Seerkazhi

சீர்காழியிலே மனிதர்கள்மட்டுமல்ல, மரங்களும் யாகம் செய்யுமாம். சேக்கிழார் சொல்கிறார்.

அதெப்படி?

வயலில் தாமரை மலர்ந்திருக்கிறது, அதுவும் செந்நிறத் தாமரை.

அந்த வயலுக்கு அருகே ஒரு மாமரம், அங்கே ஒரு பழம் நன்றாகக் கனிந்து பிளந்துகொள்கிறது, அதிலிருந்து சாறு சொட்டுகிறது.

அந்தச் சாறு, மாமரத்து இலையின்மீது விழுகிறது. பிறகு, அங்கிருந்து வழிந்து, இலை நுனி வழியாக அந்தத் தாமரைமீது விழுகிறது.

இந்த இயற்கைக்காட்சியை அப்படியே யாகத்துக்கு உவமையாக்குகிறார் சேக்கிழார். வயல்தான் யாககுண்டம், செந்தாமரைதான் நெருப்பு, அதில் ஊற்றப்படும் நெய்தான் மாம்பழச்சாறு, அந்த நெய்யை ஊற்றும் கரண்டிதான் மாவிலை, ஆக, சீர்காழியில் மரங்களும் யாகம் செய்கின்றனபோல!

பரந்த விளைவயல், செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்

வரம்புஇல் வளர் தேமாவின் கனிகிழிந்த மது நறு நெய்

நிரந்தரம் நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிது அவ் ஊர்

மரங்களும் ஆகுதி வேட்கும் தகையஎன மலர்ந்துளதால்.

இந்தப் பாடலில் பங்கயம், ஆகுதி என்ற இரு சொற்கள்தான் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லாதவை. மற்ற அனைத்துச் சொற்களும் அழகிய தமிழ்ச்சொற்களே, நாம் இன்றும் பயன்படுத்தக்கூடியவைதான்: செய்ய என்றால் சிவந்த, பொங்கு எரி என்றால் பொங்குகின்ற நெருப்பு, இலைக்கடை என்றால் இலையின் நுனி (கடைக்கண் பார்வை என்கிறோமே, அதுதான்!), வேட்கும் என்றால் விரும்பும்…

இச்சொற்களைப் புரிந்துகொண்டு பாடலை மறுபடி படித்தால், நன்றாகப் புரியும். உரையெல்லாம் தேவையே இல்லை.

காலப்போக்கில் நாம் சொற்களை இழந்தால் அது புலவர்களின் பிழையல்லவே!

Advertisements

Varin

நண்பர் சிவ சங்கர் ‘வரின்’ என்ற சொல் சரியானதுதானா என்று கேட்டார்.

சரியானதுதான். வந்தால் என்று பொருள்.

உதாரணமாக, ’உயிர் வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்று இலக்கண சூத்திரம் உண்டு.

இத்துணைப் பழமையான உதாரணம் வேண்டாம் என்றால் புதிய உதாரணங்களைச் சும்மா நாமே எழுதிப்பார்க்கலாம்:

இடர் வரின் எதிர்த்து மோதுவோம்,

துயர் வரின் தோள் கொடுப்போம்!

இதற்கு எதிர்ப்பதம்?

செலின். சினிமா நடிகையின் பெயர் அல்ல. செல்லின், சென்றால் என்று பொருள்.

பணம் செலின் பலமடங்காய் வரும்,

குணம் செலின் குற்றமே ஆகும்.

வா : வருதல் : வந்தால் : வரின் : வருகை : வரவு

செல் : செல்லுதல் : சென்றால் : செலின் : செல்கை : செலவு

என்ன அழகான, ஒழுங்கான கட்டமைப்பு பாருங்கள். தமிழ் இலக்கணத்தில் பொறியாளர் விரும்பும் நேர்த்தி உண்டு!

Thattachu

’வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதுகிறோம். அது சரிதானா?

எந்த ஒரு வினைச்சொல்லிலும் ஒரு வினை இருக்கவேண்டும், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்பதுபோன்ற, யாராலும் எதிர்த்து வாதாட இயலாத உண்மை இது.

’எழுதினேன்’ என்றால், அதில் ‘எழுது’ என்பது வினை, ‘குதித்தேன்’ என்றால், அதில் ‘குதி’ என்பது வினை.

‘தட்டச்சினேன்’ என்பதில் வினை (அதாவது, action) ஏதும் உள்ளதா?

உள்ளது: ‘தட்டு’ (Type). அதை அடிப்படையாக வைத்து எழுதினால், தட்டினேன் என்றுதான் வரும்.

இந்தப் பிழைக்குக் காரணம், ‘தட்டச்சு’ என்ற பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாகக் கருதி, தட்டச்சினேன், தட்டச்சினான், தட்டச்சட்டுமா என்றெல்லாம் எழுதிவிடுகிறோம்.

அது வினைச்சொல் அல்ல, பெயர்ச்சொல்.

அச்சு என்பது அச்சடித்த பொருளைக் குறிப்பது, அச்சடிக்கும் செயலை(அதாவது, வினையை)க் குறிப்பது அல்ல.

இதை எப்படித் தெரிந்துகொள்வது?

குதி/ குத்து என்பவை வினைகள், அவற்றிலிருந்து வரும் தன்மைச் சொற்கள், குதித்தேன்/ குத்தினேன், முன்னிலைச் சொற்கள், குதித்தாய்/ குத்தினாய், படர்க்கைச் சொற்கள், குதித்தான்/ குதித்தாய்.

அநேகமாக எல்லா வினைகளிலிருந்தும் இதுபோன்ற சொற்களை உருவாக்கலாம். இது குழந்தைக்கும் தெரியும்!

அதேபோல், அச்சு என்பது வினையாக இருந்தால், அச்சினேன்/ அச்சினாய்/ அச்சினான் என்று சொற்கள் இருக்கவேண்டுமல்லவா? அப்படிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆன, ’அச்சு’ வினை அல்ல, ‘அச்சிடு’ என்பதுதான் இங்கே வினை. அதை ‘அச்சிட்டேன்’ என்றுதான் எழுதவேண்டும்.

நான் செய்தது வெறும் அச்சு அல்ல, தட்டித் தட்டி அச்சிட்டுள்ளேன், ஆகவே, அது தட்டச்சு ஆகிறது, இதுவும் வினைச்சொல் அல்ல, ‘தட்டச்சிடு’ என்பதுதான் வினை, அதைத் ‘தட்டச்சிட்டேன்’/ ‘தட்டச்சிட்டாய்’/ ‘தட்டச்சிட்டான்’ என்று எழுதவேண்டும். அல்லது, ‘தட்டச்சு செய்தேன்’ என்று எழுதலாம். ‘தட்டச்சினேன்’ என்று நேரடியாகப் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக்கக்கூடாது.

இதைப் புரிந்துகொள்ள இன்னோர் உதாரணம், தோசையினேன் என்றா எழுதுகிறோம்? தோசை சமைத்தேன்/ தோசை சுட்டேன் என்று பெயர்ச்சொல்லோடு அதற்குரிய வினையைச் சேர்த்துதானே எழுதுகிறோம்?

பெயர்ச்சொல்லை அதிரடியாக வினைச்சொல்லாக மாற்றும் விளையாட்டு சிலருக்குப் பிடிக்கும். பஸ்ஸினான் (அல்லது பேருந்தினான்) என்று எழுதிவிட்டு புதுமை/ வார்த்தைச் சிக்கனம் என்பார்கள். சுஜாதா போன்றோர்கூடச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களெல்லாம் இலக்கணமறிந்து மீறியவர்கள். நமக்கு அந்த உரிமையுண்டா என்று யோசித்துக்கொள்ளலாம்.

Muzhakku: Muzhangu

’பிரமாண்டமான தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தலைவர் முழக்கினார்’ என்று ஒரு செய்தி பார்த்தேன்.

எதை முழக்கினார்?

முழக்கம் என்றால் ஒலி. ’வீதியெங்கும் தமிழ் முழக்கம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றினால், முழக்கு. அதாவது, ஒலி எழுப்பு.

அப்போது, முழங்கு என்றால்?

அதுவும் வினைச்சொல்தான். ஆனால் கொஞ்சம் வேறுமாதிரியான வினை.

முழங்குதல், முழக்குதல் இரண்டும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து வரும் இருவேறு பயன்பாடுகள். முதலாவது செய்வினை, இரண்டாவது செயப்பாட்டுவினை. Active Voice, Passive Voice என்றால் பலர் உடனே புரிந்துகொண்டுவிடுவார்கள்.

‘சங்கே முழங்கு’ என்று சொல்கிறோம். காரணம், சங்கு தானே முழங்கும்: ஒலி எழுப்பும். அது செய்வினை.

அந்தச் சங்கைப்பார்த்து, ‘சங்கே முழக்கு’ என்றால், ‘எதை முழக்கவேண்டும்?’ என்று கேள்வி கேட்கும். அது செயப்பாட்டு வினை.

ஆக, தலைவர் முழங்கினார் என்றால், அவரே பேரொலி எழுப்பிப் பேசினார் என்று பொருள், தலைவர் முழக்கினார் என்றாலும் அதே பொருள்தான், ஆனால், ’தலைவர் தன்னுடைய குரல்வளை என்கிற கருவியை முழக்கினார்’ என்று சுற்றிவளைத்துப் பொருள்கொள்ளவேண்டும். அதற்குப்பதிலாக, ‘முழங்கினார்’ என்று எழுதிவிடலாம்!

Appar: Appoothi AdigaL

பெரியபுராணம் படித்துக்கொண்டிருந்தேன், அப்பூதியடிகள் நாயனார் புராணம்.

திருநாவுக்கரசரை முதன்முறை பார்க்கும் அப்பூதியடிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். அவரை வீட்டுக்குள் அழைத்து உபசரிக்கிறார். அப்போது சேக்கிழார் சொல்லும் ஒரு விவரிப்பு:

‘முனைவரை உள் எழுந்து அருளுவித்து, அவர் தாள் முன் விளக்கும்

புனைமலர் நீர் தங்கள்மேல் தெளித்து, உள்ளும் பூரித்தார்.’

திருநாவுக்கரசரை வீட்டினுள் அழைத்து அமரவைத்த அப்பூதியடிகள், அவர் கால்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக மலர்கள் தூவிய நீரைக் கொடுத்தார்.

அவர் தன் கால்களைச் சுத்தப்படுத்திக்கொண்டபிறகு, அப்பூதியடிகள் அந்நீரைத் தன்மீது தீர்த்தம்போல் தெளித்துக்கொண்டார், அதைக் குடித்தார்.

வைரமுத்து கம்பனை நான்கு வாசித்தவர் என்பது தெரியும், பெரியபுராணத்தையும் வாசித்திருக்கிறார் என்பது ஆனந்த அதிர்ச்சியாயிருக்கிறது 🙂

‘தேவதை குளித்த துளிகளை அள்ளி

தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்.’

இதுபோன்ற பயன்பாடுகளைத் திருட்டு என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். ‘என் அப்பன் சாயல் என்னிடம் தெரியாவிட்டால்தான் தவறு’ என்று கமலஹாசன் ஒருமுறை சொன்னதுபோல், பாட்டன் சொத்தை உரிமையாக, பெருமையாக எடுத்தாளலாம்.

ஆனால், பக்திப்பாடலில் ரசிக்கமுடிகிற இந்த வரியை என்னால் காதல் பாடலில் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 🙂

Aan, Aatti

பரபரப்பான அரசியல் அறிக்கை(கதை)யொன்றில் ‘பெருமாட்டி’ என்ற சொல்லைக்கண்டு மகிழ்ந்தேன்.

அவ்வறிக்கையை எழுதியவர் அதனை கேலிப்பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயம், பெருமாட்டியின் உண்மையான பொருள், பெருமைக்குரியவள். இதன் ஆண்பால், பெருமான், பெருமைக்குரியவன்.

சிவபெருமான், எம்பெருமான் என்று இச்சொல்லை நாம் ஆன்மிக விஷயங்களைப் பேசும்போது பயன்படுத்தியிருக்கலாம், அதனுடன் ஒப்பிடும்போது பெருமாட்டி கொஞ்சம் அபூர்வமே.

இதேபோல், பிரான், பிராட்டி என்ற சொற்களையும் ஆன்மிகக் கட்டுரைகளில் அதிகம் பார்க்கலாம்.

இந்த ‘ஆன்’, ‘ஆட்டி’ விகுதிகளைக்கொண்டு தமிழில் பல சொல்லிணைகள் உண்டு. உதாரணமாக, எல்லாருக்கும் தெரிந்த சீமான், சீமாட்டி, இந்தச் சொற்களையும் நாம் பெரும்பாலும் கேலியாகவே பயன்படுத்துகிறோம். (சீமாட்டி டெக்ஸ்டைல்ஸ் என்று ஒரு துணிக்கடை இருந்தது, இப்போதும் இருக்கிறதா?)

அப்புறம், ‘கண்ணாளன்’ என வைரமுத்துவால்மட்டுமே தப்பிப்பிழைத்திருக்கிற சொல்லின் பெண்பால், கண்ணாட்டி.

மருமகனுக்குப் பெண்பால்? மருமகள், அதுபோல, மருமானுக்குப் பெண்பால், ‘மருமாட்டி’!

மணவாளனுக்குப் பெண்பால், மணவாட்டி.

மிக அழகிய ஒலியினிமை கொண்ட, சுட்டப்படுகிறவருக்குப் பெருமை தருகிற சொற்கள் இவை, கேலிக்குமட்டுமின்றி, நல்ல பொருளிலேயே பயன்படுத்தலாம்.

Paaliyal

செக்ஸாலஜி மையம் ஒன்று தன் பெயரைத் தமிழில் இப்படி மொழிபெயர்த்திருக்கிறது: உலகப் பாலியியல் ஆராய்ச்சி மையம்.

இதுபோன்ற மையங்களை நடத்துகிறவர்கள் மருத்துவப் புணர்ச்சி விதிகளைப் படித்தால் போதும், ஆனால், அவற்றுக்கு விளம்பரம் எழுதுகிறவர்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளையும் படிக்கவேண்டும்.

‘பால்’ என்றால் ஆண்பால்/ பெண்பால் என்கிற பிரிவினையைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் Sex (Male/ Female) என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு இது. பசும்பாலைக் குறிக்கும் சொல்லோடு இதைக் குழப்பிக்கொள்ளாமல் இருப்பதற்காக, பால் + இனம் = பாலினம் என்று எழுதுவார்கள்.

அதேபோல், பால் + இயல் = பாலியல் என்று புணரும். ல், இ இரண்டும் இணைந்து லி என மாறும்.

இதையே பாலி + இயல் என்று எழுதினால், அது பாலியியல் என்று புணரும், இங்கே ‘ய்’ என்ற எழுத்து தனியே தோன்றும்.

ஆக, பாலியியல் என்றால், பாலி இயல், ஒருவேளை பாலித்தீவுகளைப்பற்றிய படிப்பாக இருக்கலாம். பாலியல் என்றால்தான் செக்ஸ் மேட்டர்.