Nammaazhvaar

தொல்காப்பியம் தொடங்கி வானம்பாடிக் கவிதைகள்வரை அனைத்துக் காலகட்டங்களையும் முக்கியக் கவிஞர்களையும் கொஞ்சமேனும் (அவர்களைப் புரிந்துகொள்கிற அளவுக்கு) வாசித்திருக்கிறேன். முழுக்க வாசிக்க இன்னும் சில பிறவிகள் தேவைப்படும்.

எனினும், வாசித்த அடிப்படையில் இதைத் தைரியமாகவே சொல்வேன், இதனால் அற்புதமாக எழுதிய பிற பெரியோர் அனைவருக்கும் மரியாதைக்குறைவாகாது: தமிழில் கவித்துவத்தின் உச்சம் என்றால் அது நம்மாழ்வார்தான் என்று தோன்றுகிறது.

பக்திபாவம் இருந்தால் அவரை இன்னும் ரசிக்கலாம், ஆனால் நான் வியப்பது நம்மாழ்வாரின் சொல்லாட்சியையும் சொற்கோப்பையும் உவமைகளையும் பேசுபாணியையும் அவற்றினூடே தெரியும் அன்புமனத்தையும்தான்.

Advertisements

Paakku KoNdaa

இன்று நண்பர் கானா பிரபாவுடன் ‘பாக்கு கொண்டா’ பாடலைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ’சக்கரை தேவன்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது.

இதனை இங்கே பலர் கேட்டிருக்கமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். ஆகவே, இந்தப் பாடல் முக்கியம் என நான் ஏன் கருதுகிறேன் என ஒரு சிறு அறிமுகம் தருகிறேன்.

தமிழ் சினிமாவில் அகப்பாடல்கள் நிறைய உண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அவற்றுக்குத் திணைவகுக்கக்கூட நான் (மனத்துக்குள்) முயன்றதுண்டு.

ஆனால், புறத்திணைப் பாடல்கள் இங்கே குறைவு.

சும்மா “மாஸ்”, ”ஹீரோயிஸ”, ”ஓப்பனிங்” பாடல்களெல்லாம் புறப்பாடல்கள் ஆகிவிடாது. புறநானூறில் ஒவ்வொரு பாடலையும் வாசிக்கும்போது அந்த மன்னன்மீது நமக்கு ஏற்படும் வியப்பு கலந்த மரியாதையைத் திரைப்பாடலுக்குள் கொண்டுவருவது சாதாரணமில்லை, ஒருவேளை வரிகள் அமைந்துவிட்டாலும், பாடப்படுவோனின் கம்பீரத்தையும் பாடுவோரின் நெகிழ்வுணர்வையும் இசையில் எப்படிக் கொண்டுவருவீர்கள்?

அந்தவகையில், இந்தப் பாடல் ஒரு கச்சிதமான புறத்திணைப்பாடல் என்பது என் எண்ணம்.

இதற்காக அந்தப் பழந்தமிழ் மன்னர்களையும் சாதாரண சினிமா ஹீரோவையும் ஒப்பிடுகிறேன் என்று எண்ணவேண்டாம், ராஜாவின் பாடல் எதிலும் படத்தை, சூழலை, அதில் நடித்தவர்களையெல்லாம் நான் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை, அவரது பாடலை, வரிகளை, குரலை, இசைக்கோப்பைமட்டும்தான் தனிப்படைப்பாகக் காண்பேன், அந்தவிதத்தில் இந்தப் பாடலின் கம்பீர தொனி எனக்கு மிகவும் பிடிக்கும், (மனத்துக்குள்) வாகைத்திணை என்று எண்ணிக்கொள்வேன்.

தமிழ்மரபை நன்குணர்ந்த இசை இது, கேட்குந்தொறும் மகிழ்கிறேன்!

#ராஜா #வாலி #டிஎஸ்ராகவேந்தர் #கிருஷ்ணமூர்த்தி

(பின்குறிப்பு: இப்பாடலின் மெட்டு ராஜாவுடையது, ஆனால் இசைக்கோப்புமுழுக்க கார்த்திக்ராஜா உருவாக்கியது என அறிகிறேன். இதை என்னால் இதுவரை நம்ப இயலவில்லை. கார்த்திக்ராஜா மிகப்பெரிய திறமைசாலிதான், ஆனால் அவரது பாணி முற்றிலும் மாறுபட்டது, தனித்துவமானது, இப்பாடலின் அனைத்துத் துணுக்குகளிலும் எனக்கு ராஜாமட்டும்தான் தெரிகிறார்.)

MaPoSi

இன்று ம. பொ. சிவஞானம் அவர்களின் பிறந்த தினம். அவரது சுயசரிதையான ‘எனது போராட்டம்’ நூல் மிகவும் புகழ்பெற்றது. பலநாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் பாண்டிச்சேரி சென்றபோது ஒரு கடையில் அந்தப் புத்தகத்தைக் கண்டேன். ஆசையோடு வாங்கச்சென்றேன்.

புத்தகத்தைக் கையிலெடுத்த மறுகணம், அருவருப்போடு அதைக் கீழே வைத்துவிட்டேன். காரணம், அட்டையில் ஆசிரியரின் பெயரை ‘மாபொசி’ என்று அச்சிட்டிருந்தார்கள்.

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதுதான் அவருடைய பெயர், அன்பாக ம.பொ.சி என்று சுருக்கிச்சொல்வார்கள். இதைப் பலமுறை பலரும் பேசிக் கேட்டிருக்கிறோம், மபொசி என்பதைச் சேர்த்துச்சொல்லும்போது அது காதில் மாபொசி என்று விழுவதும் மனத்தில் அப்படியே பதிவதும் இயல்புதான்.

ஆனால் அதற்காக, ஒரு புத்தகத்தின் அட்டையில் இப்படியா எழுதுவார்கள்? அத்தனை பெரிய எழுத்துகளில், அதுவும் ஆசிரியரின் பெயரில் ஓர் எழுத்துப்பிழை என்றால் இத்துணை அலட்சியத்துடன் தயாரிக்கப்படுகிற ஒரு புத்தகத்தை எந்த நம்பிக்கையில் வாங்குவது?

எரிச்சலோடு அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். இன்னொரு நல்ல பதிப்பாளர் கையில் அப்புத்தகம் வரட்டும், அப்புறம் வாங்கிக்கொள்கிறேன்.

Masamasa

நேற்றைக்கு என் மனைவி மகளிடம் ’மசமசன்னு நிக்காதே’ என்று சொல்ல, அவள் பதிலுக்கு ‘இதுக்கு இங்கிலீஷ்ல என்ன?’ என்று கேட்டிருக்கிறாள்.

எனக்கு அது தெரியவில்லை. ஆனால் அதற்குமுன்னால், ‘மசமச’வுக்குத் தமிழில் என்ன பொருள்?

’ஒண்ணுமே புரியலை, எல்லாம் மசமசன்னு இருக்கு’ என்று சொல்கிறோம், அதைச் சொல்லும்போதே ஒரு குழப்பமான, மசங்கலான பிம்பம் வருகிறதல்லவா?

மசங்கல், அதான் … அதற்கு என்ன பொருள்?

மயக்கம்/தடுமாற்றம் என்று பொருள். சமணமதத்தைச் சேர்ந்தோரை ‘மசங்கல் சமண்’ என்பார் திருஞானசம்பந்தர், புத்தி மயங்கியவர்கள் என்று பொருள்.

அந்திப்பொழுதுக்கு மசங்கல் என்ற பெயர் உண்டு, காலையும் இரவும் மசங்கியுள்ளதல்லவா?

கர்ப்பிணிப்பெண்ணுக்கு மசக்கை என்கிறோமே, அதுவும் இங்கிருந்து வந்த சொல்தான்.

’மசமசன்னு நிக்காதே’ என்பதில் உள்ள ‘மசமச’வை இரட்டைக்கிளவி என்று எடுத்துக்கொள்ளலாம். அப்போது அது ஒலிக்குறிப்பாகிவிடும், கலகலன்னு சிரிச்சான், விறுவிறுன்னு நடந்தான் என்பதுபோல மசமசன்னு நிக்காதே என்கிறோம்.

கலகல என்பதிலிருந்து கலகலப்பு, விறுவிறு என்பதிலிருந்து விறுவிறுப்பு என்ற சொற்களை அமைக்கிறோம், அதுபோல, மசமசவிலிருந்து மசமசப்பு.

இந்தச் சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை, ஆனால் மதமத(ர்)ப்பு என்ற சொல் ஓரளவு பிரபலமானது.

மதமதப்பு என்றால், திமிர் என்று ஒரு பொதுவான பொருள் இருக்கிறது. ’கொழுத்துப்போய் மதமதன்னு திரியறான்’ என்கிறோம்.

ஆனால் அகராதியில் அதே சொல்லுக்கு ‘மதம்பிடித்துப்போயிருத்தல்’, ‘உணர்ச்சியின்றியிருத்தல்’, ‘என்னசெய்வது என்றே தெரியாமலிருத்தல்’ என்ற பொருள்களும் உள்ளன.

ஆக, ‘மசமசன்னு நிக்காதே’ என்றால், ‘என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்காதே, வேலையைப் பார்’ என்று பொருள்.

இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?

எனக்குத் தெரியாது, நான் தமிழ்மீடியம்!

Aandai

‘கபாலி பாடலொன்றில் கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான் என்று வருகிறதே, அதென்ன ஆண்டயர்?’ என்று நண்பர் சிவராமன் கேட்டிருந்தார்.

அது ஆண்டயர் அல்ல, உச்சரிப்பில் அப்படி வரும் (ஐ=>அ), ஆனால் எழுதும்போது ‘ஆண்டையர்’ என்று எழுதவேண்டும்.

‘ஆண்டை’ என்றால் முதலாளி/தலைவன் என்று பொருள். கோபாலகிருஷ்ணபாரதியாரின் பிரபலமான நந்தனார் கீர்த்தனை:

‘ஆண்டைக்கு அடிமைக்காரன் அல்லவே, யான்
ஆண்டைக்கு அடிமைக்காரன் அல்லவே,
மூன்று லோகமும் படைத்து அளித்திடும்
ஆண்டவர் கொத்தடிமைக்காரன்!’

அந்த ‘ஆண்டை’யுடன் ‘அர்’ என்கிற பன்மைவிகுதி சேர்ந்தால் ‘ஆண்டையர்’ (பல தலைவர்கள்/பல முதலாளிகள்), அது பேச்சின்போது ‘ஆண்டயர்’ என்றாகும்.

என்னிடம் உள்ள அகராதியில் ‘ஆண்டை’க்குப் பொருள் ‘எஜமான்’ என்றிருக்கிறது, அதுவும் ரஜினி படம்தான்!

Gandhi

காந்தி நல்லவரா கெட்டவரா? அவர் பிழைகளே செய்ததில்லையா? ‘மகாத்மா’ என்ற பட்டம் அவருக்குத் தகுமா? ஒருவேளை தகும் என்று வைத்துக்கொண்டாலும், இன்றைக்கு அவரது கொள்கைகள் பொருந்துமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உறுதியான பதிலே கிடையாது, அவரவர் எண்ணப்படி மாறுபடும், வெவ்வேறு பின்னணியில் பார்க்கும்போது மாறுபடும், அதுதான் எதார்த்தம், மகாத்மாவுக்குமட்டுமல்ல, எந்தவோர் ஆத்மாவுக்கும் இது காரம், இது அமிலம் என்று வேதியியல் சூத்திரம்போல் லேபிள் ஒட்ட இயலாது. அவர்களது வாழ்நாள் பணிகளை அலசிப்பார்த்து நமது கொள்கைகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு தீர்மானத்துக்கு வரலாம். இருவேறுநபர்களுக்கு அது ஒத்துப்போகாவிட்டாலும் பரவாயில்லை.

காந்தி விஷயத்தில் நமக்குச் சிரமமே கிடையாது. இந்தியாவில் காந்திபற்றி எழுதப்பட்ட அளவுக்கு வேறு யாரைப்பற்றியும் நூல்கள் இல்லை என்று எண்ணுகிறேன் (சில ஆயிரமாவது இருக்கும்).

ஆகவே, அவர் பலவிதமாக அலசப்பட்டுள்ளார், அதில் மிகைப்புகழ்ச்சியும் இருக்கும், மிகையிகழ்ச்சியும் இருக்கும், சரியான சீர்தூக்கலும் இருக்கும், இவற்றையெல்லாம் வாசித்து, முக்கியமாக அவரே எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களை வாசித்து, சரியான வரலாற்றுப் பின்னணியுடன் காந்தியைப்பற்றிய எந்தவொரு தீர்மானத்துக்கும் வரலாம். வெறும் துணுக்குச்செய்திகளாக அணுகவேண்டாம், நம் சோம்பேறித்தனத்துக்கு அவசரப்பட்டு அவர்மீது (யார்மீதும்) முத்திரைகளாகக் குத்திச்செல்லவேண்டாம்.

வரலாறு மிகச் சுவாரஸ்யமான விஷயம், ஆழ்ந்து தொய்ந்தால் சுகம், நுனிப்புல் மேய்தல்கூட பரவாயில்லை, ஆனால் அதுவே முழுமை என்று எண்ணிவிடலாகாது.

Kurangu & Kattai

”நகைக்கடைக்குள் புகுந்து ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு”
இந்தச் செய்தித்தலைப்பை ஒரு பெரிய இணையத்தளத்தில் கண்டேன். உடனே சிரிப்பு வந்துவிட்டது.
குரங்கை நினைத்தல்ல, இவ்வாசகத்தில் இரண்டு சிறிய சந்திப்பிழைகள்/ஒற்றுப்பிழைகள் இருக்கின்றன, இதனை இவ்வாறு எழுதியிருக்கவேண்டும்:
ஆயிரம் ரூபாய்”க்” கட்டை”த்” தூக்கிச்சென்ற குரங்கு!
இது ஒரு பெரிய விஷயமா?
இல்லைதான். ஆனால், அந்த “க்”, “த்” இல்லாததால், அவ்வாசகத்தின் பொருளே மாறிவிடுகிறது.
“ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச்சென்ற குரங்கு” என்றால், ஆயிரம் ரூபாய் விலைமதிப்புள்ள ஒரு (மரக்)கட்டையை ஒரு குரங்கு தூக்கிக்கொண்டு சென்றது என்று பொருள். கட்டை தூக்கு => கட்டையைத் தூக்கு.
இலக்கணத்தில் இதனை இரண்டாம் வேற்றுமைத்தொகை என்பார்கள், அதாவது, ‘ஐ’ என்பது அங்கே தொக்கி/மறைந்துநிற்கிறது. ஆகவே வலி மிகாது. கட்டை தூக்கு என்று ‘த்’ இல்லாமல் எழுதினால், கட்டையைத் தூக்கு என்பதுதான் பொருள்.
இதே வாசகத்தில் வலி மிகுத்து, அதாவது ‘த்’ போட்டு “ஆயிரம் ரூபாய்க் கட்டைத் தூக்கிச்சென்ற குரங்கு” என்று எழுதினால், ஆயிரம் ரூபாய்த் தாள்களைக்கொண்ட ஒரு கட்டை (கட்டு + ஐ) ஒரு குரங்கு தூக்கிச்சென்றது என்று பொருள் வரும்.
#சந்திமுக்கியம்