Udaivathu

சில பாடல்கள் சொற்கோப்பினால் முதலில் கவரும். அதன்பிறகுதான் பொருளைச் சிந்திப்போம்.

எடுத்துக்காட்டாக, நம்மாழ்வாரின் இந்தப் பாடல்:

அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்,
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே,
கடைவதும் கடலுள் அமுதம்

திருமால் அடைவது, அழகிய தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகளின் தோள்களை, அவர் மிடைவது (புரிவது) அசுரர்களோடு கடுமையான போர்களை, அவர் கடைவது பாற்கடலிலே அமுதத்தை … இந்த மூன்று அடிகளையும் இனிய இசையோடு ஒழுங்குறப் படித்தபிறகு, நாம் நான்காவது அடியாக என்ன எதிர்பார்ப்போம்? திருமால் தானே செய்த இன்னொரு செயலைத்தானே?

நம்மாழ்வாரும் அப்படிதான் வருகிறார், ஆனால் நாம் சற்றும் எதிர்பாராதபடி சட்டென்று கியர் மாற்றிவிடுகிறார், இப்படி:

அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்,
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே,
கடைவதும் கடலுள் அமுதம், என் மனம்
உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே.

இங்கே ‘உடைவதும்’ என்பதும் திருமால் செயல்தான். ஆனால் அதனை அவர் செய்யவில்லை, அவரால் அது நிகழ்கிறது. மனம் உடைந்த ஒருவர்தான் மீதமுள்ள அடைவது, மிடைவது, கடைவதை எண்ணி ஏங்குகிறார் என்று காணும்போது சொற்கோப்பைத் தாண்டி உணர்வுகள் நம்மை ஆக்கிரமித்துவிடுகின்றன.

நான்கு அடிகளையும் இன்னொருமுறை நிதானமாகப் படித்துப்பாருங்கள், ஈற்றடியில் ஒரு மாயம் நிகழ்வதைக் காணலாம்.

இதில் இன்னொரு நயம், ‘உடைவது’ என்ற சொல்லோடு, ‘ஒருங்கு’ என்ற சொல்லை இணைத்த முரண் தொடை.

‘உடைதல்’ என்பது ஒன்றைப் பலவாகப் பிரித்தல், ‘ஒருங்குதிரட்டுதல்’ என்பது பலவற்றை ஒன்றாகச் சேர்த்தல், அந்த இரண்டையும் இணைத்து, ‘அந்தப் பெருமான் என் மனத்தை மொத்தமாக உடைத்துவிட்டான்’ என்கிறார் நம்மாழ்வார்.

Advertisements

Pilguthal

சிவனின் திருவடி எப்படியிருக்கும்?

’நனைந்ததுபோல் ஈரமாக இருந்தது’ என்கிறார் திருநாவுக்கரசர்.

சிவனின் திருமுடியில்தானே கங்கை நதி இருக்கிறது? திருவடி எப்படி நனைந்தது? இந்த விஷயம் திருநாவுக்கரசருக்கு எப்படித் தெரியும்?

வானோர்களெல்லாம் சிவனின் திருவடியைத் தேடி நெருங்கி வந்து வணங்குகிறார்களாம். அவர்கள் தங்களுடைய தலையில் வைத்திருந்த பலவிதமான மலர்கள் அங்கே விழுகின்றனவாம். அவற்றிலிருந்து வழியும் தேனில் அவருடைய திருவடிகள் நனைந்திருக்கின்றனவாம். அத்தகைய திருவடியை அவர் என் தலையில் வைத்தார் என்கிறார் திருநாவுக்கரசர். திருநல்லூர் பெருமான்மீது பாடிய பாடல் இது.

இங்கே அவர் ‘பில்கி’ என்றோர் அழகிய சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘பில்குதல்’ என்றால் ஒழுகுதல் என்று பொருள்.

’சிறந்து வானோர்
இனம் துருவி மணிமகுடத்து ஏறத் துற்ற
இன மலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே.’

Surukku Vazhi

Shortcut என்பதைத் தமிழில் ‘குறுக்கு வழி’ என்று எழுதுகிறோம். இன்று ஒரு #நம்மாழ்வார் பாசுரத்தில் ‘சுருக்கு’ என்ற சொல்லைப் பார்த்தேன்:

‘வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப்போகல் அல்லால் மற்று ஒன்று இல்லை சுருக்கே.’

அதாவது, திருமாலின் புகழைச் சொன்னால்தான் உய்யமுடியும்; வேறு சுருக்கு வழி இல்லை என்கிறார்.

Short cut-க்குக் குறுக்கு வழியைவிடச் ‘சுருக்கு வழி’ பொருத்தமான மொழிபெயர்ப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

KutRam

வள்ளுவரின் சொற்தேர்வுகள் பல நேரங்களில் பிரமிப்பில் ஆழ்த்தும். எடுத்துக்காட்டாக, 436வது குறள்:

தன் குற்றம் ‘நீக்கி’, பிறர் குற்றம் ‘காண்’…

அதாவது, முதலில் நம்முடைய குற்றங்களை ‘நீக்கவேண்டும்’, அதன்பிறகு, மற்றவர்களுடைய குற்றங்களைக் ‘காணவேண்டும்’.

இதன் பொருள், நம்மிடம் குற்றம் உள்ளவரை, அது முழுமையாக நீக்கப்படாதவரை, அடுத்தவர்களுடைய குற்றங்களைக் ‘காணக்கூட’ நமக்குத் தகுதியில்லை. ‘அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’ என்று பிடிவாதம் பிடித்தால் நமக்குதான் நட்டம்.

இதை மேலும் நீட்டினால்:

அடுத்தவர்களுடைய குற்றங்களைக் காணக்காண, நமக்குத் தெம்பு வரும், ‘எல்லாரும்தான் தப்புச்செய்யறான், நாம தப்போட இருந்தா என்ன?’ என்று நினைப்போம். சமூகத்தில் ஒழுக்கத்தின் சராசரி அளவு குறைந்துகொண்டே போகும்.

ஆகவே, நம் குற்றம் சரியாகும்வரை அடுத்தவனைப் பார்க்காதே. How Smart!

Naalkaatti IlakkaNam

ஒரு நாள்காட்டி/மாதங்காட்டியை வைத்தே மாணவர்களுக்குப் புணர்ச்சி இலக்கணத்தை அழகாகச் சொல்லித்தரலாம். இயல்புப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சியில் தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய நான்குக்கும் வார நாட்களில் எடுத்துக்காட்டுகள் உண்டு:
 
  • ஞாயிறு + கிழமை => ஞாயிற்றுக்கிழமை (தோன்றல், ‘ற்’ & ‘க்’ தோன்றின)
  • திங்கள் + கிழமை => திங்கட்கிழமை (திரிதல், ‘ள்’ திரிந்து ‘ட்’ ஆனது)
  • புதன் + கிழமை => புதன்கிழமை (இயல்பு)
  • வியாழன் + கிழமை => வியாழக்கிழமை (கெடுதல், ‘ன்’ கெட்டது, தோன்றல், ‘க்’ தோன்றியது)

Innaar, Inaiyar

நேற்று ஒரு திருக்குறளில் ‘இன்னான்’ என்ற சொல்லைப் படித்தேன். என்ன அழகான பயன்பாடு!

இவன், இவள், இவர் என்பவை சுட்டுச்சொற்கள். ஆனால் இன்னான், இன்னாள், இன்னார் என்பவை வெறுமனே சுட்டுச்சொல்லாக நிற்காமல், பண்பையும் குறிக்கின்றன. ‘இவர் இப்படிப்பட்டவர்’ என்பதை உணர்த்துகிறது ‘இன்னார்’. அவ்வகையில், ‘இன்னார்(ரு)க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என்ற கண்ணதாசன் வரிகள் ஆழமானவை.

இனையன், இனையள், இனையர் என்ற சொற்களும் பழந்தமிழில் வழக்கில் இருந்துள்ளன. ‘இனையன் பாவனை இரும்பு’ என்று மாணிக்கவாசகர் உருகுவார்.

‘இனைய’ என்றால் இத்தன்மை கொண்ட என்று பொருள். ஆகவே, இனையன், இனையள், இனையர் ஆகியவையும் இன்னான்/இன்னாள்/இன்னார்போன்ற பொருளைத் தருபவைதான்: இந்தத் தன்மை கொண்டவன்/ள்/ர்.

இந்த ‘இனையர்’க்கு ஒரு மயங்கொலித் துணை உண்டு: ‘இணையர்’.

ஆங்கிலத்தில் வரும் Spouse என்பதற்குப் பதிலாக ‘இணையர்’ என்ற சொல்லை இப்போது பயன்படுத்துகிறார்கள். ‘கணவன்’, ‘மனைவி’ போன்றவை முறையே ஆண்பால், பெண்பாலைக் குறிக்கின்றன. ‘இணையர்’ என்பது அவற்றுக்குப் பொது.

ஆகவே, ஒருவர் தன் கணவன்/மனைவியின் பண்புகளைப்பற்றிச் சொல்லும்போது, ‘என் இணையர் இனையர்’ எனலாம்.

‘அர்’ விகுதி தமிழில் பன்மையையும் குறிக்கும், ஒருமையை மரியாதையாகக் குறிப்பிடவும் பயன்படும். எனவே, இணையர் என்பது ஒருவரையும் குறிக்கலாம், கணவன், மனைவி இருவரையும் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக:

* திருமணத்துக்கு உங்கள் இணையரை அழைத்துவாருங்கள் (ஒருமை)

* நீங்கள் இருவரும் என்றென்றும் இணையராக வாழ்க (பன்மை)

Kaattu Silamban

காட்டு விலங்குகள், பறவைகளைப்பற்றிய சிறுவர் நூலொன்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் Jungle Babbler என்ற பறவையைப்பற்றிய குறிப்பு வந்தது. அதற்குத் தமிழில் பெயர் உண்டா என்று இணையத்தில் தேடினேன், ‘காட்டுச் சிலம்பன்’ என்ற பெயர் கிடைத்தது.

என்ன அழகான மொழிபெயர்ப்பு! நிச்சயம் இது பண்டிதர் மொழிபெயர்ப்பாக இராது என்பது என் ஊகம்; இப்பறவைகளை அடிக்கடி கண்ட காட்டுவாசிகள் இப்பெயரை வைத்திருப்பார்களோ?

‘Babbler’ என்றால் ஆங்கிலத்தில் ‘வாயாடி’ என்று பொருள் சொல்கிறார்கள். இந்தப் பறவை மிகுந்த ஒலியெழுப்பிக்கொண்டே இருக்குமாம். அதனால்தான் இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள்போல.

தமிழில் இதனைச் ‘சிலம்பன்’ என்கிறார்கள். ‘சிலம்பல்’ என்றால், ஓயாமல் பேசுவது என்று பொருள் சொல்கிறது அகரமுதலி. ஆக, Jungle Babbler தமிழில் ‘காட்டுச் சிலம்பன்’ ஆகிறது!