KuRaL SoRkaL

திருக்குறள் நூல்கள் நிறைய விற்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலும் உரைப்பகுதிதான் வாசிக்கப்படுகிறது. (சிலர் அதையும் வாசிப்பதில்லை!)

உரையைப் படித்துக் கருத்துகளைப் புரிந்துகொண்டு மனத்தில் ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்தான். ஆனால், உரையைபடித்தபிறகு, குறளையும் ஒருமுறை படித்துப்பார்ப்பது மிகவும் நல்லது, ஒவ்வொரு குறளிலும் ஏழெட்டுச் சொற்கள்தாம். ஆனால், அவற்றில் நாம் கற்றுக்கொள்வதற்கு ஒரு பழந்தமிழ்ச் சொல்லேனும் இருக்கும்.

உதாரணமாக, ஒரு குறள்:

செவி கைப்பச் சொல்பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு

ஓர் அரசனைப் பிறர் விமர்சிக்கும்போது, அச்சொற்கள் காதில் கசப்பாக விழும், ஆனால், அவன் கோபப்படக்கூடாது, சரியான விமர்சனங்களை எடுத்துக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

அத்தகைய அரசனின் வெண்கொற்றைக்குடைக்குக்கீழே, உலகம் விரும்பித் தங்கும்!

இங்கே கைப்ப என்ற சொல், ‘கசக்க’ என்ற பொருளில் வந்திருக்கிறது (கைத்தல் => கசத்தல், கைப்பு => கசப்பு).

கவிகை என்றால், குடை. இங்கே அரசனின் வெண்கொற்றக்குடையைக் குறிக்கிறது.

Advertisements

Travel

வெளியூர் செல்லும்போது என்னவெல்லாம் கொண்டுசெல்லவேண்டும் என்று மரபுக்கவிதையில் பாரதிதாசன் பட்டியலிட்டுள்ளார்.

சீப்பு, கண்ணாடி, ஆடை, சிறுகத்தி, கூந்தல் எண்ணெய்,
சோப்பு, பாட்டரி விளக்கு, தூக்குக் கூஜா, தாள், பென்சில்,
தீப்பெட்டி, கவிகை, சால்வை, செருப்பு, கோவணம், படுக்கை,
காப்பிட்ட பெட்டி, ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.

இன்றைக்கு இதனை எழுதினால், செல்பேசியும் சார்ஜரும் சேர்க்கவேண்டும், பாட்டரி விளக்கும் செல்ஃபோனிலேயே வந்துவிடும், தூக்குக்கூஜாவுக்குப்பதில் மினரல் வாட்டர், ரூபாய்க்குப்பதில் டெபிட்/கிரெடிட் கார்ட்/Travellers’ Cheque… மற்றபடி பட்டியல் கனகச்சிதம்!

PeRalaagaa

மரபுக்கவிதைகளை வாய்விட்டுப்படிப்பது நல்லது, அவற்றிலிருக்கும் சந்த அழகுக்காகமட்டுமல்ல, உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்கள் பாடினால்தான் புரியும், ஓர் அலாதியான அனுபவத்தைத் தரும்.

அதனால்தான் மரபுக்கவிதை எழுதியவர்களைப்பற்றிச் சொல்லும்போது, ’பாடினார்’ என்கிறோம். அந்த உணர்வுகள் சொற்களிலேயே பொதிந்திருக்கும், அதைக் குரலெழுப்பி வாசித்தால்தான் புரியும்.

உதாரணமாக, சுந்தரமூர்த்தி நாயனாரின் ஒரு பாடலின் முதல் ஒன்றரை வரிகளைமட்டும் தருகிறேன்:

’நாயேன், பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னை,
பேயாய்த் திரிந்தெய்த்தேன்.’

எளிய வரிகள்தாம். தனியே பொருள்சொல்லவேண்டியிருக்காது. ‘எய்த்தேன்’ என்ற ஒரு சொல்மட்டும் கொஞ்சம் குழப்பும், அதற்கு ‘இளைத்தேன்/வாடினேன்’ என்று பொருள்.

நாய்போன்ற நான், பலநாளாக மனத்தில் உன்னை நினைக்காமல் பேயாகத் திரிந்தேன், இளைத்தேன் (வாடினேன்).

இப்படி இரக்கவுணர்வோடு நிற்கும் பாடல், அடுத்த இரு சொற்களில் எப்படி எழுச்சிபெறுகிறது பாருங்கள்:

‘பெறலாகா அருள்பெற்றேன்.’

யாருக்கும் கிடைக்காத அருளை நான் பெற்றேன் என்றுதான் சுந்தரர் சொல்கிறார், ஆனால், முதல் ஒன்றரை வரிகளோடு இதை வாசிக்கும்போது, “இப்படி இறைவனை நினைக்காமல் திரிந்தாலும் நான் அருள்பெற்றேன்” என்று நாம் சேர்த்துப் புரிந்துகொள்கிறோம். இந்த வரிகளில் இறைவனைப்பற்றிய எந்த வர்ணனையும் இல்லை, ஆனாலும், பிழைபொறுப்பவன், பெரும்பரிசு தருபவன் என்கிற குணங்கள் புரிந்துவிடுகின்றன.

இப்போது, முழுவதுமாக, சத்தமாகப் படித்துப்பாருங்கள். அந்த ‘பெறலாகா’ என்ற வரியில் தானாக உங்கள் குரல் நெகிழ்ந்துபோகும், சுந்தரர் சொல்லாத உணர்வுகளெல்லாம் அங்கே கொட்டும்:

’நாயேன், பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னை,
பேயாய்த் திரிந்தெய்த்தேன், பெறலாகா அருள்பெற்றேன்.’

தாக்குதல்

அவன் திடகாத்திரமாக இருந்தான், அவள் நோஞ்சானாகத் தென்பட்டாள். அவன் சிகரெட்டை இடக்கைக்கு மாற்றிக்கொண்டு, முகத்தில் ஆவேசத்துடன் அவளுடைய கையை முறுக்கி, தோள்பட்டையில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.

அவள் துடித்துக் கீழே அமர்ந்தாள், ‘அம்மா’ என்று அலறினாள்.

இது நிகழ்ந்தது பூங்காவின் ஒருமுனையில். அப்போது நானும் இன்னொருவரும் பூங்காவின் மறுமுனையில் நடந்துகொண்டிருந்தோம். எங்கள் நால்வரைத்தவிர வேறு யாரும் அந்தப் பூங்காவில் இல்லை.

சரியாகச் செங்கோணத்தில் திரும்பும்போது, நான் எதேச்சையாக அந்தத் தாக்குதலைப் பார்த்துவிட்டேன். என்னருகே இருந்தவரும் சத்தம்கேட்டுத் திரும்பினார். இருவரும் அவர்களை நோக்கி ஓடத்தொடங்கினோம்.

பெங்களூரில் அநேகமாக எல்லாப் பூங்காக்களும் மிகநீளமானவை. ஒரு சுற்று என்பது கிட்டத்தட்ட அரைகிலோமீட்டர் இருக்கும். ஆகவே, அரைச்சுற்றுக்குக் குறைந்தது மூன்று நிமிடங்கள் தேவைப்படும்.

அவர்களைப் பார்த்துக்கொண்டே ஓடிய அந்த மூன்று நிமிடங்களுக்குள், எங்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் சிந்தனைகள் ஓடியிருக்கும்: யார் அந்தப்பெண், யார் அவன், காதலர்களா, இருவருக்குமிடையே சண்டையா? காலை எட்டரைக்கு, அதுவும் ஆளில்லாத பூங்காவில் சந்திக்கவேண்டிய அவசியமென்ன? இப்படிக் கையை முறுக்கிக் குத்தவேண்டிய அளவுக்கு அவனுக்கு அவள்மீது என்ன கோபம்? இந்த உள்சாலையில் உடல் இளைக்க நடக்கிறவர்கள், அலுவலகத்துக்குச் செல்கிறவர்கள்தவிரப் பெரும்பாலும் ஆள்நடமாட்டமே இருக்காதே, இங்கே அவன் அவளை வெட்டிப்போட்டாலும் காப்பாற்ற ஆளிராதே, நாங்கள் அவர்களை நெருங்குவதற்குள் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமா? ஒருவேளை அவன் எங்களைத் தாக்குவானா? உதவிகேட்டுக் கத்தியபடி அவர்களை நெருங்கவேண்டுமோ? கர்நாடகத்திலும் அவசரபோலிஸ் எண் 100தானா?

இப்படிப் பலவிதமாக யோசித்தபடி நாங்கள் அங்கே சென்றுசேர்ந்தால், அவர்கள் இருவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். எதுவுமே நடக்காததுபோல் அவள் அவனுடைய தோளில் சாய்ந்து காதல் பேசிக்கொண்டிருந்தாள்.

குழப்பத்தோடு அலுவலகம் வந்தேன். அந்தப்பெண்ணின் இரு முகங்களும் (தாக்குதலால் துவண்ட முகமும், காதலால் நிரம்பிய முகமும்) அவனுடைய மாறாத முரட்டுமுகமும் என் நெஞ்சைவிட்டு நகரவே இல்லை. இந்த நிகழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?