Virunthu

நம் வீட்டுக்கு வருவோரை ‘விருந்தினர்’ என்கிறோம். அதற்கேற்ப, அவர்களை அமரவைத்து நல்ல விருந்து கொடுக்கிறோம்.

ஆனால், விழாக்களுக்கு முதன்மையாகப் பேச வருகிறவர்களையும் ‘விருந்தினர்’/ ‘சிறப்பு விருந்தினர்’ என்று அழைக்கிறோமே. இதில் ‘விருந்து’ என்ற சொல் எப்படி வந்தது? வருகிறவர்களுக்குத் தலைவாழை இலை போட்டுச் சாப்பாடு பரிமாறுவார்களா என்ன?

‘விருந்து’ என்றால், இன்றைக்கு நாம் அறிந்த ஒரே பொருள், சாப்பாடு என்பதுதான். ஓர் இயற்கைக் காட்சியைக் ‘கண்ணுக்கு விருந்து’ என்றால், கண்ணுக்குச் சாப்பாடு, ஒரு நல்ல பாடலைச் ‘செவிக்கு விருந்து’ என்றால், காதுக்குச் சாப்பாடு.

ஆனால் உண்மையில் ‘விருந்து’ என்ற சொல்லின் பொருள், புதுமை என்பதுதான். தொல்காப்பியர் இதனை, ‘விருந்தே புதுமை’ என்பார்.

ஆக, விருந்தினர் என்பவர், நமக்கு இதற்குமுன் அறிமுகமாகாமல், புதியவராக வருகிறவர்தான். வீட்டுக்கு வருகிற அப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, பெரியப்பா பையன், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரையெல்லாம் விருந்தினர் என்று சொல்லலாகாது. அவர்களைக் குறிப்பிட உறவினர், நண்பர் என்ற சொற்கள் இருக்கின்றனவே.

அப்படியானால், விருந்தினர் என்பவர் யார்?

அன்றைக்கு வழிப்பயணமாகச் செல்கிறவர்களுக்குத் தெருவுக்குத் தெரு உணவகங்களெல்லாம் கிடையாது. எங்கேயாவது நல்ல மனம் கொண்டவர்களின் வீடுகளில் சாப்பிட்டால்தான் உண்டு.

அப்படி வருகிறவர்கள்தான், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்தினர்கள், அதாவது, புதியவர்கள், அவர்களை முன்பின் தெரியாவிட்டாலும், இன்முகத்தோடு வரவேற்று உணவு பரிமாறி மகிழ்வது பண்பாடு. அதனால்தான், விருந்து என்ற சொல்லையே சாப்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப் பழகிவிட்டோம்!

தமிழ் மரபில் விருந்தோம்பல் மிகவும் முக்கியமான ஒன்று, திருவள்ளுவர் ‘உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா மடமை’ என்பார்.

உடைமை என்றால் இருப்பது, இன்மை என்றால் இல்லாதது, ‘உடைமையில் இன்மை’ என்றால், இருந்தும் இல்லாதது.

அதாவது, ஒருவர் பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி, புதிதாகத் தன் வீட்டுக்கு வருகிறவர்களை வரவேற்று, உபசரித்துக் கவனித்துக்கொள்ளவில்லையென்றால், அவர் வறுமையில் உள்ளதாகவே பொருள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s