Thaamboolam

புன்னகையில் மின்சாரம்
பொங்கவரும் முத்தாரம்
அள்ளியெடுக்க!

இப்படி முதல் வரி எழுதியாயிற்று. இது ‘அள்ளியெடுக்க’ என்று நிறைவடைவதால் இரண்டாம் வரியைக் ‘கிள்ளியெடுக்க’ என்று முடித்தால்தான் ஓசை நயம் நன்றாயிருக்கும். அதற்குப் பொருத்தமாக முந்தைய நான்கு சொற்களை எழுதவேண்டும். கிள்ளினால் வலிக்கும், அந்த வலி தெரியாதபடி அது செல்லக்கிள்ளலாகவும் இருக்கவேண்டும். வாலி எப்படி அழகாகவும் குறும்பாகவும் சொல் கோக்கிறார் பாருங்கள்.

கன்னமெனும் தாம்பாளம்
கொண்டுவரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க!

அது நிற்க, முதல் வரியில் வரும் ‘மின்சாரம்’ நாம் நன்கறிந்த Electricity அல்ல, மின்னலின் சாரம்!

தமிழில் ‘மின்’ என்ற சொல்லே மின்னலைக் குறிக்கும். ’மின்புரை காதன்’ என்று சிவபெருமானைப் பாடுவார் திருஞானசம்பந்தர். அதாவது மின்னல்போல் ஒளிவீசும் காதணியை அணிந்தவர்.

கம்பனில் இலக்குவனைக் குறிக்கும் வர்ணனையொன்று, ‘மின் நிலை வில்லினான்’ என்பது, மின்னல்போல ஒளிரும் வில்லை ஏந்தியவன்.

‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதியிருப்பார் வைரமுத்து, இங்கே மின்னொளி என்பது Electric Light அல்ல, மின்னல் ஒளி.

மின்னல் ஒளிக்கும் தாழம்பூவுக்கும் என்ன தொடர்பு?

சூரியனைக்கண்டால் தாமரை மலரும் என்பதுபோல, மின்னல் வெட்டினால் தாழம்பூ பூக்கும் என்றொரு நம்பிக்கை. இதை இன்னும் சில திரைப்பாடல்களிலும் பார்க்கலாம்.

முதன்முதலாக இக்கருத்தைத் திரைப்படத்தில் எழுதியவர் சுரதா. ’நாடோடி மன்னன்’ படத்தில் ’மின்னல் கண்டு தாழை மலர்வதுபோல…’ என்று எழுதிய அவர், இதற்குக் குறுந்தொகையில் ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் எந்தப்பாடல் என்று தெரியவில்லை.

மறுபடி வாலியின் பாட்டுக்கு வருவோம். மின்னலின் சாரம்போலொரு செறிந்த புன்னகை உதட்டில் பொங்க முத்துமாலையாக(முத்து ஆரம்)த் தலைவி வருகிறாள், அள்ளியெடுப்பதும் கன்னத் தாம்பாளத்தில் தாம்பூலத்தைக் கிள்ளியெடுப்பதும் தலைவன் சமர்த்து!

Advertisements

Contronyms

ஆங்கிலத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு பொருள்களைத் தரும் ஒரே சொல்லை ‘Contronym’ என்று அழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘Consult’ என்ற சொல் ஆலோசனை தருவதையும் குறிக்கும், ஆலோசனை பெறுவதையும் குறிக்கும். இப்படி இன்னும் பல இருக்கின்றன. கூகுள் செய்தால் வியப்போடு வாசிக்கலாம்.
 
தமிழிலும் Contronyms உண்டு. சட்டென்று நினைவுக்கு வரும் சொற்கள்:
 
1. அயல்: அருகே உள்ளது என்று ஒரு பொருள், தொலைவில் (புறத்தே) உள்ளது என்று இன்னொரு பொருள்
2. நிழல்: ஒளியில்லாத கரிய பிம்பம் என்று ஒரு பொருள், ஒளி என்று இன்னொரு பொருள்
 
Contronymsஐத் தமிழில் எப்படி அழைப்பது? முரண்பொருட்சொற்கள் என்றா?

Thaanaga

’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தின் பெயர் சரியா? ’தானா’க்குப்பிறகு ‘ச்’ வரவேண்டுமல்லவா? அது பேச்சுவழக்கு என்பதால் இலக்கணம் பின்பற்றப்படவில்லையா?

முதலில், பேச்சுவழக்காகவே இருந்தாலும் அதை எழுதும்போது இலக்கணத்தைப் பின்பற்றவேண்டும். ஆகவே, ‘தானாச் சேர்ந்த கூட்டம்’ என்று எழுதுவதுதான் முறை.

இதுவொன்றும் இலக்கணவிரும்பிகள் போட்ட கட்டாய விதிமுறையல்ல. பேச்சுவழக்கிலேயே நாம் அங்கே ‘ச்’சன்னாவைச் சேர்த்துதான் பேசுகிறோம், ஆகவே எழுதும்போதும் அதைப் பின்பற்றுகிறோம்.

இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், ’சேர்ந்த’ என்ற சொல்லைச் சிலர் Cherntha என்று உச்சரிப்பார்கள், சிலர் Serntha (ஸேர்ந்த) என்று உச்சரிப்பார்கள். இதைப்பொறுத்துப் பேச்சில் ‘ச்’ சேர்ந்துவிடும், அல்லது சேராது:

தானாச் சேர்ந்த கூட்டம் (ச் வரும்)
தானா ஸேர்ந்த கூட்டம் (ச் வராது)

மேற்கண்ட இரண்டையும் சொல்லிப்பாருங்கள், முதல் சொற்றொடரில் தானாகவே நீங்கள் ‘ச்’ சேர்த்துவிடுவீர்கள். ஆகவே எழுதும்போதும் சேர்ப்பீர்கள்.

‘தானாக’ என்பதுதான் இங்கே ‘தானா’ என்று சுருங்கியுள்ளது. ‘ஆக’ விகுதிக்குப்பதில் ‘ஆ’ என்ற விகுதியைப் பயன்படுத்துகிறோம்.

* நானாகச் செய்தேன் => நானாச் செஞ்சேன்
* அவராகச் சொன்னார் => அவராச் சொன்னார்
* முதல்வராகப் பதவியேற்றார் => முதல்வராப் பதவியேத்தார்
* மழையாகப் பெய்தது => மழையாப் பெஞ்சிச்சு

இங்கே ‘ஆக’ என்பதற்குப்பதில் ‘ஆய்’ என்ற விகுதியையும் பயன்படுத்துவதுண்டு, அப்போதும் வலி மிகும் (நானாய்ச் செஞ்சேன், அவராய்ச் சொன்னார்), ஆனால் ‘ஏ’, ’ஆவே’, ‘ஆகவே’ போன்ற விகுதிகளைப் பயன்படுத்தினால் வலி மிகாது (நானே செஞ்சேன், நானாவே செஞ்சேன், நானாகவே செஞ்சேன்).

சுருக்கமாகச் சொன்னால்:

* ’ஆக’, ’ஆ’, ’ஆய்’ விகுதிகள்: வலி மிகும்: தானாகச் சேர்ந்த கூட்டம், தானாச் சேர்ந்த கூட்டம், தானாய்ச் சேர்ந்த கூட்டம்
* ’ஏ’, ‘ஆவே’, ’ஆகவே’ விகுதிகள்: வலி மிகாது: தானே சேர்ந்த கூட்டம், தானாவே சேர்ந்த கூட்டம், தானாகவே சேர்ந்த கூட்டம்

Kadalmallai

முன்பொருகாலத்தில் மாமல்லபுரம் பரபரப்பான துறைமுகமாக இயங்கியிருக்கிறது. அங்கே வந்துசென்ற கப்பல்கள்/மரக்கலங்களைத் #திருமங்கையாழ்வார் அழகாக வர்ணிக்கிறார்:

‘புலன்கொள் நிதிக்குவையோடு புழைக்கை மா களிற்று இனமும்
நலம்கொள் நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லை…’

‘நான்று ஒசிந்து’ என்ற விவரிப்பைத் திரும்பத்திரும்ப வாசித்து மகிழலாம். ‘நான்று’ என்றால் தொங்குதல், ‘ஒசிதல்’ என்றால் ஒரு பூங்கொடியைப்போல் அழகாக வளைதல், இவ்விரு சொற்களையும் சேர்த்துப்பார்க்கும்போது நாமே மாமல்லபுரக்கரையில் நிற்கிறோம், கடலில் அலைகளுக்கிடையே மரக்கலங்கள் அழகாக ஆடி, அசைந்து வருகிற காட்சியைப் பார்க்கிறோம்.

அந்தப் பெருமைக்குரிய கப்பல்களில் ஐம்புலன்களைக் கவரும் நிதிக்குவியல்கள், தும்பிக்கை யானைக்கூட்டங்கள், நலம் தரும் நவமணிக்குவியல்களெல்லாம் இருக்கின்றன, ’அவற்றையெல்லாம் பார்த்து ஆசைப்படாதே’ என்று தன் நெஞ்சுக்குச் சொல்கிறார் ஆழ்வார், ’கரையில் தலசயனப்பெருமாள் இருக்கிறார், கப்பலில் வரும் நிதிமீது விருப்பமின்றிக் கரையிலுள்ள இவர்மீது விருப்பம்வைத்து வலம் வருகிற அன்பர்களைப் பார், அவர்களை வலம் வந்து வணங்கு’ என்கிறார்:

‘…கடல்மல்லைத் தலசயனம்
வலம்கொள் மனத்தார், அவரை வலம்கொள் என் மடநெஞ்சே.’