Malarnthum Malaraatha…

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழிவண்ணமே, வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலையன்னமே.

கவிஞரின் வரிகளை எளிமை என்று பார்த்தால் எளிமை, அழகு என்று பார்த்தால் அழகு, சில சொற்களை இழந்தபின் கடினம் என்று பார்த்தால் கடினம்தான்.

இன்றைக்கு நாம் ‘கண்வளர்தல்’ என்ற சொல்லை எழுத்தில்கூடப் பயன்படுத்துவதில்லை, ‘வண்ணம்’ என்றால் நமக்கு ‘நிறம்’தான், அதற்கு ‘அழகு’/’தன்மை’ என்ற பொருளும் உண்டு என்பது கொஞ்சம் யோசித்தால்தான் புரியும். ஆகவே, தூங்கப்போகும் குழந்தையைப்பார்த்து ‘வளரும் விழிவண்ணம்’ என்று பாடுகிற பயன்பாட்டின் அழகு முழுமையாகப் புரியப்போவதில்லை. ‘லிரிக்ஸ் டிஃபிகல்ட்டா இருக்கு, சிம்பிளா இருந்தா அண்டர்ஸ்டாண்ட் ஆகும்’ என்று சொல்லிவிடுகிறோம். இது கண்ணதாசனின் குற்றமா? 🙂

அதுநிற்க. மேற்கண்ட அழகிய வரிகளுக்கான ஊக்கத்தைக் கண்ணதாசன் பதினொன்றாம் திருமுறையிலிருந்து பெற்றுள்ளார் என்பது என் ஊகம். கபிலதேவரின் அந்த வரிகள்:

‘மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்

புலர்ந்தும் புலராதபோதும் கலந்திருந்து

கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்புஎளியன்

தெள்நீர் சடைக்கரந்த தே.’

சிவனைக் காண்பது சிரமம் என்று யார் சொன்னது?

மலர்ந்த மலர்களைத் தூவி, மனத்தை (அவனிடம்) குவித்து, பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் எழுந்து அவனுடன் கலந்துவிடவேண்டும், கண்களில் நீர் அரும்பவேண்டும், மனம் கசியவேண்டும்.

தெளிந்த நீர்கொண்ட கங்கையைச் சடையில் மறைத்துவைத்த அந்த இறைவன், காட்சிக்கு எளியன்தான், இத்தகைய பக்தர்களுக்கு அவன் எளிதில் தென்படுவான், அருள்புரிவான்.

Advertisements

Thiruththam

மதிய உணவு நேரம், வாட்ஸாப்பில் இரண்டு படங்கள் வந்தன: கையால் எழுதப்பட்ட இரு தாள்கள் அவை.

அவற்றை அனுப்பிய நண்பர் ஒரு பதிப்பகத்தில் பணிபுரிகிறார். அவர்கள் பதிப்பித்திருக்கும் ஆங்கிலச் சிறுவர் நூலொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புதான் அது.

‘இந்த மொழிபெயர்ப்பு எப்படியிருக்கிறது?’ என்று கேட்டிருந்தார் நண்பர், ‘இதைப் பிரசுரிக்கலாமா, வேறு மொழிபெயர்ப்பாளரைப் பார்க்கவேண்டுமா?’

மூன்று நிமிடங்களில் அந்தத் தாள்களைப் படித்துவிட்டேன். சுமாரான மொழிபெயர்ப்புதான். ஆங்காங்கே எழுத்துப்பிழைகள், நிறைய இலக்கணப்பிழைகள், சில இடங்களில் ஆங்கிலச்சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதியிருந்தார். ஆகவே, ‘சுமார்’ என்று பதில் அனுப்பினேன்.

‘அப்படியா? நிராகரித்துவிடலாமா?’ என்று கேட்டார் நண்பர்.

‘கண்டிப்பாக நிராகரித்துவிடுங்கள்’ என்று பதில் அனுப்பிவிட்டுச் சாப்பிடச்சென்றேன்.

வழியெல்லாம் ஒரே யோசனை. அந்த மொழிபெயர்ப்பு நிராகரிக்கப்படவேண்டியதா? ஆம் எனில், எந்த அளவுகோலில்?

இன்றைய வெகுஜனப் பத்திரிகைகள், இணையத்தளங்கள், தொலைக்காட்சி சானல்களை அளவுகோலாகக்கொண்டால், அந்த மொழிபெயர்ப்பை நிச்சயம் நிராகரிக்கமுடியாது. பல நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், ஏன், எழுத்தாளர்களே அப்படி இலக்கண, எழுத்துப் பிழையோடுதான் எழுதுகிறார்கள். அவற்றைச் சரிசெய்யவேண்டியது ஆசிரியர் (editor) அல்லது மெய்ப்புத்திருத்தரின் (Proof reader) வேலையாகிறது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அந்த மொழிபெயர்ப்பு நிச்சயம் நிராகரிக்கப்படவேண்டியதல்ல, கொஞ்சம் திருத்தவேண்டியிருக்கும், அவ்வளவுதான்.

சட்டென்று நண்பரை அழைத்தேன், ‘அதை நிராகரித்துவிடாதீர்கள்’ என்று இந்தப் பின்னணியை விளக்கினேன். என்னுடைய அவசரமான தீர்மானத்துக்காக மன்னிப்புக்கோரினேன்.

‘ஐந்து நிமிடத்தில் உங்கள் அளவுகோல் மாறிவிட்டதா?’ என்று வியப்போடு கேட்டார் நண்பர்.

‘அளவுகோல் மாறவில்லை, என்னளவில் அந்த மொழிபெயர்ப்பை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்’ என்றேன், ‘ஆனால், அம்மொழிபெயர்ப்பைச் செய்தவர் எதைத் தர அளவுகோலாகக்கொண்டு மொழிபெயர்த்திருப்பார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதனைப் பரிவோடு அணுக நினைக்கிறேன்.’

‘நாளைக்கு நான் உங்களிடமே இந்த மொழிபெயர்ப்பைத் திருத்தக்கொடுத்தால் என்ன செய்வீர்கள்?’ அவர் குறும்பாகக் கேட்டார்.

‘உங்களைக் கண்டபடி திட்டிக்கொண்டே திருத்திக்கொடுப்பேன்’ என்றேன் புன்னகையோடு. ‘அதன்பிறகு, அந்த மொழிபெயர்ப்பாளர் அதைப்பார்த்துக் கற்றுக்கொண்டால் மகிழ்ச்சி. பிழையில்லாமல் எழுதுகிறவர்கள் யாருமில்லையே!’

அப்போதுதான் நண்பர் அந்த விஷயத்தைச் சொன்னார், ‘இந்தக் கதையை மொழிபெயர்த்தவர், அந்தக் கதாசிரியரின் தாய். ஆகவே, இதை எப்படி நிராகரிப்பது என்று புரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை, காப்பாற்றினீர்கள்!’

’கதாசிரியரின் தாய் என்பதால் அல்ல, படைப்பைப் படைப்பாகதானே பார்க்கவேண்டும்’ என்று நான் சொல்லவில்லை. தன் மகளி(னி)ன் படைப்பைத் தானே மொழிபெயர்த்து வெளியிடும் பரவசத்தை, ஐம்பது/அறுபது வயதில் தன் பெயரை முதன்முறையாக அச்சில் பார்க்கும் மகிழ்ச்சியை அவருக்கு மறுக்கவிருந்தேனே என்று அதிர்ச்சியடைந்தேன்.

மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எப்போதோ என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, ‘நிராகரிப்பது என்ற உரிமை ஓர் எடிட்டர் கையில் இருப்பினும், திருத்திச் சரிசெய்வதில்தான் அதிகப்பெருமை. அதன்மூலம் அவர்கள் ஓர் எழுத்தாளரையே உருவாக்கமுடியும்.’

ஆசிரியர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்களுக்கெல்லாம்கூட இது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

VetRiyum Tholviye

‘சூது என்று சூது செய்யாதே’ என்கிறார் நம்மாழ்வார்.

அதென்ன ரெட்டைச்சூது என்று அகரமுதலியைப் புரட்டினேன். ‘சூது’ என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருளும் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்.

ஆக, ‘சூது என்று சூது செய்யாதே’ என்றால், வெற்றி பெறலாம் என்றெண்ணிச் சூதாடாதே என்று பொருள். இதைத் திருவள்ளுவரும் சொல்கிறார்:

வேண்டற்க, வென்றிடினும் சூதினை. வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கியற்று.

சூதாட்டத்தில் வென்றாலும் பரவாயில்லை, அந்த ஆட்டத்தில் ஈடுபடாதீர்கள். அதில் நீங்கள் பெறும் வெற்றி, தூண்டிலில் இருக்கும் உணவை உண்ட மீனின் வெற்றியைப்போலதான்.

தூண்டிற்பொன்: என்ன அழகான சொல். இங்கே பொன் என்பது தங்கம் அல்ல, இரும்புதான். பொன் என்றால் இரும்பு என்ற பொருளும் உண்டு.

Ezuthuthal, Edit Seythal

எழுதுவது வேறு மனோநிலை. எடிட்டிங் என்பது முற்றிலும் வேறு மனோநிலை, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்போது வேகமும் கெடும் தரமும் கெடும், ரயிலில் இருந்து இறங்கி, பிளாட்ஃபாரத்தில் நூறு மீட்டர் பின்னோக்கி நடந்துவிட்டு மறுபடி ரயிலில் ஏறுவதுபோல.

ஆகவே, எழுதி முடித்துவிட்டு எடிட்டிங்தான் சிறந்தது.

ஆனால், அதற்கு ஒரு ஜென் மனோநிலை வேண்டும். நாம் எழுத எழுத, அதில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், தவறான வாக்கிய அமைப்புகள், இன்னும் மேம்படுத்தக்கூடிய விஷயங்கள் என்று சரியைவிடத் தவறுதான் அதிகமாக இருக்கும், முந்தின சொல், முந்தின வாசகம், முந்தின பத்தியில் இருக்கும் அபத்தமெல்லாம் இப்போது கண்ணுக்குத் தெரியும், அதை உடனே சரி செய்துவிடக் கை துடிக்கும், புஜமெல்லாம் படபடக்கும், அதற்கு மயங்கி Backspace அழுத்தினால் மாட்டினீர்கள். மறுபடி திரும்ப வரவேண்டும். அது பேரவஸ்தை.

எழுதும்போது Backspace அழுத்தமுடியாதபடி, முந்தைய வாசகங்கள் (ஓரளவுக்குமேல்) கண்ணில் தெரியாதபடி ஒரு சாஃப்ட்வேர் இருந்தால் நன்றாயிருக்கும். முழுக்க எழுதியபிறகுதான் எடிட்டிங்கை அனுமதிக்கவேண்டும். இப்படியொரு மென்பொருளில் எழுதினால் வழக்கத்தைவிட இருமடங்கு வேகமாகவும் தரமாகவும் எழுதலாம் என்பது என்னுடைய ஊகம்.

இதற்கு சாஃப்ட்வேரெல்லாம் வேண்டியதில்லை, தியானம் பழகினால் இதை மூளைக்குச் சொல்லித்தந்துவிடலாம் என்கிறார்கள். நிஜமோ பொய்யோ நானறியேன்.

Aasiriyar Dhinam

சிறுவயதிலிருந்தே எனக்கு ஒரே ஆசை, ஆசிரியராகவேண்டும் என்பதுதான். காலப்போக்கில் டாக்டர், எஞ்சினியர் என்ற வழக்கமான கனவுகளெல்லாம் சமூகத்தால் வந்தன, ஆனால், ஆசிரியப்பணிமீதிருந்த கவர்ச்சி குறையவில்லை.

காரணம், சேவையுமில்லை மண்ணாங்கட்டியுமில்லை, ‘ஆசிரியரானால் மாணவர்களை இஷ்டம்போல் அடிக்கலாம், ஒரு பய கேள்வி கேட்கமுடியாது’ என்கிற எண்ணம்தான்.

இத்தனைக்கும் எந்த ஆசிரியரும் என்னை அடித்ததில்லை. ஆகவே, இது பழிவாங்கும் எண்ணமில்லை, என்னவோ, அந்தவயதில் இப்படியொரு Sadist விருப்பம் அமைந்துவிட்டது.

எந்த மாணவர் செய்த புண்ணியமோ, எனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம்கிடைத்தது, பாதைமாறிப்போனேன்.

ஆனாலும், ஆசிரியனாக எனக்கு இரு வாய்ப்புகள் கிடைத்தன.

ஒன்று, கல்லூரி விடுதியில் ஒவ்வொரு தேர்வின்போதும் குறைந்தபட்சம் ஏழெட்டு மாணவர்களாவது என்னிடம் பாடம்கேட்பார்கள். வருடத்தின் மற்ற முன்னூற்றுச்சொச்ச நாள்கள் என் பக்கமே வரமாட்டார்கள்.

அந்த மாணவர்களெல்லாம் என்னைப்போல் தமிழ்வழிக்கல்வி பயின்றவர்கள். பொறியியல் நூல்களெல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால், அவற்றைத் தமிழ்ப்படுத்தி அவர்களுக்குச் சொல்லித்தரும் வேலை என்னுடையது. நானே அப்படிதான் படிப்பது வழக்கம் என்பதால், இது ஒரு சுமையாக இல்லை.

இரண்டாவதாக, பணிநிமித்தமாக உலகெங்கும் சுற்றிச் சில ஆயிரம் இளைஞர்களுக்குப் பாடமெடுத்திருக்கிறேன். ஐம்பது, அறுபது தாண்டிய முதியவர்களும்கூட என் வகுப்பில் இருந்ததுண்டு.

ஆசிரியப்பணி என்பது வெறுமனே பாடமெடுப்பதல்ல, அது மிகவும் பரந்து விரிந்தது, ஒவ்வொரு மாணவர்மீதும் காட்டுகிற தனித்துவமான அக்கறையில்தான் அது தொடங்குகிறது. இதைச் செய்கிறவரை Transformational Teacher என்கிறார்கள், செய்யாதவரை வெறும் Transactional Teacher என்கிறார்கள்.

அந்தவிதத்தில், நான் வெறும் Transactionalதான். வெறுமனே பாடத்தில்மட்டுமே கவனம் செலுத்தி, அதைப் புரியும்வண்ணம் விளக்குவதில்மட்டுமே திருப்தியடைகிறவன். எனக்கு வகுப்பறைதான் பரவசம், மாணவர் நலன் அல்ல.

இதற்குமாறாக, எனக்குப் பாடம் நடத்திய, என்னோடு பணிபுரிந்த பலர் Transformational Teachersஆக இருந்திருப்பதை வியப்போடு பார்த்திருக்கிறேன், அவர்களால் பலர் வாழ்ந்ததைக் கண்ணெதிரே கண்டுள்ளேன், அவர்களை என்றும் மரியாதையோடு நினைக்கிறேன்.

எதையும் கேள்விகேட்கும் இன்றைய சமூக ஊடகங்களில், இன்றைய ‘ஆசிரியர் தின’ப் பதிவுகளும் விமர்சனத்துக்குள்ளாகின்றன. ‘ஆசிரியர்களெல்லாம் என்ன உசத்தியா? ட்யூஷன்ல சம்பாதிக்கறாங்க, மாணவரைத் திட்டறாங்க, வகுப்புல தூங்கறாங்க’ என்ற தொனியில் பல பதிவுகளைப் பார்க்கிறேன்.

அப்படிச் சிலர் இருப்பது உண்மைதான், அவர்களே பெரும்பான்மையாகக்கூட இருக்கலாம், ஆனால் அதற்காக மீதமுள்ள, உண்மையான அக்கறையிருக்கும் ஆசிரியர்களைக் கொண்டாடாமலிருக்கவேண்டாமே.

‘Leader Without A Title’ என்றொரு பிரபலமான புத்தகம் உண்டு. அதுபோல, ‘ஆசிரியர்’ என்ற பதவியோடும், அந்தப் பதவி இல்லாமலேயும் சொல்லித்தந்து பலரை ஆளாக்கினோர் லட்சக்கணக்கில் உண்டு, அவர்களால் வாழ்வோர் கோடிக்கணக்கில்.

கார்ப்பரேட் மொழியில் சொன்னால், Gratitude is a great virtue, நம் மொழியில் சொன்னால், நன்றி மறப்பது நன்றன்று.

PuLLigaL

இன்று காலை ஒரு மின்னஞ்சல்:

‘அன்புடையீர், நேற்று நீங்கள் மொழிபெயர்த்து அனுப்பிய ஆவணத்தில் நிறைய அநாவசியமான புள்ளிகள் இருக்கின்றன. அவற்றைச் சிவப்பில் குறித்திருக்கிறோம், உடனே நீக்கித்தருமாறு வேண்டுகிறோம்.’

‘அநாவசியமான புள்ளிகள்’ என்ற வாசகத்தின் அழகை ரசித்தபடி அந்த ஆவணத்தைத் திறந்தேன். பல இடங்களில் சிவப்புக்குறிகள்.

ஆனால், அவை அத்தனையும், ‘ஃபேஸ்புக்’ என்ற சொல்லின் தொடக்கத்திலுள்ள ‘ஃ’ என்ற எழுத்து :))))))))

அந்த இந்திக்கார வாடிக்கையாளருக்கு இப்படிப் பதிலனுப்பினேன்:

‘நண்பரே, அவை அநாவசியப் புள்ளிகள் அல்ல, ஆய்தப்புள்ளிகள், மூன்றே புள்ளிகளைமட்டும் கொண்ட ஓர் எழுத்து தமிழில் நிஜமாகவே இருக்கிறது. சிவப்பை நீக்கிவிட்டு ஆவணத்தைச் சிலாகிக்கவும்.’