Seerkaazhi

‘இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழி’ என்கிறார் #திருஞானசம்பந்தர்

அதாவது, சீர்காழியில் உள்ளோரிடம் யாரேனும் உதவி கேட்டு வந்தால், ‘நாளைக்கு வா’, ‘அடுத்த திங்கட்கிழமை வா’ என்றெல்லாம் சொல்லமாட்டார்களாம், உடனே உதவி செய்துவிடுவார்களாம்.

இன்னொரு பாடலில், சீர்காழியில் உள்ள பாக்குமரத்தை ‘முத்தம் ஈன்று, மரகதம்போல் காய்த்துப் பவளம் பழுக்கும் கமுகு’ என்கிறார்.

அதாவது, பாக்கு மரம் முத்துப்போல் அரும்புமாம், மரகதம்போல் காய்க்குமாம், பவளம்போல் பழுக்குமாம்.

இதைப் படித்தவுடன் கூகுள் சென்று தேடிப்பார்த்தேன். இந்த வர்ணனை எத்துணைப் பொருத்தம் என இங்கே பாருங்கள், அரும்பு, காய், பழம் மூன்றுமே உள்ளது: http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_plantationcrops_arecanut_ta.html

Advertisements

Sirippu

என் மகள்கள் இருவருக்கும், நான் எழுதுகிறவற்றைப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் தமிழ் இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்கள். ஆகவே, என்னுடைய ஆங்கிலக்கட்டுரைகளைமட்டும் உடனே படிப்பார்கள்.

சமீபத்தில் Amul நிறுவனத்தைப்பற்றி (ஆங்கில) கோகுலம் இதழுக்கு எழுதிய கட்டுரையை வாசிக்கத் தந்தேன். ஆவலுடன் படிக்கத் தொடங்கினார்கள்.

சிறிதுநேரம் கழித்து அங்கே சென்று பார்த்தால், இருவரும் கெக்கேபிக்கே என்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தக் கட்டுரையில சிரிக்கறதுக்கு ஒண்ணுமே இல்லையே!’ என்றேன்.

‘இல்லப்பா, இதுல Tribhuvandas Kishibhai Patel அப்டீன்னு ஒருத்தர் பேர் வந்தது, அவரைச் சின்ன வயசுல அவங்க அப்பா, அம்மா எப்படிக் கொஞ்சியிருப்பாங்கன்னு யோசிச்சோம், சிரிப்பு வந்துடுச்சு’ என்றாள் பெரியவள், பிறகு சின்னவளின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, ‘கிஷிபாய்ச் செல்லம், கிஷிபாய்க் குட்டி, கிஷிபாய்ப் பட்டு’ என்றாள். உடனே, சின்னவள் ‘கிஷிபாய், முஷிபாய்’ என்கிறாள், பிறகு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதே சிரிப்போடு கட்டுரையைத் தொடர்ந்து படிக்கிறார்கள்.

நமக்கெல்லாம் இப்படித் தோன்றுமா? என்னைக் கேட்டால் ‘இருக்கிற விஷயத்தைப் படிக்காமல் என்ன கெக்கேபிக்கே சிரிப்பு?’ என்று எரிந்துதான் விழுவேன். ஆனால் குழந்தைகளால் ஒரு வறட்டுச் சட்ட ஆவணத்தில்கூட தங்களுக்கான மனமகிழ் தருணங்களைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்று தோன்றுகிறது.

இதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

Kanavu

முன்குறிப்பு: ஆவலுடன் முழுக்கப் படித்துவிட்டு என்னைத் திட்டக்கூடாது.

இன்று அதிகாலையில் ஒரு கனவு.

அதில் ஒரு மனோதத்துவ நிபுணர் வந்தார். ‘உங்களுக்கு ஒரு வித்தியாசமான விஷயத்தைச் செய்து காட்டுகிறேன்’ என்றார்.

‘என்ன அது?’

அவர் இரண்டு பேரை அழைத்தார். ஒருவருடைய முகத்தில் காயம்பட்டிருந்தது. இன்னொருவர் முகத்தில் எந்தக் காயமும் இல்லை.

அந்த நிபுணர் காயம்பட்டவரின் முகத்தில் எதையோ பூசினார், அந்தக் காயத்தை மறைத்தார்.

அவர் என்ன மனோதத்துவ நிபுணரா, பிளாஸ்டிக் சர்ஜனா என்றெல்லாம் கேட்கக்கூடாது. கனவில் வந்ததைச் சொல்கிறேன், அவ்வளவுதான்.

இப்போது, அந்த நிபுணர் காயம்படாதவரின் முகத்தில் எதையோ பூசினார், அங்கே காயம் வந்ததுபோல் மாற்றினார்.

ஆக, காயப்பட்டவருக்குக் காயப்படாதவர்போல் வேஷம், காயப்படாதவருக்குக் காயப்பட்டவர்போல் வேஷம்.

இப்போது, அந்த இருவரையும் அவர் ஒரு கூண்டருகே அழைத்துச்சென்றார். கூண்டுக்குள் ஒரு சிங்கம் இருந்தது.

‘வேடிக்கையைப் பாருங்கள்’ என்றபடி கதவைத் திறந்தார் அவர், இருவரையும் கூண்டுக்குள் அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்தினார்.

அதோடு கனவு கலைந்து எழுந்துவிட்டேன்.

அந்த இருவரும் என்ன ஆனார்கள்? சிங்கம் என்ன செய்தது? ஏன் செய்தது? யாராவது சொல்லுங்களேன், ப்ளீஸ்!

Konjam Nanjam

‘டேய், உனக்குக் கொஞ்சம் நஞ்சம் புத்தி இருந்தா இப்படிப் பேசுவியா?’

கொஞ்சம் சரி, அதென்ன நஞ்சம்?

‘நஞ்சம்’ என்பது விஷத்தைக் குறிக்கும் ஒரு சொல், நஞ்சு + அம் => நஞ்சம் என்றுதான் அகராதிகள் சொல்கின்றன.

இது எப்படிக் ‘கொஞ்சம் நஞ்சம்’ என்ற இடத்தில் பொருந்தும்? எதுகைக்காக அப்படிச் சொல்லிவிட்டார்களா என்ன?

‘நைந்து’ என்ற சொல் பேச்சுவாக்கில் ‘நஞ்சி’ என்று மாறும், ‘கயிறு ரொம்பப் பழசு, நஞ்சிபோச்சி’ என்றால் ‘நைந்துவிட்டது’ என்று பொருள்.

அதுபோல, ‘கொஞ்சம்’ (குறைவு) + ‘நஞ்சம்’ (நைந்துபோனது) => ‘கொஞ்சம் நஞ்சம்’ (இருப்பதே குறைவு, அதுவும் நைந்திருக்கிறது) என்ற பொருளில் இது வருகிறதோ?

‘ம்ஹூம், பொருந்தலையே’ என்பவர்கள் என்னை நோக்கி இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்தைச் சொல்லலாம்!