச் சொற்களெல்லாம் அடுத்து வரும் பெயர்ச்சொற்களுடன் இணையும்போது, உகரத்துடன் இணைந்துள்ள அந்த வல்லினம் இரண்டாகும். அதாவது,

ஆடு + குட்டி = ஆ + ட் + இன்னொரு ‘ட்’ + உ + புணர்ச்சி விதியின்படி ‘க்’ + குட்டி = ஆட்டுக்குட்டி

இதேபோல்,

மாடு + பொங்கல் = மா’ட்’டுப்பொங்கல்
வீடு + அறை = வீ’ட்’டறை
சோறு + பானை = சோ’ற்’றுப்பானை

இதை நாம் இலக்கணப் புத்தகத்தில் படிக்கவேண்டியதே இல்லை, நாம் இந்த விதியை மிக இயல்பாகப் பயன்படுத்துகிறோம், தமிழில்மட்டுமல்ல, ஆங்கிலச் சொற்களில்கூட 🙂

ரோடு + ஓரம் = ரோட்டோரம் 🙂

சரி, மறுபடி மாட்டுக்கு வருவோம். தமிழில் ‘மாடு’ என்றால், செல்வம் என்றும் ஒரு பொருள்.

‘மறப்பின்மை யான்வேண்டும் மாடு’ என்பார் நம்மாழ்வார்:(திருமாலை) மறக்காமல் இருப்பதுதான் நான் வேண்டுகின்ற செல்வம்.

ஒரு திருக்குறளில் செல்வம், மாடு இரண்டுமே வரும்:

‘கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு,
மாடுஅல்ல மற்றையவை.’

படிப்புதான் செல்வம், மற்றதெல்லாம் செல்வமில்லை.

செல்வம் என்கிற பொருள்தரும் இந்தச் சொல் ‘மாடு’ என்ற விலங்கின் பெயருக்கும் வருவது சுவையான ஒற்றுமைதான். அந்நாள்களில் மாடு நிறைய வைத்திருப்பவர்கள் செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள், ஆகவே, மாடே செல்வம்!

இதேபோல் சுவையான இன்னொரு சொல், ‘அரை’. இதனை 1/2 என்றும் சொல்லலாம், உடலின் அரைப் பகுதியில் (பாதியில்) உள்ள ‘இடுப்பு’ என்றும் இதற்குப் பொருளுண்டு.