Sema Achchu

பொகுட்டெழினி என்ற மன்னனைப் பாடுகிறார் #ஔவையார் (புறநானூறு. பாடல் எண் 102)

உப்பு வணிகர்கள் பாரம் நிரம்பிய வண்டிகளை ஓட்டிச்செல்வார்கள். அப்போது, அந்த வண்டி மேடு பள்ளங்களில் ஏறிச் செல்லும்போது அச்சு முறிந்துவிடுமோ என்று யோசிப்பார்கள். பாதுகாப்புக்காக ஒரு கூடுதல் அச்சாணியையும் (சேம அச்சு) கொண்டுசெல்வார்கள்.

மன்னா, அந்தச் சேம அச்சைப்போல, உன் மக்களுக்கு நீ.

என்ன அழகான உவமை பாருங்கள்!

‘மக்களாகிய வண்டிக்கு மன்னனாகிய நீ அச்சாணி’ என்று அவர் எழுதியிருக்கலாம். அதில் எந்தப் பிழையும் இல்லை.

அதேசமயம், மக்களுக்கு அச்சாணியே மன்னன்தான் என்று உவமை சொன்னால், அவர்களுடைய சொந்த உழைப்பைக் குறை சொல்வதாகிவிடும். ஆகவே, மன்னனைச் ‘சேம அச்சு’ என்கிறார், அதாவது, ‘உன் மக்கள் கடின உழைப்பாளிகள், தங்கள் பிழைப்புக்கு(வண்டிக்கு)த் தாங்களே ஆதாரமாவார்கள். அதையும் மீறி அவர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், நீ அவர்களைக் காப்பாய்.’

கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வதென்றால், பொகுட்டெழினியை ஸ்டெப்னி என்கிறார்!

Thirumbuthal

‘வேண்டிய கல்வி, ஆண்டு மூன்று இறவாது’ என்கிறார் #தொல்காப்பியர்

அதாவது, அந்நாள்களில் அவசியமான கல்விக்காக ஒரு தலைவன் ஒரு தலைவியைப் பிரிந்து செல்வது, அதிகபட்சம் மூன்றாண்டுகள்தானாம்.

வேலைக்காகப் பிரிந்தால்?

‘வேந்து உறு தொழிலே ஆண்டினது அகமே.’

அரசன் கட்டளைப்படி, அதாவது, Offshore வேலை காரணமாக மனைவியைப் பிரிகிறவன், ஓராண்டுக்குள் திரும்பிவந்துவிடுவானாம்.

அப்படி வேலை காரணமாகச் செல்லும்போது, அந்த வேலை முடியும்வரை அவனுக்கு மனைவியின் நினைவே வராதாம்:

‘கிழவி நிலையே வினை இடத்து உரையார்.’

‘அடேய் அன்பற்றவனே’ என்று அவனைத் திட்டாதீர்கள். வேலை செய்யும்போது அன்பை நினைத்தால் வேலையின் தரம் குறையலாம்/தாமதமாகலாம் அல்லவா? அதனால்தான் அப்படி.

இதற்குச் சான்று, வேலையை முடித்த மறுகணம் அவன் மனைவியைப் பார்க்கக் கிளம்பிவிடுவானாம், வழியில் அவன் குதிரை எங்கேயும் ஒரு கணம்கூட நிற்காதாம்:

‘வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை.’

Aadum PaRavai

‘ஆடும் பறவை’ என்று கருடனை வர்ணிக்கிறார் நம்மாழ்வார்.

இதைப் படித்தவுடன், அந்தரத்தில் கருடன் நடனமாடுவதுபோல் ஒரு கற்பனை வந்தது. ஆனால், உரையாசிரியர்கள் இதற்கு ‘வெற்றியையுடைய பறவை’ என்றுதான் பொருள் எழுதுகிறார்கள். அகரமுதலியைப் புரட்டினேன்.

‘ஆடல்’ என்ற சொல்லுக்கு நடனம் என்பதோடு, வெற்றி/நன்மை போன்ற பொருள்களும் இருக்கின்றன. ஆகவே, ‘ஆடும் பறவை’ என்றால் வெற்றி/நன்மை கொண்ட பறவை.

Arasan Nalli

ஒரு புலவர், பலாமரத்தின் அடியில் களைப்போடு அமர்ந்திருக்கிறார். அவரோடு அவருடைய சுற்றமும் களைத்து உட்கார்ந்திருக்கிறது.

அந்தப் புலவர் தன்னுடைய புலமைக்கேற்ற பரிசு வழங்கும் மன்னனைத் தேடிப் பல நாடுகளில் அலைந்து திரிந்தவர். அங்கெல்லாம் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, சோர்ந்துபோய்ப் படுத்திருக்கிறார். குளிர்காலத்தில் பருந்தின் சிறகு பிரிந்து கிடப்பதைப்போல அவருடைய ஆடை கிழிந்து கிடக்கிறது.

அப்போது, அங்கே ஒரு வேடன் வருகிறான். இவருடைய சோர்வைப் பார்க்கிறான், நடந்தது என்ன என்று புரிந்துகொள்கிறான்.

அந்த வேடன் கையில் ஒரு மானை வைத்திருக்கிறான். சற்றுமுன் அவன் வேட்டையாடிய மான் அது. அந்த மானின் இரத்தம் அவனுடைய கால்களில் படிந்திருக்கிறது.

அதேசமயம், அவன் பிழைப்புக்காக வேட்டையாடுகிறவனைப்போல் தோன்றவில்லை. தலையில் மகுடமெல்லாம் அணிந்திருக்கிறான். பெருஞ்செல்வனைப்போலவும் தோன்றுகிறான்.

ஆகவே, புலவர் அவனைக் கைகூப்பித் தொழுதபடி எழுந்து நிற்க முயல்கிறார். அவருடைய களைப்பைப் புரிந்துகொண்ட அவன், ‘வேண்டாம், உட்காருங்கள்’ என்கிறான்.

அவன் கையில், இறைச்சியைச் சுடுகிற கோல் இருக்கிறது. வேட்டையாடிய மானை அதில் வைத்துச் சுடுகிறான். ‘சுற்றத்தாரோடு சேர்ந்து உண்ணுங்கள்’ என்று புலவருக்குத் தருகிறான்.

புலவரும் சுற்றத்தாரும் அந்த மாமிசத்தை உண்கிறார்கள். அது அமிழ்தம்போல் சுவையாக இருக்கிறது. பசி தீர்கிறது. அங்கே மரங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த அருவியில் குளிர்ந்த நீரைப் பருகுகிறார்கள்.

‘ஐயா, நாங்கள் காட்டு மனிதர்கள், உங்களுக்குத் தரும் அளவுக்குப் பெரிய, விலையுயர்ந்த பொருட்கள் எவையும் எங்களிடம் இல்லை’ என்கிறான் அந்த வேடன். தன் மார்பில் அணிந்திருந்த மாலை, கையிலிருந்த கடகம் என்ற அணிகலன் ஆகியவற்றைக் கொடுக்கிறான்.

புலவர் வியந்துபோகிறார், ‘நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?’ என்று கேட்கிறார், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று விசாரிக்கிறார்.

அவன் பதில் சொல்லவில்லை. கிளம்பிச்சென்றுவிடுகிறான்.

புலவர் வியப்போடு நடக்கிறார். வழியில் பார்த்தவர்களிடம் அந்த வேடனைப்பற்றிச் சொல்கிறார். அவர்கள் புரிந்துகொண்டதுபோல் சிரிக்கிறார்கள், ‘ஐயா, நீங்கள் சந்தித்த வேடனின் பெயர் நள்ளி’ என்கிறார்கள், ‘தோட்டிமலையின் அரசன் அவன், பளிங்குபோல் நீர் ஓடுகின்ற வளமான மலைநாட்டை ஆள்பவன்!’

தோட்டிமலை என்பது இன்றைய தொட்டபெட்டா சிகரமாம். மலைபோலவே மனம் உயர்ந்த அரசன். அரசவையில் பாடிப் பரிசு பெறும் புலவர்களின் கதைகளுக்கு மத்தியில், இப்படியோர் அழகான காட்சி. (புறநானூறு பாடல் எண் 150, பாடியவர்: வன்பரணர்)

Veeranum Manaiviyum

அவன் ஒரு போர்வீரன். பொருள் தேடி வெளியூருக்குச் செல்லப்போகிறான்.

அதை இன்னும் அவளிடம் சொல்லவில்லை. சொன்னால் தாங்கமாட்டாள். ஆகவே, அந்த வீரன் தயங்குகிறான். ‘அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறான்.

வழியில் அவன் ஓர் ஆபத்தான பாலை நிலத்தைக் கடந்துசெல்லவேண்டும். ஆகவே, பாதுகாப்புக்கு ஆயுதங்கள் தேவை.
அவன் தன் கையாலேயே செய்த வலிமையான வில்லை எடுத்து நாண் பூட்டுகிறான், அதைத் தெறிக்கவிட்டுச் சரிபார்க்கிறான்.
இதை அவள் பார்த்துவிடுகிறாள். சட்டென்று அவளுடைய முகத்தில் ஒளி குறைந்துவிடுகிறது.

அடுத்து, அவன் ஒரு கையுறையை அணிகிறான், இன்னும் சில ஆயுதங்களைத் தேர்ந்தெடுக்கிறான்.

இப்போது, அவளுடைய வருத்தம் இன்னும் அதிகரிக்கிறது. கண்களிலிருந்து நீர் வடிகிறதுது.

அடுத்து, அவன் சக்கரப்படையை எடுக்கிறான். அதன் நுனியைத் துடைத்துத் தயார்செய்கிறான்.

இனி, அவளுக்கு ஐயமேதும் இல்லை. அவன் தன்னைப்பிரிந்து செல்லப்போகிறான் என்பது உறுதியாகிவிட்டது. அந்தக் கணமே அவளுடைய உடல் மெலிய, வளையல்கள் கழன்று விழுகின்றன.

அருகிலிருக்கும் தோழி, இந்தக் காட்சியை அந்த வீரனுக்குச் சுட்டிக்காட்டுகிறாள், ‘நீ பிரியப்போவதாகச் சொல்லவே இல்லை; அதற்காக நீ செய்யும் முன்னேற்பாடுகளைக் கண்டே உன் மனைவி இப்படி வருந்துகிறாள்; இனி நீ உண்மையாகப் பிரிந்துசென்றால் அவளுடைய நிலை என்ன ஆகும், கொஞ்சம் சிந்தித்துப்பார்!’ என்கிறாள். ‘நீ தேடப்போகும் பொருள் முக்கியமா, இவள் உயிர் முக்கியமா?’

பெருங்கடுங்கோ எழுதிய பாடலொன்றின் சுருக்கம் இது. #கலித்தொகை முழுக்க இதுபோன்ற பேரழகான நாடகங்கள், நுணுக்கமான விவரிப்புகள்தாம். ஒவ்வொரு காட்சியும் அப்படியே கண்முன்னே நிற்கிறது!

Pollaa MaNi

யாராவது தீய குணத்துடன் இருந்தால், அவர்களைப் ‘பொல்லாத பயல்’ அல்லது ‘பொல்லாப் பயல்’ அல்லது ‘பொல்லாதவன்’ என்கிறோம்.

பொல்லுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள். ஆகவே, ‘பொல்லாத பயல்’ என்றால், நல்ல ஒழுக்கத்துடன் பொருந்தாதவன், தீயவற்றைச் செய்கிறவன். மாணிக்கவாசகர் தன்னைப் ‘பொல்லாவினையேன்’ என்று அழைத்துக்கொண்டு இரங்குவார்.

ஆனால், அதே மாணிக்கவாசகர் இன்னொரு பாடலில் இறைவனைப் ‘பொல்லா மணி’ என்கிறார். நம்மாழ்வார் திருமாலைப் ‘பொல்லாக் கருமாணிக்கமே’ என்கிறார்.

இதென்ன? இறைவனைப் பொல்லாதவன் என்று அழைக்கலாமோ?

இந்த இரு பயன்பாடுகளிலும் ‘பொல்லா’ என்பதற்குப் பின்னால் மணி/மாணிக்கம் என்ற சொல் வருவதைக் கவனியுங்கள். அதுதான் நம் துப்பு.

‘பொல்லுதல்’ என்ற சொல்லுக்குச் செதுக்குதல்/துளையிடுதல் என்ற பொருள்களும் உண்டு. ‘பொல்லா மணி’ என்றால், இன்னொருவர் முனைந்து செதுக்காமல் இயற்கையாகவே அழகும் சிறப்பும் மிகுந்த மணி, அல்லது, துளையிட்டு நகையில் பொருத்தப்படாமலேயே தனது இயல்பான அழகோடு திகழ்கிற மணி என்று பொருள். மற்ற மணிகளெல்லாம் செதுக்கப்பட்டால்/துளையிடப்பட்டு நகையில் பொருத்தப்பட்டால்தான் அழகு. ஆனால் இந்த மணி, இயற்கையிலேயே அழகு. கொஞ்சம் நெகிழ்த்தி உவமை சொல்வதென்றால், செடியில் இருக்கிற, பறிக்கப்படாத, தொடுக்கப்படாத மலர்போல.

ஆகவே, இறைவன் பொல்லா மணி, நாமெல்லாம் பொல்லா மனிதர்கள்.

Nizhal

காதலியை அழைத்துக்கொண்டு புறப்படுகிறான் காதலன். அவர்கள் ஒரு பாலை நிலத்தைக் கடந்துசென்றாகவேண்டும்.

இத்தனை நாளாக அவள் வீட்டுக்குள் மென்மையாக வளர்ந்தவள். இந்தப் பாலை நிலத்தில் நடப்பதால் அவளுடைய கால்கள் நோகின்றன, சிவந்து வருந்துகின்றன.

காதலன் அவளைப் பரிவோடு பார்க்கிறான், ‘அவசரமில்லை, மெதுவாக நடந்து வா!’ என்கிறான். ‘இது அச்சம் தரும் வழிதான். ஆனால், நான் பக்கத்தில் இருக்கிறேன், ஆகவே, நீ எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. நிதானமாக நடந்து வா. இந்த வழியில் நடப்பதால் உன் பாதங்கள் நோகும்போதெல்லாம் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள், எந்த வருத்தமும் இல்லாமல் என்னோடு வா!’

அம்மூவனார் எழுதிய நற்றிணைப் பாடல் இது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நற்றிணைப் பாடலில் வெறும் ஒன்றரை வரி, அதற்குள் என்ன அழகு! மரங்களோ நிழலோ இல்லாத அந்தப் பாலை நிலத்தில் அவனுடைய சொற்களே அவளுக்குக் களைப்பைத் தீர்க்கும் நிழலாவதைக் கண்முன் நிறுத்திவிடுகிறார்!

‘அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி.’