IthaN

இன்று கற்றுக்கொண்ட புதிய பழந்தமிழ்ச்சொல், இதண்/இதணம்.

வயல்களைக் காவல் காக்கும் பெண்கள் அமர்வதற்காக உயரத்தில் கட்டப்படும் பரண்போன்ற அமைப்பு இது.

திருமங்கையாழ்வார் திருவேங்கடமலையை விவரிக்கும்போது ‘குறமாதர் நீள் இதணந்தொறும் செம்புனம் அவை காவல்கொள் திருவேங்கடம்’ என்கிறார். ‘உயரத்தில் இருக்கும் இதணங்களிலே குறத்தியர்கள் அமர்ந்தபடி சிறந்த வயல்களைக் காவல் காக்கும் மலை, திருவேங்கடம்.’

சங்க இலக்கியத்திலும் இச்சொல் உள்ளது. திணைமாலை நூற்றைம்பதில் கணிமேதாவியார் பயன்படுத்துகிறார்:

‘வருக்கை வள மலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக்
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என் தோழி தோள்.’

ஒரு பெண்ணுக்கு அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், அப்போது அவளுடைய தோழி அவர்களிடம் பேசுகிறாள், ‘இவள் ஏற்கெனவே ஒருவன்மீது காதல்கொண்டுவிட்டாள், வேறு மாப்பிள்ளை தேடாதீர்கள்’ என்கிறாள்.

யார் அவன்?

தோழி விவரிக்கிறாள், ‘ஒருநாள், பலாமரங்கள் நிறைந்த வளமான மலையிலே நானும் என் தோழியும் வயலைக் காவல் காக்கச் சென்றிருந்தோம், மேலே பரண்மீது அமர்ந்திருந்தோம்.’

’அப்போது பெரிய தும்பிக்கையைக்கொண்ட மதயானை ஒன்று பாய்ந்து வந்தது, அது எங்களைத் தாக்காமல் ஒருவன் காப்பாற்றினான், அவன்மீது என் தோழி காதல் கொண்டுவிட்டாள், அவனுடைய தோளைத்தவிர இன்னோர் ஆணின் தோளை அவள் தொடமாட்டாள்.’

Sollin NeeLam

ஒரு சொல்லின் நீளம் என்ன?

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பயன்படுத்துவோருக்குத் தெரியும். LEN() என்ற சூத்திரத்தைக்கொண்டு சொல்லின் நீளத்தை எளிதாக அளந்துவிடலாம்.

ஆனால் உண்மையில், ஒரு சொல்லில் எத்தனை எழுத்துகள் உள்ளன, எத்தனை மாத்திரைகள் உள்ளன, எத்தனை அசைகள் உள்ளன, அதைச் சொல்ல எத்தனை விநாடிகள் தேவைப்படுகின்றன என்பதைப்பொறுத்தெல்லாம் அதன் நீளம் தீர்மானமாவதில்லை. அது தெரிவிக்கும் கருத்தே சொல்லின் நீளத்தைத் தீர்மானிக்கிறது.

‘இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்,

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கொரு ஜென்மம் வேண்டும்’

என்று வைரமுத்து திரைப்பாடலில் எழுதினார். இதன் வேர் ஆழ்வார் பாசுரங்களில் இருக்கிறது.

‘இரந்தவர்க்கு இல்லை என்று நெடும் சொலால் மறுத்த நீசனேன்…’ என்று எழுதுகிறார் திருமங்கையாழ்வார்.

ஒருவர் உதவி கேட்டு வரும்போது, ’இல்லை’ என்று சொல்வது ’நெடும் சொல்’லாம். இத்தனைக்கும் மூன்றே எழுத்துகள்தான்!