Aga NaanooRu

அகநானூறு: தொகுப்பொழுங்கு:

* ஒற்றைப்படைப் பாடல்கள் அனைத்தும் (1, 3, 5, 7…399) பாலைத்திணை (200/400)
* 2, 8 என முடியும் பாடல்கள் அனைத்தும் (2, 8, 12, 18…398) குறிஞ்சித்திணை (80/400)
* 4 என முடியும் பாடல்கள் அனைத்தும் (4, 14, 24…394) முல்லைத்திணை (40/400)
* 6 என முடியும் பாடல்கள் அனைத்தும் (6, 16, 26…396) மருதத்திணை (40/400)
* பத்தால் வகுபடும் எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் (10, 20, 30…400) நெய்தல் திணை (40/400)

தொகுத்தவர்: உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்
தொகுப்பித்த அரசன்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி (இவனுடைய பாடல் ஒன்றும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது!)

Advertisements

Keezhdhu

‘கீழ்து’ என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார் #நம்மாழ்வார் . இதன் பொருள், ‘கீழே வைத்து/கீழே போட்டு’.

‘மலை கீழ்து பிளந்த சிங்கம்’ என்று நரசிம்மருக்கு உவமை சொல்கிறார். மலையைக் கீழே வைத்துப் பிளந்த சிங்கத்தைப்போல் நரசிம்மர் இரணியனைப் பிளந்தாராம்.

‘கீழ்’ என்ற சொல்லிலிருந்து ‘கீழ்து’ வருகிறது, ‘கீழே போட்டு’ /’கீழே வைத்து’ என இன்னொரு கூடுதல் வினைச்சொல்லைச் சேர்க்கவேண்டியதில்லை, அழகாக, சுருக்கமாகக் ‘கீழ்து’ என்றே சொல்லலாம்:

* தேர்வு தொடங்கப்போகிறது, எல்லாரும் புத்தகத்தைக் கீழ்துங்கள்
* செல்பேசியைக் கீழ்தாமல் வண்டியை ஓட்டாதே
* காய்கறியைக் கீழ்தி நறுக்கினான்

‘கீழ்து’போலவே, ‘மேல்து’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்: கடைக்காரர் புதிய பொம்மையை மேல்தினார்.

Manaivi Sol

திருக்குறள் 903ல் ‘மனைவி பேச்சைக் கேட்பது வெட்கத்துக்குரிய விஷயம்’ என்று திருவள்ளுவர் சொல்கிறாரே, இது சரியா என்று நண்பர் இன்பா கேட்டிருந்தார். இந்த மனோபாவத்துடன் வாழ்ந்த திருவள்ளுவரின் மனைவி வாசுகியை எண்ணி வருத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு நான் எழுதிய பதில் இது. நண்பர்கள் கருத்தை அறிய ஆவல்:

1. இந்தக் குறளுக்கு அப்படி ஒரேயடியாகப் பொருள் கொண்டுவிடக்கூடாது, ‘பொம்பள சிரிச்சாப் போச்சு’ என்றால், அது எல்லாப் பெண்களையுமா குறிக்கிறது? பெண்கள் சிரிக்கவே கூடாதா?

2. ஆகவே, இந்தக் குறளுக்கு நாம் கொள்ளவேண்டிய பொருள், ‘ஒருவன் தன் நற்பண்புகளை வெளிப்படுத்த இயலாதபடி அவன் மனைவி தடுத்தால், அதன்படி அவன் அடங்கிப்போனால், அது வெட்கத்துக்குரிய விஷயம்.’

3. இந்த If Clause குறளில் இல்லை, நான் சேர்த்ததுதான். இதுபோன்ற புரிந்துகொள்ளல்களுக்கும் இடமளிப்பதே நல்ல இலக்கியம்

4. இந்த அதிகாரத்தின் பெயரே ‘பெண்வழிச்சேறல்’, இதன் பொருள், ‘மனைவியர்வழி ஒழுகுதலினால் வரும் குற்றம் கூறுதல்’ என்கிறார் மணக்குடவர். மனைவியர்வழி ஒழுகினாலே குற்றம் என்றல்ல… அதனால் குற்றம் வரக்கூடிய சூழ்நிலைகளைச் சொல்கிறார், அவ்வளவுதான்!

5. ஒருவேளை இவ்வரி ஆணாதிக்கப்பார்வையில் எழுதப்பட்டிருந்தால்கூட, அனைத்துப் பெண்கள்மீதும் தவறான பார்வை வராதபடி இப்படிப் பொருள் சொல்வதே சரி. ஔவையார் ‘தையல் சொல் கேளேல்’ என்று எழுதியதற்கும் இதே பதில்.

Dekho

ஆங்கில எழுத்தாளரொருவர் தன்னுடைய வலைத்தளத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதுபற்றித் தன் வாசகர்களுக்கு அறிவிக்கையில், ‘Have a Dekho please’ என்று எழுதியிருந்தார்.

‘Dekho’ என்பது கட்டளைச்சொல் (‘பார்’ என்று பொருள்). அதைப் ‘பார்வை’ என்கிற பொருளில் பயன்படுத்துகிறார் அந்த எழுத்தாளர். ‘ஒரு பார்வை பாருங்கள்’ என்பதற்குப்பதிலாக, ‘ஒரு பார் பாருங்கள்’ என்கிறார்.

அவர்மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் பலரும் ‘Have a Dekho’ என்று எழுதுகிறார்கள், ஹிந்தி இலக்கணப்படி இது சரிதானா என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடமுள்ள ஹிந்தி அகராதி Dekhoவுக்கு இந்தப்பொருளை வழங்கவில்லை.

யோசித்துப்பார்த்தால், ‘Have a look’ என்று சொல்வது ஆங்கில வழக்கமாக இருக்கிறது. அங்கே ‘Look’ என்பதைக் கட்டளைப் பொருளிலும் (பார்: look there) எடுத்துக்கொள்ளலாம், ‘பார்வை’ என்ற பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளலாம் (a casual look). இதேபோல் ‘Dekho’ என்பதையும் பார்/பார்வை என்ற இரட்டைப்பொருளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்களோ?

Dekho என்பதன் வேர்ச்சொல் Dekh. அதைப் பார்/பார்வை என்ற இரு பொருளிலும் பயன்படுத்த இடமுண்டு. அதிலிருந்து வரும் ‘Dekho’ என்பதைப் பார்வை என்ற பொருளில் பயன்படுத்த இயலுமா என்று நானறியேன்.

ஆங்கிலத்தைப்போலவே, தமிழிலும் இப்படி ஒரே சொல்லைக் கட்டளையாகவும், அதுசார்ந்த (அதாவது, அந்தக் கட்டளையால் விளையும்) பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்த இடமிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மைதானத்தில் ஓடும் ஒருவர், ‘இன்னும் ஒரு சுற்று மீதமிருக்கிறது’ என்கிறார்.

இங்கே ‘சுற்று’ என்ற கட்டளைச்சொல் (‘சுற்றி வா’), பெயர்ச்சொல்லாக(அப்படிச் சுற்றிவருவதால் விளைவது)ப் பயன்படுகிறது. இதேபோல் இன்னும் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்: ‘அந்தத் தோசையை ஒரு திருப்பு திருப்பு’ என்ற வாக்கியத்தில் முதல் ‘திருப்பு’ பெயர்ச்சொல், இரண்டாவது திருப்பு கட்டளைச்சொல்.

ஆனால், இது எல்லா இடங்களிலும் பொருந்தாது, ‘எழுது’ என்ற கட்டளைச்சொல் அதனால் விளையும் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘எழுத்து’ என்றாகிவிடுகிறது. ‘அவருடைய எழுத்து சிறப்பானது’ என்றுதான் சொல்கிறோம், ‘அவருடைய எழுது சிறப்பானது’ என்று சொல்வதில்லை.

Thalaivan, Thalaivi

சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் Anonymous.

ஆம், ஒரு பாடலில்கூட காதலன், காதலிக்குப் பெயர் கிடையாது. தலைவன், தலைவி என்று பொதுவாகதான் குறிப்பிடுவார்கள்.

இது எதேச்சையாக நடந்த விஷயமன்று. அகத்திணைப் பாடல்களில் வரும் தலைவன், தலைவியின் இயற்பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று தொல்காப்பியர் தெளிவாக இலக்கணமே வகுத்திருக்கிறார்.

நேரடியாகமட்டுமல்ல, மறைமுகமாகக்கூட அவர்களுடைய பெயர்களைச் சொல்லக்கூடாது, கிசுகிசு பாணியில் Clue தருவதற்கும் அனுமதி கிடையாது. நெடுநல்வாடையில் வரும் ஒரு வரி மறைமுகமாகக் க(வி)தைத்தலைவன் யார் என்று சுட்டிக்காட்டுவதுபோல் இருப்பதால், அது அகப்பாடலே இல்லை என்று வாதாடுவோர் இருக்கிறார்கள்.

அது நிற்க. காதலன், காதலி என்று குறிப்பிடாமல், இவர்களைத் தலைவன், தலைவி என்று குறிப்பிட என்ன காரணம்?

உடலுறுப்புகளுக்கு முதன்மையாகத் திகழும் தலையைப்போல, இந்த அகப்பாடல்களில் வரும் நாயகனும் நாயகியும் முறையே ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். அதனால்தான் அவர்களைத் ‘தலைமக்கள்’ என்கிறார்கள்.

எல்லாரும் தலைவன், தலைவி ஆகிவிடமுடியாது. அதற்கென்று பல குணங்கள் வேண்டும். முக்கியமாக, 11 குணங்களை அகற்றவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்:

‘நிம்பிரி, கொடுமை, வியப்பொடு புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு குடிமை
இன்புறல், ஏழைமை, மறப்போடு ஒப்புமை
என்று இவை இன்மை என்மனார் புலவர்’

1. பிறரைப்பார்த்துப் பொறாமைப்படக்கூடாது (நிம்பிரி)
2. பிறருக்குக் கேடு நினைக்கக்கூடாது
3. தன்னைத்தானே பெரியவனாக/பெரியவளாகக் கருதிப் பெருமிதப்படக்கூடாது
4. ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் புறம்பேசக்கூடாது
5. யாரிடமும் கடுஞ்சொற்களைப் பேசக்கூடாது
6. தன்னொழுக்கமின்றி விருப்பம்போல் வாழக்கூடாது (பொச்சாப்பு/சோர்வு)
7. சோம்பேறித்தனம் கூடாது
8. தன் குலம் சிறந்தது, பிறர் குலம் இழிவானது என்று எண்ணிப் பெருமையடையக்கூடாது
9. பேதைமை கூடாது
10. கற்றுக்கொண்டவற்றை மறக்கக்கூடாது
11. தன் காதலனைப்போல்/காதலியைப்போல் இன்னொருவர் இருக்கக்கூடும் என்று மனத்தால்கூட ஒப்பிட்டுப்பார்க்கக்கூடாது

பின்னே, சும்மா வருமா ‘தலைவன்’ பட்டம்!

Tholkaappiyar

அவனை அவளுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், அதை வெளியே சொல்லத் தயக்கம். அப்போது, என்ன செய்வாள் அவள்?

1. தலைமுடியைக் கலைத்துச் சரிசெய்வாள்

2. காதில் அணிந்திருக்கும் தோட்டைத் திருகுவாள், அதைக் கீழே விழச்செய்துவிட்டு, தேடுவதுபோல் நடிப்பாள்

3. ஒழுங்காக அணிந்திருக்கும் அணிகலன்களைச் சரிபார்ப்பதுபோல் தடவிப்பார்ப்பாள்

4. ஒழுங்காக அணிந்திருக்கும் ஆடையைச் சரிசெய்வாள்

இதையெல்லாம் யாரோ தற்காலக் கவிஞர், சினிமாக்காரர் கற்பனை செய்த காட்சிகளில்லை, பல நூற்றாண்டுகளுக்குமுந்தைய பெண்களைப் பார்த்துத் #தொல்காப்பியர் சொல்கிறார் 😉

கூழை விரித்தல், காது ஒன்று களைதல்,

ஊழ் அணி தைவரல், உடை பெயர்த்து உடுத்தல்