Enaithu

‘எனைத்து’ என்றொரு சொல் இருக்கிறது. பெரும்பாலும் பாடல்களில்மட்டுமே பார்த்திருப்போம். பேச்சுவழக்கில் இப்போது இல்லை.

எடுத்துக்காட்டாக, ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்கிறார் திருவள்ளுவர். ‘கொஞ்சம்தான் என்றாலும் பரவாயில்லை, நல்லவை காதில் விழட்டுமே!’

அப்படியானால், ‘எனைத்து’ என்றால் ‘மிகக்குறைவான அளவு’ என்று பொருள் எடுத்துக்கொள்ளலாலா?

வாய்ப்பில்லை. அதே திருவள்ளுவர் இன்னொரு குறளில், ‘எனைத்து நினைப்பினும் காயா’ என்கிறார். ‘என் காதலனை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் பரவாயில்லை, அவர் கோபிக்கமாட்டார்.’

‘எனைத்து, எனைத்து அது, எப்புறத்தது எந்தை பாதம் எய்தவே’ என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். ‘எங்கள் தந்தையே, உன்னுடைய திருவடிகளை எட்டுவது எளிய செயலா, அது எப்பேர்ப்பட்ட முயற்சி! என்னால் அளவிடவும் இயலவில்லையே!’

ஆக, ‘எனைத்து’ என்றால் சிறிய அளவு என்றும் சொல்லலாம், பெரிய அளவு என்றும் சொல்லலாம், பொதுவில் அது அளவைக் குறிப்பிடும் ஒரு சொல், எத்தனை, எவ்வளவு, எத்துணை, எனைத்துணை போன்ற சொற்களோடு சேரும்.

இதை அளவுக்குமட்டுமின்றி, ‘எந்தவிதமான’ என்கிற பொருளிலும் பயன்படுத்தலாம். இதற்கும் திருக்குறளில் எடுத்துக்காட்டுண்டு: ‘எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க தன் நெஞ்சு’ என்கிறார் வள்ளுவர். அதாவது, எந்தவிதமான பொருளையும் திருடாமல் உன் நெஞ்சைக் காத்துக்கொள். ஒரு வீட்டைத் திருடினாலும் திருட்டுதான், ஒரு குண்டூசியைத் திருடினாலும் திருட்டுதான்.

‘எ’ என்ற எழுத்தில் தொடங்கும் வினாச்சொற்களுக்குப்பதில் ‘அ’, ‘இ’ என்ற சுட்டெழுத்துகளைச் சேர்த்தால் அவை சுட்டுச்சொற்களாக மாறும்:

எது => அது, இது (‘உ’ சேர்த்து ‘உது’ என்றும் எழுதலாம், அது இப்போது வழக்கில் இல்லை.)
எத்தனை => அத்தனை, இத்தனை

அதேபோல், எனைத்து என்பதும் சுட்டுச்சொல்லாகி அனைத்து, இனைத்து என வழங்கும். மேற்கண்ட திருக்குறளிலேயே அதற்கும் எடுத்துக்காட்டைக் காணலாம்:

எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

கொஞ்சமென்றாலும் நல்லதைக் கேளுங்கள். கேட்ட அளவுக்குப் பெருமை கிடைக்கும். குறைவாகக் கேட்டால் குறைவான பெருமை. அதிகம் கேட்டால் அதிகப் பெருமை!

SoRkaL

வடை ருசிதான். அதையே சாம்பார்/தயிர்/ரசத்தில் ஊறவைத்தால் வேறு பல பரிணாமங்களைக் கொண்டுவிடுகிறது.

பகுபதங்களும் அப்படிதான். அவற்றில் இருக்கும் ‘பகுதி’ (’வேர்ச்சொல்’ என்றும் அழைப்பார்கள்) தன்னளவில் முழுப்பொருள் கொண்ட ஒரு சொல்லாகவே இருக்கும். அதோடு பிற உறுப்புகள் (விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை, விகாரம்) சேரச்சேர, வேறு பல சொற்கள் உருவாகும். இந்தப் பகுபதங்கள் மற்ற பகுபதங்கள்/பகாப்பதங்களுடன் சேர்ந்து இன்னும் பலப்பல சொற்கள் உருவாகும்.

இங்கே ’உருவாகும்’ என்ற சொல் எதிர்காலத்தில் இருப்பதைக் கவனியுங்கள். பகுபத உறுப்பிலக்கணத்தைக் கற்பது இதற்குமுன் உள்ள சொற்களைப் புரிந்துகொள்வதற்காக இல்லை. புதிய சொற்களை நாமே உருவாக்குவதற்கும் அதுதான் வழி. இதைக் கற்றுக்கொண்டுவிட்டால், வற்றாத ஊற்றைப்போல் புதுச்சொற்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நமது வார்த்தை வளம் அள்ள அள்ளக் குறையாது.

ஆனால், அது தொட்டனைத்து (தோண்டினால்) ஊறும் ஊற்று. தோண்டாமல் பிறமொழிச்சொற்களைப்போல் தமிழ்ச்சொற்களையும் அப்படியே மனப்பாடம் செய்து (காரணம் தெரியாமல் இடுகுறிச்சொற்களைப்போல்) பயன்படுத்தினால், பின்னர் ஒருநாள், ‘இதற்குப் பிறமொழிச்சொற்களையே பயன்படுத்திவிடலாமே’ என்று தோன்றும். காரணம், நம் சொல் என்கிற ஒட்டுதல் நமக்கில்லை. அதற்குக் காரணம், அதன் பொருள் நமக்குத் தெரியவில்லை.

‘டவுன்லோட்’ என்ற சொல்லை எல்லாரும் ஏற்றுக்கொள்கிறோம். ‘தரவிறக்கம்’ என்றால் முழிக்கிறோம். தரவு (data) + இறக்கம் (இறக்குதல்) என்று பிரித்துப் பொருள்சொன்னாலும் ‘இதெல்லாம் யாருக்குப் புரியும்?’ என்கிறோம். ‘டவுன்லோட்’ என்ற சொல் இருபது வருடத்துக்குமுன்னால் யாருக்குப் புரிந்தது? அதைமட்டும் ஏற்றுக்கொள்ள மனம் வருகிறதே.

’இறங்கு’/‘இறக்கு’ என்பது வேர்ச்சொல்/பகுதி, அத்துடன் ‘அம்’ என்ற விகுதி சேரும்போது, ‘இறக்கம்’ என்ற புதுச்சொல் கிடைக்கிறது. சாலை கீழ்நோக்கி இறங்கிச்செல்லும்போது, ‘ரொம்ப இ(எ)றக்கமா இருக்கு, பார்த்து வண்டியை ஓட்டு’ என்பார்கள். ‘ஏற்றம்’ (ஏறு + அம்) என்ற சொல்லின் எதிர்ச்சொல் இது. மிக இயல்பாக நம் பேச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சொல்.

அதேபோல், கணிதத்தில் நீளம், அகலம், உயரம் என்ற சொற்களை இயல்பாகப் பயன்படுத்துகிறோம். அவை வெறும் இடுகுறிச்சொற்களா?

* நீள் + அம் => செவ்வகத்தின் நீண்டுசெல்லும் பக்கம் இது, ஆகவே நீளம்
* அகல் + அம் => செவ்வகத்தின் அகன்றுசெல்லும் (விரிந்துசெல்லும்) பக்கம் இது, ஆகவே அகலம்
* உயர் + அம் => உருளை/கனசெவ்வகத்தின் உயர்ந்துசெல்லும் பக்கம் இது, ஆகவே, உயரம்

‘ஆழம்’ என்பதுகூட இப்படி வந்த சொல்தான். ஆழ்ந்துசெல்வது, ஆழ் + அம் => ஆழம்.

இப்படி ‘அம்’ விகுதியை வைத்தே பல்லாயிரம் சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல்லாயிரத்தை உருவாக்க இடமுண்டு. ஒரு விகுதிக்கே இப்படியென்றால் இன்னும் பலப்பல விகுதிகள் இருக்கின்றன. அவை எத்தனை ஆயிரம் சொற்களைத் தரும்!

ஆக, நம்மிடம் சொற்கள் இல்லை என்பது வெறும் சோம்பேறிப்பேச்சு. தேடவோ புரிந்துகொள்ளவோ நமக்கு நேரமில்லை என்பதுதான் உண்மை.

அது நிற்க, ‘அகலம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘மார்பு’ என்ற பொருளும் உண்டு. மார்பு அகன்று/பரந்து விரிந்திருப்பது அழகின்/வீரத்தின் அடையாளம், ஆகவே, அதனை ’அகலம்’ என்றார்கள்.

இதற்கு நேரெதிராக, இடுப்பு குறுகியிருந்தால் அழகு என்ற நம்பிக்கையும் உண்டு. ஆகவே, அதற்குக் ‘குறுக்கு’ (’குறுகியது’) என்றே பெயர்.

பெங்களூரில் பல சாலைகளைக் ‘குறுக்குச் சாலை’ என்றழைப்பார்கள். அங்கே நடமாடும் பெண்டிரை மனத்தில் வைத்தெழுந்த காரணப்பெயரா என்று நானறியேன்.

Parivar

‘பரிவர்’ என்ற சொல்லைக் கற்றுக்கொண்டேன் இன்று. திருவாய்மொழி நூற்றந்தாதியில் வருகிறது.

பரிவு + அர் => பரிவுள்ளவர், அன்பானவர். எகா: ‘கந்தசாமி என் நண்பர், சின்னசாமி என் அன்பர், பெரியசாமி என் பரிவர்’.

இதை ஆண்பால், பெண்பாலுக்கு மாற்றிப் பரிவன், பரிவி என்றும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

Serppan VeRpan

தமிழ் நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வமும் உண்டு: குறிஞ்சிக்குச் சேயோன் (முருகன்), முல்லைக்கு மாயோன் (திருமால்), மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை.

இதேபோல், இந்நிலங்களில் உள்ள தலைவர்களை (அதாவது, சிறந்த மனிதர்களை) அழைக்கவும் சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக:

* வெற்பன் என்றால் குறிஞ்சி நிலத் தலைவன், வெற்பு (மலை) + அன் => மலைநாட்டுத் தலைவன்
* சேர்ப்பன் என்றால் நெய்தல் நிலத் தலைவன், சேர்ப்பு (கடல், நிலம் சேரும் இடம்) + அன் => கடல்/கடற்கரையின் தலைவன்

அகப்பாடல்கள் எந்தத் திணையில் அமைந்திருக்கின்றனவோ அந்தத் திணைக்குரிய பெயரால்தான் தலைவனை அழைப்பார்கள். இது ஒரு மரபு.

‘மணந்த பேராயா’ என்று தொடங்கும் திருவாய்மொழிப் பாடலில், #நம்மாழ்வார் திருமாலைப் ‘பாற்கடல் சேர்ப்பா’ என்று அழைக்கிறார். முல்லை நிலத்தின் தெய்வமாக இருப்பினும், பாற்கடலிலே திருத்துயில் கொள்வதைக் குறிப்பிட்டு அழகாகச் ‘சேர்ப்பன்’ என்கிறார்!

இன்னொரு பாடலில், அதே திருமாலை ‘திருவேங்கட வெற்பன்’ என்கிறார் #நம்மாழ்வார் . திருவேங்கடம் (திருப்பதி) மலைப்பகுதியல்லவா? ஆகவே, முல்லை நிலத்தெய்வத்தை இப்போது குறிஞ்சித் தலைவனுக்குரிய ‘வெற்பன்’ என்ற பெயரால் அழைக்கிறார்.

Sema Achchu

பொகுட்டெழினி என்ற மன்னனைப் பாடுகிறார் #ஔவையார் (புறநானூறு. பாடல் எண் 102)

உப்பு வணிகர்கள் பாரம் நிரம்பிய வண்டிகளை ஓட்டிச்செல்வார்கள். அப்போது, அந்த வண்டி மேடு பள்ளங்களில் ஏறிச் செல்லும்போது அச்சு முறிந்துவிடுமோ என்று யோசிப்பார்கள். பாதுகாப்புக்காக ஒரு கூடுதல் அச்சாணியையும் (சேம அச்சு) கொண்டுசெல்வார்கள்.

மன்னா, அந்தச் சேம அச்சைப்போல, உன் மக்களுக்கு நீ.

என்ன அழகான உவமை பாருங்கள்!

‘மக்களாகிய வண்டிக்கு மன்னனாகிய நீ அச்சாணி’ என்று அவர் எழுதியிருக்கலாம். அதில் எந்தப் பிழையும் இல்லை.

அதேசமயம், மக்களுக்கு அச்சாணியே மன்னன்தான் என்று உவமை சொன்னால், அவர்களுடைய சொந்த உழைப்பைக் குறை சொல்வதாகிவிடும். ஆகவே, மன்னனைச் ‘சேம அச்சு’ என்கிறார், அதாவது, ‘உன் மக்கள் கடின உழைப்பாளிகள், தங்கள் பிழைப்புக்கு(வண்டிக்கு)த் தாங்களே ஆதாரமாவார்கள். அதையும் மீறி அவர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், நீ அவர்களைக் காப்பாய்.’

கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வதென்றால், பொகுட்டெழினியை ஸ்டெப்னி என்கிறார்!

Thirumbuthal

‘வேண்டிய கல்வி, ஆண்டு மூன்று இறவாது’ என்கிறார் #தொல்காப்பியர்

அதாவது, அந்நாள்களில் அவசியமான கல்விக்காக ஒரு தலைவன் ஒரு தலைவியைப் பிரிந்து செல்வது, அதிகபட்சம் மூன்றாண்டுகள்தானாம்.

வேலைக்காகப் பிரிந்தால்?

‘வேந்து உறு தொழிலே ஆண்டினது அகமே.’

அரசன் கட்டளைப்படி, அதாவது, Offshore வேலை காரணமாக மனைவியைப் பிரிகிறவன், ஓராண்டுக்குள் திரும்பிவந்துவிடுவானாம்.

அப்படி வேலை காரணமாகச் செல்லும்போது, அந்த வேலை முடியும்வரை அவனுக்கு மனைவியின் நினைவே வராதாம்:

‘கிழவி நிலையே வினை இடத்து உரையார்.’

‘அடேய் அன்பற்றவனே’ என்று அவனைத் திட்டாதீர்கள். வேலை செய்யும்போது அன்பை நினைத்தால் வேலையின் தரம் குறையலாம்/தாமதமாகலாம் அல்லவா? அதனால்தான் அப்படி.

இதற்குச் சான்று, வேலையை முடித்த மறுகணம் அவன் மனைவியைப் பார்க்கக் கிளம்பிவிடுவானாம், வழியில் அவன் குதிரை எங்கேயும் ஒரு கணம்கூட நிற்காதாம்:

‘வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை.’

Aadum PaRavai

‘ஆடும் பறவை’ என்று கருடனை வர்ணிக்கிறார் நம்மாழ்வார்.

இதைப் படித்தவுடன், அந்தரத்தில் கருடன் நடனமாடுவதுபோல் ஒரு கற்பனை வந்தது. ஆனால், உரையாசிரியர்கள் இதற்கு ‘வெற்றியையுடைய பறவை’ என்றுதான் பொருள் எழுதுகிறார்கள். அகரமுதலியைப் புரட்டினேன்.

‘ஆடல்’ என்ற சொல்லுக்கு நடனம் என்பதோடு, வெற்றி/நன்மை போன்ற பொருள்களும் இருக்கின்றன. ஆகவே, ‘ஆடும் பறவை’ என்றால் வெற்றி/நன்மை கொண்ட பறவை.