Hindi

’அப்பா, காந்திபத்தி 10 வாக்கியம் எழுதணும்’ என்றாள் மங்கை.

‘எழுது’ என்றேன்.

அவள் திகைப்போடு என்னைப்பார்த்து, ‘ஹிந்தியில எழுதணும்ப்பா’ என்றாள்.

’அதனால என்ன? எழுது!’

‘அப்பா, ஹிந்தியில எனக்கு எல்லாமே மனப்பாடம்தான், சொந்தமால்லாம் எழுதவராது!’

’அப்ப உங்க மேடம்கிட்ட போய் எனக்கு ஹிந்தி எழுதவராது, அதனால நான் இந்த ஹோம்வொர்க் செய்யலைன்னு சொல்லிடு!’

அழத்துடிக்கிற கண்களுடன், ‘அப்பா, are you serious?’ என்றாள்.

‘Yes, I am!’

‘ஜீரோ மார்க் போட்றுவாங்கப்பா!’

’அதுக்கு என்ன செய்ய? உனக்குதான் எழுதத்தெரியலையே!’

’நீ எழுதிக்கொடு!’

‘நான் எழுதினா உனக்கெப்படி மார்க் வரும்?’

பேசிக்கொண்டிருக்கும்போதே என் மனைவி எதிர்ப்பட்டு, ‘எல்லாருக்கும் parentsதான் எழுதித்தர்றாங்க’ என்றார், ‘பரவாயில்லை, எழுதிக்கொடுத்துடு!’

‘ம்ஹூம், சான்ஸே இல்லை’ என்றேன், ‘மங்கை, நீயே எழுது, நான் உனக்கு உதவி பண்றேன்.’

முதலில், அவளை ஒரு நோட்டும் பென்சிலும் கொண்டுவரச்சொன்னேன். காந்திபற்றி 10 வாக்கியங்கள் ஆங்கிலத்தில் எழுதச்சொன்னேன்.

அதன்பிறகு, அந்த வாக்கியங்களை ஒவ்வொன்றாக வாசிக்கச்சொன்னேன். அவற்றை ஹிந்தியில் சொல்லச்சொன்னேன்.

தயங்கித்தயங்கி மொழிபெயர்த்தாள். இலக்கணம் முற்றிலும் தவறு, ஆனால் சொற்கள் ஓரளவு சரியாகவே இருந்தன. தெரியாத சொற்களை அகராதியில் பார்க்கச் சொல்லிக்கொடுத்தேன், அங்கே பொருந்தாத சொற்களை விலக்கவும் கற்றுத்தந்தேன்.

அவளுடைய முக்கியமான குழப்பம், வாக்கிய அமைப்பு. அது ஆங்கிலத்துக்கும் ஹிந்திக்கும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதைப் புரியவைத்தேன், ஆங்கில வாக்கியத்தை ஹிந்தி வாக்கியமாக ஆக்கும்போது, இந்தக் கட்டமைப்பைத் திருத்தி அதனை எளிமையாக்குவது எப்படி என்று சொல்லித்தந்தேன். ஒரு வாக்கியத்தைக் காப்பியடித்து இன்னொரு வாக்கியம் அமைப்பது எப்படி என்று காண்பித்தேன்.

சுமார் 25 நிமிடங்கள் ஆயின, பத்து வாக்கியங்களையும் அவளே ஹிந்தியில் எழுதிவிட்டாள். இதில் 80%க்குமேல் அவளுடைய உழைப்புதான், சுமார் 20% நான் உதவியிருப்பேன். அவ்வளவே.

இதைப் பெருமைக்கு எழுதவில்லை. உங்கள் பிள்ளைக்கு ஆங்கிலம்தான் வரும், பிராந்தியமொழிகள் வராது என்று எண்ணாதீர்கள். ஆசிரியர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் குழந்தைக்கு வேண்டிய அடித்தளத்தைத் தந்திருப்பார்கள், அதன்மீது கட்டடம் எழுப்ப நீங்கள் கற்றுத்தரலாம்.

குறிப்பாக, குழந்தைகள்மீது நம்பிக்கைவையுங்கள். தங்களால் என்ன சாத்தியம் என்பது அவர்களுக்கே  தெரியாது. ஆகவே, அவர்களை அதைரியப்படுத்தினால் எதையும் செய்யமாட்டார்கள், தூண்டிவிட்டு ஊக்கம்தந்தால் எதையும் செய்துவிடுவார்கள்.

அவர்களுக்கு உதவுங்கள், ஆனால், Spoon-feeding செய்யாதீர்கள், அவர்களுடைய பணியிலிருக்கும் பிழைகளைத் திருத்திக் கச்சிதமாக்க நினைக்காதீர்கள். செய்த தவறுக்குத் தண்டனை (மதிப்பெண் குறைதல்/ போட்டியில் தோல்வி) உண்டு என்பது அவர்களுக்குப் புரியட்டும், அதனால் துவண்டுவிடாமல் அடுத்தமுறை அப்பிழைகளைப் புரிந்துகொண்டு அவர்களே திருத்தப் பயிற்சி கொடுங்கள்.

எழுதிமுடித்ததும் மங்கைக்குச்சொன்னேன், ‘மங்கை, இது perfect ஹிந்தி இல்லை. பல எழுத்துப் பிழைகள் இருக்கு, இலக்கணப்பிழைகள் இருக்கு. உன் வயசுக்கு அந்தப் பிழைகளெல்லாம் சகஜம். உங்க மேடம் திருத்தும்போது கொஞ்சம் மார்க் குறைஞ்சாலும் கவலைப்படக்கூடாது, இதை நானே எழுதினேன்னு பெருமைப்படணும், அந்தப் பிழைகளைக் கவனிச்சு அடுத்தவாட்டி திருத்திக்கணும். சரியா?’

பெரிதாகத் தலையாட்டினாள். செய்வாளா தெரியாது. ஆனால், ‘எனக்கு ஹிந்தி எழுதவராது, வெறும் மனப்பாடம்தான்’ என்று இன்னொருமுறை சொல்லமாட்டாள், எனக்கு அது போதும்.

Advertisements

Meenakshisundaram PiLLai

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை(உவேசா அவர்களின் ஆசிரியர்)பற்றிப் பேராசிரியர் நாகநந்தி அவர்களின் உரையொன்றைக் கேட்டேன். இப்படியும் ஒரு மனிதர் இருக்கமுடியுமா என்று வியந்துநிற்கிறேன். ஓர் ஆசிரியராக, எழுத்தாளராக அவரது ஆளுமை பிரமிக்கவைக்கிறது. இப்பேர்ப்பட்டவர்கள் எழுதிவந்த மண்ணில் பிறந்ததே நம் பெருமை என்று தோன்றுகிறது.

குறிப்பாக, இந்த உரை வெறும் biography அல்ல. அதிகம் பதிவுசெய்யப்படாத அக்காலகட்டத்தின் முழுமையான அலசலும்கூட.

உவேசா சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவை எப்படித் தொலைந்தன? அவருக்குச் சில தலைமுறைகள் முன்புவரை நன்கு வாசிக்கப்பட்டுவந்த நூல்கள்தானே அவை? எப்படித் தொலைத்தோம்?

சுமார் நூறாண்டு காலத்தில் சங்க இலக்கியங்களை நாம் Just Like That முழுமையாக இழந்த கதையைப் பேராசிரியர் நாகநந்தி விவரிக்கும்போது மறுபடியும் அதே பிழையைச் செய்துவிடுவோமே என்று பயம் வருகிறது. அவ்வாறின்றி இணையம் காக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Bajji

நேற்று வீட்டிலே பஜ்ஜி.

சிறுவயதுமுதல் எனக்கு மிகவும் பிடித்த பண்டம் இதுதான். யாருக்காவது எதற்கேனும் என் தயவு வேண்டுமென்றால் ரெண்டே ரெண்டு பஜ்ஜி, அதுவும் வெங்காய பஜ்ஜியாக வாங்கித்தந்துவிட்டால் போதும். என்ன உதவி கேட்டாலும் செய்துவிடுவேன்.

வயிற்றுச் சுற்றளவின் அதிகரிப்பைக்கருதி நாக்கு நீளத்தைக் குறைத்துக்கொண்டபிறகும், காப்பியைக்கூட சர்க்கரையின்றிக் குடிக்கப் பழகிக்கொண்டபிறகும், இந்த வேர்க்கடலை, பஜ்ஜி ஆசையைமட்டும் கட்டுப்படுத்த இயலவில்லை.

நேற்றுதான் முதன்முறையாக, கைக்கெட்டும் தூரத்தில் சுடச்சுட பஜ்ஜி இருந்தும், அதன் நறுமணத்தால் நாவினில் சில லிட்டர் எச்சிலூறியும் எடுத்து வாயில் போடவில்லை. ராத்திரி தூங்குமுன் எனக்கு நானே ஒரு சபாஷ் சொல்லிக்கொண்டேன்.

ஆனால், இந்தக் கணம்வரை அந்த பஜ்ஜி மனத்திலிருந்து விலகவில்லை. ‘பஜ்ஜியில்லாமல் ஒரு டயட்டா? என்ன கொடுமை சரவணன் இது!’ என்று முருகப்பெருமானைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அதுநிற்க. நான் சும்மா வேடிக்கை பார்த்தவன். மாவு கலந்து, காய்வெட்டித் தோய்த்துப் பொரித்தெடுத்த மனைவியார், ஒரு மணிநேரம் பஜ்ஜிகளுக்கு மிகப் பக்கத்திலேயே இருந்தும் ஒரு பஜ்ஜிகூட சாப்பிடவில்லை. அவருக்கு இரட்டை சபாஷ்.

Ezuththu

எழுத முனைவோருக்கோர் எளிய துப்பு.

எழுத்தினிடையே அவ்வப்போது ஃபேஸ்புக்கைப் பார்ப்பது தவறில்லை. ஆனால், அந்த Tabஐத் திறந்துவைத்துக்கொண்டு இன்னொரு Tabல் எழுதுகிற பழக்கம் வேண்டாம். இதனால் இரண்டு பிரச்னைகள்:

1. எப்போது வேண்டுமானாலும் ஒரே க்ளிக்கில் எழுத்தைவிட்டு நீங்கிவிடுவீர்கள், திரும்ப வரும் நேரம் உங்கள் கையில் இல்லை

2. உங்களுடைய முந்தைய பதிவுக்கு யாராவது ஒரு ஸ்மைலியைப் பதிலாக இட்டுவைப்பார்கள், ஃபேஸ்புக் விசுவாசத்துடன் அதனை ஒலியாக அறிவிக்கும் (notification tone). அதைக் கேட்ட மறுகணம், எழுத்து ஓடாது, அந்த பதில் என்ன என்பதைப் பார்த்தே தீரவேண்டும் என்று தோன்றும். ஃபேஸ்புக் இருக்கும் Tabஐ க்ளிக் செய்வீர்கள், திரும்ப வரும் நேரம் உங்கள் கையில் இல்லை

ஆகவே, இவற்றில் ஏதேனுமொன்றைப் பின்பற்றலாம்:

1. ஃபேஸ்புக்கைத் திறந்து வாசித்ததும், மூடிவிடுங்கள், பிறகு வேண்டியபோது திறந்துகொள்ளுங்கள். கொஞ்சம் அசௌகர்யம்தான், ஆனால் அதுதான் உங்கள் நேரத்தைக் காக்கும்
2. எழுதும்போது கணினியின் ஒலியை நிறுத்திவிடுங்கள் (mute). இதனால் notifications வந்தாலும் உங்கள் கவனம் சிதறாது
3. இணைய இணைப்பில்லாமல் எழுதுங்கள், 200 (அல்லது 500) சொற்கள் எழுதியபின், அதற்குப் பரிசு என 5 நிமிடம் ஃபேஸ்புக் பாருங்கள், இந்த உத்திக்கு ஈடு இணையே கிடையாது

இவ்வளவு சிரமப்பட்டு ஏன் எழுதவேண்டும் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை .

PaththirigaigaL

குமுதம்

ஆனந்த விகடன்

கல்கி

குங்குமம்

இவை எல்லாமே வடமொழிச்சொற்கள்!

அமுதசுரபி, கோகுலம், சிநேகிதி, தினகரனெல்லாம்கூட வடமொழிச்சொற்கள்தாம். ஜன்னல் என்பது பாரசீகச்சொல் என்று படித்த நினைவு, தினத்தந்தியில் ‘தந்தி’ என்பது தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை. தினமணி, தினமலரில் ‘மணி’, ‘மலர்’ ஆகியவை தமிழ்ச்சொற்கள்.

புதிய தலைமுறை, மங்கையர் மலர், கலைமகள் தமிழ்ச்சொற்கள் (கலை/கலா என்பது வடமொழிச்சொல்லா?). முன்பு வந்துகொண்டிருந்த ஞானபூமி என்ற இதழின் பெயர் வடமொழிதான், அதே மணியன் நடத்திய இதயம் பேசுகிறது இதழில் இதயம் வடமொழிச்சொல், சாவி தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை (அப்படியே இருந்தாலும், அது சா.விஸ்வநாதன் என்ற பெயரின் சுருக்கம்தான்!) நக்கீரன் என்பது பெயர்ச்சொல், ஆனாலும் தமிழ்ப்பெயர்.

சிறுபத்திரிகைகள் பரவாயில்லை. காலச்சுவடு (‘காலம்’மட்டும் வடமொழி), உயிர்மை, கணையாழி, தீராநதி (‘நதி’மட்டும் வடமொழி), தடம் (இது வடமொழியோ?) என்று பெரும்பாலும் தமிழ்ச்சொற்கள். குதிரைவீரன் பயணம் என்றுகூட அழகான தமிழ்ப்பெயரில் ஒரு சிற்றிதழ் உண்டு.

இப்படிச் சில எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப்பார்த்தால், தமிழில் பெரிய பத்திரிகைகளின் (இதுவே வடசொல்தான்!) பெயர்கள் பெரும்பாலும் வடமொழிச்சொற்களாக இருப்பது ஏன்? (டைம்பாஸ், ஜூனியர், டாக்டர் என்று ஆங்கிலச்சொற்கள்வேறு! இந்தியா டுடே, தி இந்து போன்றவை Brand Name என்ற வகையில் வருவதால் பரவாயில்லை!)