Polanjaayal

தங்கச்சங்கிலி தெரியும், மனிதச்சங்கிலி தெரியும், பொலஞ்சங்கிலி தெரியுமா?

கிலி வேண்டாம், நமக்குத் தெரிந்த விஷயம்தான் அது.

பொன் + சங்கிலி = பொற்சங்கிலி என்று வாசித்திருப்போம், அதையே ‘பொலஞ்சங்கிலி’ என்றும் எழுதலாமாம். தொல்காப்பியம் சொல்கிறது:

‘பொன் என் கிளவி ஈறுகெட, முறையின்

முன்னர்த் தோன்றும் லகார மகாரம்

செய்யுள்மருங்கின் தொடரியல் ஆன.’

அதாவது, செய்யுளில் பொன் என்ற சொல் வந்தால், அதன் ஈறு (கடைசி எழுத்து: ன்) கெடும், அதாவது,

பொன் + சங்கிலி => பொ + சங்கிலி

அதற்குப்பதிலாக, லகர, மகரங்கள் முறையே வரும், அதாவது, ல + ம்

பொ + சங்கிலி => பொலம் + சங்கிலி

இந்தப் புணர்ச்சியை நன்னூல் விளக்குகிறது:

’ம ஈறு ஒற்று அழிந்து…

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.’

அதாவது, ம் கெடும், அடுத்து வரும் வல்லின எழுத்தின் இன எழுத்து தோன்றும்.

பொலம் + சங்கிலி = பொல + ? + சங்கிலி

‘ச’ என்ற வல்லின எழுத்தின் இன எழுத்து, ‘ஞ்’. ஆகவே,

பொல + ஞ் + சங்கிலி = பொலஞ்சங்கிலி

இந்த வழக்கம் இப்போது பேச்சில்/ உரைநடையில் இல்லை, செய்யுளில்மட்டுமே உள்ளது, பொன் சங்கிலி/ பொற்சங்கிலி என்றே பொதுவாகப் பயன்படுத்துகிறோம். ஆகவே, காதலியை/ மனைவியைக் குழப்பவிரும்பும் ஆண்மகன்கள் ‘பொலஞ்சாயல் பெண்ணே, சௌக்யமா?’ என்று கேட்டுவைக்கலாம்.

Advertisements

Thennanthoppu

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு.

அதென்ன ’தோப்பு’?

மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார்.

அப்படியே பார்த்தாலும் தென்னை + தோப்பு = தென்னைத்தோப்பு என்றல்லவா வரவேண்டும், தென்னந்தோப்பு என்று மாறியது என்ன கணக்கு?

யோசித்தால், பனை + தோப்பு = பனந்தோப்பு என்று ஆகிறது. இதற்கு ஏதோ ஒரு சிறப்பு விதிமுறை இருக்கவேண்டுமல்லவா?

’வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி

ஈற்று அழிவொடும் அம் ஏற்பவும் உளவே’ என்கிறது நன்னூல்.

அதாவது, ‘ஐ’யில் முடியும் ஒரு சொல்லின் நிறைவுப்பகுதி அழிந்து, அங்கே ‘அம்’ சேரும்.

தென்னை => தென்ன் => தென்ன் + அம் ==> தென்னம் என்று மாறும்.

ஆக, இப்போது நம்மிடம் உள்ளது: தென்னம் + தோப்பு

இங்கே முதல் சொல் மகர மெய்யில், அதாவது ‘ம்’ என்ற எழுத்தில் முடிகிறது, அது ‘தோ’ என்கிற வல்லின எழுத்தோடு சேர்ந்தால் என்ன ஆகும்? அதையும் நன்னூல் சொல்கிறது:

‘மவ்வீறு ஒற்று அழிந்து…

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.’

அதாவது, ‘ம்’ என்ற எழுத்து அழிந்துவிடும், அடுத்து வரும் வல்லின எழுத்தின் இன எழுத்தாக மாறிவிடும்.

‘த’ என்ற வல்லின எழுத்தின் இன எழுந்து ‘ந’, அதன் மெய்யெழுத்து, ‘ந்’.

ஆக,

தென்னம் + தோப்பு => தென்னந் + தோப்பு => தென்னந்தோப்பு

Aara

ஆர, ஆற: எது சரி?

இரண்டும் சரிதான். ஆனால் வெவ்வேறு பொருள்.

‘ஆர’ என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. உதாரணமாக, ‘வயிறார உண்டான்’ என்றால், வயிறு ஆர உண்டான், வயிறு நிறைய உண்டான் என்று பொருள்.

‘ஆரா அமுதே’ என்று இறைவனைப் புகழ்வார்கள், அதாவது, ஆராத அமுதே, நிறைவடையாத அமுதம், எவ்வளவு பெற்றாலும் இன்னும் பெறவேண்டும் என்று தோன்றவைக்கும் அனுபவம்.

இந்த ‘ஆரா அமுது’க்கு இன்னொரு விளக்கமும் தருவார்கள், ‘திகட்டாத அமுது’.

‘ஆறா அமுது’ என்றால் வேறு அர்த்தம், ஆறாத அமுதம்: எப்போதும் சூடாகவே இருக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் பஃபே உணவுப்பொருள்களின்கீழே உள்ளங்கையகலத்தில் ஒரு கற்பூரம் எரிந்துகொண்டே இருக்கும், அவற்றை ‘ஆறாவுணவு’ என்று சொல்லலாம். வட்டப் படகைப்போன்ற பெரிய பாத்திரங்களில் மணிக்கணக்காகத் தொடர்ந்து காய்ச்சப்படும் சுவையான மசாலா பாலை, ‘ஆறாப்பால்’ எனலாம்.

‘ஆரத் தழுவினான்’ என்று ஒரு சொல் உண்டு, அதன்பொருள் மனம் நிறையும்படி தழுவினான்.

அதையே ‘ஆறத் தழுவினான்’ என்றால் அர்த்தம் மாறிவிடும். ஆறுவதற்காகத் தழுவினான் என்றாகிவிடும்.

ஒருவிதத்தில் அதுவும் சரிதான், மனத்திலிருந்த காதல் தீ ஆறத் தழுவினான், பிரிவினால் உண்டான காயம் ஆறத் தழுவினான்!

Twitbio

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நடுவில் சில வரிகள்:

‘பள்ளிக்கூடம் போகமாட்டான்,

பாடம்கீடம் படிக்கமாட்டான்,

சொன்னா இவனும் கேட்கமாட்டான்’

இப்படி மூன்று வரிகளில் நாயகனைப்பற்றி ஒரு முரட்டு பிம்பத்தைக் கொண்டுவரும் கங்கை அமரன் சட்டென்று நான்காவது வரியில், இப்படி முத்தாய்ப்பு வைக்கிறார்:

‘சொந்த புத்தி வெச்சிருக்கான்.’

இப்போது இந்த வரியோடு முதல் மூன்று வரிகளைச் சேர்த்துப் படித்தால், அந்த முரட்டு/ தற்குறி பிம்பம் மாறி, இவனுக்குப் பள்ளி தேவையில்லை, பிறருடைய அறிவுரை தேவையில்லை என்று வேறுவிதமான பிம்பம் வருகிறது.

திரைப்பாடலாசிரியர்களுக்கு ஒரு பாத்திரத்தை இப்படிச் சில சொற்களில் கச்சிதமாக விவரிக்கிற சவால் பிடிக்கும். 140 எழுத்துகளில் சொல்லும் இதுபோன்ற அறிமுகங்களை இப்போது Twitbio என்கிறார்கள், அக்கலையில் நம் பாடலாசிரியர்கள் பெரிய கில்லாடிகள்.

சட்டென்று நினைவுக்கு வரும் சில உதாரணங்கள்:

உள்ளதைச் சொல்வேன்,

சொன்னதைச் செய்வேன்,

வேறொன்றும் தெரியாது!

(கண்ணதாசன்)

நான் நட்டதும் ரோஜா

இன்றே பூக்கணும்

(வைரமுத்து)

மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்

(வைரமுத்து)

எக்குலமும் வாழ்த்துச் சொல்லும்,

எங்களுக்கு எக்காளந்தேன்!

(வாலி)

Nattam

‘கவிதை கேளுங்கள்’ பாடலில் வைரமுத்து எழுதியிருக்கும் வரி:

‘பூமி இங்கு சுற்றும்மட்டும்,

ஆட வந்தேன், என்ன நட்டம்?’

இங்கே ‘நட்டம்’ என்ற சொல் ‘நஷ்டம்’ என்பதைதான் குறிக்கிறது, மேலே உள்ள ‘மட்டும்’க்கு இயைபாக அமைகிறது, மூன்றாவதாக, அப்பாடலின் தீவிரத்தன்மையே அங்கு வல்லினத்தைக் கோருகிறது. ஆகவே, ‘நஷ்ட’த்தைவிட ‘நட்டம்’ நன்கு பொருந்துகிறது.

நான்காவதாக, ‘நட்டம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் நடனம் என்ற பொருளும் உண்டு. ‘நட்டம் பயின்று ஆடு நாதனே’ என்று சிவனை அழைப்பார் மாணிக்கவாசகர்.

இந்தப் பொருளில், ‘ஆடவந்தேன், என்ன நட்டம்’ என்பதை வாசித்தால் இன்னும் நன்றாயிருக்கிறது!

19maa

‘மா’ என்ற சொல்லுக்குப் ‘பெரிய’ என்ற பொருள். அதனை ஒரு பெயர்ச்சொல்லின் முன்னால் பொருத்தினால், இந்தப் பொருளைத் தரும்.

உதாரணமாக, மாநகரம் என்றால் பெரிய நகரம், மாமேதை என்றால் பெரிய மேதை.

இதைக் கேலி செய்வதற்காகச் சிலர் மாமாநகரம் என்று எழுதுவார்கள், அப்படியென்றால் மிகப்பெரிய நகரம் என்று பொருளா என்று கேட்பார்கள்.

வள்ளலார் ஒரு படி மேலே போய்… சரியாகச் சொல்வதென்றால், பல படி மேலே போய், ஒரு பாடலில் இப்படி எழுதுவார்:

‘இம் மை அறைஅனைய ஏசுஊர, மாதருமா
இம்மை உமை இம்மைஐயோ, என் செய்தது தம்மைமதன்
மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
மாமாமா மாமாமா மா.’

ஒரு பெண், காதல்வயப்படுகிறாள். ஒரு மனிதன்மீது காதல் என்று கருதலாம், இறைவன்மீது காதல் என்றும் கருதலாம். அது உங்கள் இஷ்டம்.

அவளுடைய காதல், வீட்டாருக்குப் புரியவில்லை. ஏதோ தெய்வகுற்றமாகிவிட்டது, ஆட்டைப் பலிகொடுத்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.

இதைப்பார்த்த தோழி இந்தப் பாடலைப் பாடுகிறாள். ஆடுகளை அழைத்து, வரிசையாக 19 மா போடுகிறாள். (எண்ணிப்பாருங்கள்.)

இதை இருவிதமாகப் பிரிக்கிறார்கள், இரண்டுமே அழகு: 6 + 6 + 7 = 19, 5 + 6 + 8 = 19.

முதலில், 6 + 6 + 7 = 19 என்பதை எடுத்துக்கொள்வோம்.

அதாவது, ஆறுமா, ஆறுமா, ஏழுமா.

ஆறுமா என்பதை, ‘அறுமா’ என்றும் எழுதலாம், முருகனை ‘அறுமுகன்’ என்று சொல்கிறோமல்லவா?

‘அறுமா’ என்பதற்கு இன்னொரு பொருள், வெட்டுப்படுமா என்பது.

அதேபோல், ஏழுமா என்பதை ‘எழுமா’ என்றும் எழுதலாம், ‘எழுநாள் கொண்டாட்டம்’ என்றால், ஏழு நாள் கொண்டாட்டம் என்று பொருள்.

‘எழுமா’ என்பதற்கு இன்னொரு பொருள், தொடங்குமா/ ஏற்படுமா என்பது. உதாரணமாக, ‘கிரிக்கெட் பார்த்தால்தான் உங்களுக்குள் தேசபக்தி எழுமா?’

ஆக, 19மாக்களை இப்படிப் பிரித்துக்கொள்கிறோம்: அறுமா, ஆறுமா, எழுமா… இதன் பொருள், ஆட்டைப் பலிகொடுத்தால் மன்மதனின் தொல்லை அறுமா? (அறுந்துபோகுமா?) இவளுடைய மனக்காயம் ஆறுமா? இவள் மனத்தில் இன்பம் எழுமா? (ஏற்படுமா?)

இப்போது, இரண்டாவது பொருள்: 5 + 6 + 8 = 19.

அதாவது, அஞ்சுமா + ஆறுமா + எட்டுமா … ஆட்டைப் பலிகொடுத்தால் இவளை வாட்டும் மன்மதனின் அம்பு அதற்கு அஞ்சுமா? (பயப்படுமா?), இவளுடைய மனக்காயம் ஆறுமா? இவளுடைய துயரம் இவளது காதலன் காதில் எட்டுமா? (சென்றுசேருமா?)

சொற்களின் மாவிளையாட்டு!

Kadumagizhchi

நண்பர் தெய்வீகராஜன் அனுப்பிய கேள்வி:

இன்றைய தினந்தந்தியில் இவ்வாறு ஒரு செய்தி வந்துள்ளது: ‘இந்திய அணி போட்டியில் வென்றதும் சச்சின் தெண்டுல்கரும் கடும் மகிழ்ச்சி அடைந்தார்’

பெரும் மகிழ்ச்சியைக் கடும் மகிழ்ச்சி என்று எழுத முடியுமா?

எழுதலாம். கடும் என்ற சொல்லுக்கு மிகுதியான என்ற பொருள் உண்டு.

உதாரணமாக, குறுந்தொகையில் ஒருவரி: கடும்புனல் தொகுத்த நடுங்கு அஞர் அள்ளல், அதாவது, நிறைய தண்ணீரைக் கொண்ட, நடுங்கும் துன்பம் தரும் சேறு.

ஆகவே, பெருமகிழ்ச்சியைக் கடும் மகிழ்ச்சி/ கடுமகிழ்ச்சி என்று எழுதலாம். அந்தச் செய்தியாளர் இதைச் சிந்தித்து எழுதினாரா என நானறியேன்.