SinakkuRumbu

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

என்று எழுதுகிறார் வள்ளுவர் (திருக்குறள் #304). இதன் சுருக்கமான பொருள்: ஒருவருடைய கோபமானது அவருடைய சிரிப்பை, மகிழ்ச்சியைக் கொன்றுவிடும். ஆகவே, சினம்தான் நம்முடைய மிகப்பெரிய பகைவன்.

இப்பாடலின் முதல்பகுதியை நாம் சற்றே மாற்றியும் மொழிக்குறும்புசெய்யலாம்:

நகையும் உவகையும் கொல்லும் சினம் => சிரிப்பை, மகிழ்ச்சியைச் சினம் கொல்லும் (சினம்(சினமானது), நகை(யை)யும் உவகை(யை)யும் கொல்லும்)

நகையும் உவகையும் கொல்லும் சினம் => சிரிப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்து சினத்தைக் கொல்லும் (நகையும் உவகையும் சினம்(சினத்தைக்) கொல்லும்) … சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் சினம் ஓடிவிடும்!

Advertisements

Mazhalai

மழ என்றால் இளமை என்று பொருள். ‘மழவும் குழவும் இளமைப்பொருள்’ என்பார் #தொல்காப்பியர் .

‘மழவர்’ என்ற சொல்லுக்கு இளைஞர் என்ற பொருள் இருக்கிறது. ‘மழவர்தம் மனையன மண ஒலி’ என்று கம்பராமாயணத்தில் ஒரு வர்ணனை வரும். இளைஞர்கள் வாழும் வீடுகளில் திருமண ஒலி கேட்கிறது!

‘மழ’ என்பதிலிருந்துதான் ‘மழலை’ என்ற சொல் வந்திருக்கிறது.

அப்படியானால், மழலை என்பது இளைஞர்களின் பேச்சா?

அதுதான் இல்லை. அது பேச்சின் இளமை. நன்கு பேசிப்பழகுமுன் குழந்தையின் ஆரம்பநிலைப் பேச்சு. இளங்கனி, இளங்கன்று என்பதுபோல, அது இளமொழி.

என்ன அழகான சொல்!

Gems

மகளுக்கு Gems வாங்கிக்கொடுத்தேன். ஆசையுடன் பிரித்துக் கையில் கொட்டினாள், ஒன்றை எடுத்து வாயில் போடுமுன் ‘உனக்கு வேணுமா?’ என்றாள்.

வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் நப்பாசை, ‘ஒண்ணு கொடேன்’ என்றேன்.

அவசரமாகக் கையில் தேடிவிட்டு, ‘இந்த கேட்பரீஸ்காரன் ரொம்ப மோசம்ப்பா’ என்றாள்.

‘ஏன்ம்மா? என்னாச்சு?’

‘எல்லாம் Girls கலரா இருக்கு, Boys கலர் ஒண்ணுகூட இல்லை’ என்கிறாள் நிஜமான வருத்தத்துடன்.

UNarthal

காதல் வாழ்வின் பயன்கள் என மூன்று விஷயங்களைச் சொல்கிறார் வள்ளுவர்: ஊடல், உணர்தல், புணர்தல்.

ஊடலும் புணர்தலும் புரிகின்றன, அதென்ன உணர்தல்?

போக்குவரத்து நிறுத்தத்தில் சிவப்பு என்றால் ’நில்’, பச்சை என்றால் ’செல்’, ஆனால் நடுவில் உள்ள மஞ்சளுக்கு அப்படி எந்தக் கட்டளையும் கிடையாது, ‘செல்’ என்பது ‘நில்’ என மாறப்போகும் நேரத்தை, வரம்பை அது குறிக்கிறது.

’உணர்தல்’ என்பதும் அதுபோலதான். ஊடலை ஓரளவுக்குமேல் இழுத்தடிக்காமல், புணர்தல் வேண்டுமென்றால் இதற்குமேல் ஊடல் ஆகாதென்று உணர்ந்து, சரியான நேரத்தில்/அளவில் ஊடலைத் தீர்த்துக்கொள்ளுதல்.

ஊடல், உணர்தல், புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் (குறள் 1109)

NiRainthathu

பத்திரிகைத் தொடர்கதைகளின் ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் “தொடரும்” என்ற சொல் இடம்பெறும். பின்னர் அத்தொடர் நிறைவடையும்போது “முற்றும்” என்ற சொல் இடம்பெறும்.

“தொடரும்” என்ற சொல் வருங்காலத்தைக் குறிக்கும் வினைமுற்று. ”கதை இன்னும் முடியவில்லை, இனிமேலும் தொடரும்” என்பதை உணர்த்துகிறது.

ஆனால், “முற்றும்” என்ற சொல் எதை உணர்த்துகிறது?

இலக்கண அடிப்படையில் பார்த்தால், இதுவும் வருங்காலத்தைக் குறிக்கும் வினைமுற்றுதான். “கதை வருங்காலத்தில் முற்றுப்பெறும்” என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

ஆனால் உண்மையில், இந்தச் சொல் அச்சிடப்படும்போது கதை ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆகவே, “முற்றும்” என வருங்காலத்தில் சொல்வது எப்படிப் பொருந்தும்?

“முற்றும்” என்ற சொல்லை வினைமுற்றாக அன்றி, எச்சமாகவும் எடுத்துக்கொள்ளலாம், “முற்றும் துறந்த முனிவர்” என்று சொல்கிறோமல்லவா? அந்தக் கோணத்தில் பார்த்தால், “முற்றும்” என்ற சொல் “முழுவதும்” என்ற பொருளைத் தருகிறது. ஆனால், அதன்பிறகு இன்னொரு சொல் வந்தால்தான் அது முழுமை பெறும்.

இந்தக் கோணத்தில் பார்த்தாலும், ஒரு தொடரின் நிறைவில் “முற்றும்” என ஓர் எச்சச்சொல்லை வைத்து நிறுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

எனவே, “முற்றும்” என்பதற்குப்பதில் அங்கே “முற்றியது” அல்லது “முற்றுப்பெற்றது”/”நிறைந்தது”/”நிறைவடைந்தது”/”முடிந்தது”/”முடிவடைந்தது” எனக் கடந்தகாலத்திலோ, “முற்றுப்பெறுகிறது”/”நிறைகிறது”/”முடிகிறது” என நிகழ்காலத்திலோ சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

NuNugaathavan

‘நுணுகாதே யாதொன்றும் நுணுகினானை’ என்று எழுதுகிறார் #திருநாவுக்கரசர்

ஒரு பொருளைச் சிறிய பொருளுக்குள் நிறைக்கவேண்டுமென்றால், அதனை நுணுக்கவேண்டும், சிறிதாக்கவேண்டும், தேங்காயைத் துருவிக் கொழுக்கட்டைக்குள் வைப்பதுபோல, ஷேர் ஆட்டோவில் நாம் நம்மைக் குறுக்கிக்கொண்டு அமர்வதுபோல, உயரமானவர்கள் ரயிலின் Side Upper Berthல் குழந்தைபோல் சுருண்டு படுப்பதுபோல.

இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்கிறோம், பிரம்மனும் திருமாலும் காண இயலாதபடி நெடிது உயர்ந்த அவன் இத்தனூண்டு கடுகுக்குள்ளும் இருக்கிறான், அட, அணுவுக்குள்ளும் இருக்கிறான் என்றால் அங்கெல்லாம் அவன் தன்னைக் குறுக்கிக்கொள்கிறானா என்ன?

அதெல்லாம் நம்மைமாதிரி சாதாரணர்களுக்குதான், சிவபெருமான் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமலே எந்தவொரு சிறிய பொருளுக்குள்ளும் இயல்பாக இருப்பான், அதைத்தான் ‘நுணுகாதே யாதொன்றும் நுணுகினான்’ என்று அழகாகச் சொல்கிறார்.

Azhagiye

அழகியே…

சினிமாப்பாட்டு இருக்கட்டும், அழகியை எப்படி அழைக்கவேண்டும்?

தொல்காப்பியம் என்ன சொல்கிறது?

பக்கத்தில் இருந்தால் அண்மை விளி, தொலைவில் இருந்தால் சேய்மை விளி.

‘இ’ என்ற எழுத்தில் முடியும் பெயருக்கான அண்மை விளி, ‘இ’ எனவே இயல்பாக அமையும், சேய்மை விளி ‘ஈ’ என அமையும், இதற்கான சூத்திரங்கள்: தொல்காப்பியம், சொல்லதிகாரம், விளிமரபு, நூற்பாக்கள் 4 & 10)

ஆக, அழகி பக்கத்திலிருந்தால், ‘அழகி’ என்று விளிக்கவேண்டும், தொலைவிலிருந்தால் ‘அழகீ’ என்று விளிக்கவேண்டும்.

உதா: அழகீ, தொலைவில் உட்கார்ந்திருக்கிறாயே, அருகில் வா…. (வந்தபின்) அழகி, எனக்கொரு முத்தம் தா.

ஒருவேளை, ‘அழகியே’ என்று விளித்தால் என்ன பொருள்?

அஃறிணைப் பொருள்களை விளிக்கும்போது ஏகாரம் சேர்ப்பார்கள். ‘அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉம் காலம் தோன்றில், தெளிநிலை உடைய ஏகாரம் வரலே’ என்று தொல்காப்பியம், விளிமரபு, நூற்பா 34 சொல்கிறது.

எடுத்துக்காட்டாக:

மரம் + ஏ => மரமே
ஆடு + ஏ => ஆடே
கல் + ஏ => கல்லே
புலி + ஏ => புலியே

இதன்படி, ‘அழகி’யை ‘அழகியே’ என்று விளித்தால்… இலக்கணம் தெரிந்த காதலி ‘என்னை அஃறிணைன்னு சொல்றியா?’ என்று மண்டையில் ஒரு கொட்டுவைப்பாள், அப்புறம் உங்கள் இஷ்டம்!