Sollin NeeLam

ஒரு சொல்லின் நீளம் என்ன?

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பயன்படுத்துவோருக்குத் தெரியும். LEN() என்ற சூத்திரத்தைக்கொண்டு சொல்லின் நீளத்தை எளிதாக அளந்துவிடலாம்.

ஆனால் உண்மையில், ஒரு சொல்லில் எத்தனை எழுத்துகள் உள்ளன, எத்தனை மாத்திரைகள் உள்ளன, எத்தனை அசைகள் உள்ளன, அதைச் சொல்ல எத்தனை விநாடிகள் தேவைப்படுகின்றன என்பதைப்பொறுத்தெல்லாம் அதன் நீளம் தீர்மானமாவதில்லை. அது தெரிவிக்கும் கருத்தே சொல்லின் நீளத்தைத் தீர்மானிக்கிறது.

‘இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்,

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கொரு ஜென்மம் வேண்டும்’

என்று வைரமுத்து திரைப்பாடலில் எழுதினார். இதன் வேர் ஆழ்வார் பாசுரங்களில் இருக்கிறது.

‘இரந்தவர்க்கு இல்லை என்று நெடும் சொலால் மறுத்த நீசனேன்…’ என்று எழுதுகிறார் திருமங்கையாழ்வார்.

ஒருவர் உதவி கேட்டு வரும்போது, ’இல்லை’ என்று சொல்வது ’நெடும் சொல்’லாம். இத்தனைக்கும் மூன்றே எழுத்துகள்தான்!

Advertisements

Comma

‘தேவர் சிலைக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை’ என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதன் கீழே, ‘ஒரு கமா போட மறந்து கலவரத்தை உண்டாக்கிட்டீங்களே’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதாவது, ‘தேவர் சிலைக்கு முதல்வர், மு. க. ஸ்டாலின் மரியாதை’ என்று எழுத நினைத்திருந்தார்கள்போல, அச்சுக்கோக்கும்போது காற்புள்ளி விடுபட்டுவிட்டது, ஆகவே, மு. க. ஸ்டாலின்தான் தமிழக முதல்வர் என்னும் பொருள் வந்துவிட்டது.

உண்மையில் தமிழில் காற்புள்ளியே இல்லை, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முழு(முற்று)ப்புள்ளி, உணர்ச்சிக்குறி, கேள்விக்குறி, மேற்கோள்குறி என அனைத்துமே பின்னர் சேர்க்கப்பட்ட இலக்கணங்கள்தாம். இணையம், கணினி போன்ற சொற்களைக் காலம் கருதி உருவாக்கினோமல்லவா, அதுபோல, உரைநடை எழுத்து வளர வளர Punctuation: நிறுத்தற்குறிகள் எனப்படும் இவற்றைத் தமிழில் சேர்த்துக்கொண்டோம்.

அப்படியானால், முன்பெல்லாம் காற்புள்ளியில்லாமல் தமிழர்கள் எப்படி எழுதினார்கள்?

’உம்’ எனும் இணைப்பைப் பயன்படுத்தினார்கள். ‘முதல்வர், மு. க. ஸ்டாலின்’ என்று எழுதாமல், ‘முதல்வரும் மு. க. ஸ்டாலினும்’ என்று எழுதினார்கள்.

சொல்லப்போனால், ‘and’, ‘or’ என்பவற்றை மொழிபெயர்த்து நாம் பயன்படுத்தும் ‘மற்றும்’, ‘அல்லது’ ஆகிய சொற்கள்கூடத் தமிழில் அவசியமில்லை, உம், ஓ ஆகிய பின்னொட்டுகளைப் பயன்படுத்தி அவற்றைச் சுருக்கமாக எழுதலாம்:

India and Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும்
India or Pakistan: இந்தியாவோ பாகிஸ்தானோ

சிலர் ‘இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ’ என்று எழுதுகிறார்கள். அது ‘காலையில் இட்லியும் இட்லியும் சாப்பிட்டேன்’ என்று எழுதுவதற்குச் சமம். ‘ஓ’ பின்னொட்டு வந்தால் ‘அல்லது’ அவசியமில்லை, ‘அல்லது’ வந்தால் ‘ஓ’ அவசியமில்லை.

ஆகவே, கவனித்து ‘ஓ’ போடவும்.

Bharathidasan

பெருஞ்சித்திரனாரின் நூலொன்றை (‘கொய்யாக்கனி’) வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் பாரதிதாசன்பற்றி ஒரு சுவையான விவரம் கிடைத்தது.

பாரதிதாசன் தனித்தமிழை வலியுறுத்திவந்தவர். ஆனால், அவருடைய ஆரம்பகால நூல்களில் பல வடமொழிச்சொற்கள் இடம்பெற்றிருந்தனவாம். இதைப் பெருஞ்சித்திரனார் கவனித்திருக்கிறார், ‘ஐயா, இது நம் கொள்கைக்குப் பொருந்தவில்லையே; இந்த வடசொற்களை நீக்கிவிட்டுத் தூய தமிழ்ச்சொற்களை இட்டு மீண்டும் வெளியிடலாமே’ என்றாராம்.

ஆனால், பாரதிதாசன் அதை ஏற்கவில்லை, ‘வேண்டாம். அவை அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்’ என்றாராம், ‘நான் எப்படியெப்படி இருந்து வளர்ந்து இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றேன் என்று மற்றவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டாமா?’

Agadu

’முகடு’ என்றால் மலை உச்சி என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். ‘அகடு’ தெரியுமா?

தமிழ்வழிக்கல்வியில் இயற்பியல் பயின்றவர்கள் இதை வாசித்திருப்பார்கள். முகடு என்பதன் எதிர்ப்பதம்தான் அகடு. ஓர் அலைவடிவத்தின் உச்சிப்பகுதிகளை முகடு என்றும், தாழ்ந்த பகுதிகளை அகடு என்றும் சொல்வார்கள்.

இன்றைக்குத் தெரிந்துகொண்டது, ‘அகடு’ என்ற சொல்லுக்குத் தொப்பை என்ற பொருளும் உள்ளதாம்.

அதெப்படி? மலைபோல் பருத்த தொப்பையை ‘முகடு’ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். யோசித்துப்பார்த்தால், ‘அகடு’தான் மிகப்பொருத்தம் என்று தோன்றுகிறது. தொய்ந்து கீழ்நோக்கித் தள்ளப்பட்டு ‘அகடு’போல்தானே இருக்கிறது தொப்பை? (புரியாவிட்டால், ஆளுயரக் கண்ணாடியில் பார்க்கவும் 😉 )

இச்சொல்லை உருவாக்கியவருக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சிதான்!

Muthanaadhan

முத்தநாதன் என்று ஓர் அரசன்; அவனுக்கு இன்னோர் அரசன்மீது பகை; எப்படியாவது அவனை வென்றுவிடவேண்டும் என்று பலமுறை படையெடுத்து வருகிறான்; திரும்பத்திரும்பத் தோற்றுப்போய் ஓடுகிறான்.

ஒருகட்டத்தில், முத்தநாதனுக்குத் தன் வீரத்தின்மீது நம்பிக்கை போய்விடுகிறது. எதிரியை வஞ்சகத்தால் வெல்ல நினைக்கிறான்.

அந்த எதிரி மன்னன் ஒரு சிவபக்தன். ஆகவே, சிவனடியார்களுக்கு அவனுடைய நாட்டில் மிகப்பெரிய மரியாதை.

இதைக் கேள்விப்பட்ட முத்தநாதனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது, ‘நானும் ஒரு சிவனடியாரைப்போல் வேடமிட்டுக்கொண்டு அங்கே செல்வேன்; என் எதிரியைத் தனியே சந்தித்து அவனைக் கொல்வேன்’ என்று நினைத்துக்கொள்கிறான்; புறப்படுகிறான்.

இப்போது, அவனுடைய உடம்பெல்லாம் திருநீறு. தலையில் நீண்ட சடைமுடியை முடித்துக்கட்டியிருக்கிறான். கையிலே ஒரு புத்தகக் கட்டு, அதற்குள் ஒளிந்திருக்கும் குறுவாள்; மொத்தத்தில் பொய்யான தவ வேடம்.

இதை வர்ணிக்கும் சேக்கிழார் (பெரிய புராணம்: மெய்ப்பொருள் நாயனார் புராணம்) அந்தப் பொய்யான வேடத்துக்கு ஓர் உவமை சொல்கிறார், ‘மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்து’ என்கிறார்.

விளக்கு என்னதான் பிரகாசமாக எரிந்தாலும், அதற்குள் கருமை (எரிந்த திரியின் வண்ணம்) இருக்கும். அதுபோல, இவன் வெளியே சிவனடியாராகத் தோன்றினாலும், உள்ளுக்குள் (மனத்துக்குள்) கருமை, கையிலிருக்கும் சுவடிக்குள் கத்தி.

நான்கே வரிகளில் இக்காட்சியை நம் மனத்துக்குக் கடத்தும் சேக்கிழாரின் மாயாஜாலத்தைப் பாருங்கள்:

‘மெய்யெலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டி,

கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,

மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்துப்

பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’

Pasu Meyththal

நண்பர் வீரராகவன் ஶ்ரீரங்கத்தில் ஓர் ஆநிரைக்கூடம் நடத்திவருகிறார். காயப்பட்ட பசுக்கள் பலவற்றுக்குச் சிகிச்சையளித்து சிறப்பாகப் பராமரித்துவருகிறார்.

சில வாரங்களுக்குமுன் அவரை நேரில் சந்தித்தபோது, அந்த ஆநிரைக்கூடத்துக்கு என்னை அழைத்துச்சென்றார். மகிழ்ச்சியோடு சுற்றிக்காட்டினார். பசுக்களை அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும் நேரம், ‘பசு மேய்க்கறதுல ஒரு சுகம் இருக்கு, தெரியுமா?’ என்றார் வீரராகவன். ‘இதை நான் சொன்னா யாரும் புரிஞ்சுக்கமாட்டாங்க, நம்பமாட்டாங்க, நிஜமாவே மேய்ச்சுப்பார்த்தால்தான் அது புரியும்.’

‘ஆரம்பத்துல நானும் இதை நம்பலை. ஆனால் இங்கிருக்கும் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைச்சுகிட்டுப்போகும்போது, அவை மேயறதைப் பார்க்கும்போது, அதிலிருக்கிற ஒரு மயக்கமான சுகம் புரியவந்தது. அது இன்னும் இன்னும் எந்நேரமும் வேணுமாயிருக்கு, மற்ற எந்தக் கைங்கர்யமும் இதுக்கு இணையாகாதுன்னு தோணுது. இதெல்லாம் தெரிஞ்சுதான் கிருஷ்ணர் பசுமேய்க்கிற வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்தார்ன்னு நினைக்கறேன்.’

இன்று காலை #நம்மாழ்வார் பாசுரமொன்றில் இந்த வரியைப் படித்தபோது, வீரராகவன் சொன்னது நினைவுக்கு வந்தது:

‘திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி.’

‘திவம்’ என்றால் பரமபதம், அங்கே வாசம்செய்வதைவிட, இங்கே வந்து பசு மேய்ப்பதுதான் கண்ணனுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம்!

Kasigai

‘கசிகை’ என்றால் நட்பு என்று பொருளாம். #நம்மாழ்வார் பயன்படுத்தும் சொல் இது. (‘அசுரர்கள் தலைப்பெயில்’ என்று தொடங்கும் பாடல்.)

அகரமுதலியைப் பார்த்தால், ‘கசி’ என்ற சொல்லுக்கே ‘நட்பு’ என்று ஒரு பொருள் போட்டிருக்கிறார்கள். ‘கசிகை’ என்பதை நட்பு கொள்ளுதல்/ஈடுபாடு கொள்ளுதல் என்று விவரிக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், ‘காதலாகிக் கசிந்து உருகி’ என்ற ஞானசம்பந்தர் வரிகளுக்கு இன்னொரு பொருள் கிடைக்கிறது!