Sundarar

நால்வரில் யார்பக்கமும் சாயமுடிவதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொனியில் மிக அற்புதமாக எழுதுகிறார்கள், இவரைவிட அவர் மேல், அவரைவிட இவர் மேல் என்று Cyclicஆக மேலே மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இன்றைக்குச் #சுந்தரர் பதிகமொன்றைப் படித்துக்கொண்டிருந்தேன், என்ன அழகான, கம்பீரமும் பணிவும் கலந்தவொரு மொழி நடை, சிறப்பான படிமங்கள்!

இரண்டு எடுத்துக்காட்டுகள்:

1. ‘என் மனத்துக்கு ஓர் இரும்பு உண்ட நீர்’ என்கிறார் சிவனை.

பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தெளித்த நீர் சட்டென்று மறைந்துவிடுகிறது, வெளித்தெரிவதில்லை, உள்ளே சென்று கலந்துவிடுகிறது, பிரித்துக்காட்டச்சொன்னால் முடியாது, அதேசமயம், அந்த இரும்பை நிரந்தரமாக அது மாற்றிவிடுகிறது, வெளியாட்களுக்குத் தெரியாது, இரும்புக்குத் தெரியும்.

2. ‘முயல்வலை யானை படும்’ என்று சிவபக்தர்கள் இவரிடம் சொன்னார்களாம்.

முயலுக்கு வைக்கும் வலையில் யானை சிக்குமா? சாத்தியமே இல்லையே, உதைத்துத் தள்ளிவிட்டுப் போய்விடுமே.

அதற்கு என்ன செய்ய? சிவனெனும் யானையைப் பிடிக்குமளவு வலை விரிக்க (பெரிய தவங்களைச் செய்ய) நமக்குத் தெம்பில்லையே, ஏதோ, நம்மால் இயன்றதைச் செய்யலாம், அது முயலைப் பிடிக்கத்தான் போதுமானது. யானைக்குப் போதாது.

ஆனால், கவலை வேண்டாம், சிவ யானை தானே வந்து அன்பெனும் வலையில் அகப்படுமாம். இதை அனுபவித்தவர்கள் சுந்தரரிடம் சொல்கிறார்கள், அவரும் அதை நம்பி முயல் வலை விரித்துக் காத்திருக்கிறார்!

வரட்டும் அந்த யானை, இரும்புண்ட நீர் போல் உறிஞ்சிவிடலாம்!

Advertisements

Thuppu

‘துப்பறிவாளன்’ என்றொரு புதிய திரைப்படத்தின் சுவரொட்டியைக் கண்டேன்.

‘துப்பு’ என்ற சொல்லுக்கே அறிவு என்ற பொருள் உண்டு, ஆனால் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது, ‘வலிமை’/’திறமை’ என்ற பொருள்தான்.

‘போடா, துப்புக்கெட்டவனே’ என்று ஒருவரைத் திட்டுகிறோம், ‘ஒரு வேலையைச் செய்யத் திறனில்லாதவனே/ வலிமையற்றவனே/ அதற்கான சிந்தனைத்திறன் இல்லாதவனே’ என்று இது நீளும்.

‘துப்பறிவாளன்’ (அதாவது, துப்பு அறிவு ஆளன்) என்ற சொல்லில் ‘துப்பு’ என்பது தன்னைச்சுற்றி நடப்பதை ஆராய்கிறவன் எனும் பொருளில் வருகிறது. அதற்குக் கருப்புக் கண்ணாடி, தொப்பி, நீளமான மேலாடையெல்லாம் வேண்டியதில்லை, யார் வேண்டுமானாலும் துப்பறியலாம், ‘அடுப்புல ஏதோ தீய்ஞ்ச வாடை வருதே’ என்று அருகே சென்று பார்ப்பதுகூட துப்பறிதல்தான்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

என்ற பிரபலமான குறளில் ஐந்து ‘துப்பு’கள் வருகின்றன:

1. துப்பார் = உண்பவர், துப்பார்க்கு = உண்பவர்களுக்கு

2. துப்பு ஆய = உணவு ஆகி

3. துப்பு ஆக்கி = (அவர்கள் உடலை) வலிமைப்படுத்தி

4. துப்பார் = அறிவுள்ளவர், துப்பார்க்கு = அறிவுள்ளவர்களுக்கு, அதாவது, மழை நீரைக் குடித்துத் தாகம் தீரலாம் என்கிற அறிவுள்ளவர்களுக்கு

5. துப்பு ஆயதூஉம் = வலிமை தருவதும்… மழை.

ஆக, மழையானது, தானே உணவாகவும் ஆகிறது, மற்ற உணவுகளையும் ஆக்குகிறது. அதன்மூலம் பலவிதங்களில் நமக்கு வலிமை தருகிறது.

MoondRu PaadalgaL

நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து, நீர்

அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன்முனம்…

செஞ்சடை நம்பன் மேவு நல் நகர், நலம் கொள் காழி சேர்மினே.

#திருஞானசம்பந்தர்

அதிகாலை தொடங்கி நாம் இரவுமட்டும்

அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பது அல்லால்,

இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்

என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதுவும் இல்லை.

#பாரதிதாசன்

எனது வீடு, எனது வாழ்வு

என்று வாழ்வது வாழ்க்கையா?

இருக்கும் நாலு சுவருக்குள்ளே

வாழ நீ ஒரு கைதியா?

உன்னைப்போல் எல்லோரும்,

என எண்ணோணும்,

அதில் இன்பத்தைத் தேடோணும்.

#புலமைப்பித்தன்

SutRal

சிவபெருமானின் புலித்தோலைக் குறிப்பிட, ‘சுற்றல்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் #திருஞானசம்பந்தர். (காண்க: ‘சுற்றல்ஆம் நற்புலித்தோல்’ என்று தொடங்கும் பாடல்.)

‘சுற்று’ என்பதுதான் இதன் வேர்ச்சொல், ‘சுற்றல்’ என்பது வினைச்சொல், சுற்றுதல் என்பது பொருள், அதையே பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தலாம். ’மாட்டல்’ என்பது மாட்டுகின்ற செயலையும் மாட்டப்படும் நகையையும் குறிப்பிடுகிறதல்லவா? அதுபோல.

ஆக, சிவன் இடுப்பில் சுற்றிய புலித்தோல், ‘சுற்றல்’. இதையே வேட்டிக்கோ, பெண்கள் அணியும் வேறு சில நவீன உடைகளுக்கோகூட மாற்றுச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.

Sembu, Seppu

நண்பர் கணேஷ் நாராயணன் அனுப்பிய கேள்வி: செம்பு, செப்பு எது சரி?

இரண்டும் சரி. தனியே பயன்படுத்தினால் செம்பு, பிற சொற்களுடன் புணர்த்திப் பயன்படுத்தினால் செப்பு. எடுத்துக்காட்டாக: செம்பு கொண்டு ஒரு செப்புக்குடம் செய்தான்.

அப்படியின்றி ‘செப்பு’ என்பதைத் தனியே பயன்படுத்தினால், ‘சொல்’ என்று ஏவுகிற/கட்டளையிடுகிற பொருளாகும். எடுத்துக்காட்டாக: செப்புக்குடத்தை நீதான் எடுத்தாயா? செப்பு.

இந்தச் ‘செப்பு’க்கு இன்னொரு பொருளும் உண்டு: குழந்தைகளின் விளையாட்டுப்பாத்திரம்.

ஆக, ‘செப்புச்செப்பு’ என்றால் செம்பால் செய்த விளையாட்டுப்பொருள்.

Agappatten

அகப்படுதல், புறப்படுதல் என்ற இரு சொற்களையும் நாம் இயல்பாகப் பேச்சில் பயன்படுத்திவருகிறோம். ‘அந்தாள்கிட்ட நல்லா அகப்பட்டுகிட்டான்’ என்கிறோம், ‘மதுரைக்குப் புறப்பட்டுகிட்டிருக்கேன்’ என்கிறோம்.

உண்மையில் இந்த இரு சொற்களும் தொடர்புடையவை, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒன்றுக்கொன்று எதிரானவை (Opposites):

* அகப்பட்டேன் => அகத்தில் (உள்ளே) சென்றேன்

* புறப்பட்டேன் => புறத்தில் (வெளியே) சென்றேன்

ஆனால் ஏனோ, நாம் ‘அகப்பட்டேன்’ என்பதை ஓர் இழிவுப்பொருளிலேயே பயன்படுத்துகிறோம். அது ஒரு தண்டனை அல்ல, வேலை முடிந்து அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதுகூட, ‘அகப்பட்டேன்’தான்.

அதன்பிறகு கையில் காஃபி, தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்று சோஃபாவில் சாய்வது ‘சுகப்பட்டேன்’.

Lyrics

இன்று Miguel McKelvey என்பவருடைய பேட்டியொன்றில் வாசித்தது:

‘டோக்கியோவில் நீங்கள் என்ன வேலை செய்தீர்கள்?’

‘ஜப்பானியர்களுக்கு ஆங்கிலப் பாடல்களின் வரிகளை விளக்கிச்சொல்லிச் சம்பாதித்தேன்.’

‘என்னது?’

‘ஆமாம். அப்போது பல ஆங்கிலப்பாடல்கள் ஜப்பானில் பிரபலமாக இருந்தன. ஆனால் உள்ளூர் மக்களுக்கு அவற்றின் அகராதிப் பொருளைத் தாண்டி அர்த்தம் புரியவில்லை, அமெரிக்கக் கலாசாரப் பின்னணி இருந்தால்தானே அவற்றை முழுக்கப் புரிந்துகொள்ள இயலும்? ஆகவே, அவர்களால் அவற்றை முழுக்க ரசிக்க இயலவில்லை.’

‘இதைப் புரிந்துகொண்ட நான், அந்தப் பின்னணியோடு அவர்களுக்கு அப்பாடல்வரிகளை விளக்கினேன், அதுவே என்னுடைய முதல் முழுநேர வேலையாக இருந்தது.’

என்னவொரு வியப்பான, ரசனையான வேலை!

பின்குறிப்பு: Miguel இந்த வேலையில் அதிகம் சம்பாதித்ததாகத் தெரியவில்லை. பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர் WeWork என்ற நிறுவனத்தைத் தொடங்கி பெருவெற்றியடைந்தார்.