Pasu Meyththal

நண்பர் வீரராகவன் ஶ்ரீரங்கத்தில் ஓர் ஆநிரைக்கூடம் நடத்திவருகிறார். காயப்பட்ட பசுக்கள் பலவற்றுக்குச் சிகிச்சையளித்து சிறப்பாகப் பராமரித்துவருகிறார்.

சில வாரங்களுக்குமுன் அவரை நேரில் சந்தித்தபோது, அந்த ஆநிரைக்கூடத்துக்கு என்னை அழைத்துச்சென்றார். மகிழ்ச்சியோடு சுற்றிக்காட்டினார். பசுக்களை அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும் நேரம், ‘பசு மேய்க்கறதுல ஒரு சுகம் இருக்கு, தெரியுமா?’ என்றார் வீரராகவன். ‘இதை நான் சொன்னா யாரும் புரிஞ்சுக்கமாட்டாங்க, நம்பமாட்டாங்க, நிஜமாவே மேய்ச்சுப்பார்த்தால்தான் அது புரியும்.’

‘ஆரம்பத்துல நானும் இதை நம்பலை. ஆனால் இங்கிருக்கும் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைச்சுகிட்டுப்போகும்போது, அவை மேயறதைப் பார்க்கும்போது, அதிலிருக்கிற ஒரு மயக்கமான சுகம் புரியவந்தது. அது இன்னும் இன்னும் எந்நேரமும் வேணுமாயிருக்கு, மற்ற எந்தக் கைங்கர்யமும் இதுக்கு இணையாகாதுன்னு தோணுது. இதெல்லாம் தெரிஞ்சுதான் கிருஷ்ணர் பசுமேய்க்கிற வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்தார்ன்னு நினைக்கறேன்.’

இன்று காலை #நம்மாழ்வார் பாசுரமொன்றில் இந்த வரியைப் படித்தபோது, வீரராகவன் சொன்னது நினைவுக்கு வந்தது:

‘திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி.’

‘திவம்’ என்றால் பரமபதம், அங்கே வாசம்செய்வதைவிட, இங்கே வந்து பசு மேய்ப்பதுதான் கண்ணனுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம்!

Advertisements

Kasigai

‘கசிகை’ என்றால் நட்பு என்று பொருளாம். #நம்மாழ்வார் பயன்படுத்தும் சொல் இது. (‘அசுரர்கள் தலைப்பெயில்’ என்று தொடங்கும் பாடல்.)

அகரமுதலியைப் பார்த்தால், ‘கசி’ என்ற சொல்லுக்கே ‘நட்பு’ என்று ஒரு பொருள் போட்டிருக்கிறார்கள். ‘கசிகை’ என்பதை நட்பு கொள்ளுதல்/ஈடுபாடு கொள்ளுதல் என்று விவரிக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், ‘காதலாகிக் கசிந்து உருகி’ என்ற ஞானசம்பந்தர் வரிகளுக்கு இன்னொரு பொருள் கிடைக்கிறது!

Muthal SambaLam

என்னுடைய முதல் வேலை, ஒரு மாதத்தின் ஆறாந்தேதியில் தொடங்கியது.

இது ஓர் அவசியமற்ற புள்ளிவிவரமாகத் தோன்றலாம். ஆனால் இதனால் பல பொருளாதாரத் தாக்கங்கள் உண்டு.

ஆறாந்தேதி வேலை தொடங்குகிறது என்றால், அடுத்த இருபத்தைந்து நாட்களுக்கு ‘முதல் சம்பளம்’ வரப்போவதில்லை என்று பொருள். ஆகவே, கையில் வைத்திருக்கும் பணத்தை வைத்துச் சுமார் ஒரு மாத்துக்குத் தாக்குப்பிடிக்கவேண்டும் என்று பொருள்.

நானும் இழுத்துப்பிடித்துச் சமாளித்தேன், மாதக்கடைசியில் கொஞ்சம் நெருக்கடி. ஒரு தோழியிடம் கடன் வாங்கினேன்.

பெரிய தொகையில்லை. நானூறு ரூபாய் என்று நினைவு. ஆனால் அப்போது அதுவே பெரிய உதவியாக இருந்தது.

அந்தத் தோழியும் அதே ஆறாந்தேதி என்னோடு வேலையில் சேர்ந்தவர்தான். ஆனால் அவர் எப்படியோ கையிலிருந்த பணத்தைச் சிக்கனமாகச் செலவழித்து மிச்சப்படுத்தியிருந்தார், இன்னொருவருக்குக் கடன் தரும் அளவுக்கு.

அந்த மாதத்தின் 31ம் தேதி, எனக்கு முதல் சம்பளம் வந்தது. ஏடிஎம் வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகவே, சம்பளப்பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று வரிசையில் நின்றேன்.

சிறிதுநேரத்தில், என்னுடைய முதல் சம்பளத்தை வாங்கிக்கொண்டேன். மகிழ்ச்சியோடு வெளியே வந்தபோது, எனக்குக் கடன் தந்த தோழியைப் பார்த்தேன். அவருக்கும் இதுதானே முதல் சம்பளம்; அதை எடுப்பதற்காக வங்கிக்கு வந்திருந்தார்.

அவரைப் பார்த்தவுடன், சட்டென்று ஓடிச்சென்று நன்றி சொன்னேன். அந்த நானூறு ரூபாயைக் கொடுத்தேன்.

ஆனால், அவர் அதை வாங்கிக்கொள்ளவில்லை, ‘சம்பளப்பணமா?’ என்றார் அமைதியாக.

‘ஆமா, பின்னே?’

‘முதல் சம்பளம்தானே.’

‘ஆமா. அதுக்கென்ன?’

‘முதல் சம்பளத்துல முதல் செலவாக் கடனைத் திருப்பிக்கொடுப்பியா? முட்டாள்’ என்றார் அவர். ‘போய் அம்மாவுக்கு எதாவது பரிசு வாங்கு. என் கடனை நாளைக்குத் திருப்பித்தரலாம்’ என்று சொல்லிவிட்டு வங்கிக்குள் நுழைந்தார்.

இது நடந்து இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது யோசித்தாலும், நான் செய்ததும் தவறில்லை, அவர் சொன்னதும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இரண்டும் எப்படிச் சாத்தியம் என்று புரியவில்லை.