Padamaadum Koyil

‘படமாடும் கோயில்’ என்று ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துகிறார் திருமூலர்.

இதன் பொருள்: பாம்பு படமெடுத்து ஆடும் கோயில் என சிவனை எண்ணலாம், அல்லது, தெய்வ உருவங்கள் அமைந்த ஆலயம் எனவும் எண்ணலாம்.

நடமாடும் கோயிலான மனிதர்களுக்கு அன்பு/நன்மைசெய்தால், அது படமாடும் கோயில் இறைவனுக்குச் சேருமாம்:

படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா,
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்,
படமாடும் கோயில் பகவற்கு அஃது ஆமே.

Advertisements

Urai VeNdaam

பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்க விரும்புவோருக்கு ஒரு துப்பு.

தொடக்கநிலையில், பாடல்களை உரையோடு படிப்பதுதான் சிறந்தது. ஆனால், அங்கேயே நின்றுவிடாதீர்கள். அதற்கு வெறுமனே உரையைப் படித்துவிட்டுப்போகலாம். பாடல்களையும் சுவைக்கவேண்டும். உண்மையில் அங்கேதான் சுவை அதிகம். அவற்றை வாசிக்கும்போதே பொருள் புரிந்தால் இன்னும் இன்பம்.

ஒப்பீட்டளவில் அது கடினம்தான். ஆரம்பத்தில் பாடல்களை வாசித்தால் ஒன்றுமே புரியாது. ஆனால் அந்நிலை மெல்ல மாறும்.

அதிகம் வேண்டாம், திருக்குறளில் தொடங்கலாம், ஒரு பாடலில் அதிகபட்சம் ஒன்பது, பத்து சொற்கள்தாம். அவற்றில் ஆறு முதல் ஏழு சொற்கள் நமக்குப் புரியாது. உரையைப் படித்தால் ஒருமாதிரி குத்துமதிப்பாகப் புரியும்.

ஒரு தமிழ்:தமிழ் அகராதி(அகரமுதலி)* வாங்கிக்கொள்ளுங்கள். புரியாத சொற்களில் ஒன்றுக்கேனும் பொருள் தெரிந்துகொண்டு, அதை உரையோடு பொருத்திப் புரிந்துகொண்டு, பிறகு அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்.

நாளடைவில், பத்தில் ஐந்து சொற்கள் நமக்குப் புரிய ஆரம்பித்துவிடும். சில சொற்களைத் திருவள்ளுவர் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவார், அவற்றுக்கு அகரமுதலியைப் பார்க்கமாட்டோம், வேறு கடினமான சொற்களைப் பார்ப்போம், ஒருகட்டத்தில் உரை படிக்காமலே குறள் புரியும்.

இதை உறுதியோடு சொல்கிறேனேதவிர, எனக்கு இன்னும் திருக்குறளையே உரையில்லாமல் படிக்க வராது. அதற்கு என் பயிற்சிக்குறைவுதான் காரணம். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் மெல்ல ஒருநாள் உரை தேவைப்படாத நிலையை எட்டலாம் என்பது என் துணிபு.

உரையிலா நிலையே பேரின்பம் என்கிறார்கள் பெரியோர் 🙂

* நல்ல அகரமுதலிக்கு என் சிபாரிசு: கழகத் தமிழ் அகராதி, ஆனால் அது இப்போது அச்சில் உள்ளதா என அறியேன். ஒருவேளை அச்சில் இல்லாவிட்டால், இணையத்தைப் பயன்படுத்துங்கள், எல்லாக் கடினமான சொற்களுக்கும் அங்கே பொருளுண்டு.

Kadai

பிரபல வேட்டிக்கடை. நான் சென்றது பனியன் வாங்க.

கடைக்காரர் என் கழுத்தில் ஐடி பட்டையைப் பார்த்ததும், சட்டென்று விலையுயர்ந்த ஒரு ரகத்தை எடுத்துப்போட்டார்.

‘இது புதுசா இருக்கே, வழக்கமா வாங்கற பிராண்டே கொடுங்க’ என்றேன்.

‘சார், இது ப்ரீமியம் மாடல்’ என்றார் அவசரமாக.

‘இருக்கட்டும், நீங்க என் மாடலே கொடுங்க’ என்றேன். என்னை வேண்டாவெறுப்பாகப் பார்த்துவிட்டு அதை எடுத்துப்போட்டார்.

இருநூறு ரூபாய் பனியனைவிட, நூறு ரூபாய் பனியனில் லாபம் குறைவாகதான் வரும் என்பது புரிகிறது, அந்த வெறுப்பை ஏன் வாடிக்கையாளர்களிடம் காட்டவேண்டும்? இரண்டும் இவர்கள் தயாரிப்புதானே? நூறு ரூபாய்த் தயாரிப்பை வாங்கவும் வாடிக்கையாளர்கள் வருவார்கள்தானே, அவர்களுக்காகவும்தானே அக்கடை?

Thuzhaa

‘சிறுகுரங்கின் கையால் துழா’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு என்ன பொருள்?

இதன் நேரடிப்பொருள்: சிறு குரங்கு தன் கையால் துழாவுதல்/தேடுதல்.

’பழமொழி நானூறு’ நூலில் இந்தப் பழமொழி பயன்பட்டுள்ளது. இதற்கு (நான் வாசித்த) உரையாசிரியர்கள் தரும் பொருள்: சூடாக உள்ள கூழைப் பெரிய குரங்கு தானே தன் கையால் துழாவாமல், சிறிய குரங்கின் கையை வைத்துத் துழாவுவதுபோல… பகைவனோடு நேரடியாக மோதாமல் இன்னொருவரைப் பயன்படுத்தி வெல்லுவது புத்திசாலித்தனம்.

இப்பொருள் எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு தாய்க்குரங்கு பிள்ளையைப் பயன்படுத்துமா என்ன? ‘மகனே, நீ இந்தக் கொதிக்கிற கூழில் கையை விடு’ என்று சொல்லுமா?

முதலில், குரங்கு கூழ் சமைக்குமா என்ன? எனக்குத் தெரிந்து பழமொழிகளைச் சொன்ன எளிய மனிதர்கள் மிகவும் எதார்த்தமாகவும் பொருத்தமாகவும்தான் அவற்றை அமைப்பார்கள். இல்லாவிட்டால் அவை பல தலைமுறைகளுக்கு வாய்வழியாகவும் சிந்தனையிலும் பரவா.

இன்னொரு விஷயம், பழமொழி நானூறு வெண்பாவிலும் கூழ் இல்லை:

‘இயல்பகை வெல்குறுவான் ஏமாப்ப, முன்னே
அயல்பகை தூண்டி விடுத்து ஓர் நயத்தால்
கறுவழங்கிக் கைக்கு எளிதாய்ச் செய்க, அதுவே
சிறுகுரங்கின் கையால் துழா.’

ஆகவே, இந்தப் பழமொழிக்கு வேறு ஏதோ பொருள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாக:

தாய்க்குரங்கு ஏதோ வேலையாக இருக்கிறது. அப்போது ஃபோன் வருகிறது, ‘மகனே, அந்த ஃபோனை எடுத்து யாருன்னு பாரு’ என்று சொல்கிறது. மகன் குரங்கு அதன்படி ஃபோனை எடுத்துப் பேசி பதில் சொல்லிவிடுகிறது.

ஆக, தாய்க் குரங்கின் முதல் வேலை பாதிக்கப்படவில்லை, அதேசமயம், நடுவே வந்த இன்னொரு வேலையையும் அது அலட்சியப்படுத்தவில்லை, மகன் குரங்கின் கையால் (உதவியால்) துழாவி (ஆராய்ந்து) அந்த வேலையையும் செய்துவிடுகிறது.

அதுபோல, அரசர்கள் தங்கள் நாட்டைக் கவனிக்கலாம், யாராவது பகைவர்கள் வம்புக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு அதைக் கவனிக்கவேண்டியதில்லை, இன்னொருவனை அவர்களுக்கு எதிரியாக்கிவிடலாம், அதன்மூலம் நாம் சுண்டுவிரலைக்கூட நகர்த்தாமல் (கைக்கு எளிதாய்) அந்தப் பகைவனை வென்றுவிடலாம்.

இந்தப் பொருள் பொருந்துகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

UyarthiNai, AgriNai

நண்பர் ஹரன் பிரசன்னா ஒரு சுவையான கேள்வியைக் கேட்டிருந்தார்:

1. ’பூனையும் அவரும் வந்துகொண்டிருந்தார்கள்’
2. ‘பூனையும் அவரும் வந்துகொண்டிருந்தன’

இவற்றில் எது சரி?

பூனையும் நாயும் என இரண்டுமே அஃறிணையாக வந்தால், ‘பூனையும் நாயும் வந்துகொண்டிருந்தன’ என்று முடிக்கலாம்.

அவரும் இவரும் என இரண்டுமே உயர்திணையாக வந்தால், ‘அவரும் இவரும் வந்துகொண்டிருந்தார்கள்’ என்று முடிக்கலாம்.

ஆனால், இங்கே, பூனை என்பது அஃறிணை, அவர் என்பது உயர்திணை. இவை கலந்து வரும்போது வாக்கியத்தின் நிறைவில் உள்ள வினைச்சொல் எப்படி அமையவேண்டும்?

தொல்காப்பியம் இப்படிச் சொல்கிறது:

‘பலவயினானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யுள் உள்ளே.’

அதாவது, திணைகள் விரவி (கலந்து) வரும்போது, அவை பெரும்பாலும் அஃறிணையாக முடியும்.

ஆக, இந்த வாக்கியத்தில் பூனையோடு அவரையும் அஃறிணையாகவே கருதி முடிக்கவேண்டும்: ‘பூனையும் அவரும் வந்துகொண்டிருந்தன’ என்று எழுதுவதுதான் பெரும்பான்மை வழக்கம்.

அதேசமயம், ‘பலவயினானும்’ என்று சொல்வதால், ‘சிலவயினானும்’, அதாவது, சில நேரங்களில் உயர்திணையிலும் முடிக்கலாம் என்று பொருள். அது பிழையல்ல. Flexibility உண்டு.

ஆகவே, அவரோடு பூனையையும் உயர்திணையாகக் கருதியும் முடிக்கலாம். ‘பூனையும் அவரும் வந்துகொண்டிருந்தார்கள்’ என்று சொல்வதும் சரியே.

மேற்கண்ட வாக்கியங்கள் 1, 2 : இரண்டுமே சரி என்கிறார் தொல்காப்பியர்.

Ayal

’அயல்’ என்றால் என்ன?

இது எல்லாருக்கும் தெரிந்த சொல்தான். ‘அயல்நாடு’ என்று மிக இயல்பாகப் பயன்படுத்துகிறோம். ‘வெளிநாடு’ என்று பொருள்.

ஆக, ‘அயல்’ என்றால் வெளியே அல்லது வேறு: நாம் அல்ல, நம்முடையது அல்ல:

* அயல் மாந்தர்: மற்றவர்கள்
* அயல் கிரகம்: வேற்றுக்கிரகம்
* அயல் மகரந்தச் சேர்க்கை: பிற மலர்களிலிருந்து வரும் மகரந்தம் சேர்தல்
* அயல் வழி: வேற்று வழி

மாணிக்கவாசகர் பாடுவார்:

‘திருப்பெருந்துறை உறை சிவனே,
ஆர் உறவு எனக்கு இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!’

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, ஆனந்தம் தரும் என் சோதியே, இந்தப் பூமியில் எனக்கு யார் உறவுக்காரர்கள்? யார் அயலில் (வெளியில்) உள்ளவர்கள்?

வியப்பான விஷயம், இதே ‘அயல்’ என்ற சொல்லுக்கு, ‘அருகே’ என்ற பொருளும் உண்டு.

திருவேங்கடமாலையில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடுவார்:

‘அங்கு அயலில் மேகம் அதிர, பெரும் பாந்தள்
வெம் கயம் என்று அங்காக்கும் வேங்கடமே.’

திருவேங்கடமலையின் அயலே (அருகே) மேகங்கள் சத்தமிடுகின்றன, அதைக் கேட்ட பாம்புகள் வெளியே வந்து பார்க்கின்றன, கருப்பு நிறத்தில் சத்தமிடும் மேகங்களைப் பார்த்தவுடன், அவற்றை யானைகள் என்று நினைத்துவிடுகின்றன, அவற்றை விழுங்குவதற்காக வாயைத் திறக்கின்றன.

ஆக, அருகிலிருப்பதும் அயல், விலகியிருப்பதும் அயல். அச்சொல் பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்துப் பொருள்கொள்ளவேண்டும்!

Eerurli

தமிழில் எந்தச் சொல்லை எடுத்துக்கொண்டாலும், அதன் உருவாக்கத்தில் பல இலக்கண நுட்பங்களைக் காணலாம். இரு சொற்களைச் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவை கூடும்.

உதாரணமாக, ‘ஈருருளி’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். ’மிதிவண்டி’ அல்லது ‘சைக்கிளை’க் (அசோகமித்திரன் மொழியில் சொல்வதென்றால் ‘சைகிளை’க்) குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல் இது.

இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்?

உருண்டுசெல்லும் இரண்டு சக்கரங்களைக்கொண்ட வண்டி என்பதுதான் இதன் பொருள். ஈருருளி => ஈர் உருளி.

‘ஈர்’ என்றால் என்ன?

ஒரு பொருள் ஒன்று என்ற எண்ணிக்கையில் இருக்கும்போது, அது உயிரெழுத்தில் தொடங்கினால் ‘ஓர்’ என எழுதுவோம், உயிர்மெய்யெழுத்தில் தொடங்கினால் ‘ஒரு’ என எழுதுவோம்: ஒரு தலை, ஓர் உடல்.

அதுபோல, ஒரு பொருள் இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்கும்போது, அது உயிரெழுத்தில் தொடங்கினால் ‘ஈர்’ என எழுதவேண்டும், உயிர்மெய்யெழுத்தில் தொடங்கினால் ‘இரு’ என எழுதவேண்டும்: இரு கைகள், ஈர் இமைகள்.

இங்கே ‘உருளி’ என்ற சொல் உயிரெழுத்தில் தொடங்குவதால், ‘ஈர் உருளி’, அதாவது, இரண்டு உருளிகள்.

அதென்ன ‘உருளி’?

‘உருள்’ என்பதுதான் வேர்ச்சொல், உருண்டுசெல்லுதல் எனும் செயலைக் குறிக்கும். அத்துடன் ‘இ’ என்ற விகுதியைச் சேர்த்தால் உருள்+இ => உருளி.

இதுவொன்றும் நமக்குப் புதிய பயன்பாடல்ல. தோசைத்திருப்பி என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறோமே, திருப்பு + இ => திருப்பி.

அதேபோல், தொலைபேசி என்பது என்ன? (தொலைவில் உள்ளவருடன்) பேசு + இ => பேசி.

சமீபத்தில் ‘தொடரி’ என்றொரு திரைப்படம் வந்தது, தொடர்ந்து வரும் பெட்டிகளைக்கொண்ட ரயில் வாகனத்தைக் குறித்தது, தொடர் + இ => தொடரி.

இப்படி ‘இ’கர விகுதி கொண்ட பல சொற்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். ‘உருளி’ என்பதையும் அப்படி ஏற்றுக்கொள்ளலாம், உருண்டுசெல்வது உருளி!

ஆக இரண்டு + உருள் + இ => ஈருருளி. இப்படிச் சொற்களைப் பகுத்துச் சரியாகப் புரிந்துகொண்டால் ‘புரியலை’, ‘கஷ்டமா இருக்கு’ என்றெல்லாம் சொல்லமாட்டோம். பயன்படுத்தத் தொடங்கினால் அவை இயல்பாக மொழியில் சேரும்.

இயற்கை உணவுகள், யோகாசனம், மூலிகை மருந்துகள் எனப் பலவற்றிலும் பழையதற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம், சொற்களில்மட்டும் புதியவை போதும் என்று ஏன் நினைக்கவேண்டும்?