Muthanaadhan

முத்தநாதன் என்று ஓர் அரசன்; அவனுக்கு இன்னோர் அரசன்மீது பகை; எப்படியாவது அவனை வென்றுவிடவேண்டும் என்று பலமுறை படையெடுத்து வருகிறான்; திரும்பத்திரும்பத் தோற்றுப்போய் ஓடுகிறான்.

ஒருகட்டத்தில், முத்தநாதனுக்குத் தன் வீரத்தின்மீது நம்பிக்கை போய்விடுகிறது. எதிரியை வஞ்சகத்தால் வெல்ல நினைக்கிறான்.

அந்த எதிரி மன்னன் ஒரு சிவபக்தன். ஆகவே, சிவனடியார்களுக்கு அவனுடைய நாட்டில் மிகப்பெரிய மரியாதை.

இதைக் கேள்விப்பட்ட முத்தநாதனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது, ‘நானும் ஒரு சிவனடியாரைப்போல் வேடமிட்டுக்கொண்டு அங்கே செல்வேன்; என் எதிரியைத் தனியே சந்தித்து அவனைக் கொல்வேன்’ என்று நினைத்துக்கொள்கிறான்; புறப்படுகிறான்.

இப்போது, அவனுடைய உடம்பெல்லாம் திருநீறு. தலையில் நீண்ட சடைமுடியை முடித்துக்கட்டியிருக்கிறான். கையிலே ஒரு புத்தகக் கட்டு, அதற்குள் ஒளிந்திருக்கும் குறுவாள்; மொத்தத்தில் பொய்யான தவ வேடம்.

இதை வர்ணிக்கும் சேக்கிழார் (பெரிய புராணம்: மெய்ப்பொருள் நாயனார் புராணம்) அந்தப் பொய்யான வேடத்துக்கு ஓர் உவமை சொல்கிறார், ‘மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்து’ என்கிறார்.

விளக்கு என்னதான் பிரகாசமாக எரிந்தாலும், அதற்குள் கருமை (எரிந்த திரியின் வண்ணம்) இருக்கும். அதுபோல, இவன் வெளியே சிவனடியாராகத் தோன்றினாலும், உள்ளுக்குள் (மனத்துக்குள்) கருமை, கையிலிருக்கும் சுவடிக்குள் கத்தி.

நான்கே வரிகளில் இக்காட்சியை நம் மனத்துக்குக் கடத்தும் சேக்கிழாரின் மாயாஜாலத்தைப் பாருங்கள்:

‘மெய்யெலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டி,

கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,

மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்துப்

பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’

Advertisements

Pasu Meyththal

நண்பர் வீரராகவன் ஶ்ரீரங்கத்தில் ஓர் ஆநிரைக்கூடம் நடத்திவருகிறார். காயப்பட்ட பசுக்கள் பலவற்றுக்குச் சிகிச்சையளித்து சிறப்பாகப் பராமரித்துவருகிறார்.

சில வாரங்களுக்குமுன் அவரை நேரில் சந்தித்தபோது, அந்த ஆநிரைக்கூடத்துக்கு என்னை அழைத்துச்சென்றார். மகிழ்ச்சியோடு சுற்றிக்காட்டினார். பசுக்களை அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும் நேரம், ‘பசு மேய்க்கறதுல ஒரு சுகம் இருக்கு, தெரியுமா?’ என்றார் வீரராகவன். ‘இதை நான் சொன்னா யாரும் புரிஞ்சுக்கமாட்டாங்க, நம்பமாட்டாங்க, நிஜமாவே மேய்ச்சுப்பார்த்தால்தான் அது புரியும்.’

‘ஆரம்பத்துல நானும் இதை நம்பலை. ஆனால் இங்கிருக்கும் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைச்சுகிட்டுப்போகும்போது, அவை மேயறதைப் பார்க்கும்போது, அதிலிருக்கிற ஒரு மயக்கமான சுகம் புரியவந்தது. அது இன்னும் இன்னும் எந்நேரமும் வேணுமாயிருக்கு, மற்ற எந்தக் கைங்கர்யமும் இதுக்கு இணையாகாதுன்னு தோணுது. இதெல்லாம் தெரிஞ்சுதான் கிருஷ்ணர் பசுமேய்க்கிற வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்தார்ன்னு நினைக்கறேன்.’

இன்று காலை #நம்மாழ்வார் பாசுரமொன்றில் இந்த வரியைப் படித்தபோது, வீரராகவன் சொன்னது நினைவுக்கு வந்தது:

‘திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி.’

‘திவம்’ என்றால் பரமபதம், அங்கே வாசம்செய்வதைவிட, இங்கே வந்து பசு மேய்ப்பதுதான் கண்ணனுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம்!

Kasigai

‘கசிகை’ என்றால் நட்பு என்று பொருளாம். #நம்மாழ்வார் பயன்படுத்தும் சொல் இது. (‘அசுரர்கள் தலைப்பெயில்’ என்று தொடங்கும் பாடல்.)

அகரமுதலியைப் பார்த்தால், ‘கசி’ என்ற சொல்லுக்கே ‘நட்பு’ என்று ஒரு பொருள் போட்டிருக்கிறார்கள். ‘கசிகை’ என்பதை நட்பு கொள்ளுதல்/ஈடுபாடு கொள்ளுதல் என்று விவரிக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், ‘காதலாகிக் கசிந்து உருகி’ என்ற ஞானசம்பந்தர் வரிகளுக்கு இன்னொரு பொருள் கிடைக்கிறது!

Muthal SambaLam

என்னுடைய முதல் வேலை, ஒரு மாதத்தின் ஆறாந்தேதியில் தொடங்கியது.

இது ஓர் அவசியமற்ற புள்ளிவிவரமாகத் தோன்றலாம். ஆனால் இதனால் பல பொருளாதாரத் தாக்கங்கள் உண்டு.

ஆறாந்தேதி வேலை தொடங்குகிறது என்றால், அடுத்த இருபத்தைந்து நாட்களுக்கு ‘முதல் சம்பளம்’ வரப்போவதில்லை என்று பொருள். ஆகவே, கையில் வைத்திருக்கும் பணத்தை வைத்துச் சுமார் ஒரு மாத்துக்குத் தாக்குப்பிடிக்கவேண்டும் என்று பொருள்.

நானும் இழுத்துப்பிடித்துச் சமாளித்தேன், மாதக்கடைசியில் கொஞ்சம் நெருக்கடி. ஒரு தோழியிடம் கடன் வாங்கினேன்.

பெரிய தொகையில்லை. நானூறு ரூபாய் என்று நினைவு. ஆனால் அப்போது அதுவே பெரிய உதவியாக இருந்தது.

அந்தத் தோழியும் அதே ஆறாந்தேதி என்னோடு வேலையில் சேர்ந்தவர்தான். ஆனால் அவர் எப்படியோ கையிலிருந்த பணத்தைச் சிக்கனமாகச் செலவழித்து மிச்சப்படுத்தியிருந்தார், இன்னொருவருக்குக் கடன் தரும் அளவுக்கு.

அந்த மாதத்தின் 31ம் தேதி, எனக்கு முதல் சம்பளம் வந்தது. ஏடிஎம் வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகவே, சம்பளப்பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று வரிசையில் நின்றேன்.

சிறிதுநேரத்தில், என்னுடைய முதல் சம்பளத்தை வாங்கிக்கொண்டேன். மகிழ்ச்சியோடு வெளியே வந்தபோது, எனக்குக் கடன் தந்த தோழியைப் பார்த்தேன். அவருக்கும் இதுதானே முதல் சம்பளம்; அதை எடுப்பதற்காக வங்கிக்கு வந்திருந்தார்.

அவரைப் பார்த்தவுடன், சட்டென்று ஓடிச்சென்று நன்றி சொன்னேன். அந்த நானூறு ரூபாயைக் கொடுத்தேன்.

ஆனால், அவர் அதை வாங்கிக்கொள்ளவில்லை, ‘சம்பளப்பணமா?’ என்றார் அமைதியாக.

‘ஆமா, பின்னே?’

‘முதல் சம்பளம்தானே.’

‘ஆமா. அதுக்கென்ன?’

‘முதல் சம்பளத்துல முதல் செலவாக் கடனைத் திருப்பிக்கொடுப்பியா? முட்டாள்’ என்றார் அவர். ‘போய் அம்மாவுக்கு எதாவது பரிசு வாங்கு. என் கடனை நாளைக்குத் திருப்பித்தரலாம்’ என்று சொல்லிவிட்டு வங்கிக்குள் நுழைந்தார்.

இது நடந்து இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது யோசித்தாலும், நான் செய்ததும் தவறில்லை, அவர் சொன்னதும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இரண்டும் எப்படிச் சாத்தியம் என்று புரியவில்லை.

Arasan

அரசன் தன்னுடைய மக்களை எந்தத் துன்பங்களிலிருந்து காக்கவேண்டும்? பெரியபுராணத்தில் மனுநீதிச்சோழன் இதைச் சொல்வதாக எழுதுகிறார் சேக்கிழார்:

1. தன்னால் வரும் துன்பங்கள்
2. தன்னுடைய பரிவாரங்களால் வரும் துன்பங்கள்
3. பகைவரால் வரும் துன்பங்கள்
4. கள்வரால் வரும் துன்பங்கள்
5. பிற உயிர்களால் வரும் துன்பங்கள்

வரிசையைக் கவனியுங்கள்: ஓர் அரசன், மக்களுக்குத் தன்னாலும் தன்னோடு இருக்கும் நண்பர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளாலும் ஏற்படக்கூடிய துன்பங்களிலிருந்து மக்களைக் காக்கவேண்டும். அதை முதலில் சொல்லிவிட்டு, அதன்பிறகுதான் பகைவர், கள்வர், காட்டு மிருகங்கள் செய்யும் துன்பங்களைச் சொல்கிறார்!

‘மாநிலம் காவலன் ஆவான்
மன்னுயிர் காக்கும்காலை,
தான் அதனுக்கு இடையூறு
தன்னால், தன் பரிசனத்தால்,
ஊனம் மிகு பகைத்திறத்தால்,
கள்வராய், உயிர்கள்தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ!’

PunmuRuval

சிரிப்புக்கும் புன்முறுவலுக்கும் என்ன வித்தியாசம்?

புன்(ல்) + முறுவல் = புன்முறுவல்

இங்கே ‘புன்’/’புல்’ என்ற சொல் ‘புன்மை’, அதாவது, சிறுமையை, குறைவான அளவைக் குறிக்கிறது. புன்முறுவல் என்றால், சிறு முறுவல்.

‘புன்னகை’ என்பது புன்(ல்) + நகை என்று பிரியும். ஆகவே, ‘இந்தப் புன்னகை என்ன விலை’ என்று காதலியையும் கேட்கலாம், பிளாட்ஃபாரத்தில் பாய் விரித்துச் சிறு நகைகளை விற்கும் கடைக்காரர்களையும் கேட்கலாம்.

‘முள் நுனை தோன்றாமை முறுவல்’ என்கிறது கலித்தொகை. முள் போன்ற பற்களின் நுனி தெரியாதபடி சிரிப்பதுதான் முறுவலாம்.

ஆக, புன்முறுவல் என்பது பற்கள் சற்றே வெளித்தெரிகிற, அல்லது பற்களே தெரியாதபடி உதட்டாலே சிரிக்கிற குறுஞ்சிரிப்பு எனலாம்.

Perukku

’பெருக்கு’ என்ற சொல், ‘பெருகு’/’பெருகுதல்’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ’பெருகுதல்’ என்றால் அதிகரித்தல், ஆற்றில் வெள்ளம் பெருகியது, வீட்டில் செல்வம் பெருகுகிறது, நாட்டில் பயிர்கள் பெருகும்.

‘பெருகுதல்’ என்பது தன்வினை (தானே செய்தல்), ‘பெருக்குதல்’ என்பது பிறவினை (பிறர் செய்தல்). ‘அவனிடம் செல்வம் பெருகியது’, ‘அவன் செல்வத்தைப் பெருக்கினான்’ ஆகிய சொற்றொடர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் புரியும்.

‘பெருக்கு’ என்ற கட்டளையை நாம் கணக்குப்பாடத்தில்தான் அதிகம் பார்த்திருப்போம்: எட்டை ஒன்பதால் பெருக்கு என்றால், எட்டை ஒன்பது மடங்காக ஆக்கு, அதனை ஒரு மிகப் பெரிய எண்ணாக அதிகரிக்கச்செய் என்று பொருள்.

’குப்பையைப் பெருக்கு’ என்றால், குப்பையை அதிகமாக்கு என்று பொருளில்லை. வீட்டில் வெவ்வேறு இடங்களில் இருக்கிற குப்பையை ஒரே இடத்தில் பெருக்கி வெளியேற்று என்ற பொருளில் அந்தக் கட்டளை அமைந்திருக்கலாம்.

‘ஆடிப்பெருக்கு’ என்பதில் வரும் ‘பெருக்கு’ கட்டளைச்சொல் அன்று. அதுவொரு பெயர்ச்சொல்.

சில நேரங்களில், வினைச் சொற்கள்/ கட்டளைச் சொற்கள் அப்படியே பெயர்ச்சொற்களாக ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக:

* வளை => கட்டளைச்சொல் (இந்தக் கம்பியை வளை, வளைக்கப்பட்ட நகைக்கும் அதுவே பெயர் (அழகிய வளை அணிந்தாள்)
* கிளை => கட்டளைச்சொல் (கிளைத்துச்செல்), அப்படிக் கிளைத்துச்சென்ற பொருளுக்கும் அதுவே பெயர் (மரக்கிளை)
* நறுக்கு => கட்டளைச்சொல் (நறுக்கிச் சிறிதாக்கு), அப்படி நறுக்கப்பட்ட துண்டுக்கும் அதுவே பெயர் (காகித நறுக்கு)
* சுழல், சுழி => கட்டளைச்சொல் (சுழன்று செல்), அப்படிச் சுழன்று செல்லும் அமைப்புக்கும் அதுவே பெயர் (நீர்ச்சுழல், நீர்ச்சுழி)

இதுபோலவே, ‘பெருக்கு’ என்ற கட்டளைச்சொல் பெருக்கப்படுவதற்கும் பொருந்துகிறது. ‘நீர்ப்பெருக்கு’ என்றால், (மழையாலே) பெருக்கப்பட்ட நீர்/வெள்ளம். ‘ஆடிப்பெருக்கு’ என்றால், ஆடி மாதத்திலே பெருக்கப்பட்ட நீர்/வெள்ளம். இதைப் ‘பெருக்கம்’ என்றும் அழைக்கலாம் (பெருக்கு + அம்).

’பெறுகு’ (பெருகுதல்) என்பதன் எதிர்ச்சொல் ‘அருகு’ (அருகுதல்). ஆகவே, ‘பெருக்கம்’ என்பதன் எதிர்ச்சொல் ‘அருக்கம்’.

திருநாவுக்கரசர் தேவாரப்பாடலொன்றில் சிவனை ’அருக்கமாய், பெருக்கம் ஆகி’ என்று பாடுகிறார். இதன் பொருள், நுட்பத்திலும் நுட்பம் (மிக அருகியவன்) சிவனே, பெரிதிலும் பெரிதும் (மிகப் பெருகியவன்) சிவனே.

ஆடிப்பெருக்கில் அந்த ஆத்திசூடி அருளால் அனைத்துத் துயரங்களும் அருகட்டும்!